search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பா.ஜனதா நாடு முழுவதும் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
    • பா.ஜனதா வேட்பாளர் வலுவானவராக இருக்க வேண்டும் என கட்சித்தலைமை விரும்புகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா நாடு முழுவதும் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளரும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுவை பா.ஜனதா வேட்பாளர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

    யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியத்திலும் அறிமுகமான வேட்பாளரை அறிவித்தால்தான் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.

    இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவைக்கு வந்தனர்.

    இவர்களை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ராமலிங்கம், அசோக்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

    அப்போது புதுவை தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 3 பேர் பட்டியலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என ஆலோசிக்கப்பட்டது. இதில் முடிவு எட்டப்படவில்லை. இதன்பின் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    பா.ஜனதா வேட்பாளர் வலுவானவராக இருக்க வேண்டும் என கட்சித்தலைமை விரும்புகிறது. இதற்கெல்லாம் தகுதி உடையவரான தற்போதைய அமைச்சர் நமச்சிவாயத்தை புதுவை தொகுதியில் களம் இறக்கலாம் என கட்சியின் நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர்.

    ஆனால், அமைச்சர் நமச்சிவாயம், தொடர்ந்து புதுவை அரசியலில் இருப்பதையே விரும்பி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுத்து வருகிறார்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதை முன்வைத்து எதிர்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இதனால் அவர்களை போட்டி களத்தில் இறக்கவும் பா.ஜனதா தலைமை தயங்குகிறது.

    அதேநேரத்தில் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நியமன எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்கின்றனர். ஆனால் இவர்களால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் பா.ஜனதா தலைமைக்கு தொடர்கிறது. இதுவரை புதுவை தொகுதிக்கு சரியான வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தைத்தான் கருதுகின்றனர். அவர் தொடர்ந்து மறுத்து வருவதால் பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் தற்போதைய சிட்டிங் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவார்.

    வைத்திலிங்கம் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர், எம்.பி. என பல பதவிகளை வகித்தவர். இவையெல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கும்.

    ஒருவேளை தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், புதுவையில் பலமான கட்சி தி.மு.க. என்பதை நிரூபிக்க கடுமையான தேர்தல் பணிகளை தி.மு.க.வினர் செய்வார்கள்.

    • நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
    • எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்திய 3 பாஜக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர்.
    • 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது.

    தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். நன்னடத்தை விதிகள் அமலாகிவிட்டால் புதிய திட்டங்கள், பணிகளை செயல்படுத்த முடியாது.

    ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களையும், தொடங்கிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

    இதனால் பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்திலிருந்தே புதுச்சேரி அரசு பல்வேறு புதிய பணிகளை தொடங்கி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளிலும் தார்சாலை, சிமெண்டு சாலை, ஆழ்குழாய் கிணறு, சைடு வாய்க்கால் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜைகள் நடக்கிறது.

    அதோடு அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை, பதவி உயர்வு ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர். சமீபத்தில் பி.ஆர்.டி.சி.க்கு வாங்கப்பட்ட புதிய பஸ்களில் 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

    இந்த நிலையில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களுக்கு நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 1-ந் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. மொத்தம் 144 பேர் சான்றிதழ்கள் சமர்பித்தனர்.

    இதில் முதல்கட்டமாக 92 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இவர்களுக்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று இரவு 9 மணியளவில் சட்டசபை வளாகத்தில் நடந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தேர்வானவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் கணவர், கைகுழந்தையோடு பணி ஆணையை பெற்றுச் சென்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பணி ஆணை வழங்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மீதமுள்ள 52 பேருக்கும் புதுப்பிக்கப்பட்ட உரிய சான்றிதழ்களை சமர்பித்து பணி ஆணை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.

    ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அல்லது தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என தெரியாத நிலையில் கிராமப்புற பகுதிகளில் தாமரை சின்னம் வரைந்து, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களை பிரசுரித்தும் வாக்களிப்போம் தாமரைக்கே எனவும் அச்சிட்டிருந்தனர்.

    மேலும் சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய போது, தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்ற வரிகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

    இது கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகளை இழுக்கும் தந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது புதுவை அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இரவோடு, இரவாக புதுவை அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்து ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், பிரதமர் மோடி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி பேசியதை அச்சிட்டுள்ளனர்.

    மேலும் பிரதமர் மோடி பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் ஒப்பற்ற புகழை பேசியதன் மூலம் எடப்பாடியார் தலைமையில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பா.ஜனதா அதன் கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர்.

    புதுவையில் அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்துள்ள பா.ஜனதா கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    பாஜக - அ.தி.மு.க. கட்சிகள் இடையிலான இந்த திடீர் போஸ்டர் யுத்தம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
    • புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

    வேட்பாளர் பட்டியலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை, பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கரன், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தாலும் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க விரும்பவில்லை. உள்ளூர் அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட விரும்புகிறார்.

    இதனால் வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை நடந்தது.

    முகாமை முதலமைச்சர் ரங்கசாமி ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி புதுவை எம்.பி. தொகுதி எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார்.

    • எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
    • புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.

    இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்திலும் வெளிவந்துள்ளது.

    அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்' என்றும், 'எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.

    அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்'என்றும், 'புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இதுபோன்ற நடவடிக்கையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    • காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
    • காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது.

    ஆனால் காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

    மோட்டார் பொருத்தப்பட்ட இந்த படகுகள் தலா ரூ. 1 கோடிக்கு மதிப்புள்ளவை. இதனால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.

    • பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
    • ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை சிவசங்கர், ஏனாம் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோசியேட் எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் பங்கேற்று வருகின்றனர்.

    அரசு பதவிகளில் இல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைந்தது முதலே வாரிய பதவி கேட்டு வருகின்றனர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பா.ஜனதாவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்தில் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் போராட்டமும் நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அலவன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

    ஆனாலும் அங்காளனுக்கு அரசு இதுவரை புதிய கார் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனது பழைய காரின் சாவியை சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார்.

    ஓடாமல் இருந்த காரை பட்டி பார்த்து தனக்கு வழங்கியுள்ளதால் செல்லுமிடமெல்லாம் அது மக்கர் செய்து நிற்பதாகவும் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காருக்கு ரூ.30 ஆயிரம் டீசல் அலவன்ஸ் வழங்கும் நிலையில் தனது காருக்கு வழங்கவில்லை என்பதால் காரை திரும்ப ஒப்படைத்துள்ளதாக அங்காளன் தெரிவித்தார்.

    ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். இவர் ஏற்கனவே உழவர் கரை சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதாவில் வாய்ப்பு கேட்டு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    இதனால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பளிக்காத பட்சத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியவில்லை.

    மற்றொரு பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.

    இதோடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி புதுவை பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கும் பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    • கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார்.
    • மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.

    ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.

    அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாக தெரிவித்தார்.

    மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து கார் சாவியை கொடுத்து காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இது குறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-


    எனக்கு கொடுக்கப்பட்ட அரசு கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த காரை பட்டி பார்த்து புதிய கார் போல் என்னிடம் வழங்கினர்.

    ஆனால் கார் எங்கு போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.

    இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்கு காருக்கு டீசல் போட பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்கு காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடந்தது.
    • ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.

    ஜப்பான்-இந்தியா நாடுகளின் வர்த்தக சூழல் தொடர்பாக வல்லுநர்களுடன் ஆங்கிலத்தில் அவர் கலந்துரையாடினார்.

    இந்த கலந்துரையாடலின் முடிவில் பேசிய அவர் தமிழ் எனக்கு பிடித்த மொழி.எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்று குறிப்பிட்டார்.

    அதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இருந்து ஒருவன் ஒருவன் முதலாளி... உலகில் மற்றவன் தொழிலாளி... விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி என்று முழு பாடலையும் அவர் பாடினார்.

    இதனால் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

    அவர் பாடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அத்துடன் தனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும், அதிலும் ரஜினி படங்கள் அதிகம் பிடிக்கும் என்று குறிப்பிட்ட கோபுகி சேன் தமிழ் திரைப்படங்களில் தான் ரசித்து பல விஷயங்களை பகிர்ந்தார். 

    • ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது.
    • அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று புதுவை வந்தார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார்.

    4 வருடத்திற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதியான இன்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    பொன்னொளி பூமிக்கு வந்த நாள் கடைபிடிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் தங்க வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.

    இதற்காக ஏராளமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். இந்த நிலையில் அரவிந்தர் நினைவிடத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகையொட்டி ஆசிரமத்திற்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், வெளிநாட்டவர், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    அதிகளவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.

    மேலும் தமிழக கவர்னர் வருகையையொட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தமிழக கவர்னர் ரவி திடீர் வருகையால் அரவிந்தர் ஆசிரம வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    சுமார் அரைமணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த கவர்னர் ரவி புறப்பட்டு சென்ற பிறகே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம்.
    • எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியிலிருந்து சென்றுவிட்டார்.

    இரட்டை இலையில் எப்படி போட்டியிடுவோம்? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லா தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக தீர்ப்பாகத்தான் வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சிவில் சூட்டில் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது.

    எடப்பாடி பழனிசாமியை எந்த சூழ்நிலையிலும், யாரும் நம்ப தயாராக இல்லை என்ற நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது. அவருக்கு யாரெல்லாம் நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நன்றியில்லாமல் அவர் நடந்து கொண்டுள்ளார். இதனால் அவருடன் கூட்டணி அமைக்க, அரசியல் கட்சிகள் தவிர்த்து வருகின்றன.

    பா.ஜனதாவுடன் தொகுதி பங்கீடு முடித்தவுடன் தகவல் தெரிவிப்போம். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், நாங்களும் இணைந்து பணியாற்றுகிறோம். சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.

    நடிகர் ரஜினி மனிதாபிமானமிக்கவர். அவர் அழைப்பின்பேரில் சசிகலாவை சந்தித்துள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை.

    தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×