search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருட பஞ்சமி வழிபாடு
    X

    கருட பஞ்சமி வழிபாடு

    • நட்சத்திரங்கள், திதிகளுக்கு சில தனிச்சிறப்பு உள்ளது.
    • குறிப்பிட்ட திதிகளுக்கு மனித வாழ்வை வளமாக்கும் அதீத சக்தி உள்ளது.

    உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் கர்ம வினைகளை தீர்க்கவே ஜனனம் எடுக்கிறது . கர்ம வினையைக் குறைப்பதற்கு பல்வேறு விதமான வழிகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் வருடத்தின் சில குறிப்பிட்ட மாதம் மற்றும் நாட்கள், நட்சத்திரங்கள், திதிகளுக்கு சில தனிச்சிறப்பு உள்ளது.

    குறிப்பாக சில குறிப்பிட்ட திதிகளுக்கு மனித வாழ்வை வளமாக்கும் அதீத சக்தி உள்ளது. பஞ்சாங்கத்தின் முதல் அங்கமான திதி சில குறிப்பிட்ட வழிபாட்டிற்கு மிக உகந்ததாகும்.

    பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை குறிப்பது திதி. திதி என்பது வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும். ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உறவுமுறை பேணுவதில் அவருக்கு உண்டான தகுதியை சுட்டிக்காட்டும். திதி சந்திரனின் நாளாகும்.

    பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதிகளுக்கு ஏற்ற காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு.

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது மட்டுமல்லாமல் இந்த மாதத்தின் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் மனித குலத்திற்கு புண்ணிய பலன்களை வாரி வழங்கும் வல்லமை படைத்தவைகள். குறிப்பாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய் கிழமை, வரலட்சுமி நோன்பு, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, போன்றவைகள் வழிபாட்டின் மூலம் பிறவிப் பிணியை தீர்க்க சிறந்த நாட்களாகும்.

    பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பவுர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.

    பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும். நாம் இந்த கட்டுரையில் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்க்களாம்.

    நாக தோஷம்

    நவகிரகங்களின் இயக்கமே மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன.

    ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும், அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலை பிரம்மாண்டப்படுத்தும். கேது சுருக்கும். ராகு,கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகம் அல்லது அவயோகத்தை சந்திக்கின்றார்கள்.

    ஜாதகத்தில் ராகு-கேது செயல்படும் விதம்

    மனிதர்களுடைய வாழ்வில் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம வினை அதிகாரிகளாக ராகு,கேதுக்களை கூறலாம்.

    ஏற்கனவே கடந்து வந்த ஜென்மத்தில் நடந்த நல்ல /கெட்ட சம்பவங்களையும் தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல/கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும், அதற்கேற்றபடி வினைகளைத் தூண்டும் வினை ஊக்கியாகவும் செயல்படுகின்றனர்.

    மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.

    பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்ற இவர்கள் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டு வருவதும் செயலாக்கம் செய்யும் வலிமை படைத்தவர்கள்.

    அதனால் தான் ஜோதிடத்தில் தந்தை வழி பாட்டன் பாட்டிக்கு ராகுவையும் தாய்வழிப் பாட்டன் பாட்டி கேதுவையும் காரகமாக கூறப்படுகிறது.

    ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

    அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம். அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

    சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு மட்டுமே உண்டு. ஆடி மாத புகழ்பெற்ற விசேஷங்களில் கருட பஞ்சமியும், நாகபஞ்சமியும் ஒன்றாகும்.

    ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது. பல ஜென்மங்களாக தொடரும். கடுமையான தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் கருடபஞ்சமி பூஜையாகும்.

    நாக தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். அதீத திருமணத்தடை, கணவன். மனைவி பிரிவினை, புத்திர பாக்கியமின்மை, பிள்ளைகளால் மன உளைச்சல், தீராத நோய், பரம்பரை வியாதி, குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள்.

    நாகசதுர்த்தி கருடபஞ்சமி வழிபாடு கணவன், மனைவி ஒற்றுமை, குடும்ப முன்னேற்றம், குழந்தைகள் நலனுக்காகவும் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    நாக சதுர்த்தி 8.8.2024- வியாழக்கிழமை (ஆடி.23)

    அமாவாசைக்கு 4-ம் நாளான சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாக தேவதைகளை வழிபட வேண்டும்.

    இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக வழிபடக் கூடியவையாகும். நாகங்களை துன்புறுத்துவதும், கொல்வதும் மிகப் பெரிய பாவமாகும்.

    ஆனால் நாமோ, நம்முடைய முன்னோர்களால் தெரியாமல் யாருக்காவது துன்பம் ஏற்படுத்தி இருந்தால் அது ஜாதகத்தில் நாக தோஷம், சாபமாக ஏற்பட்டிருக்கும். கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டை அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்கு நாக சிலைகளுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நாகர் சிலை மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்ஷதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தால் அனைத்து விதமான தடைகளும் விலகும்.

    இந்த நாளில் பாம்பு இனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நிலத்தை தோண்டுவது, கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யக் கூடாது. இந்த நாளில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபிப்பதால் சர்ப்ப தோஷம் விலகும், ருத்ராபிஷேகம் செய்வதால் சிவனின் அருள் கிடைக்கும்.

    நாகராஜ துதியை நாக பஞ்சமி மட்டுமின்றி அனைத்து நாட்களும் காலை, மாலை இருவேளையும் மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகும்.

    குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்துடன் கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும். நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.

    9.8.2024-ஆடி 24-வெள்ளிக்கிழமை கருடபஞ்சமி

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.

    மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை தாங்கள் இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்த தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

    கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக, கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வது இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர். பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு , கேஸ் பிரச்சனை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால், பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்காணும் சுலோகத்தை 108 முறை சொல்லி கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    சுபபலன் இரட்டிப்பாகும். விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாகவும் திகழும் கருட பகவானுக்கு கருட ஜெயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் சொல்வது நலம்.

    ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

    ஓம் சகஸ்ர ஷீர்ஷாய வித்மகே

    விஷ்ணு தல்பாய தீமகி

    தந்நோ ஆதிசேஷ பிரசோதயாத்.

    கருட காயத்ரி

    தத்புருஷாய வித்மகே

    சுவர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருட பிரசோதயாத்.

    கருட தண்டகம்:

    எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

    இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால், ஒலிக்க செய்து கேட்டால் எதிரிகள் தொல்லை விலகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

    எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரை வேண்ட சகல சவுபாக்கியம் கிடைக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    இந்த நாளில் குரு ஹோரையில் வானத்தை பார்த்து, கருடனை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் உள்ள குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத் திற்கு இளநீர் வெட்டி வைத்து, அதோடு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு அதை பிரசாதமாக வழங்கலாம். இது நாகதேவரின் நாளாகும்.

    இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும்.

    இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும். பல தலைமுறை சாபத்தால் அவதிப்படுபவர்கள் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாட்டை கடைபிடித்து பயன் பெற நல்வாழ்த்துகள்.

    Next Story
    ×