search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்!
    X

    நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்!

    • சார்லி சாப்ளினை அடையாளம் காட்டும் பாத்திரமாக ஆனது டிராம்ப் என்ற பாத்திரம்.
    • சரோஜினி நாயுடு காந்திஜியிடம் சாப்ளின் ஒரு பெரும் நகைச்சுவை நடிகர் என்பதை விளக்கினார்.

    "சிரி; உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழு; நீ மட்டும் தனியே அழுவாய்" என்பது உலகப் பழமொழி. உலகையே பல வருட காலம் தன்னுடைய நடிப்பால் சிரிக்க வைத்தவர் நடிகர் சார்லி சாப்ளின்.

    அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டு, பூங்காக்களில் தூங்கி சோகமாக இளமைப் பருவத்தைக் கழித்தவர், உலகையே சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் ஆட்டுவித்தார் என்றால் அது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் தானே! அவரைப் பற்றிப் பார்ப்போம்.

    பிறப்பும் இளமையும்:

    சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் இங்கிலாந்தில் லண்டனில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை நல்ல பாடகர், நடிகரும் கூட. தாயார் லிலி ஹார்லியோ நல்ல நடிகை, பாடகியும் கூட. குடிப்பழக்கத்தால் சாப்ளினின் தந்தை அவர் பத்தாம் வயதை எட்டும் முன்னரே மறைந்தார். தாயாருக்கோ மனோவியாதி ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சகோதரர் சிட்னியுடன் சாப்ளின் படாதபாடு பட்டார். சோகமான இளமைக் காலத்தில் பல நாட்கள் அவர் இரவில் பூங்காக்களில் படுக்க வேண்டியதாயிற்று. 1896-ம் ஆண்டு சாப்ளினும் அவரது சகோதரரும் பப்ளிக் போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அதாவது அந்தப் பள்ளி அனாதைகளுக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குமான பள்ளியாகும். 18 மாதங்கள் அங்கே கழித்தார் சாப்ளின்.

    ஐந்து வயதில் மேடையில் பாட்டு:

    சார்லினுக்கு ஐந்து வயதாகும்போது அவரது தாயார் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்தார். திடீரென்று பாதியில் அவரது தொண்டை அடைத்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார். உடனே நிகழ்ச்சி அமைப்பாளர் சாப்ளினை மேடைக்கு இழுத்துச்சென்று, "பாடு" என்றார். அவரும் தனக்குத் தெரிந்த "ஜாக் ஜோன்ஸ்" என்ற பாட்டைப் பாடினார். ரசிகர்கள் அதை ரசித்து ஆரவாரம் செய்து நாணயங்களை வீசினர். உடனே சாப்ளின், "இந்தக் காசுகளை எடுத்துக் கொண்டபின் தொடர்கிறேன்" என்றார். இன்னும் ஆரவாரம் அதிகமாகி அதிகமான நாணயங்கள் மேடையில் வந்து விழுந்தன. பின்னால் அவர் மேடை நிகழ்ச்சிகளில் தைரியமாகப் பங்கேற்க இது உதவியது.

    குடும்பம்:

    29 வயதான சார்லி சாப்ளின் 1918-ல் 17 வயது இளம்பெண்ணான நடிகை மில்ட்ரெட் ஹாரிஸை மணம் புரிந்தார். சரியான பொருத்தம் இல்லை என்று விவாகரத்து செய்த அவர் தனது 35-ம் வயதில் 16 வயதுப் பெண்ணான லிடா கிரேயை மணந்தார். அதுவும் 'பிரேக்-அப்'பில் முடிந்தது. அடுத்து 1943-ல் 54 வயதான அவர் 18 வயதான ஓனா ஓநீல் என்ற மங்கையை மணந்தார். ஆனால் இந்த மணம் அவர் இறக்கும் வரை நீடித்தது. ஓனாவுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. சாப்ளினுக்கு மொத்தக் குழந்தைகள் 11.

    டிராம்ப் என்ற பாத்திரம் உருவான விதம்:

    சார்லி சாப்ளினை அடையாளம் காட்டும் பாத்திரமாக ஆனது டிராம்ப் என்ற பாத்திரம். தான் டிராம்ப் ஆன விதத்தைப் பற்றி அவரே இப்படி சொல்லி இருக்கிறார்.

    "இது தற்செயலாக உருவான ஒரு பாத்திரம். கீஸ்டோன் ஸ்டுடியோவில் ஒரு நாள் ஓட்டலுக்கான செட் ஒன்று போடப்பட்டது. சீக்கிரமாக காமடியன் டிரெஸ் ஒன்றைப் போட்டு வருமாறு என்னை அனைவரும் வற்புறுத்தினர்."

    இப்படி வற்புறுத்தப்பட்ட சாப்ளின் மேக் -அப் அறைக்குச் சென்று தொளதொள பேண்ட் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டார். அதற்கு மாறுபாடாக இருக்கும்படி இறுக்கமான கோட் ஒன்றை அணிந்தார். முகபாவங்களை மறைத்து விடாமல் இருக்கும் படி சின்ன மீசை ஒன்றை ஒட்ட வைத்துக்கொண்டார்.

    விசித்திரமான தொப்பி ஒன்றையும் அணிந்தார். பெரிய ஷூக்கள் இரண்டையும் போட்டுக்கொண்டபோது காமடி பாத்திரமான டிராம்ப் பாத்திரம் கச்சிதமாக உருவாகி விட்டது. செட்டில் அவரைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டினர். பொதுமக்களும் இந்த பாத்திரத்தை விரும்பி வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.7-2-1914-ல் வெளியானது 'தி டிராம்ப்' என்ற படம்.

    கீஸ்டோனில் உருவான அவரது 35 நகைச்சுவை டிராம்ப் படங்கள் அவருக்கு உலகில் தனி ஒரு இடத்தைப் பெற்றுத் தந்து விட்டது.

    ஏறிக்கொண்டே போன சம்பளம்:

    முதலில் வாரம் 150 டாலருக்கு ஒப்பந்தமான அவரது சம்பளம் சில வாரங்களில் 1250 டாலராக ஆனது. சில ஆண்டுகளிலேயே பல்லாயிரம் டாலராக உயர்ந்து விட்டது.

    அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகமாக ஆனது அவர் சம்பளம். அமெரிக்க ஜனாதிபதி வருடத்திற்கு 75000 டாலர் வாங்கியபோது 1916-ல் அவர் நியூயார்க்கில் மியூட்சுவல். பிலிம் கார்பொரேஷனுடன் ஆறு லட்சத்தி எழுபதாயிரம் டாலருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார். இதனால் அவரே ஒரு ஸ்டுடியோவை உருவாக்கினார். சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

    ஐன்ஸ்டீனுடன் சார்லி சாப்ளின்:

    பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1931ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி லாஸ் ஏஞ்சல்சுக்கு விஜயம் செய்தார். சார்லி சாப்ளின் அவருக்குத் தான் நடித்த படமான 'சிடி லைட்ஸ்' என்ற படத்தை பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்க ஆசைப்பட்டு அதைப் பார்க்க வருமாறு அவரை வேண்டிக்கொண்டார்.

    இருவரும் காரில் செல்கையில் அங்கு குழுமியிருந்த மக்கள் கையை அசைத்து உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐன்ஸ்டீனை நோக்கிய சார்லி சாப்ளின், "இந்த ஜனங்கள் ஏன் தெரியுமா உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள், அவர்களில் ஒருவருக்கும் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை! அதனால் தான்! என்னை ஏன் தெரியுமா வரவேற்கிறார்கள்! என்னை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள், அதனால் தான்!"என்றார். ஐன்ஸ்டீன் சிரித்தார்!

    காந்திஜியுடன் சாப்ளின்:

    1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் வந்த காந்திஜியை சந்திக்க பெரிதும் விரும்பினார் சாப்ளின். சரோஜினி நாயுடு காந்திஜியிடம் சாப்ளின் ஒரு பெரும் நகைச்சுவை நடிகர் என்பதை விளக்கினார். டாக்டர் கத்தியால் என்பவரின் வீட்டில் தங்கி இருந்த காந்திஜி அவரைச் சந்திக்க மாலை ஆறரை மணிக்கு நேரம் ஒதுக்கினார். சாப்ளின் காந்திஜியிடம் இயந்திரப் பயன்பாட்டைப் பற்றிப் பேசினார். காந்திஜி இயந்திரங்களைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அதற்கு அடிமையாவதையே தான் எதிர்ப்பதாகவும் விளக்கினார். தொடர்ந்து ஏழு மணிக்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் சாப்ளின் கலந்து கொண்டார். காந்திஜியின் இயந்திரம் பற்றிய கருத்தைப் பின்னால் பூடகமாகத் தன் திரைப்படங்களிலும் அவர் புகுத்தினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

    தி சர்கஸ் (1928):

    சாப்ளினுக்கு முதல் அகாடமி அவார்ட் வாங்கித் தந்த படம் இது. அப்போது ஆஸ்கார் பரிசு என்ற பெயரை இந்த விருது பெறவில்லை. இந்தப் படத்தை எடுக்கும்போது அவர் பெரிதும் துன்பப்பட்டார். மனைவி லிடா கிரேயுடன் விவாகரத்து; சாப்ளினை எல்லாவிதத்திலும் மட்டம்தட்ட லிடா கிரே செய்த செய்கைகள் – இவற்றால் அவர் கஷ்டப்பட்ட போதிலும் படம் வெளியாகி பெரும் வெற்றியைத் தந்தது.

    சிடி லைட்ஸ் (1931):

    இந்தப் படத்திற்காக சாப்ளின் மிகவும் கடுமையாக உழைத்தார். 32 மாதங்கள் இதற்காக அவர் உழைக்க வேண்டியதாக இருந்தது. 190 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. இந்தக் காலத்தில் பேசும் படம் உருவாகி விட்டது. ஆனால் சாப்ளினுக்கோ அவரது பாத்திரம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் அதை உலகம் வரவேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது. துணிந்து வழக்கம் போல பேச்சே இல்லாத மவுனப் படமாகவே எடுத்தார். பத்திரிகை உலகம் போற்றியது. பொதுமக்கள் படத்தைப் பார்த்து பிரமித்தனர். லாஸ் ஏஞ்சல்சில் ஐன்ஸ்டீன் இதைப் பார்த்தார் என்றால், லண்டனில் பெர்னார்ட் ஷா சாப்ளின் பக்கத்தில் உட்கார்ந்து இதைப் பார்த்தார்.

    தி கிரேட் டிக்டேடர் (1940):

    1939-ல் இதை சாப்ளின் எழுதியபோதே ஹிட்லர் உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டவராக ஆகி விட்டார். அவரது பாத்திரம் ஹிட்லரின் அதே மீசையைக் கொண்டிருந்தது. இந்தப் படத்தில் சாப்ளின் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு பாத்திரத்தில் யூத நாவிதராகவும் இன்னொரு பாத்திரத்தில் ஒரு சர்வாதிகாரியாகவும் நடித்தார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கிய படமாக ஆனது.

    அமெரிக்க வாசமும் தங்க அனுமதி மறுப்பும்:

    இரு முறை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட அவருக்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகவே அங்கேயே தங்க நிச்சயித்தார். 1914 முதல் 38 ஆண்டுகள் அங்கேயே வசித்தார்.

    என்றாலும் இடதுசாரி சிந்தனையாளரான அவருக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டதோடு அங்கு தங்கவும் தடை விதிக்கப்பட்டது. 1952 செப்டம்பரில் தனது அமெரிக்க வாசத்தை ஒரேயடியாக முடித்துக்கொண்ட சாப்ளின் சுவிட்சர்லாந்து வந்து

    அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

    அவருக்குப் பிடித்த இடம் ஸ்காட்லாந்தில் உள்ள நார்ன் என்ற இடம். அங்கேயே அவர் அடிக்கடி சென்று தங்குவார்.

    நிதி உதவி:

    முதல் உலகப் போருக்குப் பின்னர் ஒட்டோமான் அரசில் ஆர்மீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டனர். உடனே சார்லி சாப்ளின் 150 லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமமான அளவில் பெரும் நிதியைத் திரட்டி ஆர்மீனியக் குழந்தைகள் வாழ வழி வகை செய்தார். அவரே நேரில் சென்று குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் அளித்தார். இதே காலத்தில் தான் அவரது 'தி கிட்' என்ற பிரபலமான படம் வெளியிடப்பட்டது.

    பிரபலமான டைம் பத்திரிகையில் வெளியான முதல் நடிகர் படம் அவருடையதே. 1925, ஜூலை 6ம்தேதியிட்ட இதழில் அவரது படம் வெளியாகவே உலகமே வியந்தது. இது அவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

    1972-ல் அவர் விசேஷ அகாடமி விருதைப் பெற்றார். 20 வருடங்கள் அமெரிக்காவிற்கே செல்லாமல் இருந்த சாப்ளின் இந்த விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.

    சாப்ளின் மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1981 அக்டோபர் நான்காம் தேதி உக்ரைன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மிலா கரக்கினா ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்தபோது அதற்கு 3623 சாப்ளின் என்று சாப்ளினை கவுரவப்படுத்தும் விதமாக பெயர் சூட்டினார். அவர் அவரது ரசிகை.

    ச.நாகராஜன்

    மறைவு: 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் மறைந்தார். 1978, மார்ச் மாதத்தில் அவரது சடலத்தை ஒரு கும்பல் திருடிக் கொண்டு போனது. ஆனால் அவர்கள் அடுத்த பதினோரு வாரங்களில் பிடிக்கப்பட்டனர். சடலம் மீட்கப்பட்டது.

    புத்தகங்கள்: அவர் தனது வாழ்நாளில் 'மை ட்ரிப் அப்ராட்', 'எ காமடியன் சீஸ் தி வோர்ல்ட்', 'மை ஆடோபயாகிராபி', 'மை லைப் இன் பிக்சர்ஸ்" ஆகிய நான்கு புத்தகங்களை எழுதினார். எல்லா இசைக்கருவிகளிலும் கை தேர்ந்தவரான அவர் பல பாடல்களையும் புனைந்ததுண்டு. தனது படங்களுக்குத் தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராகவும் அவர் திகழ்ந்தார்.

    அனுபவ மொழிகள்:

    நீங்கள் பயப்படவில்லை என்றால் வாழ்க்கை என்பது அருமையான ஒன்று தான். வேண்டுவதெல்லாம் கொஞ்சம் தைரியம், கற்பனை அப்புறம் கொஞ்சம் பணம்!

    சிரிப்பு என்பது வலியை நிறுத்தி ஆறுதலைத் தரும் ஒரு டானிக். கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு நாளும் உங்களால் வானவில்லைப் பார்க்க முடியாது!

    Next Story
    ×