search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆனாலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதுடன் மாநில எல்லைகள் மற்றும் ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் உள்ள தனியார் கூரியர் நிறுவன குடோனில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    இருப்பினும் அங்கிருந்த ஊழியர்களிடம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதாவது பார்சல் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் செடல் உற்சவம் அய்யப்பனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்க லடன் தொடங்கியது. முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக்கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சை, கொய்யா, நெல்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளி, ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன.

    வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழச்சியில் பாம்பு போல நடனமாடி திருக்கல்யாண மாலையை இரு பூசாரிகள் எடுத்து சென்று சாமிகளுக்கு அணிவித்தனர். இதனை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.

    • மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறை சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குப்பை கழிவுகளால் பரவும் நோய் களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் யானைக்கால் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வேலைசெய்ய வரும் பணியாளர்களுக்கு கால முறையில் யானைக்கால நோய் பாதிப்பு மற்றும் தொற்று நோய் அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் நடத்த எற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    மருத்துவர்களும் வல்லுநர்களும் சுழற்சி முறையில் கிராமப்புறங்களுக்கு சென்று கிராமப்புற மக்களின் சுகாதாரமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்க ளுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க கோரிமேடு நோய் ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.

    மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல்பருமன், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களை மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.

    புதுச்சேரியில் யானைக் கால் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறைசாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜோதியாத்திரை வழியனுப்பும் விழா ரெட்டியார்பாளையம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் நினைவுதினத்தையொட்டி ஆண்டுதோறும் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை நடைபெறும்.

    இந்த ஆண்டு யாத்திரை கடந்த 15ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கியது. யாத்திரையை கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    யாத்திரை பெங்களூருவில் தொடங்கி, மாணடியா, மைசூரு, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சின், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக புதுவையை அடைந்தது.

    புதுவைக்கு நேற்று இரவு வந்த யாத்திரையை ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி வரவேற்றார். யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.

    ஜோதியாத்திரை வழியனுப்பும் விழா ரெட்டியார்பாளையம் தனியார் ஓட்டலில் நடந்தது.


    மாநில ஐ.என்.டி.யூ.சி.தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், சீனியர் தலைவர் தேவதாஸ், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்டோர் ஜோதி யாத்திரையை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தன் ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி தெரிவிக்கவில்லை.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம்? என்பதையும் சொல்லவில்லை. ஆனால் பிரசாரம் தோறும் காங்கிரசை தாக்கி பேசுகிறார். தனக்கு எதிராக உள்ள எதிர்கட்சியினர் மீது பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறார்.

    பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிக எம்.பி இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் ஊழல் மலிந்துபோயுள்ளது. 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு காங்கிரசை ஆட்சியில் அமர்த்த சபதமேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
    • நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும்.

    புதுச்சேரி:

    புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் தாளடி நவரை பருவத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஏ.டி.டி-51, என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    பயிர்களில் கதிர்பிடித்து தற்போது நெல்மணிகள் வளர்ந்துள்ளன. அடுத்த ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த மழை பெய்தால் விளைந்த நெற்பயிர்கள் மடிந்து சேதமடையும்.

    எனவே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மற்றும் சற்று பசுமையாக உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.

    இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை பெய்து வருவதால் முன்கூட்டியே அறுவடை செய்தால் ஓரளவாது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே அறுவடை நடந்து வருகிறது.

    ஏற்கனவே பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், செயின் போட்ட அறுவடை எந்திரம் மூலம் பணிகள் நடக்கிறது.

    நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.

    • அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.
    • 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்வினோ (வயது36) காங்கிரஸ் பிரமுகர்.

    இவருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு சென்னை ஆலந்தூர் வருண்குமார், (35) என்பவர் கார்த்தி வினோவை காரில் கடத்தி சென்று அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    அங்கு வருண்குமாருடன் வந்த இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு (37) புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் பாபுநடராஜன் (35) கண்ணன் (35) சுரேஷ்(35) மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.

    மேலும் அவரை நிர்வா ணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி அரியாங்குப்பத்தில் இருந்து திண்டிவனம் அழைத்து சென்று அங்கு அவர் அணிந்திருந்த 1½ பவுன் மோதிரம், கைச்சங்கி லியை பறித்தும், வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரம் பணம், கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் பெற்று கொண்டு ரூ.10 லட்சம் கடன் பெற்ற தாக மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கார்த்திக் வினோ திண்டிவனம் போலீசில் முதலில் புகார் தெரிவித்தார். ஆனால் கடத்தல் அரியாங்குப்பத்தில் நடந்ததால் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளிக்க அனுப்பினர்.

    அரியாங்குப்பம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் வினோ கடத்தி சென்றதாக கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா உள்ளிட் டவற்றை ஆய்வு செய்து விசாரித்தபோது பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இதனால் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனது.

    இதையடுத்து கார்த்திக் வினோ புதுச்சேரி கோர்ட்டில் தன்னுடைய புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து வருண்குமார், ஜோஸ்வா ஜெரால்டு, ஆனந்த்பாபு நடராஜன், கண்ணன், சுரேஷ் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 10 பேர் மீது கடத்தல், தாக்குதல், துப்பாக்கி முனையில் மிரட்டல் என 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
    • வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் புதுவையை சேர்ந்த 2 மாணவ-மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த 13-ந் தேதி உள்ளூர் மக்களுக்கும் எகிப்து மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

    இதையடுத்து வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனால் புதுச்சேரியில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் சவுமியா, சரவணன் ஆகியோர் தங்களை மீட்ககோரி ஆடியோவில் பதிவு செய்து பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் செய்தி அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து மாணவ-மாணவியின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
    • வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    தற்போது கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, 100 அடி சாலை, புதுச்சேரி-கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு, ராஜீவ்காந்தி மற்றும் இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆங்காங்கே வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதற்கிடையே மரப் பாலம் சந்திப்பில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வம் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தார். அதன்பின் அப்பகுதியில் முதலியார்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீசாரின் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்தனர்.

    • மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
    • இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டாபர்மேன் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார். ரேம்போ அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கடந்த 10 ஆண்டாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் ரேம்போவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ரேம்போ திடீரென உயிரிழந்தது.

    ரேம்போவின் மறைவு மதியின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது குடும்பத்தில் ஒருவராக இருந்து இறந்த செல்லப்பிராணி ரேம்போவுக்கு மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்குகள் போல் செய்து அடக்கம் செய்ய மதி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக ரேம்போ இறந்ததை தெரியப்படுத்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். தொடர்ந்து வீட்டின் முன்பு பந்தல் அமைத்து சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மதியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர். இதனையடுத்து ரேம்போவுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டிற்குள்ளேயே அடக்கம் செய்தனர். இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு போக்கு வரத்துத்துறை துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மோட்டார் வாகன சட்டம் 1988 விதி எண் 146-ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவீத 3-ம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் 3-ம் நபர் காப்பீடு இல்லாமல் தொடர்ந்து இயங்குகின்றன. இது சட்டத்திற்கு முரண்பாடானது.

    எனவே 3-ம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 196-ன் படி அபராதம் விதிக்கவேண்டும். அதாவது முதல் முறை குற்றத்திற்கு ரூ.2 ஆயிரம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும், குற்றம் தொடர்ந்தால் ரூ.4 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
    • மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு 3 ஆண்டாக ஜி.எஸ்.டி. உட்பட வரிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் வேதனையாக உள்ளது. வீதிகள் தோறும் ரெஸ்டோ பார்களை திறப்பது சமுதாய சீரழிவை உண்டாக்குகிறது. போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க சிறப்பு காவல்பிரிவு அமைக்க வேண்டும்.

    12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் பணிபுரியும் யூ.டி.சி.க்களுக்கு பதவி உயர்வு வழங்க உதவியாளர் பணிக்கு துறை சார்ந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே மதிப்பெண் பட்டியல், விடைத்தாளர் வெளியிட்டு தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.‌
    • எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் கண் பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 442 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

    முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.

    எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார். 

    ×