search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.
    • அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளராக நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

    ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உருமாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

    இதுமட்டுமல்லாமல், வில்லியனுார் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட ஒரு ஓட்டாவது கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் என ஒரு தரப்பினரும், வாய்பே இல்லை. இம்முறை வில்லி யார் தொகுதியில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று தொகுதியில் முதலாவதாக வருவார் என எதிர்தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாயை பந்தயம் கட்டி வருகின்றனர். இதுபோன்ற சூதாட்டம், மண்ணாடிப்பட்டிலும் களை கட்டி உள்ளது. சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.

    இன்னொரு பக்கம், இந்த முறை சரித்திரம் மாறும் மண்ணாடிப்பட்டில் வைத்திலிங்கமே அதிக ஓட்டுகளை பெற்று சாதிப்பார் என எதிர்தரப்பினரும் பணத்தை பந்தயமாக கட்டி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு ஜூன் 4-ந் தேதி தெரிந்து விடும்.

    • முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம்.
    • சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீடு, கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவில் அருகில் அமைந்துள்ளது. கோவிலில் தினசரி அன்னதானமும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வாழையிலை போட்டு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம், சுற்றுவட்டார பகுதி ஆதரவற்றவர்கள், ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தினர் பயன்பெறுகின்றனர்.

    மேலும், தினமும் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம். அவர்களுக்கு தேவையான பண உதவிகள் செய்வதை முதலமைச்சர் ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சம்காஷி என்ற பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் கோரிமேடு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    தினமும் அவர் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதம் வீட்டு வாடகை கொடுத்து வந்த இவர் 3-வது மாதத்துக்கு வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

    முதலமைச்சர் ரங்கசாமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வெளிமாநில நோயாளிகளுக்கு பண உதவி செய்வதை மேற்கு வங்க பெண் சம்காஷி கேள்விப்பட்டார். இதையடுத்து சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.

    உடனே முதலமைச்சர் ரங்கசாமி அந்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்து உடல் நலம் பெற ஆசி வழங்கினார். இதனை அந்த பெண் வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
    • முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு நேற்று நடந்தது.

    வாக்குப்பதிவிற்காக வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.

    அங்குள்ள வாக்குச்சாவடி பணியாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து முதியவரின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது, பின் முதியவரிடம் கையெழுத்தை பெற்ற பணியாளர்கள் உதவிக்கு வந்த நபருடன் வாக்களிக்க முதியவரை திரை மறைவிற்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த முதியவருடன் சென்றவர் முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை அழைத்து சென்று வெளியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

    தன்னை கேட்காமலே அரசியல் பிரமுகர் தனது விருப்பத்திற்கு வாக்கு பதிவு செய்ததை அந்த முதியவர் வீடியோவில் புலம்பியுள்ளார். இந்த புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குறைந்த வாக்கு சதவீதம் பதிவான மாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவில் வழக்கம் போல் அதிக அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.

    இது புதிதல்ல என்றாலும் பெண்களை மையமாக வைத்து பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. இந்தியா கூட்டணியும் பிரசாரம் செய்ததால் இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு யாருக்கு? என கேள்வி எழுந்துள்ளது.

    புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தரமான வெள்ளை அரிசி வழங்கப்பட்டதால் பெண்களிடையே அதிக அளவில் வரவேற்பும் இருந்தது.

    ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணத்திற்கு பதிலாக மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை பெண்கள் எழுப்பி வருகின்றனர்.

    இதனால் ரேஷன் அரிசி மீண்டும் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. ரேஷன் அரிசி விவகாரம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றது.

    முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தை தொடங்கியபோது பெண்கள் ரேஷன் கடைகளில் எப்போது இலவச அரிசி வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக பணம் வங்கியில் செலுத்தப்படுவதை ரங்கசாமி சுட்டி காட்டியபோது அதனை தங்கள் கணவர்கள் பறித்து செல்வதால் அரிசிதான் வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை காங்கிரஸ் தனது பிரசாரத்தில் மையமாக பயன்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது பிரசாரத்தில் பல பகுதிகளில் கூடியிருந்த பெண்களிடம் ரேஷன் அரிசி கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதோடு கை சின்னத்திற்கு வாக்களித்தால் ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசி வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

    மேலும், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதே இதற்கு காரணம் என்றும் வைத்திலிங்கம் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வந்தார்.

    இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடி இலவச அரிசி வழங்குவதை நிறுத்தியதே காங்கிரஸ் அரசுதான் என்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு தரமான இலவச அரிசியோடு உணவு பொருட்களும் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி உறுதி அளித்தார்.

    அதோடு பெண்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல அக்கறையோடு பெண்களுக்கான நலத்திட்டங்களையும் தனது அரசு செய்து வருவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமி திட்டங்களை பட்டியலிட்டார். முதியோர் உதவித்தொகையை கடந்த காங்கிரஸ் அரசு ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை என்றும் தனது அரசு பதவியேற்றவுடன் 500 ரூபாய் உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

    இதுமட்டுமல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தையும் புதிதாக தொடங்கி உள்ளதையும் ரங்கசாமி பிரசாரத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவானமாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொகுதிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான வாக்கு வித்தியாசத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    இது தேர்தலில் மோதிய பிரதான அரசியல் கூட்டணிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்.
    • இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி.

    புதுச்சேரி:

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள பசுமை வாக்குச்சாவடியான வ.உ.சி. அரசு பள்ளி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

    சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது மகளுடன் அவர் வாக்கை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். மோடியின் பணபலமும், ராகுல் காந்தியின் மக்கள் சக்தியும் களத்தில் இருக்கின்றன. எப்போதும் மக்கள் சக்திதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நாட்டின் அமைதி, பொதுசொத்தை பாதுகாப்பது, எல்லை பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார். 10 ஆண்டுகளாக அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை.

    காங்கிரஸ் கட்சியை வசைப்பாடி, வாரிசு அரசியல் என பேசி வாக்கு சேகரித்தார். மோடியின் ஆட்சி ஒட்டுமொத்த ஊழல் ஆட்சி, வருமான வரித்துறை வழக்கு போன்ற வழக்குகளில் உள்ளவர்கள் தேர்தல் பத்திரங்களை கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. புதுவையில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளன.

    தேர்தல் அறிக்கையில் கூறிய எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. வேட்பாளர் நமச்சிவாயம் அவரது துறையில் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டிலேயே அவர் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    மின்சார துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். சொத்து குவித்து வைத்துள்ளார். பா.ஜனதா பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி. புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது.
    • எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு அங்கேயே எனது முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

    பாகூர்:

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி கிருமாம்பாக்கம் வாக்குச்சாவடியில் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய குடியுரிமை பெற்ற இளம் வாக்காளர் ஆறுமுகம் புவியரசி (வயது18) தனது தாய் ஆறுமுகம் மாலதியுடன் வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

    இதற்காக அவர் ரூ.50 ஆயிரம் செலவு செய்து சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஓட்டு சாவடிக்கு வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    நான் சிங்கப்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். இந்தியாவில் நடைபெறும் தேர்தலை ஆர்வமாக கண்காணித்து வந்தேன். தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக காத்திருந்தேன்.

    எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது.

    எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு அங்கேயே எனது முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

    • புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது.
    • கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் அப்பா பைத்தியம் சாமி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அங்கிருந்து கார் மூலம் திலாசுப்பேட்டையில் உள்ள பழைய வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அங்கு காலை 8.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.


    வி.மணவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், தனது மனைவி வசந்தியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார்.

    அங்கு முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்குள் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பா பைத்தியம் சாமிக்கு ரங்கசாமி தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார்.

    தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு ரங்கசாமி திருநீறு வழங்கினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை 8.45 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை கம்பத்தம் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் வீராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    • வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர்.
    • சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    புதுவை மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. புதுவை பிராந்தியத்தில் 739 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடிகளில் வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. காலை 6.30 மணி முதல் வாக்காளர்கள் தேர்தல் துறை வழங்கிய பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களோடு தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர்.

    காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் எந்திர கோளாறு காரணமாக சற்று காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வெளியில் வர காலதாமதம் ஆனது. இதனால் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

    இதன்பின் வாக்குப்பதிவு வேகமெடுத்தது. புதுச்சேரியில் கோடை வெயில் தகித்து வருவதால் வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காலையிலேயே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்தனர். இதனால் நகரம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

    வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    காலை 7 மணி முதல் 8 மணிவரை 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன்பின் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாற்றுத்திறனாளிகள், முதியோரை அழைத்துச்செல்ல மாணவ தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல வீல் சேர், சாய்தளம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. முதியோரை காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    ஒரு சில இடங்களில் எந்திரம் பழுது, கால தாமதத்தில் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கினாலும் பெரியளவில் பாதிப்பு ஏதுமின்றி அமைதியான முறையில் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    • புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
    • பசுமை வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.

    புதுவை மாநிலத்தில் மொத்தம் 967 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் முழுமையாக மகளிர் மட்டும் செயல்படும் வாக்குச்சாவடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தனர்.

    புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் நுழைவுவாயிலில் தென்னை ஓலைகள், வாழை மரங்களால் வரவேற்பு தோரணங்கள், வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. கம்பு, மக்காச்சோளம், பனை ஓலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணா மற்றும் மாணவர்கள் இயற்கை பொருட்களில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், ஹேமலதா என்ற பழம் பொருள் சேகரிப்பாளரின், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பித்தளை பொருட்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.

    வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு பதநீர், மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது. பசுமை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மக்கள் இவற்றை கண்டுகளித்தபடி வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

    முன்னதாக பசுமை வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். துணை தாசில்தார் செந்தில்குமார் கூறும்போது, 1886-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான, பாரம்பரியமான பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைத்துள்ளோம்.

    ராஜ்பவன் தொகுதியில் படித்த வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதற்காக வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
    • நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். 

    • புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புரந்தரதாசன். இவர் அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இவரது வீட்டுக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ. 64 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொகை கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அங்கிருந்த புரந்தரதாசன் தெரிவித்தார். மேலும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார்.

    ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பதுக்கி வைத்திருக்க கூடாது என்று கூறி பணம் எண்ணும் எந்திரத்தை கொண்டு வந்து பணத்தை எண்ணினர். பின்னர் ரூ. 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் ரொக்கமாக ரூ.25 ஆயிரம் வைத்திருந்தனர். அவர்களை லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் தருமன் என்பது தெரியவந்தது. இருவரும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியை சேர்ந்த மேலும் 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரஸ் பிரமுகர் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்.
    • காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். காங்கிரஸ் பிரமுகரான இவர், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இவர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக ஏம்பலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன் தாஸ் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து கிருமாம்பாக்கத்தில் உள்ள மோகன்தாஸ் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்தனர். அவர்கள், மோகன் தாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    அப்போது அங்கு மோகன் தாஸ் இல்லை. அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம், சோதனையிட வந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை அறிந்த மோகன் தாஸ் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அவரிடம் தொழில் தொடர்பான ஆவணங்களின் விவரங்களை கேட்டறிந்தனர். அதன் பின் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையின் முடிவில் பணமோ, ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன் வைத்திலிங்கம் எம்.பி.யின் உறவினர் வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×