search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரசிகைகள் நடத்திய விழா....
    X

    ரசிகைகள் நடத்திய விழா....

    • நிகழ்ச்சிக்கு பிரபு தேவா-நயன்தாரா ஜோடியை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தோம்.
    • ஒரு ஜோடி 80 அடி உயர கிரேனில் தொங்கியபடி நடனம் ஆடிக்கொண்டே வந்தது.

    ஒரு நிகழ்ச்சியின் வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் ஆதரவை பொறுத்தது என்பது உண்மை. ஆனால் ஒரு நிகழ்ச்சியையே ரசிகர்கள் நடத்தி காட்டினார்கள் என்றால் அது மானாட...மயிலாட... நிகழ்ச்சிதான்.

    மானாட...

    மயிலாட...

    நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக அமைந்தது. 5-வது சீசன் நடந்து கொண்டிருந்தபோது இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகையான துபாயை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவை துபாயில் நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

    நான் அவரை முன்பின் பார்த்ததில்லை. போனில் மட்டுமே பேசி பழகி இருந்தேன். இவ்வளவு பெரிய ரியாலிட்டி ஷோவை வெளி நாட்டில் நடத்துவது சாதாரண விஷய மல்ல. இவர் தெரிந்து தான் பேசுகிறாரா? அல்லது ஆர்வம் மிகுதியால் பேசுகிறாரா என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு எங்கள் நாட்டில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

    வேறு வழியின்றி அவரை சென்னைக்கு வரவழைத்தோம். சென்னைக்கு வந்ததும் அவரிடம் தெளிவாக கூறினோம். ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்துவது சாதாரண விசயமல்ல. அதற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புக்கான உபகரணங்கள் எல்லாவற்றையும் கொண்டு வர வேண்டும். அதற்கான செலவுகள், வருபவர்களுடைய செலவுகள் என்று நிறைய செலவாகும். அது உங்களால் முடியுமா? என்றோம்.

    ஒரு வாரத்தில் பதில் சொல்கிறேன் என்று சொன்னவர் மீண்டும் தொடர்பு கொண்டு நாங்கள் நடத்த தயார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பார்த்துக்கொள்கிறோம் என்றார். அவர் பெண் மருத்துவர். அவர் அவரது தோழிகளுடன் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார். நாங்களும் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றோம்.

    அபுதாபி சென்று இறங்கியதும் ஆச்சரியமாக இருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் மானாட...மயிலாட... நிகழ்ச்சியின் சுவரொட்டிகள். கடல் கடந்து ஒரு தேசத்தில் நிகழ்ச்சி அரங்கேற போகிறது என்பது மட்டுமல்ல. எங்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பு சுவரொட்டிகள் அமைந்திருந்தன.

    அபுதாபி நகரில் மையப்பகுதியில் இருந்த பிரமாண்டமான அரங்கம் அது. பல வெளிநாட்டு குழுவினர் படப்பிடிப்புகளை அங்கு நடத்துவதுண்டாம். அங்குள்ள மேடையே வித்தியாசமானது. நடுவில் இருக்கும் ஒரு பிளாட்பாரம். சுற்றிலும் கீழே இறங்கும் வசதியை கொண்டது.

    மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி தொடங்கியது. முதல் முதலாக மானாட... மயிலாட... நிகழ்ச்சிக்கு பிரபு தேவா-நயன்தாரா ஜோடியை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தோம். நிகழ்ச்சியை தொடங்கியதும் பிரபுதேவாவையும், நயன்தாராவையும் பாதாளத்தில் இருந்து நடனம் ஆடியபடியே மேலே அழைத்து வருவது போல் அந்த பிளாட்பாரத்தில் மேடையில் கொண்டு நிறுத்தினார்கள். அரங்கமே ஆரவாரம் செய்தது.

    ஏற்கனவே 4 சீசன்களை நடத்தி முடித்திருந்த நாங்கள் இந்த 5-வது சீசனில் சில மாற்றங்களை கொண்டு வந்தோம். அதாவது ஒன்று முதல் 4-வது சீசன் வரை முதல் 3 இடங்களை பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான ஜோடிகளை மட்டும் வெளியில் இருந்து தேர்வு செய்தோம். அது மட்டுமல்ல அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் நடனம் ஆடுபவர்களுக்கு தேவையான செட்டிங் வசதிகளையும் போட்டியாளர்களே செய்து கொள்ள வேண்டும் என்று கூறினோம். ஏனெனில் சிலர் தங்களுக்கு செட் சரியில்லை என்று குறைபட்டு கொள்ள கூடாது என்பதற்காக அப்படி ஒரு முடிவு செய்தோம்.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சமும் 4-வது சீசன் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த 5-வது சீசனில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வீடு பரிசு அளிக்க முன் வந்தது. அதாவது முதல் பரிசு பெறும் ஜோடிகளுக்கு ரூ.40 லட்சம் உள்ள வீடுகளை ஆளுக்கு ஒன்று வீதம் 2 வீடுகளை வழங்கியது. இது போட்டியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. கடுமையாக முயற்சி எடுத்து சிறப்பாக ஆடவும் வைத்தது.

    ஒரு ஜோடி 80 அடி உயர கிரேனில் தொங்கியபடி நடனம் ஆடிக்கொண்டே வந்தது. மெய்சிலிர்க்க வைக்கும் அந்த காட்சி எங்களுக்கே பயமாக இருந்தது. போட்டியாளர்கள் கீழே விழுந்து எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பயப்பட்டோம். ஆனால் போட்டியாளர்கள் ரிஸ்க் எடுத்து அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.

    ஒரு போட்டியாளர் வாய்க்குள் நிஜ கத்தியை சொருகுவது போன்ற காட்சிக்கு அனுமதி கேட்டார். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். ஏதாவது ஏடாகூடமாக ஆகி அதனால் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த மாதிரி தேவையில்லை என்று மறுத்துவிட்டோம்.

    இந்த சீசனில்தான் நீதிபதி ரம்பா கர்ப்பமானதால் அவருக்கு பதிலாக குஷ்பு நடுவராக இருந்தார். பிருந்தா, குஷ்பு, நமீதா, நான் ஆகிய 4 பேரும் நிரந்தர நடுவர்களாக அமர்ந்தோம். இதில் எனக்கு மட்டும் சிறப்பு நடுவர் என்ற அங்கீகாரமும் தரப்பட்டது. சில போட்டிகளில் ஒரே மதிப்பெண் வரும்போது யாருக்கு கூடுதல் மதிப்பெண் போடலாம் என்பதில் குறிப்பிட்ட மதிப்பெண் போடும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டது.

    போட்டியாளர்களை பொறுத்தவரை 50 மதிப்பெண்கள் நடுவர்கள் மூலமும், மீதம் 50 மதிப்பெண்கள் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலும் வழங்கப்பட்டது. அதன்படி இந்த சீசனில் பாலா-சுவேதா ஜோடி முதல் பரிசு பெற்று ஆளுக்கு ஒரு வீட்டை இலவசமாக பெற்றார்கள்.

    6-வது சீசனில் நடுவர்கள் மாறினார்கள். சுதா சந்திரனும், மும்தாஜூம் நடுவர்களாக வந்தார்கள். குஷ்பு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் நடுவராக வர முடியவில்லை. அதே போல் தான் நமீதாவுக்கும் படப்பிடிப்பு அதிகமாக இருந்தது.

    பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடன நிகழ்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டார். இளைய தலைமுறையினரிடம் இருந்த நடன திறமைகளை வெகுவாக புகழ்ந்து பாராட்டினார். இந்த சீசனின் பரிசளிப்பு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    7-வது சீசனில் மீண்டும் நடுவராக குஷ்புவும், நமீதாவும் இணைந்தனர். இந்த சீசனில் மிகச்சிறந்த பொழுதுபோக்காக கோகுலின் நடன நிகழ்ச்சி அமைந்தது. பரிசளிப்பு விழா மலேசியாவில் நடைபெற்றது. ஜெயம் ரவி பரிசுகளை வழங்கினார்.

    Next Story
    ×