search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு, ரேபரேலி தேர்தல்: ராகுல் காந்திக்கு காங்கிரஸ் வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
    X

    வயநாடு, ரேபரேலி தேர்தல்: ராகுல் காந்திக்கு காங்கிரஸ் வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?

    • வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதியிலும் ராகுல் வெற்றி.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி.

    பாராளுமன்ற தேர்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றாா்.

    விதிகளின்படி ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    வயநாடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது.

    தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி தோ்வு செய்தது.

    இந்நிலையில், தோ்தல் செலவுகளுக்காக ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் தலைமை கட்சி நிதியில் இருந்து வழங்கியது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்த கிஷோரி லால் சா்மா, கேரளத்தின் ஆழப்புழையில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழகத்தின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஆகியோரும் தலா ரூ.70 லட்சம் பெற்றுள்ளனா்.

    இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் நடிகை கங்கனா ரணாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தோ்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் மூத்த தலைவா்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனா்.

    வேட்பாளருக்கான தோ்தல் பிரசார செலவுக்கு உச்சவரம்பு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய வரம்பு இல்லை. வேட்பாளா்களுக்கான செலவு வரம்பை பாராளுமன்ற தோ்தலுக்கு ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டமன்ற தோ்தலுக்கு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் மத்திய அரசு கடந்த 2022-ல் உயா்த்தியது.

    Next Story
    ×