என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
அய்யா வைகுண்டர் செந்தூரில் நிகழ்த்திய அற்புதம்
- ‘நல்ல பேறு கொடுப்பேன் என மகனை கூட்டி வரச் சொன்ன இறைவன் இவ்வாறு செய்துவிட்டாரே’ என அழுது புலம்பினார்.
- வைகுண்ட சுவாமிகள் விஞ்சை பெற்ற வேளையில் நாராயண மூர்த்தி அருளியதாக சில அருள்மொழிகளை அகிலம் தொகுத்தளிக்கிறது.
கி.பி.1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் வருடம் 1008 மாசி) திருச்செந்தூர் முருகவேள் ஆலயத்தில் கொடியேற்று விழாவுடன் மாசித்திருவிழா தொடங்கியது. விழாவிற்கு சென்ற முத்துக்குட்டியும் செந்தூர் அலைவாயிலில் புனிதத் தீர்த்தமாட வேண்டி மார்ச் முதல் நாள் கடலினுள் இறங்கினார். அப்போது அவரைத் திரை இழுத்துச் சென்றது. கடலுக்குள் சென்ற மகனை காணோமெனத் தாயார் கதறி அழுது புலம்பினார். 'நல்ல பேறு கொடுப்பேன் என மகனை கூட்டி வரச் சொன்ன இறைவன் இவ்வாறு செய்துவிட்டாரே' என அழுது புலம்பினார்.
ஆனால் தாயாரும் ஏனையோரும் அறிய கடலினுள் மறைந்த முத்துக்குட்டி மூன்றாவது நாள் (மார்ச் 3) அற்புதம் நிகழ்த்தினார்.
ஆழ்கடலின் மேற்பரப்பிலிருந்து தனது திருமுகத்தைக் காட்டினார். யாவரும் அவரது திடீர்த்தோற்றத்தில் வியப்புற்றுத் தம்மை மறந்திருக்கையில் முத்துக்குட்டி கரையை நோக்கி வந்து தாயாரிடம் சென்றார். அவரிடமிருந்து எதிர்பாராதவிதமாக சொற்கள் வெளியாயின.
"ஆண்டாயிரத்தெட்டு முன்னே அன்னையெனவே நீ இருந்தாய்
கூண்டாமெட்டாமாசியிலே இருந்தாய் குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர்கெதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து ஒரு
குன்றாக்குடைக்குள் அரசாள கொண்டே பெற்றேன் கண்டிரு நீ"
எனக் கூறிக் குடும்ப பந்தத்திலிருந்து விடுவித்து பொது வாழ்வில் அடி எடுத்து வைத்தார்.
சான்றோர்களை காத்து, தீமைகளை அழித்து அனைத்து அறநெறிகளையும் தழைக்கச் செய்திடுமாறு நாராயண மூர்த்தியும், லட்சுமிதேவியும், வைகுண்டராகத் தன்னை ஈன்றெடுத்த பாங்கினையும் கடலினுள் தான் பெற்ற பேறுகளையும், தான் விஞ்சை பெற்ற நிகழ்ச்சியையும் கூடியிருந்த மக்களிடம் ஐயம் தீர எடுத்துரைத்தார். முத்துக்குட்டி வைகுண்டராகி விஞ்சை அடைந்த விதத்தை நாராயணர் உரையாக அகிலம் கூறுகின்றது:
"மகனே உனது மனம் அறிய மறையோரறியா விஞ்சை செய்து
அகமேயருளித் தருவதெல்லாம் மனுபோலசலில் அகலாதே
யுகமே முடிந்ததின் பிறகு உதிக்கும் தர்மயுகத்தில் வந்தால்
செகமே அறியச் சொல்லி மிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே"
வைகுண்டர் தன்னை, கூடி நின்றவர்களிடம் 'இன்று முதல் ' நான்தான் நாராயணன்' எனவும், 'காணிக்கை, காவடி, கைக்கூலி போன்றவைகளை வேண்டாது இருக்கப் போகின்றேன்' எனவும் கூறித் தனது விஞ்சைகளையும் திருமால் தனக்கு அருளிய அறிவுரைகளையும் எடுத்தியம்பினார்.
தாயாரிடம் 'வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றோர் குடைக்குள் பொய்கொண்டோர்களை பலிசெய்து அரசாளப் போகிறேன், குலக் கிழடே நீ பார் என்று கூறி, 'நங்கையே என்னுடைய நாமம் கேட்டாலே அன்பர்க்குப் பால்போல, பதம்போல பாவம் தீரும்' என உறுதியுடன் சொன்னார்? 'நல்லோர்க்கு நல்லகாலம் உண்டு' என நம்பிக்கை கூறினார். அன்பர்கள், வாடிய பயிர்களின் நடுவில் பெய்த மழைபோலத் தங்களைக் காத்திடத் தோன்றிய வைகுண்ட சுவாமிகள், எனவே அவரைப் போற்றித் தொழுதனர்.
அருள்உரை
வைகுண்ட சுவாமிகள் விஞ்சை பெற்ற வேளையில் நாராயண மூர்த்தி அருளியதாக சில அருள்மொழிகளை அகிலம் தொகுத்தளிக்கிறது. சுவாமிகள் காட்டுகின்ற வாழ்வியல் நெறியினை இவ்வருள் உரைகள் தெளிவுபடுத்துகின்றன.
"ஏதுவினை செய்தாலும் எண்ணம் வையாதே
தாழ்ந்திரு என் மகனே சட்டைக்குள்ளே பதுங்கி
சார்ந்திரு என் மகனே தனதில் மிக நினைத்து
கோபமாய் விழாதே குவிய சிரியாதே
பாவத்தை காணாதே பராக்கிரமம் காட்டாதே
ஆத்திரமெல்லாம் அடக்கியிரு என் மகனே
தாக்குகிறவனாகிடினும் சற்றும் பகையாதே.
பொல்லாதார் ஆகிடினும்
வாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே
சாரமறிந்து தானுரை.
வல்லாமை பேசாதே மாதிரி போடாதே
ஏழையாய் இரு நீ.
எளியோரை கண்டு இரங்கியிரு என் மகனே
வலியாரை கண்டு மகிழாதே என் மகனே.
அடக்கம் பெரிது அறிவுள்ள என் மகனே
கடக்க கருதாதே கற்றோரை கைவிடாதே
நன்றி மறவாதே நாம் பெரிதென்றெண்ணாதே
அண்டின பேரையகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகல நீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டு மொழி பேசாதே
பசுவையடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவாசமதிலே விரோதம் நினையாதே
எளியோரை கண்டு ஈந்து இரங்கிடு நீ
அழிவென்று பேச்சுனுப் போல் நினையாதே
தொட்டுப்பிடியாதே தோர்வை வைத்துக் காணாதே
விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே.
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
மாழக்கிடப்போர் மதத்தோர்கள் என் மகனே.
பொறுமை பெரிது
தர்மம் பெரிது தாங்கியிரு என் மகனே.
பொல்லாதாரோடும் பொறுமையுரை மகனே.
பெரியோர்க்கு வாழ்வு பெருகச் சிறந்தாலும்
மரியாதையாய் இரு என் மகனே.
சற்றேலே வாழ்வு சகடருக்கே வருகில்
கற்றோரையாகிடினும் கண்டறிவேன் போ நீ என்பான்
முள்முருங்கைப் பூ மினுக்கு மூன்று நாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல் மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
சுவாமிகள் விஞ்சை பெற்ற வேளையில் பெற்ற திருமொழி அனைவருக்கும் வழிகாட்டும் நல்மொழியாக உள்ளது.
ஊர் திரும்புதல்
முருகப்பெருமானை அணுகி, 'நாடு கேட்கப் போகிறேன் நாராயணனாகிய நான்; நீ உன் கோபுரத்தின் உயர்ந்த வட மூலையில் பின் கோபுரம் காணப் பிளந்து போட்டு, உலகோர் அறிய ஒரு வாயிலுமடைத்து, செல்லா உன் சிலையை தெற்கு முகமாகத் திருப்பி விட்டு, கண்மூடி கவிழ்ந்தே இரு எனக் கூறிவிட்டுக் கடலினுள் திருமால் அருளிய ஆணையை மனதிலிருத்தி தெற்கு நோக்கிச் சீர்திருத்தப் பயணத்தை மேற்கொண்டார். அவ்வமயம் பொறுமைக் குலங்கள் எல்லாம் தர்ம வைகுண்டர் மலரடி தொழுது 'கப்பல் கரை கண்டாற் போல உம்மையும் நாங்கள் கண்டோமே' என அவரை கண்டு அகமகிழந்தனர். எனினும் சில குறும்பர்கள் 'பேயன் போவதைப் பார் என தூற்றினர்.
சிலர் கல்கொண்டு எறிந்தனர். ஓரிடத்தில் தனது கால்களில் படிந்த தூசியினை கழுவிடக் குளம் ஒன்றில் இறங்கியபோது, 'தூசையா கழுவுகிறாய்! உனது காலை வளைத்துத் தோளில் போட்டுக் கொள்' எனச் சிலர் வைதனர். இவ்வாறு சிலரது வசைமொழிகளையும் கேட்டுக் கொண்டே பயணத்தைத் தொடர்கையில், தாகம் ஏற்பட்டு, பதனீர் இறக்குபவர் ஒருவரிடம் அருந்துவதற்குப் பதனீர் கேட்ட போது, அத்தொழிலாளி பதனீரில் சுண்ணாம்பு அதிகமாக கலந்து கொடுத்தார்.
அப்பதனீர் பால் போல் மாறியதால், சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்த வைகுண்டரை அவர் உற்றுப்பார்த்தபோது, 'தாலியறுத்துக் கட்டு' எனச் சொல்லி நகர்ந்தார்." வரும் வழிதோறும் தன்னைக் கண்டு வணங்கி நின்ற அன்பரிடம், 'கருத்தயர்ந்து போகாதுங்கோ! ஐந்து பஞ்சமதையும் குலைய விடாதிருங்கோ!' என்று பண்புடன் கூறி வழி நடந்து பூவண்டன் தோப்பு வந்தடைந்தார். தொடர்ந்து தவ வாழ்வு தொடங்கிய வைகுண்டரின் செயல்களை வரும் வாரத்தில் பார்ப்போம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்