search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- மகான் வேதாந்த தேசிகர்
    X

    ஆன்மிக அமுதம்- மகான் வேதாந்த தேசிகர்

    • திருவேங்கடமுடையான் என்பது வேதாந்த தேசிகருக்குப் பெற்றோர் இட்ட இயற்பெயர்.
    • வேதாந்த தேசிகரின் இனிய தமிழைக் கேட்டவாறே தான் வேங்கடவன் நீராடுகிறார்.

    தமிழ், வடமொழி என இரு மொழிகளிலும் எண்ணற்ற நூல்கள் படைத்துப் பெரும்புகழ் பெற்றவர் வைணவ சமயச் சான்றோரில் ஒருவரான ஸ்ரீவேதாந்த தேசிகர்.

    கி.பி. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், காஞ்சிபுரத்தின் அருகே தூப்புல் என்ற இடத்தில் 1268-ம் ஆண்டு புரட்டாசி மாதம் சிரவண நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    தந்தையார் பெயர் அனந்தசூரி. தாயார் தோத்தாத்திரி அம்மையார். திருவேங்கடமுடையான் என்பது வேதாந்த தேசிகருக்குப் பெற்றோர் இட்ட இயற்பெயர்.

    சிறுவயதிலேயே மாபெரும் அறிவாளியாகத் திகழ்ந்த வேதாந்த தேசிகர் திருமலையில் உள்ள கோவில் மணியின் அம்சமாகப் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. இவரது குருவின் பெயர் கிடாம்பி அப்புள்ளார்.

    வேதாந்த தேசிகர், தமது இருபத்தோராம் வயதில் கனகவல்லி என்னும் மங்கையை மணந்து இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்தார். பெரும் புலமையால் ஏராளமான அறிஞர்களை இளமையிலேயே வியக்க வைத்தார்.

    தம் அறிவு மற்றும் ஆற்றல் காரணமாக பல சீடர்களைப் பெற்று வைணவ குரு என்ற உயர்நிலையை இருபத்து ஏழாம் வயதிலேயே அடைந்தார்.

    வேதாந்த மார்க்கத்தில் சிறந்த ஆசார்யராக இவர் திகழ்ந்தார். அதனால் இவரை வேதாந்த தேசிகர் என அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். காலப் போக்கில் இவரின் இயற்பெயர் மறைந்து அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

    தவிரவும் `தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, சுவாமி தேசிகன், உபய வேதாந் தாச்சாரியார்` போன்ற பெயர்களிலும் இவர் அறியப்படுகிறார்.

    பக்தர்கள் நாள் முழுவதையும் இறைச் சிந்தனையில் தோய்ந்து வாழ வேண்டும் என்று சொன்ன இவர், ஒரு நாளில் அமைந்துள்ள இருபத்து நான்கு மணி நேரத்தை எப்படிப் பகுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்தி அட்டவணை அமைத்துத் தந்திருக்கிறார்.

    அந்த வேலைத் திட்டம் `தினசரியை` என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நித்திய கர்ம வழிகாட்டி எனவும் அதை அழைக்கிறார்கள்.

    இவர் வடமொழி, தமிழ் இரண்டிலும் சம அளவு பெரும் புலமை பெற்று விளங்கினார். இரு மொழிகளிலும் மிகச் சிறந்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

    வடமொழியில் இவர் எழுதிய நூல்கள் கோதாஸ்துதி, தசாவதார ஸ்தோத்திரம், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், தேசிக மங்களம் உள்பட எண்பத்திரண்டு.

    அவற்றில் `பாதுகா சஹஸ்ரம்` என்ற, முப்பத்திரண்டு அத்தியாயங்களில் ஆயிரம் செய்யுள்களைக் கொண்டு இயற்றப்பட்ட நூல் பெரும்புகழ் பெற்றது. திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள ரங்கநாதரின் பாதுகைகளை வழிபட்டுப் போற்றிப் பாடும் பக்தி நூல் இது.

    ஸ்ரீவைஷ்ணவத்தின் புனித நூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பதினான்கு ஆண்டுகள் ராமனின் பாதுகைகள் அயோத்தியை ஆண்டன எனக் கூறி, திருமாலின் பாதுகைச் சிறப்பு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

    ராமபிரானின் திருவடிகளைச் சரணடைவதுபோல் அவரது பாதுகைகளைச் சரணடைந்தே முக்தி பெறலாம் என இந்நூல் தெரிவிக்கிறது. பாதுகைகளை மட்டுமே மையமாக வைத்து தம் அபாரமான கற்பனை வளத்தின் மூலம் ஆயிரம் செய்யுள்களைப் புனைந்து பிரமிக்க வைக்கிறார் வேதாந்த தேசிகர்.

    தமிழில் `அமிர்த ரஞ்சனி, அடைக்கலப் பத்து, மும்மணிக் கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம்` உள்ளிட்ட இருபத்து நான்கு நூல்களை இயற்றியுள்ளார். அவரது தமிழ் நூல்கள் `தேசிகப் பிரபந்தங்கள்` என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

    திருப்பதியில் வெள்ளிக்கிழமை தோறும் வேங்கடவனுக்குத் திருமஞ்சனம் (நீராட்டல்) செய்வதற்கு முன் வேதாந்த தேசிகர் அருளிய `அடைக்கலப் பத்து` பாடப்பட்டு வருகிறது. வேதாந்த தேசிகரின் இனிய தமிழைக் கேட்டவாறே தான் வேங்கடவன் நீராடுகிறார்.

    திருப்பாணாழ்வார் பாடிய `அமலனாதி பிரான்` என்னும் பதிகத்திற்கு இவர் `அமலனாதி பிரான் வியாக்கியானம்` என்ற தலைப்பில் விளக்க நூல் எழுதியுள்ளார்.

    தேசிகரின் நூல்களைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படும். காரணம் அவரது மிரட்டும் பல்துறை அறிவு. சகலகலா வல்லவர் என்று அவரைச் சொல்வதுபோல் இன்னொருவரை நாம் சொல்ல முடியாது. வானவியல், உயிரியல், மருத்துவம், கட்டடக் கலை, இசை, சட்டம், தர்க்கம், வேதாந்தம், இலக்கணம், இலக்கியம் என இன்னும் எண்ணற்ற துறைகளில் எழுதிக் குவித்திருக்கிறார் அவர். அவரது ஒவ்வொரு நூலும் பல்துறை அறிவு சார்ந்த ஒரு பொக்கிஷம். இவ்வளவு பேரறிவை அவர் எங்கிருந்து கற்றார், எப்படிப் பெற்றார் என்ற கேள்விகளுக்கு இறையருள் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை. ஆழமான கருத்துக்களைக் கொண்ட நூல்களைப் படைத்த அவருக்கு ஆழமான கிணறையும் கட்டத் தெரிந்திருந்தது என்பதுதான் ஆச்சரியம்! `சர்வ தந்திர ஸ்வதந்திரர்` என்று அவரைச் சொல்வது வழக்கமாம். எல்லாம் வல்லவர் என்று அதற்குப் பொருள்.

    `எல்லாம் வல்லவராமே நீங்கள்? ஆனால் உங்களால் நான் கட்டுவதுபோல், மக்கள் தண்ணீர் இறைத்துக் கொள்ளும் வகையில் ஒரு கிணறு கட்ட முடியுமா?` என்று மேஸ்திரி ஒருவர் இவரிடம் சவால் விட்டாராம்.

    எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்த தேசிகர், யார் உதவியையும் கோராமல், தன்னந்தனி ஆளாக நின்று தாமே ஒரே நாளில் கிணறு கட்டி முடித்தாராம்.

    அவரது சாதனையைப் பார்த்து மேஸ்திரி உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். அவரைத் தெய்வம் என்றே கருதி வணங்கினார்கள்.

    திருவேந்திபுரத்தில் உள்ள அந்தக் கிணற்றை இன்றும் மக்கள், தெய்வம் கட்டிய கிணறு என்றெண்ணி வழிபட்டு வருகிறார்கள்.

    அவர் வாழ்வில் வரும் இந்தச் சம்பவத்தைப் பற்றி நினைக்கும்போது வனவாச காலத்தில் இலக்குவன் கட்டித் தந்த குடிலைப் பார்த்து வியந்த ராமபிரான், `எப்போது எப்படி இந்தக் கலையைக் கற்றாய்?` என ஆச்சரியத்துடன் வினவிய நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    பல கலைகளில் வல்லவராக இருந்த தேசிகர், அதிகம் வல்லமை காட்டியது எழுத்துக் கலை.

    தொழில் நுட்ப நூல்கள், கற்பனைப் படைப்புகள், இசை, தத்துவம் சார்ந்த நூல்கள், பக்தி சார்ந்த நூல்கள் என இவரது நூல்களில் ஒன்றைப் போல் இன்னொன்றின் உள்ளடக்கம் இராது. ஒவ்வொன்றுக்கும் தனி நடை. தனிச் சொல்லாட்சி.

    அவரை அவதாரம் என்றே பலரும் கருதக் காரணம் மனித முயற்சியால் இத்தனை அறிவுச் செல்வத்தை ஒருவரே அடைந்துவிட இயலுமா என அவரது நூல்களைப் படித்தவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்தான்.

    இதோ அவரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று:

    `கண்ணனடி இணையெமக்குக் காட்டும் வெற்பு!

    கடுவினையர் இருவினை யுங் கடியும் வெற்பு!

    திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு!

    தெளிந்த பெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!

    புண்ணியத்தின் புகலிதெனப் புகழும் வெற்பு!

    பொன்னுலகில் போகமெலாம் புணர்க்கும் வெற்பு!

    விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!

    வேங்கடவெற் பென விளங்கும் வேத வெற்பே!'

    தேசிகரின் இந்த அழகிய பாடல் வேங்கடவன் உறையும் திருமலையின் பெருமைகளைப் பேசுகிறது.

    `குறையாது மில்லாத கோவிந்தா நின் குரைகழற்கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய்` என `அமிருத சுவாதினி` என்ற செய்யுள் நூலில் தேசிகர் குறையில்லாதவன் கோவிந்தன் என்று சொல்லிக் கண்ணனைப் போற்றுகிறார்.

    இந்தச் செய்யுளடி மூதறிஞர் ராஜாஜியைக் கவர்ந்திருக்கலாம். `கோவிந்தனுக்கு மட்டுமா குறையில்லை, கோவிந்தன் அருளால் எனக்கும் குறையேதுமில்லை` என அவர் சிந்தித்திருக்கலாம்.

    `குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!` என எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிப் புகழ்பெற்ற ராஜாஜியின் பாடலுக்கான பல்லவிக் கொடை, தேசிகர் அருளால் கிடைத்ததாகவும் இருக்கலாம்.

    மூதறிஞர் ராஜாஜி, தேசிகரின் பிரபந்தங்கள் உள்பட அனைத்து வைணவ பக்தி இலக்கியத்திலும் தோய்ந்து வாழ்ந்தவர் தானே?

    ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் வடமொழி வேதத்திற்கு இணையானவை என இன்று நாம் கொண்டாடுகிறோம். அவ்விதம் ஆழ்வார்கள் பெருமை நிலைநாட்டப் பட்டதில் வேதாந்த தேசிகரின் பங்கு அதிகம்.

    வடமொழியில் பெரும் புலமை பெற்றிருந்த இவர், வடமொழி போலவே தமிழும் தெய்வத் தன்மை உடைய மொழி என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கோவில்களில் வடமொழியோடு தமிழும் இடம்பெறும்படிச் செய்தவர் இவரே.

    ஆழ்வார் பாசுரங்கள் இன்று வைணவக் கோவில்களில் முன்னிலைப் படுத்தப்படக் காரணம் வேதாந்த தேசிகர்தான்.

    ராமானுஜரின் தத்துவங்களைப் பரப்பியவர்க ளில் முக்கியமானவர் தேசிகர். திருப்பதி, மேல்கோட்டை, காஞ்சிபுரம், பிருந்தாவனம், பத்ரிநாத், அயோத்யா உள்ளிட்ட பல தலங்களுக்கு யாத்திரை செய்து தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் ராமானுஜரின் புகழைப் பரப்பினார்.

    பின்னர் தன் மகன் குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்து தங்கி திருவரங்கத்தில் வாழ்ந்து இறைவன் திருவடியை அடைந்தார்.

    வைணவத்திற்குப் பெருந்தொண்டு புரிந்த இந்தப் பெருமகனார் நூறாண்டும் மேலும் ஓராண்டும் வாழ்ந்து வாழ்நாள் முழுதும் பக்தி இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு புரிந்தார். ஆனால் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அவர் ஆயிரம் ஆண்டுக்கும் மேல் வாழ்ந்தவரோ என்ற ஐயம் ஏற்படும். மகான் வேதாந்த தேசிகரது தமிழ் மற்றும் சமஸ்கிருத பக்தி இலக்கிய நூல்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் மிக உயர்ந்தவை என்பது விமர்சகர்களின் கணிப்பு.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×