search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கடவுளை மறக்க வைத்த நிகழ்வு
    X
    கடவுளை மறக்க வைத்த நிகழ்வு

    குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - கடவுளை மறக்க வைத்த நிகழ்வு

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில நிகழ்வுகள் நமது நம்பிக்கையை கூட தகர்த்து விடுவதுண்டு. இப்படிப்பட்ட பல அனுபவங்கள் பலருக்கு இருக்கலாம்.

    அப்படிப்பட்ட அனுபவத்தை நானும் சந்தித்து இருக்கிறேன்.

    2004-ம் ஆண்டு... ஜூலை 16-ந்தேதி.

    இந்த நாள் என் நினைவை விட்டு அகலாத நாள். அப்போது எனது 2-வது மகள் கைக் குழந்தையாக இருந்தாள். பெரியவளுக்கு 3 வயது.

    கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளியே வர முடியாமல் வகுப்பறைகளுக்குள்ளேயே தீயில் கருகிப் போனார்கள். உடல்கள் அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்து போனது என்பதை அறிந்ததும் நிலை குலைந்து போனேன்.

    ஒரு தாயின் இடத்தில் இருந்து அந்த குழந்தைகளின் கடைசி நிமிடம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்து அழுதேன். எனது அழுகையை உடனடியாக என்னால் அடக்கவும் முடியவில்லை. அவ்வளவு எளிதாக அந்த சம்பவத்தை என்னால் கடந்து செல்லவும் முடியவில்லை.

    சின்ன குழந்தைகளுக்கு உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் சரி, வலியால் அழுதாலும் சரி தாய் துடித்து போவாள்.

    அழுதால் குழந்தை எதற்கு அழுகிறது என்று பதட்டமாக இருக்கும். பாட்டிலில் பாலோ அல்லது வெந்நீரோ கொடுத்தால் கூட சூடு எப்படி இருக்கிறது என்பதை தொட்டுப் பார்த்துதான் கொடுப்போம்.

    குளிபாட்டும் போது ஒரு ‘மக்’ தண்ணீரை ஊற்றியதும் லேசான சூட்டில் அழுதாலும் அச்சச்சோ... என்று நம் கையை குழந்தையின் உடலில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டுவோம். அந்த சிறு வலியை கூட நம்மால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை.

    நூறு குழந்தைகள் ஒரே இடத்தில் எரியும் நெருப்புக்குள் சிக்கி கதறியபோது எப்படி இருந்து இருக்கும்?

    காலிலோ, கையிலோ லேசாக அடிபட்டால் கூட அம்மா... அம்மா... என்றுதான் அழும். உடல தீ நாக்குகள் தின்று கொண்டிருந்தபோது அத்தனை குழந்தை களும் அம்மா.... அம்மா.... என்று எப்படி கதறி துடித்து இருக்கும்? இப்போது நினைத்தாலும் கண்ணில் நீர் பெருகுகிறது!.

    தடுப்பூசி போட குழந்தையை டாக்டரிடம் அழைத்து செல்வோம். ஊசி போடுவதற்கு குழந்தையை மட்டும் வாங்கி செல்வார்கள். நாம் வெளியில்தான் காத்து நிற்போம்.

    உள்ளே இருக்கும் பல குழந்தைகள் அழுதாலும் நமது குழந்தைக்கு ஊசி போடும்போது அழுததும் அய்யய்யோ... நம்ம குழந்தை அழுகிறதே என்று வெளியில் நிற்கும் நாம் கண்டுபிடித்து விடுவோம். குழந்தையை வெளியே கொண்டு வந்து அதன் அழுகையை நிறுத்தும் வரை நாம் தவித்துப் போவோம். ஒருமுறை எனது பெரிய பாப்பா இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். கையில் குளுகோஸ் ஏற்றப்பட்டது. ஸ்கேன் எடுப்பதற்காக தூக்கி சென்றோம். குழந்தையை என் கணவர் கையில் வைத்திருந்தார். நான் குளுகோஸ் ஏற்றிய கையை பிடித்து கொண்டேன்.

    அப்போது அவரது கண்ணில் இருந்தும் கண்ணீர் வடிந்தது. அவராலும் அடக்க முடியவில்லை. குழந்தைக்கு சிறு கஷ்டம் என்றால் கூட பெற்றோர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    அப்படியிருக்கும் போது நூறு குழந்தைகள் ஒட்டு மொத்தமாக உயிரோடு எரிந்ததை நினைத்தால் எப்படி தாங்க முடியும்.

    அத்தனை குழந்தை கள் ஒன்றாக எரிந்து மடிந்ததே! யாராவது ஒரு ஆசிரியர், அல்லது ஒரு பணியாளர், அல்லது காப்பாற்ற முயன்றவர் களில் ஒருவர்... ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லையே!

    எதுவும் அறியாத அந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தது? அல்லா, ஏசு, விநாயகர், பெருமாள்... என்று எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லையே ஒரு தெய்வம் கூட உதவி செய்யவில்லையே என்ற கேள்விதான் எனது மனதை அலைபாய வைத்தது.

    கடவுள் இருக்கின் றானா? இல்லையா? என்று மனம் குமுறியது. நேற்று வரை நூறு சதவீதமாகஇருந்த கடவுள் நம்பிக்கை இன்று ஒரு சதவீதம் கூட இல்லை. முற்றிலுமாக கடவுள் நம்பிக்கையை இழந்து விட்டேன் என்பதுதான் உண்மை.

    மணிகணக்கில் கடவுள் முன்பு அமர்ந்து இருக்கும் என்னால் இந்த சம்பவத்துக்கு பிறகு ஒரு நிமிடம் கூட கையெடுத்து கும்பிட மனம் வரவில்லை.

    இதில் இருந்து மீண்டு வர ரொம்ப காலம் ஆனது. வீட்டில் எல்லோரும் கடவுளை மிக தீவிரமாக நம்புகிறார்கள். நன்றாக இருக்கிறார்கள். என் பசங்க நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தோ‌ஷம்தானே முக்கியம்.

    அதனால்தான் காலப்போக்கில் மீண்டும் சாமி கும்பிட ஆரம்பித்தேன். ஆனாலும் கும்பகோணம் சம்பவத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதே உண்மை.

    மறைந்தும் மறக்க முடியாதவர்களில் நாகேஷ் அங்கிள் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் சாதித்து இருக்கிறார்கள். அவர்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷ் அங்கிளின் பெயர் சினிமா உள்ள வரை நிலைத்து நிற்கும்.

    நான் பிறக்கும் முன்பே பிறந்து கலைத்துறைக்கு வந்தவர். நான் தமிழ் சினிமாவில் வந்து கற்றுக் கொண்டது ஏராளம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கலைஞரிடம் இருந்தும் எவ்வளவோ அனுபவங்களை கற்று இருக்கிறேன்.

    தமிழ் திரை உலகில் கொடி கட்டி பிறந்த நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற பல ஜாம்பவான்கள் இருந்த நிலையிலும், அவர்களுக்கு மத்தியில் நாகேஷ் அங்கிள் தனியாக தெரிவார்.

    ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமல், நாகேஷ், ஆச்சி மனோரமா, சந்தான பாரதி, ஊர்வசி, ரூபினி, டெல்லி கணேஷ் என்று பெரிய நடிகர் பட்டாளமே இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நானும் நடித்த போது ஒவ்வொருவருடைய நடிப்பையும் பார்த்து வியந்து இருக்கிறேன். அவர்களில் நாகேஷ் அங்கிள் மட்டும் தனக்கென்று தனி பாணியை உருவாக்கி தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஈர்த்தவர்.

    நாகேஷை பார்ப்பதற்கும் அவரது நகைச்சுவையை பார்த்து ரசிப்பதற்கும் பெரும் கூட்டம் சினிமா பார்க்க வரும். அந்த படத்தில் கமலும், நாகேஷும் அடிக்கும் லூட்டியை பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

    படப்பிடிப்பு தளத்துக்கு நாகேஷ் அங்கிள் வந்து விட்டாலே கலகலக்கும். அதே நேரம் அவர் மீது எங்களுக்கு பயமும் இருக்கும். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் முகபாவனைகள், நடிப்பில் வித்தியாசம் இருக்கும். ஒவ்வொரு முறையும் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்? என்று அவர் சொல்லித் தருவார்.

    தான் மட்டும் நன்றாக நடித்து பெயர் வாங்கினால் போதும் என்று நினைக்கமாட்டார். சக நடிகர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சொல்லித் தருவார். சில காட்சிகளில் நான் நடிப்பதை பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போது சில நுணுக்கங்களை சொல்லி, இப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடித்தும் காட்டுவார்.

    அவர் நகைச்சுவை நடிகராக இருந்தாலும், எல்லா பாத்திரங்களுக்கும் ஏற்றவர் என்பதை சில வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நிரூபித்து இருக்கிறார். அவரை போல் நடனம் ஆடவும் முடியாது. அவர் புதிது புதிதாக நடன அசைவுகளை அனாயசமாக ஆடி அசத்துவார்.

    அவர் நம்மை விட்டு இன்னும் மறையவில்லை. நம்முடனே இருக்கிறார். தமிழ் திரை உலகம் இருக்கும் வரை அவரும் வாழ்வார்.
    Next Story
    ×