search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இறைவனையே நண்பனாக்கிய சுந்தரர்
    X

    இறைவனையே நண்பனாக்கிய சுந்தரர்

    • அனைவரையும் அடியாராக ஏற்றுக் கொண்ட ஈசன், சுந்தரரை தோழனாக ஏற்றுக் கொண்டார்.
    • நாவுக்கரசரும், சம்பந்தரும் இறைவனைப் புகழ்ந்து பாடினார்கள் என்றால், சுந்தரர் இறைவனின் அடியார்களைப் புகழ்ந்து பாடினார்.

    பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

    -சுந்தர மூர்த்தி நாயனார்

    பரம்பொருளான ஈசனின் அருள் மழையில் நனைந்த அடியவர்களில் அவரைத் தோழனாக ஏற்ற பெருமைக்குரியவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

    ஈஸ்வரனுடைய பிம்பமே சுந்தர மூர்த்தி நாயனார். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திலும் உறைகின்ற பரம்பொருளின் பிம்பமே சுந்தரராக வந்து அவதரித்தது. ஈசனே சகலமும். நம்மை இயக்கும் சூத்தரதாரி அவரே என்பதைத் தனது பாடல்கள் மூலம் உணர்த்துகிறார் சுந்தரர்.

    சிவபெருமானை நண்பனாக ஏற்ற சுந்தரர் அவரிடம், கொஞ்சுவார், கெஞ்சுவார், மிஞ்சுவார், முறுக்கிக் கொள்வார். நீர் மட்டும் நன்றாக இரும் என்று கோபப்படுவார். அவரின் தமிழ் அழகில் மயங்கும் ஈசன் சின்னப் புன்சிரிப்புடன் அவருக்குச் சோதனைகள் பல தந்து, சுந்தரரின் பதிகம் கேட்டு மகிழ்ந்து, பின் அவரை ஆட் கொள்வார்.

    அனைவரையும் அடியாராக ஏற்றுக் கொண்ட ஈசன், சுந்தரரை தோழனாக ஏற்றுக் கொண்டார். திருவாரூர் வருக என்று ஈசன் ஆணையிட அங்கு வந்து ஈசனை போற்றித் துதித்த அவரை நோக்கி இறைவன் "நம்பியாரூரனே தோழமையாக உனக்கு நம்மைத் தந்தோம்" என்று வாக்கு அளிக்கிறார்.

    "அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே" என்ற அவரின் சொல்லே, ஈசனை அவருக்குத் தோழர் ஆக்கியது.

    அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி என்னும் பாம்பு விட்ட மூச்சு, கடலிலிருந்து தோன்றிய விஷம் இரண்டும் கலந்து ஆலகால விஷமானது. அதன் வெப்பம் தாங்காமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தார்கள்.

    இறைவன் மட்டுமே விஷத்தின் வெம்மையைத் தாங்கி, அதைக் கொண்டு வரும் சக்தி படைத்தவர் என்பதால் ஈசன் கண்ணாடியின் முன் நின்று அதில் தெரிந்த தன் அழகிய பிம்பத்தைப் பார்த்து "சுந்தரா வருக" என்று ஆசையுடன் அழைக்க ஆலால சுந்தரர் வருகிறார். அவர் கொண்டு வந்த விஷத்தை உண்டுதான் ஈசன் நீலகண்டன் ஆனார்.

    சிவபெருமானின் அணுக்கத் தொண்டராய் இருந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் இறைவனை பூஜிக்க மலர் பறிக்க நந்தவனத்திற்குச் சென்ற அவர் உமாதேவியின் தோழியாகிய சுமலினி, அநிந்திதை ஆகிய இருவரை ஒரு கண நேரம் பார்த்து அவர்கள் அழகில் மயங்கி, மையல் கொள்கிறார்.

    ஒரு கணம்தான் என்றாலும், அதைப் பிழை என்று வருந்துகிறார். மாயையில் ஆட்பட்ட அவரை, ஈசன் பூவுலகில் பிறந்து, அந்த இரு பெண்களை மணந்து, சிலகாலம் வாழ்ந்து பின் தன்னை அடையுமாறு பணிக்கிறார். ஈசன் வேண்டுவதும் அறிவான், வேண்டியதையும் தருவான் அல்லவா?

    ஆனால் இறைவனை விட்டுப் பிரிய மனமில்லாத நம்பியாரூர் "மனிதப் பிறவி எடுத்து மதி மயங்கி உன்னை மறக்கும் காலத்தில் நீயே வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று விண்ணப்பம் செய்ய, இறைவனும் சம்மதிக்கிறார்.

    திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் ஆதிசைவ மரபில் தோன்றிய சடையனார், இசை ஞானியார் என்பவர்களின் தவப்பயன் காரணமாக சுந்தரர் அவர்களின் மகனாகப் பிறக்கிறார். நம்பியாரூரர் என்பது இவரின் இயற்பெயர்.

    சடையனாரின் நண்பரான, அந்நாட்டு அரசன் நரசிங்க முனையரையர், குழந்தை சுந்தரரின் அழகில் மயங்கி, அவரின் பெற்றோர் சம்மதத்துடன் தன்னிடம் அழைத்துச் சென்று அரசிளங்குமரனாக வளர்க்கிறார். உபநயனம் செய்வித்து பதினாறாவது வயதில் அவருக்குத் திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது.

    சடங்கவி சிவாசாரியாருடைய மகளுக்கும், சுந்தரருக்கும் புத்தூரில் திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகனாக அலங்கரிக்கப் பட்டு மணமேடையில் அமர்ந்த சுந்தரரை தடுத்தாட் கொள்ள இறைவன் ஒரு முதியவராக வந்து "இவன் என் அடிமை" என்று ஒரு ஓலையைக் காட்டுகிறார். அங்கிருந்த சான்றோர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

    திருவெண்ணெய் நல்லூரே இவன் இருக்க வேண்டிய இடம். அங்கு வந்தால் இவன் என் அடிமை என்று நிரூபிப்பேன்" என்று முதியவர் கூறுகிறார். அவையோர்களுடன் அங்குள்ள கோவிலுக்கு வர, முதியவர் ஓலையைக் காட்டுகிறார். நம்பி ஆரூரான் குடும்பம் வழிமுறையாக அவருக்கு அடிமை என்று மூல ஓலையில் இருக்கிறது.

    அங்குள்ளப் பெரியோர்கள் அதை ஏற்றுக் கொண்டு "நாங்கள் இதுவரை உங்களைப் பார்க்கவில்லையே" என்று கூற, இறைவன் திருவருட்துறை என்னும் திருக்கோவிலுள் சென்று மறைகிறார். உமையம்மையுடன் விடைமேல் காட்சி தந்த ஈசன் சுந்தரருக்கு அவரின் முன் பிறவியையும், அவருக்குத் தந்த வாக்குறுதியையும் நினைவு படுத்தி, மறைகிறார்.

    மணமேடையில் திருமணம் நின்றபோது பல வன்சொற்களை சுந்தரர் பேசியதால் "வன்தொண்டர்" என்றே அழைக்கப்படுகிறார். "இறைவா உங்கள் திருவருட் பண்பில் எதைப் புகழ்ந்து பாடுவேன்" என்று சுந்தரர் வினவ? "நீ என்னைப் பித்தா என்று அழைத்ததால் பித்தா என்றே பாடு" என்று அருள்கிறார்.

    கடல்மடை திறந்தது போல் 'பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா" என்று பாடுகிறார் சுந்தரர்.

    "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்காளாயினி அல்லேன் எனல் ஆமே." என்று பாடுகிறார்.

    உன் நினைப்பின்றி பேயாய் அலைந்தேன் என்கிறார். மாயை நம்மைச் சூழ்ந்து இறைவனை மறக்கச் செய்கிறது. அதையும் அகற்றும் வல்லமை படைத்தவன் ஆண்டவனே. அவன்தான் தன் திருவருளால் நம்மை அடியவனாக்கிக் கொள்கிறான்.

    "நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகவருள் பெற்றேன் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்

    அருட்டுறையுள் ஆயா உனக்காளாயினி அல்லேன் எனல் ஆமே"

    என்றுதான் துதிக்கிறார்.

    பேயாய் உழலும் மனதைச் சீர் செய்ய வல்லவர் இறைவன் மட்டுமே. பொன்னும் மணியும் அள்ளித் தரும் இறைவனே அவற்றின் மேலும் வெறுப்பைத் தருகிறார். மனதில் இறைவன் மீதான நினைப்பு மட்டும் இருந்தால் போதும். அவன் நம்மை ஆட்கொள்வான்.

    கைலாயத்தில் அவர் விரும்பிய பெண்கள், பரவையார், சங்கிலி நாச்சியாராகப் பிறக்க ஈசனே சுந்தரரின் காதலுக்குத் துணை போகிறார். பறவை நாச்சியாருடன் திருவாரூரில் சிவத் தொண்டு புரிந்து வரும் காலத்தில் சிவபெருமான் அவரிடம் " திருத்தொண்டர் திறத்தை விவரிக்கும் பாமாலை ஒன்று பாடு என்று கூறி " தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுக்கிறார்.

    இறைவனின் அருளைப் பெறுவதற்கு குருவின் வழி காட்டல் மிக முக்கியம். குருவருள் இருந்தால் எதையும் சாதிக்க இயலும். அத்தகைய அருளைப் பெற்றுத் தரும் பதிகம் சுந்தரர் பாடிய "திருத்தொண்டத்தொகை".

    "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன் " என்று தொடங்குபவர் அடுத்த டுத்து இறைவனின் அடியார்களைப் புகழ்ந்து துதிக்கிறார்.

    "இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்

    ஏனாதினாதன் தன் அடியேற்கு அடியேன்

    கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்

    கடவூரில் கலயன்தன் அடியார்க்கு அடியேன்"

    என்று ஒவ்வொரு அடியவர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு அடியேன் என்று மகிழ்கிறார்.

    "மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்

    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்" என்று மகிழும் சுந்தரர்

    மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர்ப் பூசல்

    வரிவளையால் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

    தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்

    திருநீல கண்டத்துப் பாணனார்க்

    கடியேன்

    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட

    சடையன்

    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

    அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

    ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே' என்று உறுதி கூறுகிறார்.

    முழுமுதற் கடவுளான ஈசனுக்கு அரிய பல தொண்டுகள் செய்து, பேரின்பத்தில் மூழ்கிய அடியவர்களைப் போற்றிப் பாடுகிறது "திருத்தொண்டத்தொகை" என்னும் பதிகம்.

    நாவுக்கரசரும், சம்பந்தரும் இறைவனைப் புகழ்ந்து பாடினார்கள் என்றால், சுந்தரர் இறைவனின் அடியார்களைப் புகழ்ந்து பாடினார். ஈசன் அவரின் நல்ல நண்பனாக, உற்ற தோழனாக, சுந்தரரின் காதலுக்குத் தூது சென்று, அவ்வப்போது அவரின் தவறுகளுக்குத் தண்டனை கொடுத்து, திருத்தி தன்னிடம் முழுமையாக ஈர்த்துக் கொள்கிறார்.

    அவர் பாடல்களில் இறைவன் மேலான உரிமை தெரியும், நட்பு தெரியும், கோபம் கொள்ளும் நெருக்கம் இருக்கும்,சுந்தரருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் சேரமான் பெருமான். சுந்தரர் வெள்ளை யானையின் மீதேறி கயிலை செல்கிறார் என்று அறிந்ததும், சேரமானும், அஞ்செழுத்தை ஓதி தன் யோக சக்தியால், சுந்தரருடன் சேர்ந்து கயிலாயம் செல்கிறார். முக்தி அடைவதிலும் பிரியாத நட்பு.

    தமிழ் வேதங்கள் இறைவனால், ரசித்துக் கேட்கப் பட்டவை. "திருத்தொண்டகைத் தொகை"- படிப்பதால் உண்டாகும் பலன் அதிகம். திருமுறைகளால் பெற முடியாத பயன் எதுவும் இல்லை. இறைவன் அருள் பெற்றால் கிடைக்காதது எதுவும் இல்லை.

    தொடர்புக்கு-gaprabha1963@gmail.com

    Next Story
    ×