search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தன்னொப்பாரில்லா விண்ணகரப்பன்
    X

    தன்னொப்பாரில்லா விண்ணகரப்பன்

    • பங்குனி ஏகாதசி திருவோணத்தன்று திருமால் கிழப்பிராமணன் வேடங் கொண்டு வந்து மகரிஷியிடம் மகளை மணம் முடித்துத்தரக் கேட்டார்.
    • 108 திவ்ய தேசங்களில் திருமால் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம் கண்டருளுகிறார்

    ஒரு சமயம் துளசி திருமாலிடம் லட்சுமியை மார்பில் தாங்கியுள்ளது போன்ற சிறப்பு தனக்கும் வேண்டுமெனக் கடுந்தவம் புரிந்தாள். லட்சுமி மீளவும் பூவுலகு சென்று பூமிதேவி என்ற பெயருடன் காவிரிக்கரையில் தோன்றித் தவம் புரிந்து பலன் அடைய இருக்கிறாள். நீ சென்று துளசிச்செடியாக அங்கே தோன்ற , உன் மடியில் லட்சுமி அவதரிப்பாள். லட்சுமி அவதரிப்பதற்கு நீ ஆதாரமாக இருந்ததனால் லட்சுமியை விட சிறந்த பேறு பெறுவாய். உன் இதழ்களால் என்னை பூசிப்பவர்கள் அசுவமேத யாகத்திற்குண்டான பலனைப் பெறுவார்கள். எப்போதும் நீ என் நெஞ்சை அலங்கரிக்கும் மாலையாய் இருப்பாய் என்றார். திருத்துழாய் தேவி உடனே விண்ணகர் எனும் இடத்திற்கு வந்து துளசிச் செடியாய் மலர்ந்திருக்கிறாள்.

    "வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்" என ஆழ்வார்களால் மங்களாசாசனம் ஆன தன் தந்தையாகிய பிரம்மனிடம் நாரதர் இத்தலத்து மேன்மையை கேட்பதாகவும், பிரம்மன் நாரதனுக்குச் சொல்வது போல் இத்தல வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

    வேண்டுதல் செய்யும் இடம்

    மிருகண்டு மகரிஷியின் மகனான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என நீண்ட நாட்களாக பல புண்ணிய தலங்களுக்கு சென்று தீர்த்தமாடி பல இடங்களுக்கு சென்று இறுதியில் திருவிண்ணகர் எனும் இப்பகுதிக்கு வந்து தவத்தைத் துவங்கினார்.

    அப்போது லட்சுமி தேவி, மழலைக் குழந்தையாக திருத்துழாய்ச் செடி மடியில் தோன்ற எடுத்து வளர்த்தார் மார்க்கண்டேயர் திருமகள் பருவத்தின் எல்லை எய்த ஓர் பங்குனி ஏகாதசி திருவோணத்தன்று திருமால் கிழப்பிராமணன் வேடங் கொண்டு வந்து மகரிஷியிடம் மகளை மணம் முடித்துத்தரக் கேட்டார்.

    நீங்கள் முதியவர். என் மகள் சிறியவள். மணம் செய்துதரக் கேட்பது சரியல்ல என்றார். மறுமொழியாய் "முதுமை உடலுக்கேயன்றி உள்ளத்துக்கில்லை. நீரே கதி'' யென்றார்.

    மகள் சமைக்கக் கூட தெரியாதவள். உணவில் உப்பு சேர்க்கக்கூட தெரியாது. ஒத்துவராது என்றார் முனிவர். உம் மகள் சமைக்கும் உப்பிலா பண்டமே எமக்கு உகப்பு. இவளை மணந்து கொள்ளாமல் இவ்விடம் விட்டு நகரமாட்டேன் என்று அமர்ந்துவிட்டார். தமது தவவலியால் வந்திருப்பவர் திருமாலே என்று உணர்ந்து கண் திறக்கும் வேளையில் சங்கு சக்கர தாரியாக பெருமாள் காட்சி தந்தார். பக்தி நிலையின் உச்சத்தில் இருந்த மார்க்கண்டேயர் தண்டனிட்டு வணங்கி அரிக்கும் அம்மங்கைக்கும் கன்னிகாதானம் செய்வித்து தமது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்கிறது வரலாறு.

    உப்பில்லா நிவேதனம்

    பூதேவி சமைத்தது உப்பில்லா பண்டமானாலும் அதனை உகந்து நாம் ஏற்போம் என்று பெருமாள் சொன்னதாலேயே பெருமாளுக்கு திருமடைப்பள்ளியில் தயாராகும் உப்பில்லா நிவேதனமே இன்றும் படையலாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் பெருமாள் உப்பிலியப்பன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் ஊரும் பெயரும்

    ஒப்பிலியப்பன் கோவில் என தெய்வத்தின் பெயராலும் மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்று ரிஷியின் பெயராலும் திருவிண்ணகரம் என்று விஷ்ணுவின் கிருகம் ( வசிப்பிடம் ) > விண்ணகரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

    மூலவர் ஒப்பற்றவன் என்ற பொருளில் ஒப்பிலியப்பன் எனவும் தன்னொப்பாரில்லப்பன் என்று நம்மாழ்வார் அழைத்ததால் "ஒப்பிலியப்பன்" என்ற திருநாமம் பெருமாளுக்கு உண்டான பெயராகும். உப்பில்லா பண்டம் ஏற்பவனாதலால் உப்பிலி என்ற திருப்பெயர்களில் வணங்கப்படுகிறார். திருப்பதி திருவேங்கடமுடையானைப் போன்ற தோற்றத்தில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் பெருமாளின் வலதுகரத்தில் சரம ஸ்லோகத்தின் பகுதியான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்பது வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.

    தாயார்க்கு பூமிதேவி , பூமி நாச்சியார் என்று திருநாமம். பெருமாளுக்கு வலதுபுறம், கீழே மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் திருக்கல்யாணக்கோலம். தனிச்சன்னிதி இல்லை. பெருமாளுக்கு இடதுபுறம் மார்க்கண்டேயர் மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருக்கிறார். இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவது கிடையாது. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே புறப்பாடு நடைபெறுகிறது.

    விமானம் மற்றும் சன்னதிகள்

    விஷ்ணு விமானம் சுத்தானந்த விமானம் எனப்படுகிறது. மூலவர் சன்னதி தவிர ஸ்ரீதேசிகன், ஸ்ரீஆழ்வார்கள் , ஸ்ரீராமர் , ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஎன்னப்பன், ஸ்ரீமணியப்பன், ஸ்ரீகருடன், ஸ்ரீகிருஷ்ணன் சன்னதிகள் அமைந்துள்ளன

    தீர்த்தம்

    இரவில் தீர்த்தங்களில் நீராடுவது பாவம். ஆனால், இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டும் புஷ்கரணியில் இரவு, பகலென்றில்லாமல் 24 மணி நேரமும் நீராடலாம் என்பதால்" "பகலிரா தீர்த்தம்" என்ற பொருளில் ''அஹோராத்ர புஷ்கரணி" எனவும் அஹோராத்ர தீர்த்தம் எனவும் கொண்டாடப்படுகிறது.

    கண்டு உகந்தவர்கள்

    ஒப்பிலாஅப்பன் மார்க்கண்டேயர், காவேரி, கருடன், தர்மதேவதைகளுக்கு காட்சி தந்தவர் என தொல் வரலாறு கூறுகிறது.

    மங்களாசாசனம்

    இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 , திருமங்கையாழ்வார் 34, பொய்கை யாழ்வார் 1, பேயாழ்வார் 2 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்

    நம்மாழ்வாருக்கு, மூலவர் விண்ணகரப்பனாகவும், உற்சவர் பொன்னப்பனாகவும், போகமூர்த்தி முத்தப்பனாகவும், தனிச் சன்னதிகளில் என்னப்பனாகவும் மணியப்பனாகவும் காட்சி அளித்திருக்கின்றார். மணியப்பனது இரு புறமும் சங்கும் சக்கரமும் அமைந்துள்ளன. முத்தப்பனுக்கு மட்டும் சந்நிதி இல்லை.

    இப்படி பெருமாளை ஐந்து வடிவங்களில் அர்ச்சாவதாரமாய்க் கண்டவர் நம்மாழ்வார்.

    காலத்தாலும் முந்திய கோவில்

    காலவெள்ளத்தில் பிற்கால அமைப்பைச் சார்ந்த கட்டிடக்கலை உடைய இக்கோவில் கோப்பரகேசரி ராஜேந்திர சோழனின் 1020-ம் ஆண்டில் உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர் நாட்டு திருநாகேஸ்வரமுடையார் திருவிண்ணகர் ஒப்பிலியப்பனுக்கு ஸ்ரீராஜேந்திர சோழனின் தளபதி சோழமூவேந்த வேளார் இளைய குஞ்சர மல்லன் அடிகள் தன் சொந்த நிதியில் இருந்து நவரத்தின கற்கள் பதித்த தங்க ஆபரணத்தை உத்தேசமாக கொடையாகக் கொடுத்ததாகக் திருநாகேஸ்வரசுவாமி கோவில் கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது.

    தலசிறப்புகள்

    திருப்பதி பெருமாளுக்கு, உப்பிலியப்பன் அண்ணன் என்று ஐதீகம். அதனால் , திருப்பதி போக முடியாதவர்கள், தங்கள் பிரார்த்தனைகளை இங்கே செலுத்துகிறார்கள்.

    நாளும் விழாக்களும்

    ஒவ்வொரு மாதமும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் மாத திருவோணம் முக்கிய நாட்கள் ஆகும். சித்திரை வருடப்பிறப்பு, ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் வசந்த உற்சவம், ஆடியில் ஜேஷ்டாபிஷேகம் -ஆவணி மாதம் பவித்ர உற்சவம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி , உறியடி, சறுக்குமரம், புரட்டாசி சனிக்கிழமை புரட்டாசி பிரம்மோற்சவம், தேசிகன் சாற்றுமுறை , ஐப்பசி திருக்கல்யாணம், தீபம், சொக்கப்பனை - திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம் அனுமத் ஜெயந்தி மார்கழியில் அத்யயன உற்சவம் ,வைகுண்ட ஏகாதசி ,தைமாதம் தெப்ப உற்சவம் பங்குனி பிரம்மோற்சவம்,ஸ்ரீராமநவமி உற்சவத்தில் புத்ரகாமேஷ்டியாகம் - ஆகியவை முக்கியமானவிழாநாட்களாகும்.

    பிரார்த்தனை வழிபாடுகள்

    சுதர்சன ஹோமம், சந்தானகிருஷ்ணன் மடியில் எழுந்தருளச்செய்தல், சொர்ணபுஷ்ப அர்ச்சனை, தங்ககவசம் சாற்றல், மூலவர், உற்சவர், ராமர், மணியப்பன், என்னப்பன், கருடன், அனுமன், கிருஷ்ணன் ஆகியோரின் பிரார்த்தனைத் திருமஞ்சனங்கள், திருக்கல்யாணம் , கருடசேவை, ஊஞ்சல் உற்சவம், தங்கரதம், கண்ணாடியறை சேவை, துலாபாரம், பரிவட்டம் சாற்றுதல் ஆகிய பிரார்த்தனை சேவைகள் நடைபெறுகின்றன.

    தனிச்சிறப்புக்கள்

    காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்காக சன்னதிகள் திறந்திருக்கும் இக்கோவிலில் மதியத்தில் அன்னதானத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

    108 திவ்ய தேசங்களில் திருமால் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம் கண்டருளுகிறார்

    ஒவ்வொரு மாத சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்து அருள்வாக்கு அருளுவது இங்கு சிறப்பு ஆகும். திருப்பதி ஸ்ரீனிவாசன் போல் இவருக்கும் தனி சுப்ரபாதம் உள்ளது.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் தொடரந்து இருக்கும் இக்கோவில் கால வெள்ளத்தில் பலமுறை திருப்பணிகள் நடந்து கடைசியாக திருப்பணி முடிந்து எதிர்வரும் ஜூன் 26-ல் பூர்வாங்கமாக யாக பூஜைகள் துவங்கி 26,27,28 ஆகிய நாட்களில் 6 கால பூஜை நடந்து ஜூன் 29ம் தேதி காலை 9 முதல் 10.30-க்குள் அனைத்து விமானங்கள் ராஜகோபுரம் சன்னதிகளுக்கு மகா சம்புரோக்ஷணம் எனும் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    சிறந்த வரலாறும் புராண அழுத்தமும் இருமொழிகளிலும் இலக்கியச்செழுமையும் உடைய இத்தலம் ஒரு சிறந்த மக்களின் குறை நீக்கும் கோவிந்தன் வாழும் பிரார்த்தனை தலமுமாகும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

    Next Story
    ×