search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் 600 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

    பட்டினச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 30-க்கும் மேற்பட்ட விசை படகுகளும் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமலை ராஜன் ஆற்றின் முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்துவிடுவதால் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களைக் கொட்டி முகத்துவாரம் தூர்ந்து போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2009-ம் ஆண்டு தொண்டு நிறுவனங்களால் கட்டித் தரப்பட்ட ஐஸ் பிளான்ட் இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் எந்திரங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சீர் செய்து தர வேண்டும்.

    தொடர்ந்து கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை நீடித்து வருவதால் குடிநீருக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரவி திருப்பட்டினம், பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பட்டினச்சேரி கிராமத்தில் உள்ள சிங்காரவேலர் சிலையிலிருந்து கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
    • பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 22-ந் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

    ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது.

    பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.

    பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.
    • தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசியதாவது:-

    இந்திய அளவில் உள்ள மாநிலங்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். திராவிட இயக்கத்தை கட்டி காக்க அவர் பின்னால் நாம் அணிவகுக்க வேண்டும்

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இலவச பஸ், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் புதுவையிலும் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சொல்வார் ஆனால் செய்ய மாட்டார். புதுவையில் நடக்கின்ற ஆட்சிக்கு ஒரு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை.

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் மு.க.ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது.

    இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.

    தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கு மத்திய அரசை கண்டு எந்த பயமும் இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. எதுவாக இருந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

    தமிழகம், புதுவையில் ஒரு காலமும் தாமரை மலராது. புதுவையிலும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும்.காங்கிரஸ் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. கொஞ்சமாவது உழைக்க வேண்டும். ஈரோடு தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார்.

    புதுவையில் திராவிட இயக்கத்தின் ஆட்சி விரைவில் அமையும். நாராயணசாமி கோபித்து கொள்ள கூடாது.

    சீட்டு வாங்க மட்டுமே காங்கிரஸ் கட்சியை நடத்து கின்றனர். அதனால் என்ன பிரயோசனம்? உழைக்கனும். மக்களுக்கு நல்லது செய்யனும். மக்களுக்காக கட்சி நடத்த வேண்டும். தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது. சீட்டு கேட்பது. இதனால்தான் மக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுபடவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.
    • கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடைபெறும் விழாக்களில் கவர்னர்கள் தேசிய கொடியேற்றுகின்றனர். தெலுங்கானா மாநில கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு கவர்னராகவும் உள்ளார்.

    இதனால் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களிலும் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று கொடியேற்றுகிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.

    விழா முடிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று தேசிய கொடியேற்றுகிறார்.

    மதியம் 1 மணி அளவில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். விருந்து நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஐதராபாத் செல்கிறார்.

    அங்கு கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். கடந்த ஆண்டும் குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களில் கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
    • முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?

    தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.

    அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?

    தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.

    கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.

    முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.

    ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.

    வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
    • புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.

    புதுச்சேரி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

    பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.

    பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

    புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.
    • திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் தி.புதுக்குப்பம் பள்ளிக்கூட குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது52). பொக்லைன் டிரைவர்.

    சக்திவேலுக்கு உஜ்வாலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவரது உறவினர் இல்ல திருமணம் இன்று காலை திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் சிவன் கோவிலில் நடைபெற்றது.

    திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சக்திவேல் திருமணம் முடிந்த பிறகு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கனூர் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது லாரியை முந்தி செல்ல முயன்ற போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சித்தலம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் அவரது வாகனத்தில் இடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நிலை தடுமாறிய சக்திவேல் லாரியின் மீது தவறி விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் சக்திவேல் மீது ஏறியதால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.

    திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
    • புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.

    இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.

    ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.

    ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பம் வரை 31 கி.மீ. கடற்கரை உள்ளது.

    ப்ரோமனேட் கடற்கரை, பாண்டிமெரினா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

    இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர்.

    ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    புதுச்சேரி:

    ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலவழி மையம் உள்ளது.

    இங்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் மண்ணாடிப்பட்டு எல்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.


    இதில் ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் சிறியரக ட்ரோன் விமானத்தில் அவசரக்கால சிகிச்சைக்கான மருந்துகளை வைத்து அரை மணி நேரத்திற்கு பறக்க வைத்து சோதனை செய்தனர்.

    ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜ்குமார் சித்தரியா, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி மணிமொழி உள்ளிட்டோர் சோதனையை பார்வையிட்டனர். கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    • உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
    • வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.

    இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×