search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குளிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்
    X

    குளிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

    • மூட்டு வலி, கணுசூலை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.
    • ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    நம் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் தெம்பும், நலமும் தேவை. இருப்பினும், ஆண்டின் குறிப்பிட்ட சிலமாதங்களில் உடல் நலச்சிக்கல்கள் மிகவும் பொதுவானவை. எடுத்துக் காட்டுக்கு, கோடையில் வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது போல, குளிர்காலத்தில் நரம்பு மற்றும் கிருமி தொற்று காரணமாக ஏற்படுகின்ற நோய்கள் நம்மை அதிகம் பாதிக்கின்றன. எனவே குளிர்கால சுகாதாரச் சிக்கல்கள் பற்றியும், அதிலிருந்து நம்மைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் இப்பகுதியில் காணலாம்.

    குளிர்கால நலவாழ்வுச் சிக்கல்கள்

    முகவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிவிரைவான நரம்புத் தளர்ச்சி எனப்படும் ஜி.பி.எஸ். வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, மேலும் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, டிரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்ற நரம்பு பாதிப்பு மற்றும் நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் வலிகள் குளிர்காலங்களில் அதிகமாகின்றன. எனவே வலியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, மாத்திரைகளின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது.

    சூரிய ஒளியின் அளவு குறைவதால் வைட்டமின் "டி" மற்றும் செரடோனின் அளவு குறைகிறது, இதனால் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஏற்கெனவே மனஅழுத்தத்தால் துன்புற்றவர்களுக்கு மனஅழுத்தத்தின் தாக்கம் அதிகரிக்கிறது.

    ரத்தக் குழாய் அடைப்பு நோய்களான பக்கவாதம், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் குளிர்ந்த வெப்பநிலை ரத்தநாளங்களைச் சுருக்கு கின்றன. மேலும் ரத்தத்தைச் சிறிது தடிமனாக மாற்றவும் செய்வதால், குளிர்காலங்களில் ரத்தக்குழாய் அடைப்பு அதிகமாக வருகிறது. இந்த மாற்றங்களால் இதயநோய் உள்ளவர் களுக்கு நெஞ்சுவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே அதற்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மூட்டு வலி, கணுசூலை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். தோல் வறண்டு போவதால், அரிப்புகள் அதிகமாகி, அதனால் ஏற்படும் காயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும். "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயிற்றுப் போக்கு மற்றும் பிற தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். (நிமோனியா / ஆஸ்துமா / தொண்டை வலி). போன்றவையும் வரும் வாய்ப்புகள் உண்டு.

    குளிர்ச்சியான சூழலில் தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் பல்கிப் பெருகுவதால், எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கின்றன. வைரஸ் மூலம் பரவும் சளி, காய்ச்சல் மற்றும் பிற மூச்சு நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடும். பருவகால நோய்த்தொற்றுகள், தட்டம்மை, டிப்தீரியா என்னும் தொண்டை நோய் மற்றும் காலரா, ரோட்டா வைரஸ், டைபாய்டு போன்ற மலம்-வாய்வழித் தொற்றுகள், மலேரியா உள்ளிட்ட வெக்டரால் (விலங்கு மற்றும் கொசுக்களின் மூலம் மனிதர் களுக்குப் பரவுவது) பரவும் நோய்கள் மற்றும் பாலியலால் பரவும் கோனோரியா ஆகியவை பரவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    குளிர்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

    பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைவாக இருப்பதால், காய்ச்சல் மற்றும் சளியை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள், மூடிய அறைகளில் சுற்றும் காற்றின் மூலம், குழந்தைகளுக்கு எளிதில் பரவுகிறது. இதுதான் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதற்கான முதற்காரணமாகும்.

    ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அதிகக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு அடிக்கடி செல்லாமல் இருப்பது நோய்த்தொற்றைக் குறைக்கும். குழந்தைகளின் காது, மூச்சுப்பாதை மற்றும் உணவுப்பாதையில் தொற்று ஏற்படுவதால், காதுகளில் அரிப்பு, அடைப்பு, சீல் வடிதல், மூச்சு விடுவதில் கடினம் மற்றும் உணவுகளை விழுங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பருவகாலக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும்.

    குளிர்காலம் மூளையைப் பாதிக்கிறதா?

    குளிரின் தீவிரம் மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது தலைவலி, மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் பாதிப்படைந்த நரம்புகளின் சிக்கல்களை அதிகப்படுத்தும் என்பதை முன்பே பார்த்தோம். இதைத் தடுக்க வைட்டமின் "டி"-யை எடுத்துக்கொள்வது நல்லது.

    குளிர்காலத்தில் வைட்டமின் "டி"-ஐ எவ்வாறு பெறுவது?

    குளிர்காலத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 600மிகி வைட்டமின் "டி" அல்லது வாரம் ஒரு முறை 60,000ஐயூ என்ற அளவில் 8 வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குளிர்சாதன அறையிலேயே வேலை புரிபவர்கள் இந்த வைட்டமின் "டி" மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் சூரிய ஒளியில் 20 நிமிடங்களாவது இருப்பது நல்லது.

    வைட்டமின் ''டி'' அதிகமுள்ள உணவுகள்:

    முளைக்கட்டிய தானியங்கள், பாதாம் பால், தேங்காய்ப் பால் மற்றும் இளநீர், காளான்கள், முட்டை, மீன் எண்ணெய், மீன்களில் சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் வாள்மீன் ஆகியவைகளில் வைட்டமின் 'A' அதிகமுள்ளது. இவைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் "டி-''யை அதிகமாகப் பெறலாம். ஆனால் குளிர்காலங்களில் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

    அசைவ உணவுகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?

    குளிர் காலங்களில் உடல் உழைப்புக் குறைவாக இருப்பதாலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை செரிக்க உடலுக்கு அதிக நேரம் தேவைப்படுவதாலும் மற்றும் எடை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    குளிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க.!

    நன்றாக அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக உணவு அருந்துவதற்கு முன்பு கைகளைக் கட்டாயம் சோப்புப் போட்டு கழுவ வேண்டும். வீட்டில் உள்ள நாற்காலி, படுக்கை மற்றும் கைப்பிடிகள் ஆகியவற்றை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.

    நிறைய நேரம் தூங்குவது நல்லது. சரிவிகித உணவை உண்ணுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள். மனஅழுத்தத்தைத் தணிக்கவும், ஓய்வெடுக்கவும் நேரம் ஒதுக்குங்கள். மதுப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. சூடான உணவு மற்றும் பானங்களை உட்கொள்ள வேண்டும். உடலைச் சூடாக வைத்திருக்கும் ஆடைகளை அணியுங்கள். குளிரைத் தாங்கும் ஆடைகள், கையுறை, தொப்பிகள், சால்வைகள் மற்றும் காலுறைகள் தேவைக்கேற்றவாறு அணிந்து கொள்ளுங்கள்.

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    சளி பிடிக்கத் தொடங்கும் போது, நம் உடலில் உள்ள இரத்த உறைதல் தன்மை அதிகரிப்பதால், குளிர் காலத்தில் அதிக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து, சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் உண்ணும் உணவில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

    குளிர்காலங்களில் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோமாக.

    Next Story
    ×