search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- சிறை வழங்கும் சிந்தனைகள்!
    X

    ஆன்மிக அமுதம்- சிறை வழங்கும் சிந்தனைகள்!

    • பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார் பிரம்மதேவர்.
    • கம்ப ராமாயணம் சீதாதேவியை அவள் இருந்த குடிலோடு அப்படியே பெயர்த்து ராவணன் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறது.

    குற்றவாளிகள் தண்டனை பெற்றால் இருக்குமிடம் சிறை. ஆனால் அந்தச் சிறை புராணங்களிலும் வரலாற்றிலும் பல ஆன்மிக அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளது.

    பிரம்மன் ஒருமுறை சிவனை தரிசிக்கக் கயிலாயம் வந்தார். அங்கு சிறுவன் முருகன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவன்தானே என்று கவனியாததுபோல் அலட்சியமாகச் சென்றார் பிரம்மதேவர்.

    வழிமறித்தான் முருகன். `நீர் செய்யும் தொழில் என்ன?' என்று வினவினான். `படைப்புத் தொழில்!' என கம்பீரமாக விடையளித்தார் பிரம்மதேவர்.

    `படைப்புத் தொழில் செய்வதாகச் சொல்கிறீரே? உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?' எனக் கேட்டான் முருகன்.

    ஒளவைப் பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டவன் தானே முருகன்? கந்தக் கடவுளுக்குக் கேள்வி கேட்பதில் எப்போதும் ஒரு தனி சுவாரஸ்யம்.

    பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார் பிரம்மதேவர். `பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத உமக்கு படைப்புத் தொழில் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?` என்று கேட்ட முருகன், அவர் தலையில் ஒரு குட்டுக் குட்டி அவரைச் சிறையிலிட்டான்.

    பிரம்ம தேவர் சிறையில் இருந்ததால் படைப்புத் தொழில் தடைபட்டது. உலகில் உயிர்களே உற்பத்தி ஆகவில்லை. தேவர்கள் கலக்கமடைந்து சிவனிடம் முறையிட்டனர்.

    சிவன் இனியும் சிவனே என்றிருத்தல் சரியல்ல என, முருகனைத் தேடி ஓடோடி வந்தார். பிரம்மனை விடுவிக்கச் சொன்ன அவர், `பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியவில்லை என்கிறாயே, உனக்கு அதன் பொருள் தெரியுமா?` என வினவினார்.

    `இப்படிக் கேட்டால் எப்படி? நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் நான் குருவாக அதன் பொருளை உபதேசம் செய்வேன்!` என்றான் முருகன்.

    அப்படியே சிவன் சீடனாக அமர்ந்து கேட்க, அவர் திருச்செவியில் பிரணவ மந்திரத்தின் பொருளை முருகன் உபதேசம் செய்தான் என்றும், பிறகு பிரம்மதேவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்றும் சொல்கிறது கந்த புராணம்.

    முருகன் தகப்பன் சாமி என்று பெயர் பெறக் காரணமாக இருந்த நிகழ்வு பிரம்மதேவர் சிறையில் அடைக்கப் பட்ட நிகழ்வுதான்.

    ராமாயணத்தில் ராவணன் சீதாதேவியைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். சீதை சிறைப்பட்டிருந்த பகுதியே அந்த இதிகாசத்தில் மிக முக்கியமான பகுதி. அதனால்தான் ராமாயணம் `சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் நூல்` என்று சொல்லப்படுகிறது.

    ராவணன் சீதையைச் சிறையெடுத்ததைப் பற்றிச் சொல்லும்போது அவன் தேவியை எப்படித் தூக்கிச் சென்றான் என்பதை ஒவ்வொரு ராமாயணமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது. வால்மீகி, ராவணன் தன் கரங்களால் சீதையைத் தொட்டுத் தூக்கிச் சென்றதாகச் சொல்கிறார்.

    இது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதம் என்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணத்துடன் பெண்ணைத் தொட்டால் தலைவெடிக்கும் என்று ராவணனுக்குச் சாபம் இருக்கிறது. எனவே ராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கியிருக்க வாய்ப்பில்லை என முடிவு செய்கிறார் கம்பர்.

    கம்ப ராமாயணம் சீதாதேவியை அவள் இருந்த குடிலோடு அப்படியே பெயர்த்து ராவணன் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறது. சீதாப்பிராட்டி அசோக மரத்தடியில், தன்னைச் சந்திக்க வந்த அனுமனிடம் அருகேயிருக்கும் குடிலைக் காட்டி அது லட்சுமணன் கட்டிய குடில் என்றும் அதோடு அப்படியே ராவணன் தன்னைத் தூக்கி வந்ததாகவும் கூறுகிறாள்.

    துளசிதாசர் வேறு வகையாகக் கதையை அமைக்கிறார். ராவணன் சீதையைத் தூக்க வருவதற்கு முன்பாக சீதை தன் நிழலால் இன்னொரு நிழல் சீதையைப் படைத்துவிட்டு, தான் வானுலகம் சென்றுவிடுகிறாள். பிறகு அக்கினிப் பிரவேசத்தின்போது நிழல் சீதை அக்கினியில் மறைய நிஜ சீதை வெளிப்படுகிறாள் என எழுதுகிறார் துளசிதாசர்.

    அசோக மரத்தடியில் சிறைப்பட்டு சீதை வாழ்ந்த வாழ்வு துயர காவியமாக எல்லா ராமாயணங்களிலும் விரிவாகப் பேசப்படுகிறது. பிரிவுத் துயர் என்பதை விப்ரலம்பம் என்கின்றன வடமொழி நூல்கள். அது ஒரு தனி ரசம் எனப் பேசுகின்றன வடமொழிக் காவியங்கள்.

    சீதை சிறையிருந்தபோது அடைந்த பிரிவுத் துயர் சார்ந்த வர்ணனைகளே ராமாயணத்தின் ருசியை அதிகமாக்குகின்றன.

    ராமபக்தரான ராமதாசரின் இயற்பெயர் கோபண்ணா. அரசாங்கத்திற்காக வரிவசூல் செய்யும் வேலையில் இருந்தவர் அவர். வரிப்பணத்தில் ராமபிரானுக்குக் கோயில் கட்டினார்.

    ஆறு லட்சம் வராகன் செலவில் கட்டப்பட்ட ஆலயத்தைப் பார்த்து மக்கள் மகிழ்ந்தனர். அவர்களே அவரை ராமதாசர் என அழைக்கத் தொடங்கினர்.

    மக்கள் பாராட்டினாலும் வரிப்பணத்தில் கோவில் கட்டினால் மன்னன் தானீஷா ஒப்புக் கொள்வானா? அவரைச் சிறையில் அடைத்தான் மன்னன். பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் வாடினார் ராமதாசர். பெரும் கொடுமைகளை அனுபவித்தார்.

    அப்போது அவர் பாடிய ராமபக்திப் பாடல்கள் உருக்கமானவை. `உன்னைக் கும்பிட்ட கைகளைத் தடிகொண்டு அடிக்கிறார்களே ராமா!` என்றும், `உனக்குக் கிரீடம் செய்து சூட்டிய என் கைக்கு நீ விலங்கு பூட்டலாமா?` என்றும் கல்லும் கசிந்துருகும் வகையில் கவிதைகளில் கேட்டார் அவர்.

    `உனக்காக நான் செலவழித்த பணத்தை நீயே மன்னருக்குக் கொடுத்துவிடலாகாதா?` எனவும் வேண்டினார்.

    ஒருநாள் நள்ளிரவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ராம்சிங் லட்சுமண் சிங் என்ற பெயர்களில் ராமதாசரின் சேவகர்கள்போல் வந்த ராம லட்சுமணர்கள், ராமதாசர் செலவு செய்த ஆறுலட்சம் வராகனை மன்னரிடம் திருப்பி அளித்தார்கள்.

    அப்படி அளித்ததற்கு ரசீது பெற்று, அந்த ரசீதைச் சிறையிலிருந்த ராமதாசரின் அருகில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்கள்.

    வந்தது ராம லட்சுமணர்களே என அறிந்து பாதுஷா மனம் திருந்தியதையும் ராமதாசர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையும் அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ராமதாசரின் புகழ் மேலோங்கியதையும் அவரது வரலாறு சொல்கிறது.

    தன் சகோதரி தேவகிக்குப் பிறக்கும் குழந்தைதான் தன்னைக் கொல்லும் என்பதை அசரீரி மூலம் அறிந்த அரக்கன் கம்சன், தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குப் பிறந்த குழந்தைகளை ஒவ்வொன்றாகச் சுவரில் அடித்துக் கொன்றான்.

    தேவகி துடிதுடித்தாள். திருமாலைச் சரணடைந்தாள். திருமால் தேவகியின் மகனாக, கண்ணக் குழந்தையாக அவதரித்தார்.

    கொட்டும் மழையில் குழந்தைக் கண்ணனைக் கூடையில் தாங்கித் தலைமேல் ஏந்தியவாறு நந்தகோபர் இல்லத்தில் அவனை விட்டுவிட எண்ணி நடந்தார் வசுதேவர்.

    என்ன ஆச்சரியம்! சிறைக் காவலர்கள் எல்லாம் அப்போது தாமாகவே உறக்கத்தில் ஆழ்ந்தனர். சிறைக் கதவுகளின் பூட்டுக்கள் எல்லாம் தாமாகவே திறந்துகொண்டன.

    கடவுள் நினைத்தால் சம்சாரச் சிறையிலிருந்தே ஒருவரை விடுவிக்க முடியும் என்கிறபோது, கடவுளுக்காக ஒரு சாதாரணச் சிறையின் பூட்டுக்கள் திறக்காதா என்ன?

    இதிகாசக் கடவுளர் இருவரில் ராமன் பிறந்தது அரண்மனையில். கண்ணன் பிறந்தது சிறையில். ராமன் ஷத்திரிய குலத்தில் அவதரித்தான். கண்ணன் இடையர் குலத்தில் தோன்றினான்.

    ராமன் பிறந்தது நவமியில். கண்ணன் பிறந்தது அஷ்டமியில். ராமன் ஏகபத்தினி விரதன். கண்ணன் பற்பல பெண்களை மணந்தவன்.

    ராமனும் கண்ணனும் பல வகையில் வேறுபட்டாலும் அவர்கள் இருவருமே திருமாலின் அவதாரங்கள் என்ற வகையில் ஒன்றுபடுகிறார்கள்.

    அரவிந்தருக்குக் கண்ணன் காட்சி கொடுத்ததைப் பற்றி அரவிந்தரின் புனித வரலாறு கூறுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்தவர் அண்மைக் காலக் கண்ணன் அடியவரான தியாகி அரவிந்தர்.

    அவர் தாம் சிறையில் கிருஷ்ண தரிசனம் பெற்ற உண்மையை உத்தர்பாரா என்ற இடத்தில் மேடையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார். அந்தச் செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது.

    செய்தித்தாள்கள் அந்தச் செய்தியைப் பிரசுரித்துள்ளன. பாரதியார் அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஒப்புக் கொண்டுள்ளார்.

    கண்ணனிடம் கீதையை நேரடியாகக் கேட்டவர் அர்ச்சுனன், அரவிந்தர் என இருவர். அர்ச்சுனன் கேட்டது மகாபாரதப் போர் நடந்தபோது. அரவிந்தர் கேட்டது சுதந்திரப் போர் நடந்தபோது.

    அர்ச்சுனன் கீதை கேட்டது தேர்த்தட்டில். அரவிந்தர் கீதை கேட்டது சிறைக் கூடத்தில்.

    அரவிந்தருக்குக் கண்ணன் சிறையில் காட்சி கொடுத்தது இயல்புதானே? கண்ணன் பிறந்ததே சிறையில் தானே?

    ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரத் தியாகிகள் பலர் சிறையிலிருந்தபோது, நம் ஆன்மிகத்திற்குப் பெரும் தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

    சிறையில்தான் வினோபாஜி பகவத் கீதைக்கு உரை விளக்கம் எழுதினார். சக கைதிகளுக்கு கீதையைக் கற்பித்த அவர், பின்னர் தான் கற்பித்தவற்றையே நூலாக்கினார்.

    வ.உ. சிதம்பரம் பிள்ளை சிறைவாசத்தின்போது, ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவஞானியின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். உளவியல் சார்ந்த உயர்ந்த ஆன்மிக நூல்கள் அவை.

    அவ்விதம் அவர் மொழிபெயர்த்த `அகமே புறம், மனம்போல வாழ்வு, மெய்யறிவு` உள்ளிட்ட நூல்கள் பக்க அளவில் குறைந்ததேயாயினும் வாழ்க்கையின் அடிப்படை விதிகளைக் கற்பிக்கும் உன்னதமான பணியைச் செய்கின்றன. தமிழின் பொக்கிஷங்கள் அவை.

    மகாத்மா காந்தி, ராஜாஜி, திலகர் போன்றோரும் தங்களின் சிறைவாசத்தின்போது உயர்ந்த ஆன்மிக நூல்களைப் படைத்திருக்கிறார்கள்.

    குற்றவாளிகளை அடைக்கும் இடம்தான் சிறை. ஆனால் நம் தெய்வங்களும் மகான்களும் சிறையில் வாழ்ந்து சிறைக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.

    அப்படியானால் தெய்வங்கள் தோன்றிய இடத்தை என்னவென்று அழைப்பது? அது சிறையா ஆலயமா? மகான்கள் வாழ்ந்த இடம் என்ன பெயர் பெறும்? சிறையா தவச்சாலையா?

    புராண காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும் சிறையும் ஆன்மிகத்தை வளர்த்தது என்ற வகையில் நாம் சிறைக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×