search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோயை குணமாக்கும் திருநாவுக்கரசர் பதிகங்கள்
    X

    நோயை குணமாக்கும் திருநாவுக்கரசர் பதிகங்கள்

    • திலகவதியார் துறவு ஏற்று ஈசனின் கழல்களை வணங்கி, திருவதிகை திருக்கோவிலில் உழவாரப் பணிகள் செய்து வந்தார்.
    • சிவபெருமான் திருவருளால் பதிகம் பாட வயிற்று வலி நீங்கியது.

    "நெஞ்சம் உனக்கே இடமாக வைத்தேன்

    நினையாதொரு போதும் இருந்தறியேன்."

    -திருநாவுக்கரசர்

    இறைவனாலேயே நாவுக்கு அரசர் என்றும் வயதின் காரணமாக அடியார்களால் அப்பர் என்று போற்றப்பட்ட பெருமைக்கு உரியவர் திருநாவுக்கரசு பெருமான்.

    வாழ்வின் தொடக்கத்தில் இருந்து துன்பங்களையே அனுபவித்தாலும், இறைவனையே நம்பி அனைத்தையும் தாண்டி வருகிறார். இவரின் வாழ்வு நமக்கு ஒரு அனுபவப் பாடம். வாழ்வின் பல உண்மைகளை, வாழ வேண்டிய முறைகளை நமக்கு இவரது பாடல்கள் போதிக்கிறது.

    ஏழாம் நூற்றாண்டில் சமணமும், பவுத்தமும் மேலோங்கி இருந்த காலம். பல்லவர்களும், பாண்டியர்களும் சமண சமயத்தைச் சார்ந்து வடமொழிக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ் மொழியும், சைவமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருந்த காலச் சூழலில்தான், நாவுக்கரசர் பிறக்கிறார்.

    திருவாமூர் என்ற தலத்தில் புகழனார், மாதினியார் என்ற அடியவர்களின் மகனாகப் பிறந்த அப்பர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். அவரின் இயற்பெயர் மருள் நீக்கியார். அவரின் தமக்கை திலகவதியார் கலிப்பகையார் என்பவரை மணக்க இருந்த நிலையில், கலிப்பகையார் போர்க்களத்தில் வீர மரணம் அடைகிறார். திலகவதியார் துறவு ஏற்று ஈசனின் கழல்களை வணங்கி, திருவதிகை திருக்கோவிலில் உழவாரப் பணிகள் செய்து வந்தார்.

    ஆனால் திருநாவுக்கரசர், சமண மதத்தில் சேர்ந்து அந்த நூல்களைப் பயின்று பாடலிபுர சமண மடத்தின் தலைவராக இருந்தார். தன் அறிவாற்றலால் சமண நூல்கள் அனைத்தையும் கற்று எல்லையற்ற திறமையுடன் இருந்த அவருக்கு சமண மடத்தில் தருமசேனர் என்று பெயர்.

    "நில்லாத உலகியல் கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன்

    என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு

    தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் கொல்லாமை

    மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்." என்கிறார் சேக்கிழார்.

    எது நல்லது என்று அறியாமல் சமண சமயத்தில் இருந்த அப்பர் பெருமானை, ஈசன் ஆட்கொண்டார் என்று நயமாகக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

    திலகவதி என்ற அவர் தமக்கையார் இறைவனிடம் வேண்டி நாவுக்கரசரை சைவ சமயத்துக்கு வரவழைக்க வேண்டினார். இறைவன் அவரது கனவில் தோன்றி "மருள் நீக்கியார் முற்பிறவியில் எனை அடைய முனிவனாகத் தவம் செய்தார். எனவே இப்போது அவருக்கு நான் சூலை நோய் தந்து ஆட்கொள்வேன்" என்று உரைக்கிறார்.

    எனவே நாவுக்கரசருக்கு கொடிய சூலை நோய் ஏற்பட்டது. வலியில் துன்புற்று, துடி துடித்தார். சமண சமய மந்திரங்கள், மருந்துகள் எந்தப் பலனும் தரவில்லை. தன் தமக்கையை நாடி ஓடி வந்தார்.

    தமக்கை சிவபிரானின் கழல்களை வணங்கி, ஈசனின் விபூதியை நமசிவாய என்று ஓதி தம்பிக்கு அளித்தார். அதை உடல் முழுவதும் பூசி, வாயில் இட்டு விழுங்கி, திருவதிகை கோவிலில் இறைவன் முன் நின்று, "கூற்றாயினவாறு.." என்ற பதிகம் பாட சூலை நோய் மறைந்தது. சிவபெருமான் திருவருளால் பதிகம் பாட வயிற்று வலி நீங்கியது.

    "கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை

    பல செய்தன நான் அறியேன்- ஈற்றாய் அடிக்கே

    இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாது என் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கியிட- ஆற்றேன் அடியேன் "

    அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே, உடலோடு ஒட்டியுள்ள உயிரை எமன் கூறு செய்கிறான். இந்த வலியைப் போக்காமல் இருக்கின்றீர்களே. இப்பிறப்பில் எனக்குத் தெரிந்து பல கொடுஞ்செயல்கள் செய்ததாக நான் அறியவில்லை. எனினும் சூலை நோய் தன்னைப் பற்றியது ஏன்? என்று இறைவனைக் கெஞ்சுகிறார் அப்பர்.

    நாம் எல்லோருமே இறைவனிடம் ஏன் என்ற கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஆனால் தன்னிடம் ஈர்க்கவே இறைவன் துன்பங்களைத் தருகிறான். அந்தத் துயரில் இருந்து நம்மை அவனே மீட்பான் என்று நம்பிக்கை வேண்டும். தான் பாடிய மற்ற அனைத்துப் பதிகங்களிலும், இறைவனின் கழல்களைப் பற்றினால் என்றும் துயர் இல்லை என்றுதான் கூறுகிறார் அப்பர் பெருமான்.

    இந்தச் சூலை நோயை நீக்கி அருளினால் உன் அடியை இரவும், பகலும் விலகாமல் வணங்குவேன், ஈசனையே அல்லும் பகலும் நினைத்துருகுவேன் என்று கூறும் அவர் என் நெஞ்சம் உனக்கே இடமாக உள்ளது என்கிறார்.

    "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். நினையாதொரு

    போதும் இருந்தறியேன்- வஞ்சம் இது வொப்பது கண்டறியேன்

    வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை

    நலிவதனை நணுகாமல் துறந்து கரந்தும் இடீர்

    அஞ்சேலும் என்னீர் அதிகக்கெடில வீரட்டானத்துறை அம்மானே"

    என்று கெஞ்சுகிறார்.

    நம் கர்ம வினைகளே நோய்களுக்குக் காரணமாகிறது. அந்த வினையைத் தீர்க்க இறைவனால் மட்டுமே முடியும்.

    வினையைத் தீர்க்காமல் என்னைச் சூலை நோயில் வருத்துவதன் காரணம் என்ன என்று புலம்புகிறார்.

    "சுடுகின்றது சூலை நோய்" எனும் அப்பர்,

    "பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்" எனும் அவர், "முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்தென்னை முடக்கியிடப் பின்னை அடியேன் உமக்கே ஆளும் பட்டேன்." என்பதன் மூலம் முன்னர் தான் சமண சமயத்தில் இணைந்து இறைவனை வழிபடாமல் இருந்த பாவமே இந்தச் சூலை நோய்க்குக் காரணம் என்றும் கூறுகிறார்.

    "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை

    பாடல் அறிந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்"

    என்கிற நாவுக்கரசர், தன் முன் பிறவியில் கயிலையில் முனிவனாக ஈசனை நோக்கித் தவம் இருந்தார். அப்போது பத்து தலை ராவணன் கைலாய மலையை ஆணவத்துடன் தூக்க முயன்று மலையின் கீழ் நசுக்குண்டு வேதனைப் பட்டபோது, முனிவரே, ஈசனை சாமகானம் பாடி வழிபட்டால் துன்பம் நீங்கும் என்று இடரிலிருந்து நீங்க வழி காட்டியதாகவும், அதற்குத் தண்டனையாகத்தான் இந்தப் பிறவியில் சூலை நோய் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    சமண சமயமே உயர்ந்தது என்று கூறி, சைவ சமயத்தை இழிவாகப் பேசியதற்கு தண்டனையே இந்தச் சூலை நோய் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    ஆனால் ஈசன் கருணை வடிவானவன். தண்டனை கொடுப்பவன் அல்ல. தன்னிடம் ஈர்த்துக் கொள்பவன். எல்லா சமயங்களும் கூறும் அன்பு வடிவான பரம்பொருள் அவன் மட்டுமே. அவரிடம் நேரிடையாக உரையாடுகிறார் அப்பர் பெருமான்.

    "சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச்

    சங்க வெண்குழைக் காதுடை எம்பெரு மான்" என்று ஈசனையே சரண் அடைகிறார்.

    மனித வாழ்க்கையின் துன்பங்கள், பிணி இவைகள் எல்லாம் இறைவன் கருணையால் மட்டுமே அகலும், இறைவன் அருளினால் மட்டுமே நம்மை அணுகாமல் காக்க முடியும். எனவேதான் நாவுக்கரசுப் பெருமான்.

    "என்போலிகள் உம்மையினித் தெளியார்

    அடியார் படுவதிதுவே யாகில் அன்பே அமையும் அதிகைக்

    கெடில வீரட்டானத்துறை அம்மானே"- என்று உறுதியாகக் கூறுகிறார்.

    யானையின் தோலைப் போர்த்தவன், சுடுகாட்டை இடமாகக் கொண்டு நடம் ஆடும் ஈசனே, கைலாய மலையை பெயர்த்து எடுக்க முயன்ற ராவணனின் ஆணவத்தை அழித்தவன். எம்பெருமானின் லீலைகளை நினைத்துப் பார்த்து, உன்னை விழுந்தும், புரண்டும், எழுந்தும் வணங்குகிறேன்.. என் சூலை நோயைத் தீர்த்தருள் என்கிறார்.

    "ஆர்த்தான் அரக்கன்றனை மால்வரைக் கீழ் அடர்த்திட்டருள்

    செய்த அது கருதாய் வேர்த்தும், புரண்டும் விழுந்தும்

    எழுந்தால் என் வேதனை யான விலக்கியிடாய்"- என்று மனமுருகி வேண்ட இறைவன் அவரின் சூலை நோயைத் தீர்த்தருள்கின்றான்.

    இப்பாடல் வேண்டுதல் விண்ணப்பம் போல் அமைந்துள்ளது. என் நோய் தீர்த்தருள உன்னால் முடியும் எனும்போது ஏன் தாமதம். எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயனைக் காப்பாற்றிய சிவபெருமான்தான் என்னையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறார்.

    உலகின் பரம்பொருள் நீதானே. நான் செய்த பிழை என்னவென்று தெரியவில்லை. ஆனால் உன் கழல்கலையே இனிப் பற்றி வேண்டுவேன் என்பதன் மூலம் இனி அவரை விட்டு வேறு பக்கம் செல்ல மாட்டேன் என்பதைத் தன் தமக்கைக்கும் உரைக்கிறார்.

    அதேபோல் இறைவனையே சதம் என்று வாழ்ந்து அவரிடம் ஐக்கியமாகிறார் அப்பர் பெருமான். வேதங்கள் கடவுள் ஒருவரே என்றுதான் உணர்த்துகின்றன. எந்த முறையில் வழிபட்டாலும் அது அந்த ஜோதி வடிவையே சென்று சேர்கின்றன.

    மனிதனை அவன் மன விசாரங்கலில் இருந்து விடுவித்து உயர்ந்த நெறிக்கு அழைத்துச் செல்வதே பக்தி. அவன் முயற்சியினால் இதில் வெற்றி அடைவதோடு உயர்ந்த ஞானத்தையும் அடைய முடியும்.

    நம் காரியங்கள் அனைத்தும், ஈஸ்வரனால் மட்டுமே நடத்தப் படுகின்றன. அனைத்தும் ஈஸ்வர சங்கல்பம். பக்தியினால் அவனிடம் அனைத்தையும் கேட்டுப் பெற முடியும். ஈசனே பக்தி நெறியில் இருந்து நம்மை முக்தி நெறிக்கு அழைத்துச் செல்வார். பக்தியுடன் அவனை நினைந்து உருகினால் நம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடையலாம்.

    அப்படி பக்தியோடு இறைவனைப் பாடி பலரின் நோய்களைத் தீர்த்தும், இறந்த சிறுவனை மீட்டும், பல அற்புதங்களைப் புரிகிறது அவரின் பதிகங்கள். மூவர் பாடிய தேவாரப் பதிகங்களில் இதுதான் காலத்தால் முந்தியது. இதைப் பாடுவதன் மூலம் பல வியாதிகள் குணமாகும். தீராத வயிற்று வலி குணமாகும் என்பதுடன், இறைவனின் அருளையும் பெற்றுத் தரும் பதிகம்.

    இதைப் பிறருக்காகவும் நாம் 5 எழுத்தை ஓதி, பதிகத்தைப் பாடினால் நிச்சயம் வயிற்றுவலி குணமாகிறது என்பது கண்கூடு.

    தொடர்புக்கு-gaprabha1963@gmail.com

    Next Story
    ×