search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கின்னசில் இடம் பிடித்தோம்...
    X

    கின்னசில் இடம் பிடித்தோம்...

    • 10-வது சீசனில் கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
    • தரை விரிப்பு முதல் நடனக்கலைஞர்களின் காஸ்டியூம் வரை பேப்பர்களால்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இதயங்களை கவரும் வகையில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடத்தி காட்டினோம் என்று பெருமைப்பட்டாலும் உலக அளவில் கின்னஸ் சாதனையை படைக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அந்த சாதனையை நிகழ்த்துவதற்காக ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு அனுபவித்த வேதனை ஏராளம்.

    இந்நிகழ்ச்சியில் 10-வது சீசனில் கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 45 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் லைவாக நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அதுவும் வழக்கம்போல சாதாரண மேடையில் அல்ல. இல்யூஷன் அறைக்குள் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்த இல்யூஷன் அறை என்பது வித்தியாசமானது. அறை அமைப்பு சாய்வாக இருக்கும். ஒருபக்கம் சிறிய நுழைவாயில் என்றால் இன்னொரு பக்கம் பெரிய அளவில் இருக்கும். ஆனால் கேமிராவில் வரும்போது அறை வித்தியாசமாக தெரியும். ஒற்றையடி பாதையில் செல்வதுபோல் தான் கலைஞர்கள் உள்ளே சென்று ஆட முடியும். இப்படி ஒரு ரவுண்டு கின்னஸ் சாதனை செய்வதற்காக ஏற்றுக்கொண்டாலும் இது முடியுமா? என்ற சந்தேகம் கின்னஸ் குழுவினருக்கு மட்டுமல்ல கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லோருக்குமே ஏற்பட்டது.

    இதற்கான மேடை வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அமைத்து இருந்தோம். கடுமையான பயிற்சி எடுத்து நிகழ்ச்சி தொடங்கும் நாளும் வந்தது. கின்னஸ்சுக்கான நடுவர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஒவ்வொரு நிமிடமும் திக்... திக்... என்றே நகர்ந்துக் கொண்டிருந்தது. ஆனாலும் எல்லோரது கடினமான முயற்சிக்கும் பலன் கிடைத்தது. 45 நிமிடங்கள் சொன்னது போல் லைவாக நிகழ்ச்சியை நடத்தினோம். நடுவர்கள் பார்த்துவிட்டு சாதித்து விட்டீர்கள்... கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துவிட்டீர்கள் என்ற பிறகுதான் எங்களுக்கு நிம்மதியும், சந்தோசமும் வந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நான் கின்னஸ் சாதனை படைத்தேன்.

    ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. 7-வது சீசனில் மிகவும் வித்தியாசமாக முற்றிலும் பேப்பர்களால் மேடையை உருவாக்கியிருந்தோம். தரை விரிப்பு முதல் நடனக்கலைஞர்களின் காஸ்டியூம் வரை பேப்பர்களால்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சீசனின் நிறைவு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. நடிகர் ஜெயம் ரவி கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    கடல் தாண்டி நிறைவு நிகழ்ச்சியை மட்டுமே நடத்திக்கொண்டிருந்த நிலையில் 8-வது சீசனை உலகம் முழுவதிலும் இருந்து கலைஞர்களை தேர்வு செய்து நடத்த திட்டமிட்டோம். அதற்காக மலேசியா, சுவிட்சர்லாந்து மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஜோடிகளை தேர்வு செய்து போட்டியில் பங்கேற்க வைத்தோம். இந்த சீசனின் நிறைவு நிகழ்ச்சியை லண்டன் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் லண்டனுக்கு செல்வதற்கு விசா கிடைப்பதும் ஏற்பாடு செய்வதும் மிகவும் சிரமமாயிற்றே என்றபோது லைக்கா நிறுவனம்தான் இதை நடத்துகிறது.

    அந்த நிறுவனம் எதையும் எளிதாக செய்து முடிக்கும் என்றார்கள். அவர்கள் அப்போதுதான் முதன்முதலில் இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிறைய நடிகர்கள் வரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்ட தால் நிறைவு நிகழ்ச்சியில் நடிகைகள் நமிதா, குஷ்பு, திரிஷா, சந்தியா மற்றும் பூர்ணா, நடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக், சிவகார்த்தி கேயன், மிர்ச்சி சிவா, சுந்தர்.சி. என்று மிகப்பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமும், பாடகர் வேல்முருகன் போன்று செலி பிரிட்டிகளும் பஞ்சம் இல்லாத அளவுக்கு பங்கேற்றனர்.

    அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் மைக்கேல் ஜாக்சன் அரங்கம். 15 ஆயிரம் பேர் அமரும் வகையிலான அந்த அரங்கத்தில் பாதி அளவு அமரும் வகையில்தான் அரங்கத்தை பிரித்து கொடுப்பார்கள். ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த லைக்கா நிறுவனம் முழு அரங்கையும் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எங்களுக்கு தான் பயம். அந்த அளவுக்கு ரசிகர்கள் வரு வார்களா? என்று நினைத்தோம். ஆனால் மாலை 5 மணியளவில் அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்க்கும்போது நாங்களே மிரண்டு போனோம். திருவிழா கூட்டம்போல் அரங்கிற்கு வெளியே ரசிகர்கள் திரண்டிருந்தனர். அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    10-வது சீசனில் முற்றிலும் மாறுபட்ட வகையில் `கிரீன்மேட்' போட்டு கலைஞர்களை ஆட வைத்தோம். சின்னத்திரையில் இப்படி கிரீன்மேட்டில் ஆட வைத்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டும்தான். இந்த சீசனில் நிறைவு நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடந்தது. நடிகர்கள் மறைந்த விவேக் மற்றும் ஜெயராம், சிவக்கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நிறைவு சீசனான 10-வது சீசனின் நிறைவு விழா கனடாவில் நடத்துவதற்கு அங்கிருந்த தமிழர்கள் ஆர்வப்பட்டனர். மிகவும் தொலைதூர நாடான கனடாவிற்கு சென்று நிகழ்ச்சி நடத்துவதும், அதற்கான ஏற்பாடுகளையும் நினைத்து யோசித்தோம். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு கேட்டுக்கொண்டதால் அங்கே ஏற்பாடு செய்தோம். கனடாவில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், ஹன்சிகாவும் வர வேண்டும் என்று அங்கிருந்த ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்களும் வந்து ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். காயத்ரி ரகுராம் வர்ணனையாளராக பணியாற்றினார். நடிகை மீனா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் பங்கேற்றார்கள். நயகரா நீர்வீழ்ச்சியில்கூட காட்சிகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி 10 சீசனும் முத்து முத்தான அனுபவங்களோடு மறக்க முடியாத நிகழ்வுகளோடு அரங்கேறியது. இன்றும் அந்த நிகழ்ச்சிகளை வலைதளங்களில் பலர் பொழுதுபோக்கிற்காக கண்டுகளிப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

    Next Story
    ×