search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சங்க காலத்துக்கும் முன்பே திருச்செந்தூர் முருகன் புகழ்!
    X

    சங்க காலத்துக்கும் முன்பே திருச்செந்தூர் முருகன் புகழ்!

    • அருணகிரிநாதர் தனது திருப்புகழில் 84 பாடல்களை திருச்செந்தூர் முருகன் மீது பாடியுள்ளார்.
    • திருச்செந்தூர் முருகன் வழிபாடு எப்போது தோன்றியது என்பதை இதுவரை யாராலும் கணிக்க இயலவில்லை.

    ஆதி தமிழர்களுக்கு இறைவன் மீது முதன் முதலாக எப்போது நம்பிக்கை ஏற்பட்டதோ அப்போது அவர்கள் அந்த இறைவனுக்கு வைத்த பெயர்களில் ஒன்று முருகன். தமிழகத்தின் தென் பகுதிகளில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது பல தடவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    என்றாலும் தமிழ்க்கடவுள் முருகனின் அவதார பிறப்பு மீது பலருக்கும் தேவையற்ற சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அத்தகைய சந்தேகங்களை தீர்க்கும் வகையில்தான் சங்க கால இலக்கியங்களில் முருகன் பற்றி மிக மிக சிறப்பாக சொல்லப்பட்டு இருப்பதை கடந்த வாரம் பார்த்தோம்.

    அதிலும் திருச்செந்தூர் முருகன் பற்றி தான் சங்க கால இலக்கியங்களில் அதிகளவு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. சங்க காலத்தில் திருச்செந்தூர் என்ற பெயர் சூட்டப்படவில்லை. திருச்செந்தூரில் கடல் அலைகள் ஓயாமல் மீண்டும் மீண்டும் கரைக்கு வந்து வந்து முருகனின் காலடிகளை தொட்டு சென்றதை பார்த்த சங்க கால மக்கள் "அலைவாய்" என்று அந்த ஊரை அழைத்தனர்.

    அதன் பிறகு "சீரலைவாய்" என்று அழைத்தனர். அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் "திரு" அடைமொழி சேர்க்கப்பட்டு "திருச்சீரலைவாய்" என்று அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் மருவி "திருச்செந்தூர்" என்று உருவானது.

    சங்க காலத்தில் திருச்செந்தூருக்கு அருகில் கொற்கை மாநகரம் பாண்டியர்களின் தலைநகராக இருந்ததால் திருச்செந்தூர் மிக மிக சிறப்பான, செழிப்பான ஊர்களில் ஒன்றாக திகழ்ந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், திருப்புகழ், கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா உள்பட ஏராளமான நூல்கள் திருச்செந்தூரின் பழமை சிறப்பை நமக்கு இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

    தொல்காப்பியத்தில் திருச்செந்தூரை முருகன் தீம்புனல் அலைவாய்-(களவு சூத்23) என்று கூறப்பட்டுள்ளது.

    புறநானூற்றில்-வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகநானூற்றில்- திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)-என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருமுருகாற்றுப்படையில்- உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரத்தில்- சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம் என்று கூறப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகன் பற்றி கூறுகையில், "செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே" என்று கூறியுள்ளார்.

    சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், முருகனின் வேலாயுதத்தை சிறப்பித்து கூறியுள்ளார். வேலின் பெருமையை சொல்ல வந்த அவர் தமிழகத்தில் சிறப்பான முருகன் தலங்களை வரிசைப்படுத்தி உள்ளார். அதில் முதலிடம் பிடித்து இருப்பது திருச்செந்தூர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சங்க காலத்துக்கு பிறகு வந்த முருகன் அடியார்களும் ஏராளமான பாடல்களை திருச்செந்தூர் மீது பாடியுள்ளனர். குமரகுருபரர், அருண கிரிநாதர், பகழிக்கூத்தர், ஆதி சங்கரர், வென்றி மாலை கவிராயர் போன்ற வர்கள் திருச்செந்தூர் முருகன் மகிமைகளை பட்டியலிட்டுள்ளனர்.

    சமீபத்தில் கந்தசஷ்டியை உருவாக்கிய தேவராய சுவாமிகள் திருச்செந்தூர் தலத்தில் அமர்ந்துதான் அதை எழுதினார். இப்படி இலக்கியங்களுடன் திருச்செந்தூர் முருகனுக்கு உள்ள தொடர்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

    அருணகிரிநாதர் தனது திருப்புகழில் 84 பாடல்களை திருச்செந்தூர் முருகன் மீது பாடியுள்ளார். அதை பாட.... பாட... திருச்செந்தூர் முருகன் மீது தனி மயக்கமே வந்து விடும்.

    சங்க இலக்கியங்களில் திருச்செந்தூர் முருகன் பற்றி இப்படி ஏராளமான புலவர்கள் பல விதங்களில் பாடியுள்ளனர். தமிழகத்தில் எந்த தலத்தில் உள்ள முருகப்பெருமானுக்கும் இல்லாத சிறப்பு இதுவாகும்.

    சங்க காலத்தில் மட்டுமின்றி அதற்கு முன்பே திருச்செந்தூர் முருகன் வழிபாடு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் புகழ் பெற்று இருந்தது. புராண காலத்திலும் திருச்செந்தூர் தலம் சிறப்பாக இருந்ததற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

    ஒரே ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.... ஸ்ரீமத் பாகவதத்தில் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பலராமர் தீர்த்த யாத்திரை செல்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி தீர்த்த யாத்திரை செல்லும் பலராமர் திருச்செந்தூர் தலத்துக்கும் வந்து சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் முருகன் வழிபாடு எப்போது தோன்றியது என்பதை இதுவரை யாராலும் கணிக்க இயலவில்லை. அந்த அளவுக்கு திருச்செந்தூர் தலமும், அங்குள்ள வழிபாடும் மிக மிக பழமையானதாகும்.

    நாடு முழுவதும் இருந்து மன்னர்கள், முனிவர்கள், சித்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள் திருச்செந்தூருக்கு வந்து முருகனை வழிபட்டு சென்றனர் என்பதற்கு வரலாற்று புத்தகங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன.

    ஆதிசங்கரர் தனது வயிற்று வலியை தீர்த்துக் கொள்வதற்காக திருச்செந்தூருக்கு வந்து முருகனை வழிபட்டு 'சுப்பிரமணிய புஜங்கம்' என்ற அழகிய நூலை படைத்தார்.

    கடைசங்கத்துக்கு தலைமை தாங்கிய நக்கீரர் எழுதிய திருமுருகாற்று படையில் திருச்செந்தூர் முருகன் பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகனின் 6 முகங்கள், 12 கைகள், வேல், மயில், சேவல்கொடி பற்றி நக்கீரர் அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்.

    அது மட்டுமின்றி திருச்செந்தூர் தலம் உலகம் போற்றும் புகழ் உடையது என்றும் நக்கீரர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் திருச்செந்தூர் முருகனை பலவிதங்களில் புகழ்ந்துள்ளார். சூரனை அழித்த முருகனின் சுடர்வேலை போற்றியுள்ளார்.

    கடந்த 500 ஆண்டுகளில் திருச்செந்தூர் முருகன் பற்றி புலவர்கள் பாடிய பாடல்கள் ஏராளம். தமிழகத்தில் வேறு எந்த தலத்துக்கும் இல்லாத வகையில் திருச்செந்தூர் முருகன் மீதுதான் அதிக பக்தி இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

    சுவாமிநாத தேசிகர் எழுதிய திருச்செந்தூர் கலம்பகம், குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா, கந்தசாமி புலவர் எழுதிய திருச்செந்தூர் நெண்டி நாடகம், தேவராய சுவாமிகள் எழுதிய கந்தசஷ்டி கவசம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருச்செந்தில் பிரபந்தம், அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்து ஆகியவற்றை அந்த பக்தி இலக்கியங்களுக்கு உதாரணமாக சொல்லலாம்.

    பகழிக்கூத்தர் என்ற வைணவ பக்தர் எழுதிய திருச்செந்தூர் முருகனின் பிள்ளை தமிழ் மிக மிக அருமையான நூலாகும். இதில் பல்வேறு வகையான உவமைகளுடன் முருகன் புகழ் பாடப்பட்டுள்ளது.

    இவை மட்டுமின்றி அந்த காலத்து நாட்டுப்புற பாடல்களிலும் திருச்செந்தூர் முருகன் பற்றி மக்கள் மத்தியில் ஏராளமான பாடல்கள் உலா வந்தன. திருச்செந்தூர் தலம் அந்த காலத்தில் சந்தனமலையில் சந்தன மரங்கள் சூழ நந்தவனமாக இருந்ததை நாட்டு பாடல்களில் பலவிதமாக அந்த காலத்து புலவர்கள் பாடி வைத்து இருந்தனர்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நாட்டுப்புற பாடல்கள் மக்கள் மத்தியில் பாடப்பட்டு வந்தன. துரதிருஷ்டவசமாக அந்த நாட்டுப்புற பாடல்களை தொகுத்து பாதுகாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடாததால் நிறைய நாட்டுப்புற பாடல்களை நாம் இன்று இழந்து இருக்கிறோம்.

    என்றாலும் சூரபத்மனை வேலாயுதத்தால் அழித்துப் போரில் வென்றபின் செந்தில் எனும் பெயர் பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் ஜெயந்திநாதனாய் வெற்றிக்கோலத்தோடு முருகப்பெருமான் எழுந்தருளியதைத் தமிழ் இலக்கியப் பதிவுகளில் காணமுடிகிறது.

    கந்தபுராண வரிகள் பகைவனுக்கும் அருள்புரியும் கந்த வேலின் உயர் நெஞ்சத்தை உணர வைக்கிறது.

    அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரத்தில் ஓசைநயத்தோடு திருச்செந்தூர் கடற்கரையில் போர்க்கோலம் பூண்டுவந்த முருகனை காண முடிகிறது. அருணகிரிநாதர் கந்தர லங்காரத்தில் சூரசம்ஹாரக் காட்சியை மிகப்பிரமாதமாக வர்ணித்துள்ளார்.

    அருணகிரிநாதரின் திருப்புகழ் திருச்செந்தூர் சூரசம்ஹாரக் காட்சியை அழகான ஓசை நயத்தோடு நேரலை போல் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. ரிஷிகளைத் துன்புறுத்திய அரக்கனை அழிக்க ஆறுமுகத்தான் கிளம்பி வருவதைப் பார்க்கிறார்

    அருணகிரியார், "ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே, ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே, கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே, குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே, மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே, வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே, ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!" என்று மனமுருகிப் பாடுகிறார். மாறுபடு சூரரை வதைத்த முருகனின் வீரத்தை திருப்புகழில் விளக்குகிறார்.

    மாறுபடு சூரரை வதைத்து ஜெயந்திநாதனாய் திருச்சீரலைவாயில் ஆறுமுகங்களோடும் பன்னிருகரங்களோடும் முருகன் அருள்பாலிப்பதைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் அழகாகப் பாடியுள்ளார்.

    குமரகுருபரசுவாமிகள் அருளிய கந்தர்கலி வெண்பாவில் முருகக் கடவுளின் திருவிளையாடல்களை விளக்குமிடத்து சூரசம்ஹாரக் காட்சிகளை முன்வைக்கிறார். "கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியுந் தூளாக வீர வடிவேல் வடித்தோனே! சிங்கமுகனை வென்று வாகை முடித்தோய்! மாவாய்க் கிடந்த நெடுஞ் சூருடலங்கீண்ட சுடர் வேலோய்! என்று விளக்குகிறார்.

    சங்கப் புலவர் பரணர் பாடிய அகநானூற்றுப் பாடலில் முருகனின் போர்ச் சிறப்பை விளக்கி "அழகிய மணிவிளக்குகளையுடைய அலைவாய் எனும் இடத்தில் வீற்றிருந்தருள் புரியும், போர் வலிமை மிகுந்த முருகனோடும் பொருத்தி, என்னை மணந்தபோது செய்த சூளுரையே எனக்குத் துன்பம் தருவதாகும்" என்று தலைவனை மறுத்துத் தலைவி கூறுவதாய் அமைகிறது.

    மாபெரும் வெற்றி வீரனான ஜெயந்திநாதன் மீது சூளுரைத்துப் பின்னர் மீறிய தலைவன் செயலைத் தலைவி "திருமணி விளக்கின லைவாய் செருமிகு சேஎயொடு உற்ற சூளே" எனக் கடிந்துரைப்ப தாய் எழுதப்பட்ட இப்பாடல் முருகனின் சிறப்பை அழகாக விளக்குகிறது.

    இவற்றின் மூலம் திருச்செந்தூர் தலத்தின் பழமை சிறப்பை நம்மால் உணர முடியும். தமிழ் இனம் தோன்றிய போதே முருகனும் உருவாகி விட்டான் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இத்தகைய சிறப்புடைய திருச்செந்தூரில் முருகன் ஆலயம் எப்படி தோன்றியது என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். இதற்கு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விடை காணலாம்.

    Next Story
    ×