search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தெய்வீகக் கனவுகள்
    X

    தெய்வீகக் கனவுகள்

    • இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கனவுகள் வருகின்றன.
    • ராமாயணத்தில் இரண்டு கனவுகள் சொல்லப்படுகின்றன.

    நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கனவுகள் வருகின்றன. ராமாயணத்தில் முக்கியமாக இரண்டு கனவுகள் சொல்லப்படுகின்றன.

    ஒன்று பரதன் கண்ட கனவு. அது விளையப்போகும் தீமையைச் சொல்கிறது. இன்னொன்று திரிஜடை கண்ட கனவு. அது நடக்கப் போகும் நன்மையைச் சொல்கிறது.

    அயோத்யா காண்டத்தில், அயோத்தியை விட்டுப் பிரிந்து கேகய நாட்டில் இருக்கும் பரதன் கெட்ட கனவு கண்டு விழித்துக் கொள்கிறான். அயோத்தியில் இருக்கும் தன் தந்தை தசரதருக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்து அவன் உள்ளம் பதறுகிறது. தன் தம்பி சத்துருகனிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்லிக் கவலையோடு புலம்புகிறான்.

    அந்த கனவு பின்னால் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான முன்கூட்டிய சூசகம் என்பதை அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அவனுக்குப் புலப்படுத்துகின்றன. அவன் கேகய நாட்டில் இருந்து மறுபடி அயோத்திக்கு அழைத்துவரப் பட்டபோது, தசரதரின் உயிரற்ற உடலைத்தான் அவனால் காண முடிகிறது.

    சுந்தர காண்டத்தில் ராமனைப் பிரிந்து தாளாத துயரத்தில் இருக்கும் சீதாதேவிக்கு ஆறுதலாக விபீஷணனின் புதல்வி திரிஜடை பேசுகிறாள். அவள், தான் கண்ட கனவைப் பற்றி சீதையிடம் சொல்லி அவளுக்கு ஆறுதல் தருகிறாள்.

    தன் பெரியப்பா ராவணன் எண்ணையில் மூழ்குவதாகவும், கழுதையும் பேயும் இழுக்கும் தேரில் ரத்த ஆடை அணிந்து தெற்கு திசை நோக்கிப் போவதாகவும் கனவில் கண்டதாகச் சொல்கிறாள் திரிஜடை. எனவே ராவணன் அழிவு நிச்சயம் என சீதாதேவியைத் தேற்றுகிறாள்.

    `எண்ணெய் தன் முடிதொறும்

    இழுகி ஈறு இலாத்

    திண்நெடும் கழுதைபேய்

    பூண்ட தேரின்மேல்

    அண்ணல்வேல் இராவணன்

    அரத்த ஆடையன்

    நண்ணினன் தென்புலம்,

    நவைஇல் கற்பினாய்!`....

    இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில், ஒன்பதாம் பகுதி `கனாத்திறம் உரைத்த காதை` என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது. தன் தோழி தேவந்தியிடம் கண்ணகி தான் கண்ட தீக்கனா பற்றிக் கூறுகிறாள்.

    தானும் கோவலனும் அயலூர் செல்வதாகவும் அங்கு `இடுதேள் இட்டதுபோல்` ஒரு பழிச்சொல் நேர்வதாகவும், அதன் பின்னர் கோவலனுக்கு ஓர் ஊறு நேர, தான் மன்னனிடம் சென்று வாதாடியதாகவும் அந்த ஊருக்கே தீங்கு நேர்வதாகவும் தான் கண்ட கனவுக் காட்சிகளை விவரிக்கிறாள் அவள்.

    `கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்

    என்கை

    பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள்

    பட்டேம்!

    பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை

    இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு

    என்தன்மேல்!

    கோவலற்கு உற்றதுஓர் தீங்கு என்று

    அதுகேட்டுக்

    காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்

    காவலனோடு

    ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்

    உரையாடேன்...`

    இலக்கியங்களிலும் புராணங்களிலும் பின்னால் நிகழப் போகும் சம்பவங்கள் பலவற்றைப் பற்றி முன்கூட்டியே குறிப்பாலுணர்த்தும் உத்தியாகப் பாத்திரங்கள் காணும் கனவுகள் கையாளப்பட்டுள்ளன.

    தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும், நந்தனும் ஒருசேரக் கண்ட கனவை பற்றிச் சேக்கிழாரின் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.

    ஜாதி காரணமான இன்னல் தரும் இழிபிறவி சிவபெருமானை அடைவதற்குத் தடை என எண்ணி துயரத்தோடு துயில்கிறார் தில்லை சென்ற நந்தனார். அவர் கனவில் வருகிறான் சிவன். நந்தனைத் தீயில் மூழ்கிப் பின்னர் தன்னிடம் வருமாறு பணிக்கிறான்.

    அதுபோலவே தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர் கனவிலும் வந்து நந்தனாருக்கு எரியமைத்துக் கொடுக்குமாறு பணித்து மறைகிறான். அந்த கனவு பற்றி பெரியபுராணம் பேசுகிறது.


    'இப்பிறவி போய் நீங்க

    எரியினிடை நீ மூழ்கி

    முப்புரிநூல் மார்பர் உடன்

    முன்அணைவாய் எனமொழிந்து

    அப்பரிசே தில்லைவாழ்

    அந்தணர்க்கும் எரியமைக்க

    மெய்ப்பொருள் ஆனார் அருளி

    அம்பலத்தே மேவினார்!`.

    சென்னை அருகே திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் என்ற சிவனடியார் புராணத்தையும் விரிவாகப் பேசுகிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.

    ஏழை அடியவரான அவர், தாம் வழிபடும் சிவபெருமானுக்கு கோவில் கட்ட விரும்பினார். கற்கோவில் கட்டுமளவு அவருக்குச் செல்வ வளம் இல்லை.

    அதனால் என்ன? பக்தியோடு நெஞ்சத்தில் மனக்கோவில் கட்டத் தொடங்கினார். `உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்` என்கிறாரே திருமூலர்?

    கோவில் கட்டுவதில் நாள்தோறும் ஒவ்வொரு பணியாக முடித்தார் பூசலார். கற்களை அடுக்கித் தூண்கள் கட்டுதல், அவற்றில் சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்தல், கோவிலின் உள்ளே கிணறு வெட்டுதல் என இப்படியான எல்லா வேலைகளையும் மனத்தினுள் கற்பனையாக ஒவ்வொன்றாக நிகழ்த்தினார்.

    மெல்ல மெல்ல அவர் கட்டிய மனக்கோவில் முழுமையாக அவர் நெஞ்சத்தில் உருப் பெற்றது. தானே தன் உள்ளத்தில் நிர்மாணித்த அந்த விந்தையான கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்தார்.

    அப்போது காஞ்சியை ஆண்ட மன்னன் காடவர்கோன் என அழைக்கப்பட்ட சிவபக்தனான ராஜசிம்மன் உண்மையிலேயே சிவனுக்குக் கற்கோவில் கட்டிக் கொண்டிருந்தான்.

    மன்னன் அவன். எனவே செல்வ வளத்திற்கு ஒரு குறைவும் இல்லை. நூற்றுக் கணக்கான சிற்பிகள் வந்து பணி செய்து அந்தக் கோயிலின் கட்டுமானப் பணி முடிந்தது. அந்தக் கற்கோயிலுக்கும் கும்பாபிஷேக நாள் குறிக்கப் பட்டது.

    ஆனால் பூசலாரின் மனக்கோவில் கும்பாபிஷேக நாளும் மன்னன் கட்டிய கற்கோவில் கும்பாபிஷேக நாளும் ஒன்றாகவே அமைந்துவிட்டன. எங்கு செல்வான் சிவன்?

    அவனால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களுக்கும் செல்ல முடியாதா என்ன? அவன் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அல்லவா?

    என்றாலும், உள்ளத்தில் கோவில் கட்டிய பூசலாரின் பக்திச் சிறப்பை உள்ளபடியே உலகிற்கு அறிவிக்க எண்ணியது சிவபெருமானின் திருவுள்ளம்.

    பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை மலர் அணிந்து காடவர்கோன் கனவில் வந்தான் கடவுள் சிவன்.

    `உன் கற்கோவில் கும்பாபிஷேக நாளை மாற்றி வைத்துக் கொள் அன்பனே! நான் பூசலார் கட்டும் கோவில் கும்பாபிஷேகத்தில் அன்று கலந்து கொள்ளத் திருநின்றவூர் செல்கிறேன்` எனச் சிவன் கனவில் அறிவித்து மறைந்தான். விழித்த மன்னன் வியந்தான்.

    யார் அந்த பூசலார்? கோவில் கட்டப் பெரும் செல்வம் வேண்டுமே? தன்னை விட0 செல்வந்தரா அவர்?

    குழம்பிய காடவர்கோன் பூசலாரைச் சந்திக்கத் திருநின்றவூர் சென்றான். அவரைத் தேடிக் கண்டு உரையாடினான். அவர் உள்ளத்தில் ஆலயம் கட்டும் உண்மையை அறிந்து பரவசமடைந்தான். அவரை வணங்கிப் போற்றினான்.

    இந்த அரிய வரலாற்றைச் சேக்கிழார் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட விவரிக்கிறார்.

    பெரியாழ்வார் கதையிலும் கனவு வருகிறது.

    தன் மகளான ஆண்டாள் இறைவனுக்கான மலர்மாலையைத் தான் சூடிக் கொடுத்தது பற்றி மனம் வருந்துகிறார் அவர்.

    அந்த மாலையை நீக்கிவிட்டுத் தான் தொடுத்த புதிய மாலையோடு ஆலயத்திற்குச் சென்று அதை அரங்கனின் திருமார்பில் அணிவிக்கிறார்.

    அன்றிரவு பெரியாழ்வார் வழக்கம்போல் உறங்குகிறார். அவரின் கனவில் வருகிறான் கண்ணன். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பக்திவயப்பட்ட அந்தச் செயல் தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றும் இனி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளையே அவர் தனக்கு அணிவிக்க வேண்டும் என்றும் சொல்கிறான்.

    திகைத்த பெரியாழ்வார் அதன்பின் கண்ணன் கட்டளைப் படியே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் மாலையையே கண்ணனுக்குச் சூட்டுகிறார் என்கிறது பெரியாழ்வார் திருச்சரிதம்.

    கண்ணனையே மணக்க வேண்டும் எனக் கனவு கண்டவள் அல்லவா ஆண்டாள்? புனிதமே வடிவான ஆண்டாள் நாச்சியார் எழுதிய `நாச்சியார் திருமொழி` என்ற பாசுரம், பட்டர்பிரான் கோதையான ஆண்டாள் கண்ட திருமணக் கனவைத் தித்திக்கும் தமிழில் விவரிக்கிறது.


    `வாரணமாயிரம் சூழ வலம் செய்து

    நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

    பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ

    நான்...

    தமிழில் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன், பொன்னவன் என்பவர் இயற்றிய `கனா நூல்` ஒன்று இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கனவுகளின் பலன் பற்றிப் பேசுகிறது அந்நூல்.

    தன் இறப்பைத் தானே காண்பது போன்ற கனவுகள் கண்டால் செல்வம் வந்து சேரும் என்பதுபோல் பற்பல கனவுகளின் பலன்கள் அந்தக் கனா நூலில் கூறப்பட்டுள்ளன...

    புத்தரின் தாயான மாயாதேவி ஒரு கனவு காண்கிறாள். மன்னர் சுத்தோதனர் மூன்று நிமித்திகர்களை அழைத்து மாயாதேவி கண்ட கனவின் பலன் என்ன என்று வினவுகிறார்.

    அவர்கள் உலகத்தை வழிநடத்தப் போகும் மகான் ஒருவர் உங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறார் என அந்தக் கனவுக்குப் பலன் கூறுகிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகார்ஜுன மலைச் சிற்பம் ஒன்றில் இந்தக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

    நனவில் இறைச் சிந்தனையில் தோய்ந்து, அதன் பயனாய்க் கனவிலும் இறைவனை தரிசிக்கும் பேறு பெறுவது என்பது, பக்தி சார்ந்த மனத்தின் உயர்நிலையைப் புலப்படுத்துகிறது.

    இறைவனை நேரில் காண வேண்டும் எனக் கனவு கண்ட ஆண்டாள், நந்தனார் போன்ற அடியவர்கள், முதலில் இறைவனைக் கனவில் கண்டார்கள். பின்னர் அவர்களே நேரிலும் கடவுளைக் காணும் பாக்கியம் பெற்றுக் கடவுளோடு கலந்தார்கள். கனவு நனவான வரலாறே நம் ஆன்மிகம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×