search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கவிஞர் வாலியின் வாழ்க்கையை திசைதிருப்பிய கவியரசர் பாடல்
    X

    கவிஞர் வாலியின் வாழ்க்கையை திசைதிருப்பிய கவியரசர் பாடல்

    • இருவரும் இணைந்து கொடுத்தப் பாடல்களின் வகைகள் அதிகம்!
    • இருவருக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு அளவிட முடியாதது.

    "கவியரசர் கண்ணதாசன்- மெல்லிசை மாமன்னருக்கு இடையே இருந்தது, தொழில் புரிதலா? மனப் புரிதலா? அன்பா? நட்பா? - எது என்று புரியாத அளவிற்கு அவர்களுக்கு இடையே இருந்த புரிந்துணர்வு அளவிட முடியாதது!

    கவியரசர் நினைக்கும் சொற்களுக்கு எம்.எஸ்.வியின் தத்தகரம் கிளம்பி வரும்!! எம்.எஸ்.வியின் இசைக்கு தகுந்த சொற்கள் கவியரசரிடமிருந்து பிறந்தோடி வரும்!! அதற்கு உதாரணம் தான் "சிப்பியிருக்குது முத்துமிருக்குது" என்ற பாடல் காட்சி என்றுப் பார்த்தோம்!

    இவர்கள் கூட்டணியில் பிறந்த பாடல்கள் பல்வேறு வடிவமைப்பில் வந்த மாதிரி வேறு எந்த கவிஞரின் கூட்டணியிலும் வந்ததில்லை. எத்தனையோ கவிஞர்கள் எழுதினாலும், இவர்கள் இணைந்து கொடுத்தப் பாடல்களின் வகைகள் அதிகம்!

    கேள்வி பதில் பாடல்கள், அடுக்குத் தொடரில் வரும் பாடல்கள், முழுக்க இயைபு தொடை, ஒரே சொல்லில் முடியும் பாடல்கள்..

    உவமை அணி பாடல்கள், இருட்டுற மொழிதல் பாடல்கள், சிலேடைப் பாடல்கள், கால வளர் நிலைப் பாடல்கள், ஆகுபெயர் பாடல்கள், சிறிய, பெரிய, பல்லவி மற்றும் அனுப்பல்லவி பாடல்கள், ஒரே சொல் பாடல் வரி, இருசொல் பாடல் வரிகள், அறுசீர் அடி, எழு சீர் அடி கொண்ட பாடல்கள் என அத்தனையும் புதுமை! அவற்றையெல்லாம் பாடல்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும் என்றால் அது மட்டுமே ஒரு தனித் தொடராகி விடும். அவ்வப்போது பாக்கலாம்.

    இன்னொரு மாபெரும் கவிஞரை மீட்டெடுத்து தமிழ் திரையுலகத்திற்கு தந்ததும் கவியரசர் தான்!

    ஒரு இளைஞன், அற்புதமாக எழுதக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கே பாடல் எழுதியவர், இருந்தும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    அவர், நடிகர் வி. கோபாலகிருஷ்ணனின் நண்பர். வாய்ப்புகள் தேடி அலைந்து, நம்பிக்கை குலைந்து ஊருக்கே கிளம்பி போவதா? அல்லது தொடர்ந்து முயற்சி செய்து வெல்வதா என்ற குழப்பத்தின் எல்லைக்கே சென்று விட்டார். அவரது நண்பரான பி. பி. ஸ்ரீனிவாஸ் பின்னணி பாடகர், தான் அன்று ஒலிப்பதிவு முடித்துவிட்டு வந்த ஒரு பாடலைப் பற்றி பேசுகிறார், பாடியும் காட்டுகிறார்.

    "மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? என்ற பல்லவி அவரைப் பார்த்து கேட்பது போலவே இருக்கிறது! அடுத்து சரணத்தில், "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்".

    பி.பி.எஸ். தொடர்கிறார். "நாளைப் பொழுதை இறைவனுக்கு அளி, உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்று தீர்வையும் பாடல் சொன்னது. அவ்வளவுதான் ஊரில் உறவினர் சொன்ன வேலைக்குப் போகும் எண்ணத்தை தூக்கிப் போட்டார். வெற்றி பெற்ற பிறகுதான் பிறந்த ஊருக்கு போவது என்று முடிவெடுக்கிறார்! அந்த இளைஞன் அவர் யார்?

    1961ல் 'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தில் "சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள் சிந்தியக் கண்ணீர் மாறியதாலே" என்ற பாடலில் ஆரம்பித்து 15000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். 1973ல் 'பாரத விலாஸ்' படத்தின் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்த போது மறுத்தவர். 2007ல் 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்றவர். 1961 முதல் 2013 வரை 53 ஆண்டுகள் பாடல்கல் எழுதினார்.

    வயதானாலும், காலத்திற்கேற்றார் போல் டிரெண்டியான சொற்களை பாடல்களில் வைத்து எழுதியதாலேயே "வாலிப கவிஞர் வாலி" என்று செல்லமாக அழைக்கப்பட்ட திருச்சிக்கார ரங்கராஜன் தான் அந்த இளைஞன்!!

    கவியரசர் ஒரு புறம், மருதகாசி, மாயவநாதன், ஆலங்குடி சோமு என்கின்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் நடுவே எழுத வந்த கவிஞர். வாலி பிற்கால இளைய தலைமுறை யுகபாரதி, சினேகன் காலம் வரை புகழுடன் வளைய வந்தார்!!

    'முக்தா பிலிம்ஸ் வி. சீனிவாசன் "இதயத்தில் நீ" என்ற படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். நடிகர். வி. கோபால–கிருஷ்ணன், தன் நண்பனான வாலியை, எம்.எஸ்.வியிடம் அறிமுகம் செய்கிறார். "இவர் என் நண்பர், நல்ல கவிஞர். 'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தில் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார். நீங்கள் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும்."

    அப்படியா, நான் தர்ற மெட்டுக்கு பாடல் எழுதுங்கள் பார்க்கலாம்.-எம்.எஸ்.வி. உடனே, "பூவரையும் பூங்கொடியே" பாடல் எழுதிக் காட்டுகிறார். படித்துப்பார்த்த எம்.எஸ்.வி. கவிஞர் வாலிக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். வாலி சிறகடித்து வானில் பறக்கிறார்.

    அதே படத்தில், "ஒடிவது போல் இடையிருக்கும், இருக்கட்டுமே", "உறவு என்றொரு சொல் இருந்தால்", "யார் சிரித்தால் என்ன" என்ற மூன்று பாடல்களையுமே வாலியை எழுத சொல்கிறார். அத்தனையும் பி. சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் மிக அற்புதமான மெட்டு தந்து 'தெறி ஹிட்' ஆக்கிவிட்டார் எம்எஸ்.வி.

    தமிழ் திரையுலகம், 'இதயத்தில் நீ' என வாலியை ஏற்றுக்கொண்டது. 'கற்பகம்' படத்தில் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்ததால் அதிலும் வாலியை எழுத வைக்க ஆசைப்பட்டார் எம்.எஸ்.வி. ஆனால் 'கற்பகம்' பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண்ணதாசனின் மெகா மகா ரசிகர்.

    வாலியை அவர் ஏற்றுக் கொள்வாரோ என்ற சந்தேகம் இருந்தது. மெல்ல கேட்கிறார், "ஒரு புது பாடல் ஆசிரியர் வாலின்னு பேரு. பிரமாதமாக எழுதுகிறார். ஒரு பாட்டு அவரை வைத்து எழுத சொல்லலாமா?"

    "எனக்கு கவியரசர் தான் எழுதணும்."

    "ஒரே ஒரு பாட்டு கொடுத்துப் பாருங்களேன், எனக்காக."

    "சரி"

    வாலி எழுதினார். கதைப்படி அந்த பாடல், அத்தனை பாட்டும் தாலாட்டு!

    "அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா,

    ஆடும் வரை ஆடிவிட்டு, அல்லி விழி மூடம்மா".

    எடுத்தவுடன் சிக்சர்! கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கிளீன் போவுல்டு. பிறகு படத்தின் மொத்த நான்கு பாடல்களும் வாலியே எழுத இயக்குனர் சம்மதித்தார்.

    இரவில் தூங்காமல் கண் கொட்டாமல் விழித்திருக்கும் குழந்தையின் விழிகளை - இரவில் பூக்கும் அல்லி மலருக்கு உவமையாக வைத்து என்ன அருமையாக எழுதியிருக்கிறார்! "மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு, தேன்குயில் கூட்டம் பண்பாடும், மான் குட்டி கேட்டு கண் மூடும்" என்ற வரிகள் அத்தைகளை பெருமை கொள்ள வைத்தது.

    1964ல் வந்த 'படகோட்டி' படத்தின் எட்டுப் பாடல்களும் வாலியே எழுதினார். அந்த அளவிற்கு வாலி - எம்.எஸ்.வி. கூட்டணி மிகவும் பிடிதுப்போய், எம்.ஜி.ஆரின் மனதில் தனியிடம் பிடித்தார். ஒரு முறை காரில் போகும்போது எம்.ஜி.ஆர், வாலியிடம் சொன்னார், "மீனவர்கள்' பற்றிய பின்னணியில் வரும் இந்த படத்திற்கு ஐந்து எழுத்தில் வருவது போல் ஒரு பேர் சொல்லுங்கள்".

    'படகோட்டி' என்றார் வாலி. அந்த பெயரே படத்துக்கு வைக்கப்பட்டது. "எங்கள் தங்கம்" என்று ஒரு திரைப்படம் 1970-ல் வந்தது. மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. மூலக்கதை கலைஞர் கருணாநிதி என்பதால் சில சமயம் கலைஞர் பட நிறுவனத்துக்கு வருவதுண்டு. அப்போது எம்.எஸ்.வி. தந்த பல்லவிக்கு முதல் வரியை எழுதிவிட்டார் வாலி. அடுத்த வரி சரியாக வரவில்லை. 'வெத்தலைப் பாக்கு போட்டு போட்டு வாயே வீங்கிவிட்டது' என்கிறார் வாலி (வெற்றிலைப் பாக்கு போட்டா தான் பாடல் எழுத வருமாம்).

    அப்போது அங்கே வந்தார் கலைஞர். விவரத்தை கேட்டார், "முதல் வரி என்ன?"

    "நான் அளவோடு ரசிப்பவன்".... அடுத்த வரி, "எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று எழுதிக்கோங்க என்று வரி எடுத்து கொடுத்தாராம் கலைஞர். எல்லோரும் உற்சாகமாகி விட்டார்கள். தொடர்ந்து பாடல் எழுதி முடிக்கப்பட்டது.

    கவியரசரை 1978-ல் 'அரசவை கவிஞராக' அறிவித்தார் எம்.ஜி.ஆர். அப்போது வாலி அடித்த பஞ்ச், இதுவரை 'கவி அரசராக' இருந்தவரை நீங்கள் 'அரசு கவியாக' மாற்றிவிட்டீர்களே என்றார். இதை கேட்டு எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார்.

    உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி, மேஜர் சுந்தரராஜன் சிறுவயது முதல் நண்பர்கள். கொடைக்கானல் சுற்றுலா வந்த இடத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை அலசுகிறார்கள். இதற்கு ஒரு பாடல் வாலி எழுதியதற்கு, அங்காங்கே வசனம் பேசி, வால்ட்ஸ் ஸ்டைலில் இசையமைக்கிறார். எம்.எஸ்.வி.

    பாடும் இருவரும் நடுத்தர வயதை தாண்டியவர்கள் என்பதால் மலைமீது ஓடி வந்து பாடினால் மூக்சிரைக்கும். அதனால் தத்ரூபமாக மூக்சிரைத்தபடி பாட வேண்டுமென டி.எம். சவுந்தரராஜனிடம் சொல்லிவிட்டார்.

    ஒலிப்பதிவுக்கு முன் கூட்டத்திற்கு வெளியே மூன்று முறை ஓடி சுற்றி வந்து, மைக்கின் முன் நின்று மூக்சிரைக்க பாடினார் டி.எம்.எஸ்! சில பாடல்கள் நமக்கு எப்படி எல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன என தெரிய வரும்போது மலைப்பாக இருக்கிறது!

    "பூவா தலையா" என்ற படத்தில் வாலியின் ஒரு பாடல், "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே" என்ற பாடல்! சேரன், சோழ பாண்டிய நாடு என்பதான தமிழகத்தை தன் காதலியுடன் ஒப்பிட்டு பாடுவதாக வரும் வரிகள். "இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே!" என்ற கற்பனை அதுவரை யாரும் செய்யாதது.

    கவியரசர் "எந்த ஊர் என்றவளே" என்ற பாடலில் ஒவ்வொரு ஊரையும் தொட்டு எழுதியிருந்தார். அது தத்துவப் பாடல்! இது காதலியை வர்ணிக்கும் பாடல்!

    வீணை, புல்லாங்குழல், சிதார், செனாய், டோலக்கு–டன் பாடலின் மெட்டும், டி.எம்.எஸ். குரலும் நம்மை எங்கேயோ கொண்டு செல்லும்! ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகளையும் தன் காதலிக்கு சொல்லி வர்ணித்து வரும் பாடல்!

    "நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்நாட்டை பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பார்!!

    "மதுரையில் பறந்த" பாடலில் வாலி, தன் காதலியை தமிழ்நாடாக உருவகப்படுத்துவது போல் எழுதியிருப்பார்!! அடடா என்ன அழகு இது!

    அதனால் தான் கவியரசர் கண்ணதாசனையும், கவிஞர் வாலியையும் தன் இரு கண்கள் என்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் நெற்றிக்கண் என்றும் எம்.எஸ்.வி. சொன்னார்!!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    Next Story
    ×