search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மெல்லிசை மன்னர்களின் புதுமை- பாடல்களில் வசனம், மிமிக்கிரி
    X

    மெல்லிசை மன்னர்களின் புதுமை- பாடல்களில் வசனம், மிமிக்கிரி

    • குறைந்த ஒலியில் மென்மையானக் குரலில் பாடுவதற்கு அப்போதிருந்தவர்களில் பொருத்தமானவர் பி.பி.சீனிவாஸ்தான்.
    • “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற அந்தப் பாடலில் பலவித குரல்களின் ஒலிகள் வரும்.

    கர்ணன் திரைப்படத்தின்போது, ஒரு சிக்கல். இயக்குநரான பி.ஆர். பந்துலுவுக்கு ஓர் ஆசை வருகிறது. அதை சொன்னால் ஒட்டுமொத்த படக்குழுவும் ஏற்கவில்லை.

    குரு சேத்திரம் போர்க்களக் காட்சியில் போரிட தயங்கும் அர்ச்சுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் செய்வதை காட்சியாக வைக்க வேண்டும் - பந்துலு.

    வேண்டாம் இயக்குநரே, போர் செய்யும்போது நிறுத்திட்டு பக்கம் பக்கமா வசனம் பேசினா நல்லாயிருக்காதே - குழுவினர்.

    கீதோபதேசத்தின் சாரங்களை இங்கே விட்டா எங்கே சொல்வது? நிச்சயமா காட்சியில் கொண்டு வந்தே ஆகணும் - பந்துலு.

    எடுபடாதுங்க. அலுப்புத் தட்டி எல்லோரும் எழுந்துப் போயிடுவாங்க - படக்குழு.

    பந்துலு, எம்.எஸ்.வி.யிடம் சொல்கிறார். போர்க்களத்திலே கீதோபதேசம் வைக்கலாம்னு நினைக்கறேன். ஏற்கெனவே படம் அதிக நீளம், அதனால வேண்டாம்னு இவங்கள்லாம் சொல்றாங்க. என்ன பண்ணலாம்?

    அப்படியா? ஒன்னு செய்யுங்க, கவிஞரைக் கூப்பிடுங்க.. கீதையினுடைய சாரத்தை சொல்லச் சொல்லுங்க. அவர் நான்கைந்து நிமிடத்துக்கு வருகிற மாதிரி ஒரு பாட்டை எழுதிடுவார். அதுக்கு மெட்டுப் போட்டு படமா எடுத்துடுங்க. நேரம், செலவு எல்லாம் மிச்சம். பண்ணலாமில்லையா? என்கிறார் எம்.எஸ்.வி.

    ஆகா... இது நல்ல ஐடியாங்க, அப்படியே செய்திடுறேன். பந்துலுக்கு பெரிய பிரச்சனை தீர்ந்தது.

    அப்படியே கீதோபதேசத்தை பாட்டாக வடித்தார் கவிஞர். 'மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்...' என்று ஆரம்பித்து எல்லோர் மனதையும் கலங்கடித்து விட்டார். அதற்கு சஹானா ராகத்தில் மெட்டுப் போட்டு நடுநடுவே அர்ச்சுனன் பேசும் வசனங்களுடன் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் தந்த அந்தப் பாடல் அதிசயத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

    தாய், சகோதரர்களை பிரிந்தே வாழும் கர்ணனுக்கு என்ன மெட்டில் பாட்டு அமைக்கலாம்? இரக்கம், கருணை எல்லாம் காட்டுகிற நிறைய ராகங்கள் இருக்க, சக்கரவாகம் என்ற ராகத்தில் (பிரிவுத் துயரை சொல்லும் ராகம்) சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாட வைத்தது என்பது இசை மேதைகளே வியக்குமிடம்.

    ஒருமுறை, இயக்குநர் ஸ்ரீதருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்தது. கதையின்படி இரண்டாம் கதாநாயகனும் கதாநாயகனின் தங்கையும் வீட்டிற்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இவர்கள் பாடும் பாடலும் ரகசியக் குரலில் தானே இருக்க வேண்டும்? அதனால் ஸ்ரீதர் சொல்லிவிட்டார், குறைந்த ஒலியில் எனக்குப் பாட்டு வரணும்.

    சரி, குறைந்த ஒலியில் மென்மையானக் குரலில் பாடுவதற்கு அப்போதிருந்தவர்களில் பொருத்தமானவர் பி.பி.சீனிவாஸ்தான். அவரையும் மந்திர ஸ்தாயி என்கிற மிகக் குறைந்த ஸ்தாயியில் பாட வைத்தப் பாடல்தான் 'போலீஸ்காரன் மகள்' படத்தில் "பொன்னென்பேன் சிறுப்பூ என்பேன்" என்றப் பாடல் வந்தபோது இப்படியெல்லாம் கூட மெட்டமைக்க முடியுமா என்று பலரும் புருவம் உயர்த்தினார்கள்.

    எட்டுக் கட்டையில் பாடும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம், என்பவரை வைத்து "செந்தமிழ் தேன் மொழியாள்" என்றும் பாட வைத்தவர்கள் மெல்லிசை இரட்டையர்கள்

    டி.ஆர். மகாலிங்கம்

    மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர். மகாலிங்கத்தை வைத்து மத்திய ஸ்தாயியில் "செந்தமிழ் தேன்மொழியாள்" பாடி எடுத்துவிட்டார்கள், வித்தியாச முயற்சிக்காக. ஆனால், டி.ஆர். மகாலிங்க பாணி குறைந்ததாக தெரியவே, அவரது ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்ற தொகையறாவை சேர்த்து பாடலை அலங்கரித்து விட்டார்கள். தமிழ்த் திரையிசையில் முதன் முதலில் மிமிக்கிரியை தந்தவர் எம்.எஸ்.வி.தான்.

    'பறக்கும் பாவை' படம் 1966ல் வந்தது. சர்க்கசில் இருப்பது போல் காஞ்சனா கனவில் எம்.ஜி.ஆருடன் ஆடி பாடுகிறார். சர்க்கசில் இருக்கும் பறவை, முயல், கிளிகள் போன்றவை பெண்ணுக்குத் தோழியாகவும், யானை, சிங்கம், காட்டெருமை போன்ற விலங்குகள் கதாநாயகனுக்கு தோழமையாகவும் பாடுவது போல மிக பிரமாதமான கற்பனையுடன் அந்தக் கனவுப்பாடல் அமைந்திருக்கும். "முத்தமோ, மோகமோ, தத்தி வந்த வேகமோ" என்ற இந்தப் பாடலில்தான் எத்தனை மிமிக்கிரி குரல்களை கொண்டு வந்திருப்பார் எம்.எஸ்.வி. இதுபோன்ற குரல்களை வழக்கமாக சாய் பாபா சதன் தருவது வழக்கம். அல்லது மாண்டலின் ராஜூ சில சமயம் தருவார்.

    பல வருடங்கள் கழித்து "அவள் ஒரு தொடர்கதை" என்ற ஒரு திரைப்படம் வந்தது. அந்தக் காலகட்டத்தில் மிமிக்ரி கலை நன்றாக வளர ஆரம்பித்திருந்தது. அந்தக் கலையை தனது படத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் கொண்டு வந்திருந்தார்.

    "கடவுள் அமைத்து வைத்த மேடை" என்ற அந்தப் பாடலில் பலவித குரல்களின் ஒலிகள் வரும். கிளிகள், தவளை, யானை, மான், முயல் போன்ற ஒலிகள் மற்றும் அதற்கு தொடர்புடைய இசைகளும் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.எஸ்.வி. இசையில் இதெல்லாம் புதுமையாக கொண்டுவரப்பட்டது.

    கவிஞர் கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    இரு மலர்கள் என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் "மகாராஜா ஒரு மகாராணி இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி" என்று ஒரு பாடல். இதில் பொம்மை பாடுவது போல் சில வரிகள் வரும். அவை வென்ட்ரிலோகிசம் என்ற கலையின்படி வருவது.

    வென்ட்ரிலோகிசம் என்பது ஒரு மனிதன் தன் வயிற்று தசைகளை இயக்கி, வாய் மூடி கையில் இருக்கும் பொம்மை பேசுவது போல் பேசும் மாயக்குரல் கலை. இதற்கு "இரு மலர்கள்" படத்தில் முதன் முதலாக இசையமைத்தவர் எம்.எஸ்.வி.

    பொம்மை போன்று பாடவும், சிரிக்கவும், கோபப்படவும், காதலை சொல்லவும் வரிகளை எழுத கண்ணதாசனும், அதற்கேற்ற மெட்டுப் போட எம்.எஸ்.வி.யும் பாவனைகளுடன் பாட எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், சதனும் சேர்ந்துக் கொள்ள தமிழ்த் திரையிசையில் இதுபோன்ற ஒரு புதுமைப் பாடல் இன்னும் வரவில்லை.

    Next Story
    ×