search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆனித்திருமஞ்சன தரிசனம்
    X

    ஆனித்திருமஞ்சன தரிசனம்

    • சிவத்திருத்தலங்களில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    • தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்

    சிவபெருமானின் 64 மூர்த்திவடிவங்களில் மிகவும் அற்புதமானது நடராஜர் திருவுருவம் என்று போற்றப்படுகிறது. நடராசர் என்ற சொல்லானது நட + ராசர்> நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. கூத்தன் என்றால், கூத்து எனும்ஆடல்கலையில் வல்லவன் என்று பொருள். பொற்சபை (கனகசபை), வெள்ளிசபை (ரஜிதசபை), தாமிரசபை, ரத்னசபை, சித்ரசபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்சசபைகள் என்று அழைக்கப்படுகின்றன. அம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். இந்தவகையான அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இவரது நட்சத்திரம் திருவாதிரை. இதுவெப்பமானது. அதற்கேற்ப சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம், கையில்அக்னி, உடலில் சுடுகாட்டுச் சாம்பல் என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார். பொதுவாக சிவத்திருத்தலங்களில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனிமாதம் உத்திராயண காலத்தின் கடைசி மாதம் ஆகும். இதை தேவர்களின் மாலைப்பொழுது என்பர். ஆனிமாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப்பெருமானுக்கு திருமஞ்சனம் பழங்காலம் முதல் நடக்கிறது.

    நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம். அந்தஅந்தக் காலத்துக்கு ஏற்ப செய்யவேண்டும் என்கின்றன ஆகமவிதிகள். மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திரத்திலும் அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனங்கள் காலங்காலமாக நடைபெறுகின்றன. மனிதநாட்களின் ஓராண்டு என்பது தேவர்களின் கணக்கில் ஒருநாள் ஆகும். பொதுவாக ஒருநாளுக்கு ஆறுகாலத்தில் அபிஷேகங்கள் நடக்கின்றன, ஆனால் மனிதவாழ்நாளில் ஒரு ஆண்டில் ஆறுநாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படுகின்றன.

    சாதாரணமாக, கோவில்களில் தினமும் 6 காலபூஜை நடைபெறும். அதிகாலை திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, இராவுக்காலம், அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜையும் நடைபெறுவது வழக்கம்.

    தேவர்களும் இயக்கத்தை நடத்தி வரும் நடராஜாவுக்கு இதேபோல, தேவருலக கணக்குப்படி தினமும் ஆறுகால பூஜையை நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒருஆண்டு. அவர்களுக்கு ஆடி முதல் மார்கழி வரையுள்ள தட்சிணாயனம், தை முதல் ஆனி வரையான உத்ராயனம் என்ற இருவகை காலப்பிரிவுகள் உண்டு. அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப்பொழுதோ, மாசி மதியம் - சித்திரை ; மாலை - ஆனி; இராக்காலம் - ஆவணி; அர்த்தஜாமம்-எடுத்தும் – புரட்டாசி என்ற வகையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இதனால்தான், தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம். இதை, ஆருத்ரா தரிசனம் என்போம். அடுத்து, மாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6 மணிக்கும், சித்திரைமாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம், 12 மணிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4 மணியளவில் சிவனுக்குகந்த பிரதோஷவேளையிலும், அடுத்து, ஆவணிவளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 7 மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 9 மணிக்கும் சிறப்புதின அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நாம் கொண்டாடும் ஆண்டுக்கணக்கில் தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச்சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. உத்திரநட்சத்திரத்தில் நடக்கும் தரிசனமாகையால் இந்நாள் ஆனிஉத்திரம் மற்றும் ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது.

    சிவனாரின் ஆனந்தநடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலிமுனிவர் இருவரும் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடனதரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ரமுனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினார்கள். .

    அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம் குவித்து நின்றனர்.

    நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. இதுவே ஆனித்திருமஞ்சனக் காட்சியாகக் கொண்டு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். தில்லையில் ஆனிமாத உத்திரநட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி பிறமுக்கிய சிவாலயங்களில் பத்து நாள் விழா நடக்கும்.

    பொன்னம்பலமான இச்சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா எனப்படுகிறது. முதல் நாள் கொடி யேற்றத்துடன் துவங்கும் திருவிழாவில் எட்டாம்நாள் வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், மற்றும் உற்சவர்கள் தங்கவாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். காலை 5.30 மணியளவில் சோழர்களின் வாரிசுகளான பிச்சாவரம் ஜமீன்தாரர் குடும்பத்தார் அளிக்கும் மண்டகப்படி மரியாதையை ஏற்கும் நடராஜப்பெருமான், திருத்தேரில் எழுந்தருளி ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் உலாவரும் அதிசயம் நடைபெறும்.

    தேரைத் தொடர்ந்து நடராஜரையும், அன்னைசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்தநடனம் புரியும் அற்புதக்காட்சி அரங்கேறும். ஆனந்தநடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்த ருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

    திருமஞ்சன தரிசனபலன்

    ஆனித்திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலி களாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும்கிடைக்கிறது, கன்னிப்பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுகிறது என்று ஆண் களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும், வளமும் கூடும் கருதப்படுகிறது. நாடெல்லாம் நல்லமழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனி உத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பிற்பகல் ஒருமணிக்கு மேல் நடராஜரும், சிவகாமசுந்தரியும் ஆனந்த நடனமாடிய படியே சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.

    நடராஜப்பெருமானுக்கு ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித்திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் கோவிலில் ஆதிமூலவர் சந்திரமவுலீஸ்வரருக்கு ஆறுகாலபூஜைகள் வெகுவிமரிசையாக நடக்கும். அப்போது கனகசபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதுமுடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.

    நடராஜரின் இந்த அபிஷேகம் பஞ்சசபைகளான திருவாலங்காடு ரத்தினசபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிரசபை, குற்றாலம் சித்திரசபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது சிறப்பானது என்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பாண்டிநாட்டு கோவில்களில் காணப்பெறுவது போல ஒரேகல்லால் செய்யப் நடராஜருக்குத் திருமஞ்சனமும் நடைபெறும். கோவை பேரூரில் பட்டீஸ்வரர், சுந்தர மூர்த்திசுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் எனவழங்குகிறது.

    சிதம்பரத்தில் ஜூன் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் ஆனித்திரு மஞ்சனவிழா வெள்ளி சந்திரப்பிரபை, தங்க சூர்ய பிரபை, வெள்ளி பூதம்,வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை, தங்க கைலாசம் ஆகியவற்றில் தினமும் புறப்பாடாகி ஜூன் 24-ந் தேதி தங்க ரதத்தில் பிட்சாடனர் புறப்பாடும், 25-ந் தேதியில் பஞ்சமகா ரதங்கள் புறப்பாடும் நடக்கும். 26-ந் தேதி 10-ம் நாள் 1000 கால் மண்டப ராஜ சபையில் சிவகாம சுந்தரியுடன் ஆனந்த நடராஜ மூர்த்தியும் அபிசேகமும், அலங்காரமும் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடந்து 27-ந் தேதி முத்துப்பல்லக்கு காட்சியும் நடைபெறும். தில்லைக்கு சென்று ஆனந்த நடராஜ மூர்த்தியின் ஆனித்திருமஞ்சன விழாவில் கலந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். புனிதப்பலன் பெறுவார்கள் .இயலாதவர்கள் எங்கும் நிறைந்தருளும் சிவனை அருகில் உள்ள கோவில்களில் ஸ்ரீநடராஜபெருமான் அபிஷேகம் கண்டுகளித்து வாழ்வில் வளம் பெறலாம்.

    Next Story
    ×