search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    துன்பத்தை இன்பமாக்கும் வழி
    X

    துன்பத்தை இன்பமாக்கும் வழி

    • வாழ்க்கையில் வரும் துன்பங்களும் முட்டுக்கட்டைகளே.
    • வாழ்க்கை என்றாலும் உண்மையில் இன்பம் பாதி! துன்பம் பாதி!

    துன்பத்தைத் துணையாகக் கொண்டு இன்பத்தை அடைய முடியுமா? என்பதைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

    "மேடு பள்ளங்களும் வளைவு நெளிவுகளும் இல்லாத பாதை உலகத்தில் இல்லை; அதேபோல இன்ப துன்பங்களும் கஷ்ட நஷ்டங்களும் இல்லாத வாழ்க்கை மனிதர்க்கு இல்லை!". இந்த வாசகத்தை நாம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும் உண்மையில் இன்பம் பாதி! துன்பம் பாதி! எனக் கலந்ததாக வாழ்க்கை அமைந்திருக்கிறது?. இல்லையே! துன்பம் பெரும்பகுதி! இன்பம் அதில் சிறுபகுதி! எனவல்லவா கலவை விகிதாசாரமற்றவையாக இருக்கிறது! என்று நம்மில் பெரும்பாலோர் புலம்புவதும் காதில் ஒருபக்கம் விழத்தான் செய்கிறது.

    'இன்னாது அம்ம இவ்வுலகம்!' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நமது சங்கச் சான்றோன் தெளிவாகவே குறித்துவிட்டான்; இந்த உலகம் துன்பமயமானது தான். இருளும் ஒளியும் மாறிவரும் உலகில் இருட்டு நிரந்தரமா? ஒளி நிரந்தரமா? என்ற கேள்வியை அறிவியல் பூர்வமாகக் கேட்டுப் பார்த்தால், இந்த உலகில் இருட்டே நிரந்தரமானது என்பது விளங்க வரும். பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் வந்து, இயன்ற அளவுக்கு பூமியின் பக்கங்களில் ஒளியைப் பாய்ச்சி வெளிச்சப்படுத்தப் பார்க்கின்றன. நாமும் முடிந்த அளவுக்குப் பல்வகையான விளக்குகளை உருவாக்கி இருளை விரட்ட முயற்சிக்கிறோம்.

    ஆனாலும் இருளே வலிமையானது. 'விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல்' என்று குறளாசான் குறிப்பிடுவதைப் போல, வானத்தில் வலம்வரும் இயற்கை விளக்குகளாயினும் மனிதர் ஏற்றிவைக்கும் பல்வகைச் செயற்கை விளக்குகளாயினும் அவை எப்போது அணைந்து மறையும்? எனத் தக்க நேரம் பார்த்துப் பரவுவதற்காக இருள் எப்போதும் காத்திருக்குமாம். அவ்வகையில் இருளைப் போன்றவை மனிதர்க்கு வரும் துன்பங்கள்; அதே போல வெளிச்சத்தைப் போன்றவை அவர் அனுபவிக்கும் இன்பங்கள்!.

    அப்படியானால் உலகில் இருள் நிரந்தரமானது என்பதைப் போல மனித வாழ்க்கையில் துன்பமும் நிரந்தரமானது என்று முடிவுக்கு வந்துவிடலாமா?. அப்படி வந்துவிட்டால் துன்பத்தை வைத்துக் கொண்டு இன்பம் உருவாக்குவது எப்படி?. பள்ளத் தாக்குகளுக்குள் நின்றுகொண்டு சிகரங்களை எட்டிப் பிடிப்பது எப்படி? வேப்பிலைச் சாற்றினைத் தேன்சுவைச் சாரலாக்குவது எப்படி?. சுவையான சவால் தான்.

    ஒரு பெரிய காட்டை ஓர் இளைஞன் நடந்து கடந்து கொண்டிருந்தான். நண்பகல் நேரம்; பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது; நடுக்காட்டில் பசியமர்த்த என்ன உணவு கிடைக்கப் போகிறது?. கடும் பசியோடு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தான். பாதையோரத்தில் ஒரு பெரிய மாமரம் தென்பட்டது; அருகில் சென்று பார்த்தால், மரத்திலேயே பழுத்துப், பெரும்பெரும் மாம்பழங்கள் சடைச் சடையாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.

    விறுவிறுவென மரத்தில் ஏறினான்; பழங்களைப் பறித்து மரக்கிளையில் அமர்ந்தவாறே சாப்பிடத் தொடங்கினான். பசி தணிந்தபாடில்லை; உயரே உயரேயுள்ள கிளைகளில் நல்ல சுவையான மாம்பழங்கள் இருந்ததால், கிளைவிட்டுக் கிளைதாவி, மேலே மேலே ஏறி , உச்சியிலுள்ள நுனிக் கிளைக்குச் சென்றுவிட்டான். அங்குள்ள பழங்களைப் பறிக்க முற்படும்போது, இவனது எடை தாங்கமுடியாமல் நுனிக்கிளை முறிந்து கீழே விழத் தொடங்கினான். மரம் பெரிய மரமாக இருந்தபடியால் கீழே இடையில் இருந்த மரக்கிளையில் சிக்கினான்.

    அந்த மரக்கிளையைக் கெட்டியாப் பிடித்துத் தொங்கிக் கொண்டே கீழே பார்த்தான்; தரை ரொம்ப தூரத்தில் இருந்தது. அங்கிருந்து கீழே குதித்தால் பெரிய அடியாக விழுந்து காயங்கள் ஏற்படும்; நுனிக்கிளையிலிருந்து மேலே உள்ள கிளைக்கு ஏறிச் செல்லவும் முடியாது; .யாராவது கீழே செல்பவர்கள் பார்த்து மரத்தில் ஏறிவந்து காப்பாற்றினால்தான் உண்டு. "யாராவது காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! மரக்கிளை யில் மாட்டித் தொங்கிக் கொண்டிருக்கிறேன்!" என்று பலம்கொண்ட மட்டும் குரலெடுத்துக் கத்திப் பார்த்தான். அப்படியே மயங்கிப் போனான்; மயக்கத்தில் இருந்தாலும் மரக்கிளைப் பிடிமானத்தை மட்டும் விடவேயில்லை.

    அப்போது அந்த வழியாகச் சென்ற பெரியவர் ஒருவர், மரத்தில் மயங்கித் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார்; வயதானவர் என்பதால், அவரால் மரத்தில் ஏறமுடியாது. யோசனை செய்தார். கீழேகிடந்த ஒரு கல்லை எடுத்து தொங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனைக் குறிபார்த்து எறிந்தார். படக்கென்று விழித்துக்கொண்ட இளைஞன் கீழே பார்த்தான்.

    அந்தப் பெரியவர் மற்றொரு கல்லை எடுத்து, மீண்டும் இவன்மீது எறியக் குறிபார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கல் தன்மீது படுவதற்குள் தப்பித்துவிட வேண்டும் என நினைத்த இளைஞன், தொங்கிக் கொண்டிருந்த கிளைக்கு மேலிருந்த கிளையை முயன்று பற்றினான்; அதற்குள் அவரது இரண்டாவது கல்லும் அவன்மீது சுரீரெனப் பட்டது. பிடிபட்ட கிளையைப் பற்றி வசதியாகக் கீழே இறங்குவதற்கு வழிபார்த்தான் இளைஞன். அப்போது பெரியவர் மூன்றாவது கல்லையும் இளைஞனை நோக்கி எறிந்தார்; எறி வாங்கிக்கொண்டே விறுவிறு எனக் கீழிறங்கி வந்துவிட்டான் இளைஞன்.

    கீழே வந்தவுடன் பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்டான்,''ஐயா! மரத்தில் தொங்கி ஆபத்தில் இருந்த என்னை மரமேறி வந்து காப்பாற்றுவீர்கள் என்று பார்த்தால், நீங்கள் என்ன என்மீது கற்களை எறிந்து காயப்படுத்தப் பார்க்கிறீர்கள்?".

    "தம்பி! நான் வயதானவன். என்னால் மரத்தில் ஏறிவந்து உங்களை மீட்டெடுக்க முடியாது. நான் கற்களைக்கொண்டு உங்கள் மீது வீசியதுகூட உங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான். அப்படி உங்கள்மீது நான் கற்களை வீசவில்லையென்றால் நீங்கள் விழித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்!; இப்படி முயற்சியெடுத்து மேற்கிளையைப் பற்றிக் கீழே இறங்கி வந்திருக்கவும் மாட்டீர்கள்!" என்றார் பெரியவர்.

    கல்லால் எறிவது ஒருவிதமான துன்புறுத்தல் தான் என்றாலும், இளைஞன் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்தத் துன்புறுத்தலும் அவனை விடுவிப்பதற்கான ஒருவிதமான இன்ப வைத்தியம் போலத்தான் அமைந்துவிட்டது.

    அந்த இளைஞன் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு மயங்கிக் கிடந்தபோது அவனது மூளை உறைந்து விட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையற்ற வனாகிவிட்டான். அவன் மீது பட்ட முதல் கல்எறி அவனை விழிப்படையச் செய்தது. இரண்டாவதாகப் பட்ட கல்எறி அவனிடமிருந்த அச்சத்தைப் போக்கித் துணிச்சலை உண்டாக்கியது. மூன்றாவது பட்ட கல் எறி அவன் மனத்தில் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தை உருவாக்கித் தப்பிக்கச் செய்துவிட்டது.

    பாசிபடர்ந்த குளத்தில் தொடர்ந்து கற்களை எறிய எறியப், பாசம் அகல்வதுபோல நம்மீது தொடர்ந்து நடத்தப்படும் துன்பக் கல்வீச்சுக்களும் நம்மை மேம்படுத்துவதற்காகவும் இருக்கலாம். தாங்கிக் கொள்வதும், அதற்கேற்பச் செயல்முறைகளைத் தகவமைத்துக் கொள்வதும் நம்மை மேலும் சிறப்பாக்கலாம்.

    துன்பங்கள் தொடர்ந்து வந்து எழமுடியாத அளவுக்குத் துன்புறுத்தினாலும், சிலர் அதிலேயே சுகம்கண்டு போய்ச் சுருண்டு கிடப்பார்கள். துன்பங்களை எதிர்க்க முதலில் நமக்குப் பதற்றமில்லாத பொறுமை தேவை; வலிதாங்கு வதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும். அப்போதுதான் துன்பம் நாடி, துன்பத்திற்கான மூலத்தை நாடி, அதைத் தணிக்கும் வழியைக் கண்டு பிடித்து, வாய்ப்பாகச் செய்து வெல்ல முடியும்.

    பொறுமைக்கு அடுத்து நமக்குத் தேவைப்படுவது தீர்மானமாக முடிவெடுத்துச் செயல்படுத்தும் திறமை. மூன்றாவதாக முத்தாய்ப்பாகத் தேவைப்படுவது எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் நியாயத்தின் பக்கமே நின்று போரிடும் நேர்முறைத் தன்மை. பொறுமை, தீர்மானமாக இயங்கும் வைராக்கியம், நேர்முறைத் தன்மை ஆகிய இவை மூன்றுபோதும் எவ்வகைத் துன்பத்தையும் வல்லமையோடு எதிர்த்து நின்று வெல்வதற்கு.

    வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரேமாதிரி துன்பங்கள் வருவதில்லை; வந்தவருக்குக்கும் ஒரேமாதிரி துன்பங்கள் திரும்பத் திரும்ப வருவதில்லை. வந்த துன்பமே திரும்பத் திரும்ப வந்தால் துன்பமும் சலித்துப்போகும்; வாழ்க்கையும் புளித்துப்போகும். புதிதுபுதிதாகத் துன்பங்கள் வருவதைச் சிலர் ஆர்வத்தோடு வரவேற்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போது தான் அவற்றைத் தீர்ப்பதற்குப் புதிதுபுதிதாக வழிமுறைகள் காணமுடியும் என்றும், அறிவுக்கு அது சவாலாக இருப்பதாகவும் கூறி மகிழ்கின்றனர்.

    'காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!' என்று மகாகவி பாரதி, எமனையும் வரவேற்று வெல்லத் துடிக்கிற கவிதை துன்பத்தில் உழல்கிற எல்லாருக்கும் உத்வேகம் தருகிற கவிதை. மரணத்தை விடவா பெருந்துன்பம் இருந்துவிடப் போகிறது?.

    வருகிற துன்பம் பெரியதோ சிறியதோ அதனை ஏற்கமறுத்துப் புறக்கணிக்கக் கூடாது; அதற்காக அதற்குள்ளேயே வாழவும் பழகிவிடக்கூடாது. துன்பம் வாழ்வின் ஓர் அங்கம் என இயல்பாய் ஏற்றுக்கொண்டு, அதனை வெல்வதற்கான தீர்வுகளைக் காண்பதிலேயே மனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். துன்பம் தொடராகவோ அல்லது பெரியதாகவோ தோன்றினால், அவற்றைச் சிறுசிறு பகுதிகளாகப் பகுத்துப், பகுதி பகுதியாக வெல்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வெற்றி காணலாம்.

    துன்பம் யாருக்கும் தனித்து வருவதில்லை: ஒருவர் மூலமாகவும் வருவதில்லை; பலர் வழியாகப், பலரூபங்களில் துணைகளோடு துன்பங்கள் துரத்திக்கொண்டு வரலாம். அதனால் அவற்றைத் தனியராக நின்று வென்றுவிடுவோம் என்று யாரும் எண்ணிவிடவும் கூடாது. குடும்பத்தினர், நண்பர்கள், அலுவல்புரியும் இடத்தின் சக பணியாளர்கள், அரசாங்கத்தினர் எனப் பலருடைய துணை களையும் கூட்டிக்கொண்டு, துன்பம் அகற்றப் பாடுபடவேண்டும். சிலவேளைகளில் நமது துன்பங்களை அகற்றுவதற்கு நமது எதிரிகள்கூட நமக்கு உதவிசெய்திட நேரிடலாம்.

    அனுபவங்கள் என்பவை பெரும்பாலும் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து வெளியேறிய தருணங்களாகவே இருக்கும். அந்த வகையில் புதிதாக வரும் துன்பத்தினை விரட்டுவதற்குப், பழைய அனுபவங்கள் கூட நல்ல ஆசிரியனாக அமையலாம்.

    துன்பங்கள் நம்மைப் புடம்போடுகின்றன. வாழ்க்கையில் ஒரே மாதிரியான பயணத்தைத் தவிர்த்துப் புதியதான புத்துணர்வு வழிகளை ஏற்படுத்திக்கொள்ள இக்கட்டுக்களே நம்மை திசைதிருப்பி விடுகின்றன.

    திருக்கோயில் தேரை நேர்வழியில் நகர்த்துவதுவதற்கும், விரும்பிய திசைகளில் திருப்புவதற்கும் அவ்வப்போது அடிப்பகுதியில் ஒரு கட்டையைப் போட்டு மாற்றிவிடுவர். அந்த கட்டைக்குப் பெயர் 'முட்டுக் கட்டை'. வாழ்க்கையில் வரும் துன்பங்களும் முட்டுக்கட்டைகளே!. அவற்றைப் பொறுமை யோடும், நேர்முறைச் சிந்தையோடும், வெற்றிகாண்டுவிடலாம் என்கிற தீர்மானச் சிந்தையோடும் எதிர்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வளமே!.

    துன்பங்களையே துணையாகக் கற்றவர்க்கு எந்நாளும் இன்பமே.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×