search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    காட்டுக்கு ராஜா சிங்கம்... கவிதைக்கு ராஜா கண்ணதாசன்...
    X

    காட்டுக்கு ராஜா சிங்கம்... கவிதைக்கு ராஜா கண்ணதாசன்...

    • சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற இவர் 1967-ல் மறுபடி கறுப்புபணம் படத்தை தானே சொந்தமாக எடுத்து நஷ்டப்பட்டார்.
    • சென்னையில் கவியரசு கண்ணதாசன் உருவச்சிலையும் காரைக்குடியில் மணி மண்டபமும் எழுப்பப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜருக்கு பொருந்தமான வாக்கு இது. 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார்.

    கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படைப்பதிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்று அவரே விளக்கம் அளித்துள்ளார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் முத்தையா.

    சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் (1927) பிறந்தவர். சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராயணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வியும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

    சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

    சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

    கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

    கலங்காதிருமனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று கன்னியின் காதலியில் அவர் எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, கண்ணே கலைமானே' கவிஞரின் கடைசிப் பாட்டு.

    எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு' என்பார் அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைத்தான் அப்படி சொல்வார்.

    மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டல், அபிராமபுரம் கவிதா ஓட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான்.

    வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணியமாட்டார்!

    'கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்' என்பது கவிஞரின் வாக்குமூலம்.

    முத்தான முத்தல்லவோ' பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்த பாடல்... "நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை".

    யார் மனிதன் என்றால் மறைந்தும் மக்களின் மனதில் நிற்பவனே மனிதன் என்கிறார். அவர் பாடலின் வைரவரிகள் இதோ.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

    மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    மாபெரும் வீரர் மானம் காப்போர்

    சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

    என்று கூறுகிறார்.

    உலகத் தத்துவங்களை எளிய நடையில் இசையோடு தந்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். மனிதன் உண்மை உணர்வு பெற்றுவிட்டால் உலகம் சண்டையற்ற சமாதான வாழ்வில் வெற்றி நடைபோடும். சினிமாத்துறையில் ஏராளமான தத்துவங்களைக்கொண்ட பாடல்களை இயற்றியவர் இவர்.

    "வீடுவரை உறவு வீதிவரை மனைவி

    காடுவரைப் பிள்ளை கடைசிவரை யாரோ!"

    என்ற பாடல் எத்தனைக்கருத்துக்களை உடையதாக உள்ளது. அவரவர் தன் சொந்தக்காலிலேயே நிற்க வேண்டும் என்ற கருத்தை தத்துவ வரியாக

    "யாரை நம்பி நான் பிறந்தேன்

    போங்கடா போங்க

    என் காலம் வெல்லும் வென்ற பின்னே

    வாங்கடா வாங்க"

    என குறிப்பிடுகிறார்.

    "உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு" என்ற வரிகள் வாழ்வின் மிகச்சிறந்த தத்துவ பாடலாகும். இவர் எழுதிய தத்துவ பாடல்கள் காலத்தால் அழியாதவை. இதனால் தான் இவர் அனைவராலும் அதிகம் கொண்டாடப்படுகின்ற சிறந்த கவிஞராக போற்றப்படுகின்றார்.

    வாழ்க்கையினுடைய நிலையற்ற தன்மை, மனிதர்களுடைய எண்ணங்கள், காதல், நட்பு, துரோகம் என வாழ்வில் ஏற்படும் இன்னலான நிலைகளில் மனித மனங்களின் காயங்களுக்கு மருந்து போடும் கைதேர்ந்த வைத்தியர் இவர்.

    இவை அனைத்தும் இவர் கண்ட அனுபவங்களாக தான் இருக்க முடியும் "கடவுள் ஏன் கல்லானார் இந்த பாழாய்போன மனிதர்களாலே" என்று மனித மனங்களின் இழிவு நிலையை அழகாக எழுதியுள்ளார்.

    கண்ணதாசன் அடிக்கடி கேட்ட பாடல், 'திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா என்ற பாடலாகும். தனக்குப்பிடித்த பாடல்களாக, என்னடா பொல்லாத வாழ்க்கை; சம்சாரம் என்பது வீணை" ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

    கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம், நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான் என்பார்.

    'பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரிய காந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கை கொடுக்கவில்லை. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

    மேலே யாரோ எழுதி வைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்!. 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் அவர் படைத்தார்.

    (பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது') என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

    வரவும் செலவும் சரியாக இருந்ததே தவிர பெரும்லாபம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரபாபுவை அப்போது சிவாஜி கணேசன் வாங்கி வந்த பணத்துக்கு மேல் கொடுத்து கதாநாயகனாக நடிக்க வைத்து இவர் தயாரித்த கவலையில்லாத மனிதன் படம் பெரும் நஷ்டத்தை உண்டாக்கி விட்டது. அதனால் சில வழக்குகளையும் கண்ணதாசன் சந்திக்க நேர்ந்தது.

    இதனால் சொந்தமாக படம் எடுக்ககூடாது என்ற முடிவுக்கு வந்தார் இவர். பட கம்பெனி மூடப்பட்டது. சில காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த கே. முருகேசனுடன் சேர்ந்து வானம்பாடி என்றோர் படத்தை எழுதித் தயாரித்து வெளியிட்டார். படம் வெற்றி பெற்றது. அதில் வந்த லாபம் பழைய கடனை அடைக்க உதவியது. சுமைதாங்கி என்றோர் படத்தை கோவை செழியனோடு சேர்ந்தும் ரத்தத்திலகம் படத்தை பஞ்சு அருணாச்சலத்தோடும் தயாரித்தார். அவையும் வெற்றி பெற்றன.

    சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற இவர் 1967-ல் மறுபடி கறுப்புபணம் படத்தை தானே சொந்தமாக எடுத்து நஷ்டப்பட்டார். அதில் இவர் ஒரு பாடல் காட்சியில் நடித்ததும் உண்டு.

    கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக்காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

    1981 ஜூலையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்க விழாவிலும் கவிஞர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்ள அழைத்திருந்தார்கள். அங்கே சென்ற இவர் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு மூன்று மாதம் வரை படுக்கையில் இருந்தவர் எந்தச் சிகிச்சையும் பலன் தராத நிலையில் 17.10.1981 -ல் இரவு இந்திய நேரம் 10.45 க்கு மரணமடைந்தார். தமிழக அரசு செலவில் 21 -ந் தேதி அவர் உடல் இங்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.

    சென்னையில் கவியரசு கண்ணதாசன் உருவச்சிலையும் காரைக்குடியில் மணி மண்டபமும் எழுப்பப்பட்டது.

    கண்ணதாசன் இறப்புக்கு 11 ஆண்டு களுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதி வைத்துக் கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்.

    'ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்

    அவன்பாட்டை எழுந்து பாடு!

    Next Story
    ×