search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எம்.ஜி.ஆர்., சிவாஜியை கவர்ந்த டி.எம்.எஸ். குரல்
    X

    எம்.ஜி.ஆர்., சிவாஜியை கவர்ந்த டி.எம்.எஸ். குரல்

    • வசனத்தை கூட ராகமாக்கி பெரிய ஹிட் பாடல் ஆக்கிவிட்டார்.
    • முதல் பின்னணி பாடியவர் இவர்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்திற்கு இசையமைக்க எம்.எஸ்.வி. எடுத்துக்கொண்டது 15 நாட்கள் மட்டுமே! வெளிநாடு எங்கும் சென்று பார்க்காமல் ரிகார்டிங் தியேட்டரில் உட்கார்ந்த இடத்திலேயே போட்ட மெட்டுகள் தான் காற்றலைகளில் இன்றும் அசைந்துக் கொண்டு நம் காதுகளில் விழுந்து, மனதில் நுழைந்து மயிலிறகாய் நம்மை வருடிக் கொண்டிருக்கிறது!!

    அதுவரை வாங்காத சம்பளத்தை எம்.எஸ்.வி.க்கு கொடுத்தும் அவர் முகத்தில் உற்சாகமில்லை.

    எம்.ஜி.ஆர். சொன்னார், "எல்லாப் பாடலும் நல்லா வந்திருக்கு விசு".

    "இது வேண்டாம்", "நான் நினைச்ச மாதிரி வரலை", "நேற்றுப் போட்ட டியூனே நல்லாயிருந்தது" என்றெல்லாம் எம்.ஜி.ஆர். தான் போட்ட டியூன்களை மறுத்தது நினைவிலாடியது எம்.எஸ்.விக்கு.

    "பாடல்கள் சிறப்பா வரணுமேனு தான் நீ தந்த சில டியூன்களையெல்லாம் தட்டிக்கழிச்சேன். உண்மையில் நீ போட்ட எல்லா டியூனுமே நல்லா இருந்தது" என்று சொல்லி அவரைக் கட்டியணைத்துக் கொண்டார், எம்.ஜி.ஆர்!

    எம்.எஸ்.வி.யின் இசைத் திறனை மெச்சி எம்.ஜி.ஆர். எப்போதும் சொல்லும் வார்த்தை, "ஒலிப்பதிவின் நேரத்தில் விசுவிடம் தினந்தந்தி பேப்பரைக் காட்டாதீங்க, அதுக்கும் அவர் மெட்டுப் போட்டு விடுவார்!!!"

    உண்மையில் அப்படியொன்றும் திறைத்துறையில் நடந்தேவிட்டது! என்ன அது என்கிறீர்களா?

    யாராவது திருமண அழைப்பிதழுக்கும் மெட்டமைத்து இசையமைத்து பாடலாக்குவார்களா? அதையும் செய்தவர் தான் எம்.எஸ்.வி.!

    "நெஞ்சிருக்கும் வரை" என்ற ஒரு திரைப்படம் புதுமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1967ல் வந்தது. சிவாஜி கணேசன் ஒருதலையாக கே.ஆர்.விஜயாவை காதலிப்பார். அவரோ, சிவாஜியின் நண்பர் முத்துராமனை காதலிப்பார். இடையில் கே.ஆர்.விஜயாவின் அப்பா இறந்துவிட சிவாஜி காப்பாளராக பொறுப்பில் நின்று முத்துராமனுக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இந்த சூழலில் வரும் பாடல் தான், "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி" என்றப் பாடல்!

    பாடலின் இடையே, "நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணி திங்கள் இருபதாம் நாள்... திருவளர் செல்வன் சிவராமனுக்கும் திருவளர்செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்! தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுராமன்..." என்ற வரிகள் வரும்.

    பாடல் என்றால் எதாவது ஒரு ராகத்தில் அமைத்து விடலாம். வசனத்தை கூட ராகமாக்கி கூடவே நாதஸ்வரம், தவில் இசையை சேர்த்து பாடலை பெரிய ஹிட் பாடல் ஆக்கிவிட்டார். திருமணத்தின் நேரலைக் காட்சியை அப்படியே கிரிக்கெட் கமெண்ட்ரி போல பாடி கைத்தலம் பிடித்துக் கொடுப்பது வரை இந்தப் பாடல் போகும்!

    திரைத்துறையில் இப்படியொரு அடையாளத்துடன் கூடிய பாடல் இதற்கு முன்னுமில்லை. இந்தப் பாடலுக்கு பின்னுமில்லை. சவாலான பாடல் அது?

    "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி,

    புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி"-

    முதல் வரிசையில் நான்கு சீர்கள் (சொற்கள்) இருக்கின்றன. இரண்டாம் வரிசையில் ஐந்து சீர்கள் இருக்கின்றன. அதாவது புதியதாக ஒரு சீர் சேருகிறது. புதிதாக ஒரு சீர் சேருவதையும், மணமகள் திருமணம் வழியே புது சீர் போன்ற வாழ்க்கையை பெறுவாள் என்று இரு பொருள் பட எழுதி தமிழில் விளையாடியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்!! பாடல் முழுக்க ஒவ்வொரு வரியுமே நிறைய பேசப்பட வேண்டிய சுவை நிரம்பியவை தான்!

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனான படத்தில் எம்.எஸ்.வி. இசையமைக்க வந்ததும் மிகவும் சுவரஸ்யமானது தான்!

    1952-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 'பணம்' என்றத் திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு இசையமைக்க அப்போது பிரபலம் ஆகாத எம்.எஸ்.வி.யிடம் கேட்கிறார்.

    எம்.எஸ்.வி. "நான் தனியாக இசையமைப்பதைவிட சி.ஆர்.சுப்பாராமனிடம் முதன்மை உதவியாளராகவும், நல்ல அனுபவமுள்ள, திறமையான வயலினிஸ்ட்டா கவும் உள்ள அண்ணன் டி.கே.ராமமூர்த்தியும் இசையமைத்தால் நன்றாக இருக்கும்" என சொல்கிறார். சொல்வதுடன் நில்லாமல் டி.கே.ஆரிடம் கேட்கவும் செய்கிறார்.

    டி.கே.ராமமூர்த்தி, "தம்பி நீங்கள் இசையமைப்பதில் வல்லவர், கடுமையாக உழைக்கிறீர்கள். நீங்களே தனியாக இசையமைக்கலாமே என சொல்லியும் எம்.எஸ்.வி. ஒப்புக் கொள்ளவில்லை. "நீங்களே துறையில் சீனியர். நீங்களும் நானும் இணைந்து இசையமைப்போம் என்று வற்புறுத்தி டி.கே.ஆரை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

    புதிய இரட்டையர்களுக்கு தன் இயக்கத்தில் வாய்ப்பு கொடுத்த என்.எஸ்.கே. படத்தில் டைட்டில் கார்டு வரும் போது யார் பெயரை முதலில் போடுவது என்பதையும் தீர்மானித்தார். வயதில் மூத்தவரான டி.கே.ராமமூர்த்தி பெயரை முதலிலும், தன் பெயரை அடுத்துக் காட்டவேண்டும் என்பது எம்.எஸ்.வி.யின் விருப்பம்.

    ஆனால் கலைவாணர், "தம்பி விசு, உங்களுக்கு பக்கபலமாக உங்களுக்கு பின்னாலிருந்து டி.கே.ராமமூர்த்தி உங்களை வழி நடத்துவார். நீங்கள் இளையவர், உங்கள் பெயரே முதலில் இருக்கட்டும்" என்று சொல்லி விட்டார்.

    கலைவாணர் வாக்கே இறுதியாகவும், உறுதியாகவும் ஆனது! திரையுலகில் "விஸ்வநாதன், ராமமூர்த்தி" என்ற பெயர் புதிய அதிர்வலையை ஏற்படுத்திய மந்திர சொல்லாக ஆனது வரலாறு!!

    'பணம்' படம் தயாரித்தவர் அமரர் ஏ.எல்.சீனிவாசன். இவரது 'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் 1951ல் ஆரம்பிக்கப்பட்டு எடுத்த முதல் திரைப்படம் அதுதான்!

    ஏ.எல்.சீனிவாசனின் சகோதரர்தான் கவியரசர் கண்ணதாசன். தனது சகோதரர் தயாரிப்பில் வந்த 'பணம்' படத்தில் மொத்தம் 11 பாடல்களையும் கவியரசரே எழுதினார். கவியரசருக்கு திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழில் நடித்த இரண்டாம் படம் 'பணம்'.

    சிவாஜியும் நடிகை பத்மினியும் முதன் முதலில் இணையாக சேர்ந்து நடித்தப் படம், 'பணம்'.

    முதல் படத்திலேயே இரட்டையர்கள் பல புதுமைகளைப் பாடல்களில் தந்தார்கள். இந்துஸ்தானியில் இரண்டு பாடல்கள், 'ஏழை நின் கோவிலை நாடினேன்' என்ற ஒரு வால்ட்ஸ் ஸ்டைல் பாடல்!

    "ஒங்கொப்பனை கேட்டே முடிப்பேன்" என்ற கர்நாடக வகைப்பாடல், "எங்கே தேடுவேன் பணத்தை" என்ற கிராமிய பாடல், பிறப் பாடல்களை ஜனரஞ்சகமான மெல்லிசையிலும் தந்து முதல் படத்திலேயே தங்களை மொத்த திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார்கள் 'எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி' என்ற வெற்றி இரட்டையர்கள்!!

    1953-ல் இரண்டு படங்கள், 1954-ல் இருந்து 1958 வரை வருடத்திற்கு நான்கு படங்கள், 1959-ல் இருந்து 1961 வரை ஐந்து அல்லது ஆறு படங்கள் இசையமைத்த இவர்களின் கிராப் 1962-ம் ஆண்டில் மட்டும் பதினைந்து படங்கள் என்று எகிறுகிறது!! தெலுங்குப் படங்களிலும் கூட இசையமைக்கிறார்கள். பட பூஜைகளின் போதே, பத்திரிக்கைகளில் இசை விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைப்பு என்று வர ஆரம்பிக்கிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் எகிற ஆரம்பிக்கிறது.

    பின்னணி ஒலிப்பதிவு வசதி இல்லாத காலக்கட்டத்தில் கர்நாடக இசையைப் பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்றும், அதனால் அந்த இசையைத் தெரிந்தவர்கள் நடித்தபோது அவர்களின் தலைமுடி அலங்காரம் பாகவதர் பாணியில் தான் இருந்தது என்றும் பார்த்தோம்.

    இதெல்லாம் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலத்தில் சரியாகப் பொருந்தியது. ஆனால் நவீன சமூக கால கதைகளின் நாயகர்களுக்கு பொருந்தாது இல்லையா? அரசர் கால கதைகளில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாகரீகமாக பேண்ட், சட்டை, கோட் அணிந்து நடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கெட்-அப்புக்கு பாகவதர் கால பாட்டு முறை பொருந்துமா? எழுச்சியான,உற்சாகமான, பரபரவென, துள்ளலான பாடல் முறை வேண்டுமல்லவா? அப்படியொரு பாணி உருவாக வேண்டுமில்லையா?

    இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட எல்லோரும் கொஞ்சம் இசையை மெல்லிசைப் படுத்துகிறார்கள்.

    இந்த காலத்தில்தான் டி.எம்.சவுந்திர ராஜன் பின்னனி பாடகரின் அறிமுகம் ஆரம்பிக்கிறது. பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அவர் திரையுலகிலும் வாய்ப்புகள் தேடுகிறார்.

    "தூக்குதூக்கி" திரைப்படத்தில் பாட அப்போது மிகப் பிரபலமான பின்னணி பாடகர் திருச்சி லோகநாதனை அழைக்கிறார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். சம்பளத்தொகை உடன்படாததால், "புதியதாக டி.எம்.சவுந்திர ராஜன் என்று ஓர் இளைஞன் வந்திருக்கிறார். அவரை பாட வையுங்கள்" என்று சொல்லிவிட்டார் திருச்சி லோகநாதன். தமிழ்த் திரையுலகில் பின்னனி குரல் ஒலிப்பதிவு தொழில் நுட்பம் வந்தபோது, முதல் பின்னணி பாடியவர் இவர்.

    சிவாஜி கணேசனுக்கு அதுவரை சி.எஸ். ஜெயராமன் பின்னணி பாடிக்கொண்டிருந்தார். அதனால், புதுக்குரல் பொருந்துமா என்று சிவாஜி யோசிக்கிறார். உடனே, ஜி.ராமநாதன் மாதிரிக்கு, டி.எம்.சவுந்திர ராஜனை வைத்து, "ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு" -என்ற ஒரு பாடலை பதிவு செய்து போட்டுக் காட்டுகிறார்.

    சிவாஜி தனக்கு இந்த புதிய குரல் பிரமாதமாகப் பொருந்தியதைக் கேட்டு விட்டு சம்மதம் சொல்கிறார். பிறகு டி.எம்.சவுந்திரராஜனை வைத்தே, "சுந்தரி சவுந்தரி நிரந்தரியே", "பெண்களை நம்பாதே கண்களே", "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" அபாய அறிவிப்பு - என்றப் பாடல்களையும் பாடவைத்துவிட்டார் ஜி.ஆர். பாடல்கள் எல்லாம் படு பிரபலம். இனி எனக்கு டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வேண்டும் என்று சிவாஜி சொன்னதில் டி.எம்.எஸ்-க்கு ஏக குஷி!

    இந்தப் பாடல்களை கேட்டுப்பார்த்த எம்.ஜி.ஆர். தனக்கும் டி.எம்.எஸ். பின்னணி பாட வேண்டுமென நினைத்தார். அதுவரை எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும் ஏ.எம். ராஜாதான் பின்னணிகுரலில் பாடிக் கொடுத்து வந்தார்கள். 'குலேபகாவலி' படத்தில் ஏ.எம்.ராஜா பாடிய 'மயக்கும் மாலை பொழுதே நீ போ போ'-என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது.

    ஒரே படத்தில் டி.எம்.எஸ்.சை வைத்து வேறு பாடல் எப்படி பின்னணி பாட வைப்பது? குரல் வித்தியாசம் தெரியுமே?

    இதற்கு சாமர்த்தியமாக எம்.எஸ்.வி. ஒரு உத்தியைப் பாடல்களில் வைக்கிறார். எம்.ஜி.ஆர். மாறு வேடங்களில் பாடும் இரண்டு பாடல்களையும், பொது வெளியில் உரக்கப்பாடும் எழுச்சி மற்றும் தத்துவப் பாடல்களை டி.எம்.எஸ்.சின் பின்னணி குரலில் பாட வைக்கிறார். குரல் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகத் தனத்துடன் பொருந்திப் போகிறது!

    டி.எம்.சவுந்திர ராஜனால் திரையுலகின் இருபெரும் கதாநாயகர்களுக்கும் முதல்முறையாக நாயகத்தன்மையுடன் கூடிய ஒரு திடகாத்திரமான குரல் கிடைத்திருப்பது வரமானது!! இதிலும் கொஞ்சம் மாற்றங்கள் வந்தது. அது என்ன?

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    Next Story
    ×