search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்... முழுமையான சரணாகதி!
    X

    ஆன்மிக அமுதம்... முழுமையான சரணாகதி!

    • புகழால் அணுவளவும் பாதிக்கப்படாத சித்த புருஷரான ரமணர், தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் மவுனமாய்த் தன் அருளை வழங்கிக் கொண்டிருந்தார்.
    • `பக்தி நெறியில் இரண்டு நியாயம் உண்டு தெரியுமோ? ஒன்று மர்க்கட நியாயம். இன்னொன்று மார்ஜால நியாயம்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்துவந்த பகவான் ரமணரின் பெருமை உலகெங்கும் பேசப்படத் தொடங்கியிருந்த காலம் அது.

    யோகி ராம்சுரத்குமார் தமது மூன்று குருமார்களில் ஸ்ரீரமணரும் ஒருவர் எனத் தெரிவித்திருந்தார். ஸ்ரீராமதாசரிடம் பக்தியையும் ஸ்ரீஅரவிந்தரிடம் ஞானத்தையும் கற்றுக்கொண்ட தான், ஸ்ரீரமணரிடம் தவத்தைக் கற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ஸ்ரீரமணரின் புகழ் விறுவிறுவென்று பரவியதால், வெளிநாடுகளில் இருந்தும் கூட, ஏராளமானோர் ரமணரைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள்.

    புகழால் அணுவளவும் பாதிக்கப்படாத சித்த புருஷரான ரமணர், தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் மவுனமாய்த் தன் அருளை வழங்கிக் கொண்டிருந்தார். ஆன்மிக அன்பர்கள் ஸ்ரீரமணர் அருளில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.

    ஸ்ரீரமணரின் தீவிர அடியவர்களில் ஒருவர் சுந்தரேச ஐயர். ரமண மகரிஷியின் பெருமை முழுவதையும் அறிந்தவர். ஸ்ரீரமணரையே முழுமையாய்ச் சரணடைந்து வாழ்ந்தவர்.

    சுந்தரேச ஐயரின் உறவினர் ஒருவருக்கு திடீரெனக் கால் நடக்க இயலாமல் போய்விட்டது. கம்பைக் கையில் ஊன்றிக் கொண்டு நடக்கத் தொடங்கினார் அவர். அதுவும் சிரமமாகத் தான் இருந்தது.

    மருத்துவர்கள் இனிக் கம்போடுதான் நடக்க வேண்டும் எனத் தீர்மானமாய்ச் சொல்லி விட்டார்கள். அந்த உறவினரின் மனம் அளவற்ற வருத்தத்தில் ஆழ்ந்தது. இனி வாழ்நாள் முழுவதும் கம்போடு தான் நடக்க வேண்டும் என்ற எண்ணமே அவரைக் கதிகலங்கச் செய்தது.

    ஒருநாள் கம்பை ஊன்றியவாறு சுந்தரேச ஐயரைத் தேடிவந்தார் அவர். தன் நிலைமையைச் சொல்லி மனம் வருந்தினார். `இனிக் கம்பை எடுத்துவிட்டு இயல்பாக என்னால் நடக்கவே முடியாதா?` என அழுது புலம்பினார். அவரது கண்ணீர் சுந்தரேச ஐயரின் உள்ளத்தைக் கரைத்தது.

    `ஏன் முடியாது? மண்ணில் நடமாடும் கடவுள் ஸ்ரீரமணர் இருக்கிறாரே? வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அவரைத் தேடி வருகிறார்கள் அடியவர்கள். உன்னால் அவரை நாடிச் செல்ல முடியாதா?

    ஸ்ரீரமணரைச் சரணடைந்து உன் துயரத்தைச் சொல். உன் கால் தானாய்ச் சரியாகும்! மருத்துவர்களுக்கு எல்லாம் பெரிய மருத்துவர் ஸ்ரீரமணர்!` என்றார் சுந்தரேச ஐயர்.

    உடல் ஒரு பற்றுக்கோலை ஊன்றிக்கொண்டு நடப்பது மாதிரி, அந்த உறவினரின் மனம் சுந்தரேச ஐயரின் அறிவுரையால் ரமணரை ஒரு பற்றுக்கோலாய்க் கொள்ளத் தலைப்பட்டது. அந்த அறிவுரையையே பின்பற்றி நடக்கலானார் அந்த உறவினர்.

    திருவண்ணாமலை சென்று ரமணரை தரிசித்தார். அங்கேயே தங்கினார். நாள்தோறும் ஸ்ரீரமணர் முன்னிலையில் அமர்ந்து தன் கால் சரியாக வேண்டும் எனப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.

    ரமணர் தன் முகத்தில் ஒரு குறுமுறுவலோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, எதுவும் பேசவில்லை. ரமணர் எப்போதும் அதிகம் பேசுவதில்லையே? மவுனம் தானே பெரும்பாலும் ரமணர் மொழி?

    அவர் தன் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டாரா இல்லையா? வந்தவருக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால் ரமணாஸ்ரமத்தில் ரமணர் முன்னிலையில் நடைபெறும் விந்தையான பல நிகழ்வுகளை அவர் தொடர்ந்து கவனிக்கலானார்.

    திருவண்ணாமலையில் இருந்த குரங்குகள் ஸ்ரீரமணரிடம் பாசத்தோடு பழகி வந்தன. விலங்கினத்தைச் சேர்ந்த குரங்குகள் கூட மகான் ரமணரிடம் பக்தி செலுத்துவது அவரை வியக்க வைத்தது.

    குட்டிக் குரங்குகள் ஸ்ரீரமணர் மடியிலும் தோளிலும் ஏறி அமர்ந்துகொள்வதுண்டு. சில குட்டிக் குரங்குகள் ரமணரின் கழுத்தை ஒரு தாயைக் குழந்தை கட்டிக் கொள்வதைப் போல் கட்டிக் கொள்வதுண்டு. அவரிடம் அவை உரிமையோடு விளையாடுவதும் உண்டு.

    ரமணர் ஒருபோதும் குரங்குகளை விரட்டுவதில்லை. அவற்றின் விளையாட்டை மனமார ரசிப்பார் அவர். குரங்குகளின் முதுகில் பிரியத்தோடு தடவிக் கொடுப்பார்.

    ஏதேனும் ஒரு குரங்கு பசியோடு தன்னைத் தேடிவந்தால் ரமணர் அதற்குத் தன் கையாலேயே உணவளிப்பார். அப்போது ரமணரைப் பார்த்தால் குரங்குகளின் அன்பான தாய்போல் தோன்றும். ஒருநாள் ஒரு குரங்கு புதிதாய்ப் பிறந்த தன் குட்டியை ரமணரிடம் கொண்டுவந்து காண்பித்தது. பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக தன் குட்டியோடு ரமணர் முன் எதையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது.

    ரமணர் அந்தத் தாய்க் குரங்கையும் குட்டிக் குரங்கையும் அருள்பொங்கப் பார்த்தார். பின் அவற்றின் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தார். அவ்வளவுதான். அவரது ஆசீர்வாதம் கிடைத்ததும் மகிழ்ச்சியோடு வேறு எதையும் எதிர்பார்க்காமல் அவை புறப்பட்டு விட்டன.

    குட்டிக் குரங்கு தன் தாயின் மடியை இறுகப் பற்றிக் கொண்டது. பின் தாய்க் குரங்கு குட்டிக் குரங்கோடு மரம் விட்டு மரம் தாவி எங்கோ சென்று மறைந்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அதுமட்டுமல்ல, ஒருநாள் ரமணர் பசியோடு ஒரு நாவல் மரத்தின் கீழ் நின்றபோது மரத்தில் இருந்த குரங்குகள் அவர் பசியைத் தீர்க்கும் எண்ணத்தில் அவருக்காக நாவல் பழம் பறித்துப் போட்ட காட்சியையும் அவர் கண்டார்.

    குரங்குகள் கூட ரமணரின் அருளைப் பெறுகின்றன. ரமண பகவானுக்கு நாவல் பழத்தை நிவேதனமாய்ப் பறித்துப் போடுகின்றன. ஆனால் ரமணர் அருளைத் தம்மால் பெற முடியவில்லையே? அவர் மனம் வைத்தால் தன் கையில் உள்ள கம்பைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தான் இயல்பாக நடக்குமாறு அவரால் செய்ய முடியாதா? நினைத்து நினைத்து மறுகியது அந்த அன்பரின் உள்ளம்.

    ஒருநாள் சுந்தரேச ஐயரும் கால் ஊனமான உறவினரும் ரமணர் முன்னிலையில் அமர்ந்திருந்த போது, ரமணர் சிரித்தவாறே பேசத் தொடங்கினார்:

    `பக்தி நெறியில் இரண்டு நியாயம் உண்டு தெரியுமோ? ஒன்று மர்க்கட நியாயம். இன்னொன்று மார்ஜால நியாயம். மர்க்கடம் என்றால் குரங்கு. மார்ஜாலம் என்றால் பூனை.

    குட்டிக் குரங்கு என்ன செய்கிறது? தாய்க் குரங்கை, தான் இறுகப் பற்றிக் கொள்கிறது. அது கையை விட்டுவிட்டால் அவ்வளவு தான். கீழே விழ வேண்டியது தான். தன் வலிமையை நம்பி, தன் பிடிப்பின் மூலம் தாயைச் சார்ந்திருக்கிறது அது.

    ஆனால் குட்டிப் பூனை அப்படிச் செய்வதில்லை. தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாகத் தன் தாயிடமே கொடுத்து விடுகிறது அது. தாய்ப் பூனைதான் குட்டிப் பூனையை வாயால் கவ்விக் கொள்கிறது.

    இப்போது குட்டிப் பூனையைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தாய்ப் பூனைக்குத்தான். குட்டிப் பூனை தாயை முழுமையாகச் சார்ந்திருப்பதால் அதற்கு எந்தக் கவலையும் இல்லை.

    மர்க்கட நியாயப்படி, குட்டிக் குரங்கைப் போல் பக்தி செய்யாமல், மார்ஜால நியாயப்படி குட்டிப் பூனையைப் போல் பக்தி செய்வதுதான் நல்லது. பகவான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். நம் வேலை பகவானை முழுமையாக நம்பிச் சரணடைவதுதான். இல்லையா?`

    ஸ்ரீரமணர் பேசப் பேச அந்த அன்பர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீரமணர் என்ன சொல்கிறார்? தனக்குத்தான் மறைமுகமாக ஏதேனும் அறிவுறுத்துகிறாரா? தான் முழுமையாக பகவானைச் சரணடைய வேண்டும் என்கிறாரா? தன் சரணாகதி இன்னும் முழுமை பெறவில்லை என்கிறாரா?

    ஊன்றுகோலுடன் நடந்து கொண்டிருந்த அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது.

    ஒரு பெருமூச்சோடு தன் ஊனம் குணமாக வேண்டும் எனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யலானார் அவர். திருவண்ணாமலையை ஊன்றுகோலுடன் வலம் வருவது, ஸ்ரீரமணர் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்வது இப்படியே காலம் கடந்து கொண்டிருந்தது. ஆனால் எந்தப் பலனையும் காணோம்.

    ஒருநாள் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார் அவர். தன் நிலை இனி இப்படித்தான் என மனம் கசந்து ஊன்றுகோலுடன் நடக்கலானார்.

    சற்றுதூரம் சென்றவுடன் அவர் முன் தோன்றினார் அவருக்கு முன்பின் பரிச்சயமில்லாத ஒரு முதியவர். யார் அந்த முதியவர்? அவர் முகத்தில் லேசாக ரமணரின் ஜாடை தென்படுகிறதோ?

    திருப்பூர் கிருஷ்ணன்

    அந்த முதியவர் அவர் அருகே வந்தார். `என்ன இன்னும் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்கிறாய்? பகவான் மேல் நம்பிக்கை வராதா உனக்கு? இனி உனக்குக் கம்பு வேண்டாம்!` என அதட்டினார். அவர் கையில் இருந்த கம்பைப் பிடுங்கி இரண்டாய் முறித்துப் போட்டு விட்டு விறுவிறுவென்று நடந்து மறைந்து போனார். அன்பரின் உள்ளம் திகைத்தது. யார் இந்த முதியவர்? ஏன் இப்படிச் செய்தார்? இனி நான் கம்பில்லாமல் எப்படி நடப்பேன்?

    இப்படி நினைத்தவாறே மெல்லக் காலை எடுத்து வைத்தார் அன்பர். என்ன ஆச்சரியம்! அதன்பின் அவரால் கம்பில்லாமலேயே நடக்க முடிந்தது. கால்கள் இரண்டும் மிகுந்த வலிமை பெற்றிருந்தன.

    நம்பிக்கையில்லாமல், திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்ல நினைத்த தன் நினைப்பை எண்ணி அவர் மனத்தில் அளவற்ற வெட்கம் தோன்றியது. வலிமை பெற்ற கால்களோடு ஓடிவந்து ஸ்ரீரமணரைக் கண்ணீர் வழிய நமஸ்கரித்தார் அந்த அன்பர்.

    அப்போதும் ரமணர் ஒன்றும் பேசவில்லை. தன் அருகே அமர்ந்திருந்த ஒரு பூனையை உற்றுப் பார்த்தார். பின் அந்த அன்பரைப் பார்த்தார். அவ்வளவுதான்.

    ஆன்மிக அன்பர்களுக்குத் தேவை குரங்கு போலான மர்க்கட நியாயம் அல்ல, பூனையைப் போலான மார்ஜால நியாயம்தான் என்பதைத் தன் விழிகளாலேயே ரமணர் போதிப்பதாய்ப் புரிந்துகொண்டார் அவர். ஸ்ரீரமணரின் பாதாரவிந்தங்களை விழுந்து வணங்கினார். அவர் மனம் முழுமையான சரணாகதி என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×