search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கடல் கடந்தும்.... கலை நிகழ்ச்சிகள்...
    X

    கணவர் மகேஷ், மகன் வித்யூத்துடன் கலா.

    கடல் கடந்தும்.... கலை நிகழ்ச்சிகள்...

    • பாடலுக்கு தகுந்தாற்போல் ஆடும் திறமை மிக்கவர்களாக ஒவ்வொரு கலைஞர்களும் இருந்தார்கள்.
    • இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் பெரிய நடிகை... அப்படி... இப்படி என்று யாரும் இருக்கமாட்டார்கள்.

    கலை நிகழ்ச்சி என்றால் கலாதான் என்று சொல்லும் அளவுக்கு கலை நிகழ்ச்சிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரமாண்டங்களையும், புதுமைகளையும் கொடுத்து இருக்கிறோம்.

    இப்போது இருப்பதுபோல் தொழில்நுட்ப வசதி கிடையாது. நடிகர்-நடிகைகளுக்கு கேரவேனெல்லாம் கிடையாது. ஒத்திகை பார்க்கும் இடங்களில்தான் மேக்-அப், காஸ்ட்யூம் எல்லாம்.

    ஆனாலும் நமது கலைஞர்களிடம் இருக்கும் திறமை அலாதியானது. எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்க்க கூட நேரம் கிடைக்காமல் நேரடியாக மேடைகளுக்கு சென்றிருக்கிறோம். அதே இடத்தில் பாடலுக்கு தகுந்தாற்போல் ஆடும் திறமை மிக்கவர்களாக ஒவ்வொரு கலைஞர்களும் இருந்தார்கள்.

    சிங்கப்பூரில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி. நாங்கள் மலேசியாவில் இருந்து மாலை 3 மணிக்குதான் சிங்கப்பூர் சென்றோம். உடனடியாக சிறிதுநேரம் வேக வேகமாக ரிகர்சல் பார்த்துவிட்டு உடனடியாக மேடைக்கு போக வேண்டிய தாயிற்று. ஆனால் மேடையில் ஆடும்போது பல நாட்கள் பயிற்சி எடுத்துவிட்டு ஆடியது போல் திறமையாக ஆடி ரசிகர்களால் பாராட்டப்பட்டார்கள்.

    இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் பெரிய நடிகை... அப்படி... இப்படி என்று யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோருமே வாடி போடி என்று பேசும் அளவுக்கு உரிமை எடுத்து பேசுவார்கள்.

    குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ரோஜா, மும்தாஜ், தேவயாணி என்று ஆளாளுக்கு எதையாவது சொல்லி கலாய்த்துக்கொண்டே இருப்பார்கள்.

    அவர்களுக்கான காட்சி வந்ததும் அடித்து புரண்டு எழுந்து ஓடி சென்று மேடையில் ஆடி அசத்திவிடுவார்கள்.

    1996-ம் ஆண்டில் பெங்களூரில் உலக அழகி போட்டியை நடிகர் அமிதாப் பச்சன் நடத்தினார்.

    ஒரே மேடையில் 120 டான்சர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தினேன். 88 மாடல் அழகிகளும் மேடையில் ஒவ்வொருவராக நடந்து வரும்போது பின்னணி நடன நிகழ்ச்சியை அமைத்தோம். அதற்கான பாடல் கம்போசிங் ஒரே நாளில் செய்து நிகழ்ச்சியை நடத்தியதை பார்த்து லண்டனில் இருந்து வந்திருந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டினார்கள். தென்னிந்தியர்களின் கலைத் திறமையை பார்த்து வியந்து போனார்கள்.

    சென்னையில் 'நேற்று இன்று நாளை' என்று ஒரு ஷோவை நடத்தினோம். அதற்கு டைரக்டர் மணிரத்னம் சார். பழைய பாடலில் தொடங்கி புதிய பாடல் வரை பாடல்களை தேர்ந்தெடுத்து நடிகர்-நடிகைகளுக்கு வழங்கி இருந்தோம். எம்.ஜி.ஆர். பட பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடினார். பாடலுக்கு ஏற்றவாறு கலைஞர்களை தேர்வு செய்து காட்சியை அமைத்து இருந்தோம். இதில் புதுமை என்னவென்றால் ஒவ்வொரு பாடலுக்கும் புது புது செட் மாறும். இடைவெளி 15 நிமிடங்கள்தான் அதற்குள் அடுத்த 'செட்' தயாராகிவிடும்.

    நடிகர் பிரசாந்த் நிகழ்ச்சியில் 23 பாடல்கள். கதாநாயகன் அவர் மட்டும்தான். கதாநாயகிகள் 7 பேர். அதாவது குஷ்பு, ரம்பா, ரோஜா, தேவயாணி, மும்தாஜ், சிம்ரன், சுவலெட்சுமி! "பூவுக்குள் ஒளிந்திருக்கும்..." என்ற பாடலுக்கு 7 ஹீரோயின்களும் சேர்ந்து ஆடினார்கள்.

    நைஜீரியா, தென்னாப்பிரிக்க நாடுகளை தவிர உலகில் பெரும் பாலான நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன். பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து ஆடியிருக்கிறார்கள்.

    பெரும்பாலும் இந்த ஷோக்களை ஒரு குடும்ப நிகழ்ச்சி போலவே நடத்துவோம். ஷோக்களில் எனக்கு உதவி செய்வதற்காக எனது சகோதரிகளும் வந்து விடுவார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அத்தனை கலைஞர்களுடன் இறை வணக்கம் செய்வேன். நிகழ்ச்சி முடிந்ததும் அதேபோல் எல்லோரையும் நிற்க வைத்து பிருந்தா சுற்றி போடுவார்.

    ஒவ்வொரு ஆண்டும் அரபு நாடுகளில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஷோக்கள் இருக்கும். 1996 முதல் 2002 வரை ஓய்வே இல்லாதபடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறோம். 1500-க்கும் மேற்பட்ட ஷோக்களை நடத்திய பெருமை எனக்கு கிடைத்தது.

    மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. இப்போது அந்த அளவு ரிஸ்க் எடுத்து யாரும் நடத்த முன் வருவதுமில்லை.

    மறக்க முடியாத நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து அவர்கள் மனதில் இடம்பிடித்ததும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவருடனும் பணியாற்றிய அனுபவமும் என்றும் என்னால் மறக்க முடியாதவை.

    இதுவும் படிப்பு மாதிரி தான். நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அதற்கு படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது இருந்த டிரெண்ட் வேறு, இப்போது உள்ள டிரெண்ட் வேறு. நான் பெரிய படம் சின்ன படம் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். சின்ன படங்கள் பண்ணும்போது பெரிய படங்களே கைவிட்டுப் போயுள்ளது. என்னைப் பொறுத்தவரை பிசியாக இருக்கணும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்கள் பண்ணியிருக்கிறேன். எனக்கு டான்ஸ் பிடிக்கும். பிடிச்ச விஷ யத்தைப் பண்ணும்போது நேரம் காலம் பார்க்காமல் உழைப்பேன். சில வருடங்கள் ஐதராபாத், கேரளா என்று மாறிக்கொண்டே இருந்தேன். என்னுடைய தொடர் உழைப்பு தான் தொடர் பயணத்தை தக்க வைக்கிறது.

    என்னுடைய நடனத்தை மற்றவர் ஆடும்போது ரசிப்பேன். என்னுடைய நடனத்தில் பரதம் , போக் அதிகம் இருக்கும். அதை நடிகைகள் அப்படியே என்னுடைய பாடி ஸ்டைலில் பண்ணும்போது சந்தோஷமாக இருக்கும்.

    கலைத்துறையில் எனக்கு பிடித்தது டான்ஸ் தான். டைரக்ஷனில் எனக்கு ஆர்வம் கிடையாது அப்படியே பண்ணினாலும் டான்ஸ் முக்கியத்துவம் உள்ள ஒரு படம் மட்டுமே பண்ணுவேன்.

    பிரபல இயக்குனர்கள் பலர் என்னை நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் மறுத்துவிட்டேன். நயன்தாராவிடம் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அந்த நட்பில் ஒரு நாள் போன் பண்ணி 'விக்கி பேச வேண்டுமாம்' என்று விக்னேஷ்சிவனிடம் போனை கொடுத்தார். 'கதை எழுதும்போது உங்களை வைத்து எழுதினேன். மறுக்காமல் நடிக்க வேண்டும்' என்று அவுட் லைன் சொன்னார். 'எனக்கு டான்ஸ் போதும். மனப்பாடம் பண்ணி என்னால் டயலாக் பேச முடியாது' என்று சொன்னேன்.

    அவர் டைம் கொடுத்து யோசித்து முடிவை சொல்லச் சொன்னார். இரண்டு நாள் கழித்து, நயன்தாராவுக்கு போன் பண்ணி ஓகே சொன்னேன். படத்துல எனக்கு காமெடி கலந்த அழகான கேரக்டர். விஜய் சேதுபதி, சமந்தா காம்பினேஷனுடன் "காத்து வாக்கில் இரண்டு காதல்" என்ற படத்தில் நடித்தது அருமையான அனுபவம்.

    உழைப்பு, கிரியேட்டிவிட்டி, நேர நிர்வாகம் இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம். இது வரை அப்படித்தான் இருக்கிறேன்.

    ஆடிய காலும், பாடிய வாயும் நிற்காது என்பார்கள். அதேபோல்தான் எனது கலைப் பயணமும்...

    (முற்றும்)

    Next Story
    ×