search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நம்பிக்கையில் நடக்கட்டும் நாட்கள்!
    X

    நம்பிக்கையில் நடக்கட்டும் நாட்கள்!

    • நம்பிக்கை என்பது ஒரு மனநிகழ்வு.
    • பகட்டான வாழ்க்கை வாழ்வதிலேயே ஆர்வமும் காட்டுகிறார்கள்

    நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கைக்குரிய வாசகர்களே! வணக்கம்!.

    'வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்!' என்கிற கவிஞர் தாரா பாரதியின் கவிதை முத்திரை வரி, நம்பிக்கையின் வலிமையை எடுத்துரைக்கும் உறுதிமிக்க வரியாகும். `இழப்பதற்கு இனி ஏதுமில்லை!; கையிருப்பு என்பதும் ஒன்றுமில்லை!' என்று சோர்ந்து போய் உட்கார்ந்து இருப்பவர்களைச் சொடுக்கி, எழுந்து உழைக்கத் தூண்டும் வார்த்தைகள்தாம் இவை.

    வெறுங்கையோடுதான் வந்தோம்!; வெறுங்கையோடுதான் போகப் போகிறோம்! என்றாலும் அவற்றைப் பயன்படுத்தி நாள்தோறும் பொருளீட்டுவதற்கும், புகழீட்டுவதற்கும் கைகளின் விரல்களை மூலதனமாகப் பயன்படுத்துங்கள்! என்கிறார் கவிஞர் தாராபாரதி.

    விரல்கள் என்றால் உழைப்பு; ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை ஈந்து இசைபட வாழ்வதற்கும் அவை பயன்படுத்தப்பட வேண்டும்.

    நம்பிக்கை என்றால் நம்புவது!; உறுதியாக நம்புவது!; தமிழில் `நம்பு' என்றால் விரும்புவது என்று பொருள்; ஒரு செயல் அல்லது பொருளை அடைந்து வெற்றி காண வேண்டுமென்றால் அந்தச் செயலின்மீதும், அந்தப் பொருளின்மீதும் குறையாத ஆர்வமும் மாறாத விருப்பமும் உடையவர்களாக நாம் திகழ வேண்டும்.

    நமது விருப்பமும் ஆர்வமும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கும்போது, நம்பிக்கையாக மாறி, வெற்றியை எட்டிப்பிடிக்கும் வரை போராட வைக்கின்றன.

    கடவுள் நம்பிக்கை தொடங்கி அன்றாட வாழ்வியல் நம்பிக்கை வரை ஆழ்ந்த விருப்பத்தோடும் உறுதியான மனோதிடத்துடனும் கையாளாதப்படாதவரை அவை உரிய பலன்களைத் தருவதில்லை.

    மழை வேண்டி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறு யாருமே கையில் குடைகொண்டுவரவில்லை என்று ஒரு பழைய கதை உண்டு.

    கையில் குடையோடு வந்த குழந்தையை பார்த்து மற்றவர்கள் ஏளனமாய்ச் சிரித்ததோடு, கடவுள் என்ன அவ்வளவு விரைவாக நமது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விடுவார் என்கிற நம்பிக்கையா? எனக் கேட்கவும் செய்தனர்.

    ஆனால் பிரார்த்தனை முடிந்து ஆலயத்தை விட்டு அனைவரும் வெளியேறும்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி அந்த குழந்தை தவிர்த்து மற்ற அனைவரையும் நனைத்துவிட்டது;

    முழுநம்பிக்கையோடு எதைச் செய்தாலும் நிச்சயம் பலனுண்டு என்பதற்கு, அந்தச் சிறு குழந்தையின் நம்பிக்கை மற்ற எல்லோருக்கும் பெய்த மழையாகி விட்ட கருணை சிறப்பானது.

    நம்பிக்கை என்பது ஒரு மனநிகழ்வு; அதற்கு எதிரான சொல் அவநம்பிக்கை. சிலருடைய வாழ்க்கைச் செயல்பாடுகள் எப்போதும் அவநம்பிக்கையிலேயே தொடங்கும். அவர்களிடம் `மணி என்ன ஆகிறது?' என்று கேட்டால், ' இப்போது மணிகேட்டு என்ன செய்துவிடப் போகிறாய்? என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்கப் போகிறாய்?' என்று எரிந்து விழுவார்கள்.

    எந்த வேலையில் ஈடுபட வேண்டுமென்றாலும், உடனே ஈடுபடாமல் அப்புறம் பார்த்துக் கொள்வோமே! என்று தள்ளிப் போடுவார்கள்; உடனே ஈடுபட்டாலும் `என்னத்தைச் செய்து! என்னத்தை ஆகப்போகிறது?' என்று நொந்துகொண்டே செயல்படுவார்கள். இப்படி அவநம்பிக்கையோடு ஈடுபடுபவர்களுக்கு சாதாரணமாக நடக்கிற காரியம்கூட நடக்காமல் போய்விடும்.

    எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும், இனிமேல் நடக்கவே நடக்காது என்று முடிவுகட்டப்பட்ட செயலாக இருந்தாலும், நம்பிக்கை வைத்து மெய்வருத்தத்தோடு ஒரு செயலைச் செய்தால், அதற்கேற்ற கூலியாக வெற்றியின் பலன் கிட்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

    சிலருக்கு வாழ்க்கையில் யாருமே துணைக்கு இல்லாதது போன்றதொரு நிலைமை ஏற்படும். குடும்பத்தில் பெற்றவர், உற்றவர், பிள்ளைகள், கணவன், மனைவி என்று உள்ள உறவுகள் அத்தனையும் உதவிக்கு வராமல் கைவிட்டு விட்டார்கள் என்று வருந்தாதீர்.

    சமூகத்தில் நண்பர்கள், மனிதர்கள், வள்ளல்கள், படிப்பிற்கேற்ற பணிவாய்ப்பு என எவருமே துணையாக வரவில்லை எனக் கவலைப்படாதீர். பணிபுரியும் அலுவலகத்தில், மேலதிகாரிகள், கீழதிகாரிகள், சக அலுவலர்கள் என யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் போய்விட்டாலும் நொந்துபோகாதீர்.

    யார் இல்லாமல் போனால் என்ன? நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இருந்தால் போதும்; அதைப்பற்றிக்கொண்டு இழந்த பொருள்கள், பிரிந்த சொந்தங்கள், கைநழுவிப்போன ஆட்சி அதிகாரம் பதவி சொத்து சுகம் அத்தனையையும் எளிதில் மீட்டுக்கொண்டு வந்து விடலாம்.

    ஓர் அருமையான உருவகக் கதை. ஓர் அழகான அறை. அந்த அறையின் இருளைப்போக்கி ஒளிமயமாக ஒளிரவைக்க நான்கு மெழுகுவர்த்திகள் ஏற்றிவைக்கப் பட்டுள்ளன. `அமைதி', `அன்பு', `வாய்மை', `நம்பிக்கை' என்பவை அங்கு எரிந்துகொண்டிந்த மெழுகுவர்த்திகளின் பெயர்கள்.

    `அமைதி' என்கிற மெழுகுவர்த்தி பேசத் தொடங்கியது," வன்முறை எண்ணம் பெருகிய மனிதர்கள் வாழுகிற உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் வஞ்சக எண்ணம் கொண்டு ஒருவரையொருவர் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்; அதனால் உலக நாடுகளிடையே சண்டைகள்; போர்கள்.

    தனித்திருக்கும் மனித மனங்களிடையேயும் குடும்ப மனிதர்களிடையேயும் அமைதியில்லா நிலைகள் சண்டை சச்சரவுகள். எனவே 'அமைதி' யாகிய நான் ஒளிர்ந்து பிரயோசனமில்லை; நான் அணைந்து போகிறேன்" என்று அணைந்துபோனது.

    அடுத்து, 'அன்பு' என்ற மெழுகுவர்த்தி பேசியது." என்னுடைய இன்றியமையாமையை எல்லோரும் பேசுகிறார்கள்! ஆனால் யாரும் யாரோடும் அன்புடையவர்களாக நடந்து கொள்வதில்லை. உலகமெங்கும் மனிதர்களிடம் கோபமும் பொறாமையும் வன்முறையும் தலைவிரித்தாடுகிறது.

    அடுத்த உயிர்களிடம் அன்பும் கருணையும் காட்டும் மனிதநேயம் எவரிடமும் தென்படவில்லை. எனவே நானும் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று 'அன்பு' அணைந்து போனது.

    அமைதியும் அன்பும் அணைந்த அடுத்த வினாடியே, 'வாய்மை' பேசத் தொடங்கியது. பொய்யும் சூதும் போலியும் புனைவுகளும் பெருகிவிட்ட உலகில் வாய்மைக்கு ஏது இடம்?. உண்மை பேசினாலோ, உண்மையாக நடந்துகொண்டாலோ உரிய மரியாதையை யாரும் கொடுப்பதில்லை. வீண்பகட்டுக்கே மக்கள் அதிக மதிப்பளிக்கிறார்கள்!.

    பகட்டான வாழ்க்கை வாழ்வதிலேயே ஆர்வமும் காட்டுகிறார்கள்!. இப்படிப்பட்ட உலகில் உண்மைக்கு ஏது மரியாதை? நானும் மாய்ந்து போகிறேன்! என்று அணைந்துபோனது 'உண்மை'.

    மூன்று விளக்குகளும் அணைந்து போனதால் இருள் பெருகிப்போன அறைக்குள் ஒரு சிறுமி நுழைந்தாள். " ஐயோ! நான் என்ன செய்வேன்! அமைதி! அன்பு! உண்மை! ஆகிய மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்து போயினவே! ஒளிவிட்டுப் பிரகாசித்த அறையில் தற்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறதே! " என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.

    அப்போது எஞ்சியிருந்த 'நம்பிக்கை' என்னும் மெழுகுவர்த்தி பேசத் தொடங்கியது," சிறுமியே! கலங்காதே! மூன்று விளக்குகளும் அணைந்துபோனால் என்ன? அவற்றை மீண்டும் ஒளியேற்றி வைக்க 'நம்பிக்கை' எனும் விளக்கு நான் இருக்கிறேன்.

    வாழ்க்கையில் எதை இழந்தாலும் பரவாயில்லை; நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் அதுபோதும்; இழந்த மற்ற எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்து விடலாம்!".

    சிறுமி 'நம்பிக்கை' என்னும் விளக்கின் உதவியோடு, அமைதி, அன்பு, உண்மை ஆகிய மெழுகுவர்த்திகள் மூன்றையும் ஏற்றிவைத்து அறை முழுவதையும் மீண்டும் ஒளிமயமாக்கினாள். ஆம் அன்பர்களே நம்பிக்கையே துணையாய்க் கொண்டோர்க்கு இந்த உலகில் வெல்வதற்கு அரிதான செயல் என்று எதுவுமில்லை.

    துன்பப்பட்டே ஆக வேண்டும் என்பதுபோன்ற செயலில் ஈடுபடும்போதும் நம்பிக்கை மகிழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தித், துன்பத்தை இன்பமாக்கிடும் கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

    உழைக்கும் உடம்பு சோர்வடையும் போதெல்லாம் நம்பிக்கைமனம் ஊக்கபானமாக உற்சாகம் தருகிறது. காற்றுப் புகமுடியாத அறைக்குள்ளும் ஒரு பெரிய யானையைப் புகுத்திவிடும் ஜாலத்தை நம்பிக்கை நிகழ்த்திக்காட்டும். எல்லா வெற்றிகளிலும் உழைப்புக் கால்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை; மீதமுள்ள முக்கால் பங்கு நம்பிக்கையால் நிரப்பி வையுங்கள்; முடிவு அபார வெற்றியாகவே இருக்கும்.

    ஒரு பெரிய மலையை ஏறிச் சிகரம் தொடுவதற்கும், பலமைல் தொலைவுப் பாதையை நடந்து கடப்பதற்கும் முதலில் நாம் எடுத்து வைக்கவேண்டியது நமது ஒரு சிறு அடிமட்டுமே!. அந்த அடியும் நம்பிக்கை கலந்த அடியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். எல்லை தொடுதல் அப்போதே நிகழ்ந்துவிட்டதாய் முடிவுகட்டி விடலாம்.

    தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் என்ன படித்தாலும் எப்படிப் படித்தாலும் மனத்தில் தங்க மாட்டேன்கிறது என்று வருத்தப்படுவார்கள். நம்பிக்கையோடு படித்தால் எந்தக் கடினப் பாடத்தையும் நொடியில் மனத்தில் தங்கும்வண்ணம் செய்துவிடலாம்; நம்பிக்கையோடு என்பது விருப்பத்தோடு படிப்பது; வேண்டா வெறுப்போடு படித்தால் நமது பெயர்கூடச் சமயத்தில் மறந்துபோகும்.

    சில மாணவர்கள், நன்றாகப் படித்திருப்பார்கள்; ஆனால் தேர்வுக்கூடத்திற்குள் சென்று அமர்ந்து, கேள்வித்தாளை வாங்கியவுடன் படித்த எல்லாமே மறந்துவிட்டது என்பார்கள். விருப்பப்பட்டு நம்பிக்கையோடு படித்த எதுவும் தேர்வுக்கூடத்தில் மறந்து போகாது.

    தேர்வுபயம் பற்றிக்கொள்ளும்போது இப்படித் தற்காலிகமான மறதிபோன்ற தீங்கு நிகழ்வதுண்டு. ஆயினும் கேள்வித்தாளை வாங்கும்போதே எளிமையான கேள்விகளே வரும்! அப்படி மாறி வந்தாலும் அவற்றிற்கு எளிமையாக விடையளித்துவிட என்னால் முடியும் என்கிற நம்பிக்கையோடு அமர்ந்தால், தேர்வுபயம் அகன்று போகும்.

    வாழ்க்கையில் வாய்ப்பு என்பது நமது வீட்டு வாசல் வழியாக வரும் என்று சிலர் வாசலைநோக்கி மட்டுமே காத்திருப்பர்; ஆனால் பலருக்கு ஜன்னல்கள் வழியாகவும் எட்டிப் பார்க்கலாம்; புழக்கடை வழியாகவும் புகுந்து பார்க்கலாம். கதிரவன் உதிப்பது கிழக்குத் திசையில்தான் என்றாலும் உலகில் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவிக்கிடப்பதுபோல நம்பிக்கையோடு பார்த்தால் எங்கும் ஒளிமயம்தான்.

    நம்பிக்கை பூரணமாக இருப்பவர்களுக்கு மனமும் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்; ஏனெனில் அவர்கள் எந்த இழப்பிற்கும், எந்தத் தோல்விக்கும், எந்தத் துன்பத்திற்கும் சோர்ந்துபோவதில்லை. எந்தச் செயலிலும் துளியளவு நம்பிக்கை இருந்தாலும் அதனைக் கடலளவு பெருக்கும் மகிழ்ச்சி உபாயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

    நம்பிக்கையாளர்களுக்கு, வெற்றி தோல்விகள் வெறும் எண்ணிக்கைகளே தவிர சாதனைக் கணக்குகள் அல்ல.

    நம்பிக்கையோடு கல்லைத் தின்றாலும் சீரணித்து விடும் திறமை பெற்றவர்கள் நம்பிக்கையாளர்கள். மருந்து மாத்திரைகளைத் தாண்டி நம்பிக்கையால் குணமடைந்து வந்தவர்களும் உண்டு. எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவரும் மாயவித்தையை நம்பிக்கை மட்டுமே தரக்கூடியது.

    தளர்ந்து போகாத முயற்சி, தோல்விகளைப் புறந்தள்ளிவிடும் அசாத்தியத் துணிச்சல், வலிகளைத் தாங்கிக்கொள்ளும் வலிமை, குறைந்து போகாத மகிழ்ச்சி இவையே நம்பிக்கை நமக்குத் தரும் அமிர்த ஊற்றுகள்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×