search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மைசூரு அரண்மனையில்... மீனா மலரும் நினைவுகள்
    X

    மைசூரு அரண்மனையில்... மீனா மலரும் நினைவுகள்

    • பானுப்பிரியாவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
    • ‘மீனா, நீ நல்லா பாடுவாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாடு’ என்றார்.

    கன்னட ஸ்டார் விஷ்ணு வர்தனோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் அதிக அளவில் கைவசம் இருந்ததால் அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போதெல்லாம் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக வெளிவந்த 'நாட்டாமை' படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணுவதற்கு தயாராகி கொண்டிருந்தார்கள். ஹீரோ விஷ்ணுவர்தன் என்றார்கள். தயாரிப்பாளர் விஜயகுமார். எப்படியாவது இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டேன்.

    கன்னடத்தில் 'சிம்ஹத்ரிய சிம்ஹா' என்ற பெயரில் தயாரித்தார்கள். இந்த படத்தில் விஷ்ணுவர்தனுக்கு 3 வேடங்கள். சிங்கம் எப்படி தனது ராஜ்ஜியத்தை கட்டி ஆள்கிறதோ அதேபோல் 48 கிராமங்களின் குழுக்களுக்கு தலைவராக இவரும் நரசிம்ஹகடா (விஷ்ணு வர்தன்) அந்த கிராமங்களை கட்டி ஆள்வார். கதை முழுவதும் அவரை சுற்றியே சுழலும்.

    பானுப்பிரியாவும் ஒரு ஜோடி. பானுப்பிரியாவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். காலையில் ஒருநாளும் சாப்பிட மாட்டார். அதற்கு பதிலாக கொஞ்சம் உலர் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு நடிக்க கிளம்பி விடுவார்.

    இவருக்கு பசிக்காதா? இரவில் என்னதான் சாப்பிட்டாலும் காலையில் பசிக்கும். சாப்பிடாமல் எந்த வேலையும் ஓடாது.

    பானுப்பிரியாவால் மட்டும் எப்படி பசியை தாங்கி கொள்ள முடிகிறது என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு அவரிடமே நேரடியாக பதில் கேட்டேன்.

    Intermittent fasting diet என்பது இப்போது பிரபலமாகி விட்டது. ஆனால் இந்த முறையை பானுப்பிரியா அப்போதே கடை பிடித்தார்.

    அதாவது முந்தைய நாள் இரவு 8 மணிக்கு சாப்பிட்டால் மறுநாள் காலை 8 மணிக்கு காலை உணவை சாப்பிட மாட்டார்கள். மதியம் தான் சாப்பிடுவார்கள். இதை அப்போதே அவர் கடை பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. மைசூரு அரண்மனையில்தான் படப்பிடிப்பு நடந்தது. எனக்கும், பானுபிரியாவுக்கும் அந்த அரண்மனையிலேயே தங்குவதற்கு அறையும் கொடுத்து இருந்தார்கள். இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததால் அவரது உணவு கட்டுப்பாட்டை பார்த்து நானே ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    மாலையில் நேரம் கிடைக்கும்போது அந்த அரண்மனையில் இருக்கும் கடைகளுக்கு சென்று அணிகலன்களை பார்ப்பதும், வாங்குவதும் தான் எங்கள் வேலை.

    தயாரிப்பாளர் விஜயகுமார் ரொம்ப பெரிய மனதுக்காரர். செலவை பற்றி யோசிக்க மாட்டார். அவரை பொறுத்தவரை காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் கொண்டவர். காஸ்ட்யூமை பொறுத்தவரை சில பாடல் காட்சிகள் மற்றும் காட்சிகளுக்கு நான்கைந்து சேலை வரை தேவைப்படும். எனவே கொஞ்சம் குறைந்த விலை புடவைகளையே 'செலக்ட்' பண்ணுவேன். ஆனால் அவர் விடமாட்டார். விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. அதை எடுத்துக்கோம்மா... காட்சிக்கு நல்லா இருக்கும்ல என்பார்.

    நல்லாத்தான் சார் இருக்கும். ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருக்கு சார். வேண்டாம் என்பேன்.

    அவர் விடமாட்டார். விலையை பற்றி யோசிக்காதே. நமக்கு காட்சி நல்லாயிருக்கணும் எடுத்துக்கோ என்பார்.

    தயாரிப்பாளர்தான் சொல்லிவிட்டாரே என்று நாங்களும் விலையை பார்க்காமல் காஸ்ட்யூமை செலக்ட் பண்ணுவோம். அவருடைய நல்ல மனதுக்கு காட்சிகளும் நன்றாக அமைய வேண்டும் என்று உயிரை கொடுத்து நடித்தோம்.

    கன்னட நாட்டாமை வளர்ந்து கொண்டிருந்தார். இரவில் ஓட்டலில் தங்கியிருந்தபோது ஒருநாள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது விஷ்ணுவர்தன் 'மீனா, நீ நல்லா பாடுவாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாடு' என்றார்.

    அய்யய்யோ வேண்டாம் சார். ஆடுவேன், நடிப்பேன், அதுதான் எனக்கு தெரிந்தது. பாட்டெல்லாம் வராது சார். பிளீஸ்... வேண்டாம் என்றேன்.

    ஆனால் அவரும் மற்றவர்களும் விடுவதாக இல்லை. பாடு மீனா... பாடு மீனா... என்று பிடிவாதமாக இருந்தார்கள்.

    வேறு வழியில்லை. எனக்கு தெரிந்த ராகத்தில் 'யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே... கண்ணனோடுதான் ஆட...' பார்வை பூத்திட... பாதை பார்த்திட பாவை ராதையோ வாட...' என்ற பாடலை பாடினேன். கைதட்டி உசுப்பேற்றினார்கள். அத்தோடு விடவில்லை. ஒரு இந்தி அல்லது ஆங்கில பாடலும் பாட வேண்டும் என்று அடம் பிடித்தார்கள்.

    அய்யய்யோ இது என்னடா வம்பா போச்சு என்றபடி 'டைட்டானிக்' படத்தில் வரும். 'மை ஹார்ட் வில் கோ ஆன் எவரி நைட் இன் மை டிரீமஸ். ஐ.சி.யூ., ஐ.பீல்.யூ...' என்ற பாடலை பாடினேன். நண்பர்கள் ஒரே இடத்தில் இப்படி கூடி ஒருவருக்கொருவர் கலாய்த்து ஆடி, பாடி பொழுதை போக்கினால். வேலை செய்த அலுப்பெல்லாம் மறைந்து மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்து விடுமல்லவா? அன்று அப்படித்தான் மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்தது. அதனால்தான் அந்த நினைவுகள் இன்றுவரை மறக்கவில்லை.

    மறக்காத இன்னும் பல நினைவுகளுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    16 வயதினிலே இசை ஆல்பத்தில்...

    பாரதிராஜா சாரின் மகன் மனோஜ் என்னை அணுகி 16 வயதினிலே என்ற பெயரில் ஒரு இசை ஆல்பம் பண்ண போகிறேன். அதில் நீங்கள் பாட வேண்டும் என்றார். மனோஜ், இது சரியா வராது. என் குரல் 'கீச்' குரல் என்று தயங்கினேன். இல்லை, உங்கள் குரல் நல்லா இருக்கு. 'முயற்சி செய்யுங்கள். நல்லா வரவில்லை என்றால் விட்டு விடலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

    அவருடைய வற்புறுத்தலால் பாடினேன். இசை ஆல்பமும் வெற்றிகரமாக வந்தது. மீனா... அசத்திபுட்டே... என்று எனக்கு நானே காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.

    Next Story
    ×