search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இயற்கை அழகியல்
    X

    இயற்கை அழகியல்

    • தலை குளித்து முடித்தவுடன் துண்டை கொண்டு அழுத்தி அழுத்தி கூந்தலை உலர்த்தாமல், லேசாக உலர்த்துதல் போதுமானது.
    • வெள்ளரி விதையை பொடி செய்து அதை சிறிது பால், வெண்ணெய் அல்லது தயிரில் குழைத்து கண்களை சுற்றி தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரலாம்.

    அழகியல் என்பது தோல், நகம், முடி போன்றவற்றை அழகுபடுத்தி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை கூறும் ஒரு பிரிவாகும். நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். உடலுக்கு பாதுகாப்பு போர்வையாக அமைந்துள்ள இது பெரும்பாலும் சூரிய கதிர்கள், சுற்றுசூழல் மாசுபாடு போன்றவற்றாலும், போதுமான நீர் பருகாமையாலும், ஆரோக்கியமான உணவின்மையாலும் பாதிக்கப்படுகிறது. மேலும் வயது அதிகமாகும்போது, உடலில் உள்ள Collagen, Elastin, Hyaliusanic அமிலம் குறையத் தொடங்கும் அதன் காரணமாக தோல் வறட்சி, சுருக்கம் போன்ற முதுமைக்கான அடையாளங்கள் தொடங்கும். எனவே ஆண், பெண் இருவருக்கும் அனைத்து வயதிலும் அழகியல் இன்றியமையாதது. தோல், தலைமுடி, நகம் போன்றவற்றை இயற்கை முறையில் பராமரிப்பது குறித்து அறியலாம்.

    முதலில் தலைமுடி பராமரிப்பு குறித்து காணலாம். நல்ல அடர்த்தியான கருமை கூந்தல் பெறுவது நம் அனைவருக்கும் விருப்பமாகும். சிறு சிறு எளிய வழிமுறைகள் மூலம் நாம் அதை பெறலாம். தினம் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவ்விடத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி மயிர்க்கால்கள் உறுதிபெறும். தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை நம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். கூந்தல் ஆரோக்கியத்திற்கு பொண்ணாங்கண்ணி, கரிசாலை, அரைகீரை விதை, கற்றாழை, வெந்தயம், சின்னவெங்காயம், கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவை பெரிதும் உதவும். மேற்கூறியவற்றுள் அவரவர் உடலுக்கு ஏற்ப பொருட்களை தேர்வு செய்து நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி தினம் தேய்த்து வரலாம். உதாரணமாக பொண்ணாங்கண்ணி கீரையின் சாறு அரை பங்கிற்கு, ஒரு பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கரகரப்பு பதத்தில் வடித்து தினம் தலையில் தேய்த்து வரலாம்.

    பொடுகு போன்ற பாதிப்புள்ளவர்கள் தேங்காய் எண்ணெயில் பொடுதலை சாறு சேர்த்து முன்கூறியவாறு காய்ச்சி தலைகுளிக்கும் முன்னரோ அல்லது தினமுமோ தேய்த்து வர பொடுகு நீங்கி முடி நன்கு வளரும் வீட்டில் செய்து பயன்படுத்த நேரமில்லாதவர்கள் பாரம்பரிய மருந்து கடைகளில் கிடைக்கும் நீலிபிரிங்காதி, வெட்பாலை தைலம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி வரலாம்.

    அடுத்ததாக தலைக்கு தேய்த்து முழுகும் போது ஷாம்புகளை தவிர்த்து சிகைக்காய் பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிகைக்காயுடன் பூந்திக்கொட்டை, வெட்டிவேர், செம்பருத்தி, பன்னீர் ரோஜா, ஆவாரம்பூ, மகிழம்பூ, கார்போகரிசி, வெந்தயம், பச்சைபயிறு, உலர்ந்த எலுமிச்சை தோல், மருதாணி இலை, அவுரி இலை, வேப்பிலை, உலர் நெல்லி போன்றவற்றை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலை குளிக்கும் முன்னர் கஞ்சித்தண்ணீருடன் இந்த பொடியை கலந்து ஊறவைத்து தலையில் தேய்த்து முழுகலாம். தலைமுடி உதிர்வது குறைவதுடன் கருத்து நீண்டு வளர்ந்து குளிர்ச்சியையும் கொடுக்கும்.

    சித்த மருத்துவத்தில் பஞ்சகற்பம் தேய்த்து முழுக வலியுறுத்தப்படுகிறது. நெல்லிவித்து, வேப்பம்வித்து, கடுக்காய்த் தோல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள் சேர்ந்த இக்கலவையை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம். இதை பசும்பாலில் சேர்த்து சூடு செய்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஊறவைத்து தலைமுழுக மூலச்சூடு குறைவதுடன், தலைமுடி உதிர்தல், பொடுகு போன்றவற்றை நீக்கி பார்வை திறனை மேம்படுத்தும்.

    தலை குளித்து முடித்தவுடன் துண்டை கொண்டு அழுத்தி அழுத்தி கூந்தலை உலர்த்தாமல், லேசாக உலர்த்துதல் போதுமானது. அழுத்தி தேய்ப்பதால் கூந்தல் உதிர்வதுடன் முனைகளும் பிளவுபடும். எனவே இது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றி கூந்தலை பேணி வரலாம்


    மேலும் நரைமுடி உள்ளவர்கள் ரசாயணம் கலந்த டை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் தலைக்கு சாயம் பூசி கொள்ளலாம். மருதாணி இலையின் பொடியை முதல் நாள் இரவு டீ தூளுடன் லவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்த ஒரு இரும்பு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு மறுநாள் காலை இதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். பின்பு மறுநாள் காலை மருதாணி இலையை போன்றே அவுரி இலை பொடியையும் வெது வெதுப்பான நீரில் தலைக்கு தேய்த்து 1.30 மணி நேரம் கழித்து குளிக்க முடி கருமை நிற சாயலை பெறும்.

    அடுத்தாக கண் பராமரிப்பு குறித்து காண்போம். பெரும்பாலானவர்களுக்கு கருவளையம் பெரும் பிரச்சினையாக உள்ளது. தூக்கமின்மை, அதிக வேலை பளு, மன அழுத்தம் போன்றவை கருவளையத்திற்கு காரணமாக அமைகிறது. இதை நீக்க வெள்ளரி விதையை பொடி செய்து அதை சிறிது பால், வெண்ணெய் அல்லது தயிரில் குழைத்து கண்களை சுற்றி தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரலாம். அல்லது விளக்கெண்ணையுடன் கற்றாழை மடல் சேர்த்து காய்ச்சி கண்களை சுற்றி தேய்த்து வர கண் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறைந்து நல்ல உறக்கம் ஏற்படும்.

    கண்களுக்கு மையிடுவது பெண்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாக மாறி உள்ளது. சித்த மருத்துவத்தில் நாட்களுக்கொருமுறை கண்களுக்கு மையிட வலியுறுத்தப்படுகிறது. இதனால் கண்களுக்கு அழகுடன் புத்துணர்ச்சியை கொடுக்கும். பழங்காலத்தில் கண்களுக்கு அஞ்சனக்கல் இழைத்து மை தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றைய பெண்கள் வேதியல் பொருட்கள் நிறைந்த காஜல்களை பயன்படுத்துவதை தவிர்த்து கடைகளில் கிடைக்கும் சுர்மா பயன்படுத்தலாம். அஞ்சனக்கல்லில் இருந்து கிடைக்கும் இது கண்களை நோய் தொற்றில் அருந்து பாதுகாப்பதோடு கண்களுக்கு ஒளியும் தரும். இது கிடைக்காதவர்கள் வீட்டிலேயே மை தயாரித்து பயன்படுத்தலாம் மை தயாரிக்கும் முறை குறித்து அறியலாம்.

    கரிசாலை இலையை நீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும் பின்பு அச்சாற்றில் சுத்தமான பருத்தி துணியை தோய்த்து உலர்த்த வேண்டும். இது போல் ஏழு முறை செய்து உலர்த்தி நல்லெண்ணெய், பசு நெய், அல்லது விளக்கெண்ணெயில் தோய்த்து திரியாக்க வேண்டும். அகல் விளக்கில் இத்திரியை இட்டு விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இட்டு காற்றில்லாத இருட்டு அறையில் தீபம் ஏற்றி, அதன் இரு புறமும் செங்கல் வைத்து மேலே செம்பு தட்டை கவிழ்க்க வேண்டும். செம்பு தட்டில் படியும் கரியை பத்திரப்படுத்தி பசுநெய் சேர்த்து கண்மையாக்க வேண்டும். இதை வாரம் இருமுறையோ அல்லது தினமுமோ செய்து வர கண் நோய் அண்டாமல் இருப்பதுடன் கண்ணின் அழகும் கூடும்.

    அடுத்தாக பருவ வயது ஆண்கள் மற்றும் பெண்களை அதிக கவலைக்கு ஆளாக்கும் முகப்பருக்களை நீக்கும் முறைகளை குறித்து காண்போம். சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது முதுகிலும் ஏற்படும். உடல் வெப்பம், சுற்று சூழல் மாசுபாடு, ஹார்மோன் மாற்றம், துரித உணவு வகைகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

    அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி வர வேண்டும் அடிக்கடி முகப்பரு ஏற்படுபவர்கள் சங்கை ஊற வைத்த நீரை கொண்டு முகம் கழுவி வரலாம். மேலும் வெளிபிரயோகமாக சங்கை பன்னீரிலோ, தாய்ப்பாலிலோ இழைத்து முகப்பருவின் மேல் பூசி வரலாம். அல்லது சங்கை மோலில் இழைத்து சிறிது கறிவேப்பிலை தூள் அதில் சேர்த்து முகப்பரு மேல் தினமும் பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகப்பரு மறையும்.

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை முகப்பரு மேல் பூசி வர விரைவில் மறையும் அல்லது கடைகளில் கிடைக்கும் செஞ்சந்தனத்தை பசும்பாலில் சேர்த்து இழைத்து வாரம் இரு முறை முகத்தில் தேய்த்து வர பருவை சரிசெய்வதுடன் மறுபடி வராமலும் தடுக்கும். பசலைக்கீரையை கடைந்தும் பசுவெண்ணெய் சேர்த்தும் முகப்பரு மேல் பூசி வரலாம். கருஞ்சீரகம் மற்றும் சீரகம் இரண்டையும் பசும்பாலில் அரைத்து முகத்தில் அப்பி ஒரு மணி நேரம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வரலாம். இதை தவிர காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதைத்தவிர சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய் மற்றும் சங்குபற்பம் போன்றவைகளை பயன்படுத்தியும் பயன்பெறலாம்.

    முகம் மற்றும் உடல் பொலிவு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து காணலாம் பால் மற்றும் இளநீர் இயற்கை சுத்தப்படுத்தி பயன்படும், குளிர்ந்த பாலில் அல்லது இளநீரில் பஞ்சை தோய்த்து முகம் மற்றும் உடலில் தேய்த்து கழுவி வர சருமத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதுடன் பொலிவும் பெறும்.

    பாதாம் பருப்பை பாலில் ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர தோல் மிருதுவாகி பளபளப்பாகும். உடலுக்கு வெட்டிவேர், விலாமிச்சு வேர், கோரைக்கிழங்கு, கிச்சிலிகிழங்கு, சந்தனம், பாசிப்பயிறு, கார்போகரிசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ போன்றவற்றை சேர்த்து பொடி செய்து நீரில்/பன்னீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து முழுகி வர, உடல் புத்துணர்வு பெறுவதுடன் பொலிவு பெறும். நாள் கணக்கில் பயன்படுத்தி வர உடலில் உள்ள தழும்புகளும் மறையும். தோல் சுருக்கம் நீங்கும்.

    முகத்தில் உள்ள மங்கு மற்றும் பரு தழும்புகள் நீங்க ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து முதலியவற்றை பால் சேர்த்து அரைத்து கருப்பு திட்டுகள்/தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர நாளடையில் மாறும்.

    கழுத்தை சுற்றியுள்ள கருப்பு தழும்புகள் நீங்க பன்னீருடன் பச்சைபயிறு மாவு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கழுவி வர சிறிது சிறிதாக மாறும். மேலும் கை, கால்களில் பூசி வர வெயிலினால் ஏற்படும் தடயகளையும் அகற்றும் வெளியில் செல்லும் பொழுது இயற்கையான சன்ஸ் கிரீன்களை பயன்படுத்தலாம். சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய், குங்குமாதி தைலம் போன்றவை சூரியனின் வெப்பகதிர்களில் இருந்து தோலை பாதுகாத்து, தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

    உடல் பொன்னிறம் பெற்று நரை, திரை, மூப்பில்லாமல் வாழ சித்தமருத்துவ நூல்கள் கற்ப மருந்துகளை எடுக்க பரிந்துரைக்கிறது. நமக்கு எளிதாக கிடைக்கும் பொன்னாங்கண்ணி கீரை, அமுக்கரா கிழங்கு, இஞ்சி, நெல்லிக்கனி போன்றவை உடலை என்றும் இளமையுடன் இருக்கச்செய்வதாக தேரன்யமக வெண்பா கூறுகின்றது.

    வயலில் செழிப்பாக வளர்ந்த பொன்னாங்கண்ணி கீரையின் இலைகளை நெய்விட்டு வதக்கி, உப்பு, மிளகு சேர்த்து புளி நீக்கி உண்டு வர உடல் அழகு பெறும். தேனில் தோல் நீக்கிய இஞ்சியை கீற்றுகளாக்கி போட்டு ஊறவைத்து தினம் உண்டு வர நரைதிரை மூப்பு மாறும். கரிசாலைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து இளநீரில் ஒரு மாதம், தேனில் ஒரு மாதம் உட்கொள்ள நரை மற்றும் தோல் சுருக்கம் மாறும். மேலும் அமுக்கிராக்கிழங்கு பொடியை நெய் சேர்த்து உண்டு வர அழகு ஏற்படுவதுடன் ஆயுளும் நீளும் என கூறப்பட்டுள்ளது.

    அடுத்தது நக பராமரிப்பு குறித்து அறியலாம். வாரம் இருமுறை நகங்களில் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து மசாஜ் செய்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறு கலந்து நீரில் கைகளை கழுவி வரலாம் இதிலுள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் உற்பத்தியை தூண்டி நகங்களின் அடிபாகம் வரை வறட்சி, வெடிப்பு, கிருமி தொற்று போன்றவற்றை சரி செய்யும் எலுமிச்சை சாறில் சிறது தேன் மற்றும் சிறு துண்டு வாழைப்பழம் சேர்த்து நன்றாக அரைத்து நகங்களின் மேல் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வரலாம். இது நகங்களை மிருதுவாக்கி, மாசுக்களை நீக்கி பளபளப்பாக்கும்.

    ஆரோக்கியமான தலைமுடி, சருமம் மற்றும் நகங்களே ஆரோக்கியமான உடலை பிரதிபலிக்கும். எனவே இவைகளை இரசாயண பொருட்கள் நிறைந்த Cleanser, Toper, moisturize, Sun Screen கொண்டு பராமரிப்பதை விட இயற்கை முறையில் பராமரிப்பது சிறப்பாகும். அன்றாடம் நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு நமது அழகை பராமரிப்போம். இயற்கையோடு இயந்த அழகிய வாழ்வை பெறுவோம்.

    Next Story
    ×