search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ்வளிக்கும் வனதுர்க்கை!
    X

    வாழ்வளிக்கும் வனதுர்க்கை!

    • ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம்.
    • அம்பாள் ஆகாய மார்க்கமாக, தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம்.

    மாங்கல்ய பலம், மன தைரியம், செல்வ வளம் தரும் வனதுர்க்கை கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் அருள்பாலிக்கிறாள்.

    தல வரலாறு:

    பூலோகத்தில் யாகங்களை செய்யவிடாமல் முனிவர்களைத் தடுத்து வந்தனர் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகிய அசுரர்கள். இதனால் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்கவில்லை. அவர்கள் சிவன், திருமால், பிரம்மாவிடம் முறையிட்டனர்.

    அனைவருமாக இணைந்து ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி, "விரைவில் அசுரர்களின் கதை முடியும்," என வாக்களித்தாள். பின்பு பூவுலகில் துர்க்கையாக அவதரித்து அசுரர்களை அழித்து தேவர்களை காத்தாள். பின், அவள் தனித்த நிலையில் 'சிவ மல்லிகா' என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் தங்கி உலக நலன் கருதி தவம் செய்யத் தொடங்கினாள். அந்த தலமே இன்றைய கதிராமங்கலம்.

    ஊர் பெயர்க்காரணம்:

    இத்தலத்தின் அருகில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த தேரழுந்தூர் உள்ளது. இவர் வனதுர்க்கையின் மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு மழைக்காலத்தில் கம்பர் வீட்டுக்கூரை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி, "அம்மா உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்!'' எனக்கூறி படுத்து விட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டிருந்ததைக் கண்டு மனமுருகி 'கதிர்வேய்ந்த மங்கல நாயகி' எனப்பாடி உருகினார். 'கதிர்வேய்ந்த மங்கலமே' நாளடைவில் 'கதிராமங்கலம்' ஆனது.

    அகத்தியருக்கு அருளிய துர்க்கை:

    அகத்தியர், அம்மையப்பனின் திருமணக் கோலத்தை காண வேதாரண்யத்திற்கு செல்லும் வழியில், விந்தியன் என்ற அசுரன் அவரை வழிமறித்தான். அவனை சம்ஹரிக்க தமக்கு சக்தி வேண்டும் என அவ்விடத்திலேயே தங்கி, துர்க்கையை உபாசித்தார். அன்னையின் அருளால் விந்தியனை சம்ஹரித்தார். அகத்தியர் இவ்வனத்தில் தங்கி இத்துர்க்கையின் அருள் பெற்றதால் வாழ்வித்த அன்னை வனதுர்க்கா என போற்றினார். எனவே இத்துர்க்கைக்கு 'வன துர்க்கை என்ற திருநாமம் ஏற்பட்டது.

    சிறப்பம்சம்:

    பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள் பாலிப்பது வழக்கம். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறாள். வலதுகை சாய்ந்த நிலையில் அபய ஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளைக் காட்டி அருள் பாலிப்பது வேறு எந்த அம்மனிடத்திலும் காண முடியாத தனி சிறப்பு.

    அர்ச்சனை செய்யும்போது அம்பாளின் வலதுகரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அம்மன் சிலைக்கு மேல் மேற்கூரை எதுவும் இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனி விமானம் கட்டப்பட்டது. ஆனாலும், பழைய ஐதீகம் மாறாமல் வெயிலும், மழையும் அம்மனின் மேல் விழும்படியாக விமானத்தின் மேல் ஒரு சிறு துவாரம் உள்ளது.

    இதன் வழியாக அம்பாள் ஆகாய மார்க்கமாக, தினமும் காசிக்கு சென்று வருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு 'ஆகாச துர்க்கை' என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் சிலை அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மிருகண்டு மகரிஷியால் பூஜிக்கப்பட்டது.

    இவள் திருமணத்தடை களைபவள். தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்பவள். செல்வவளம் தருவாள். ராகு காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

    ராகு காலம் என்பது துர்கா தேவியை ராகு கிரகம் வழிபடும் நேரம். அந்த நேரத்தில் துர்க்கையை வழிபடும்போது ராகுவின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.

    எனவே தான் ராகு திசை அல்லது ராகு புத்தி நடப்பவர்கள் துர்க்கையை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றியும், 108 அல்லது 54 எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை சாற்றியும் வழிபடுகின்றனர். மிருகசீரிஷ நட்சத்திரத்தினர் இவளை வழிபட்டால் தீர்க்காயுளும், செல்வ வளமும் கிடைக்கும். சோதனைகள் நீங்கும்.

    கோவில் அமைப்பு:

    மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய கிழக்குப் பார்த்த ராஜகோபுரமும், அம்மனுக்கு மேல் கலசத்துடன் கூடிய ஏகதள விமானமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு எதிரில் தாமரைத் தடாக தீர்த்தம் இருக்கிறது. வடக்கே யாகசாலையும், அன்னதானக் கூடமும் அமைந்துள்ளன. அம்மன் எதிரில் சிம்ம வாகனம் உள்ளது.

    கருவறை வாசலுக்கு மேல் சக்தியின் வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாதா, சித்தி தாயிணி, காத்யாயிணி, காலராத்ரி, மகாகவுரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவுவாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர்.

    அம்பாளின் வலது மேற்கரம் தீவினையறுக்கும் பிரத்யேக கரமாக உள்ளது. இடது மேற்கரத்தில் சங்கு, வலதுகீழ் கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ் கரத்தில் ஊர்த்து விஹாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனை) கொண்டு, தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்கிறாள்.

    விழாக்கள்:

    தனி விழா இல்லை. தினமும் ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை.

    இருப்பிடம்:

    கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை, சூரியனார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 26 கி.மீ. துாரத்தில் கதிராமங்கலம் அமைந்துள்ளது.

    திறக்கும் நேரம் :

    காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை.

    Next Story
    ×