search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அம்மாவும்  செர்ரி பிளாசமும்
    X

    அம்மாவும் செர்ரி பிளாசமும்

    • செர்ரி பிளாசம்! எத்தனை அழகான பேரு பாரு!
    • ஜப்பானிய செர்ரி அல்லது சகுரா என்றும் அழைக்கப்படுகிறது.

    "தினோம் ஷூவுக்கு பாலிஷ் போடுக்கணும். ஒரு சின்ன பொட்டு புழுதி இருந்தாலும் முட்டி போட வெப்பேன்"

    -என். சி. சி. மாஸ்டர் விஜயசீலன் உறுமுவார்.

    அம்மாவைப்படுத்தி எடுத்து அந்த அமுதா காப்பிக்கொட்டைக்கடைக்கு அடுத்து இருக்குமே, சின்ன செருப்பு கடை, ஓனர் பையனா, ஆளா என்று சொல்ல முடியாத உயரமும் ஒல்லியுமாய் இருப்பாரே, அங்கு போய் வாங்கின ஷூ பாலிஷ் பெயர் செர்ரி பிளாசம்.

    தட்டையான வட்ட வடிவ டப்பா. மேல் மூடியில் ஆட்டின் வடிவ துக்கினியூண்டு துருத்திக்கொண்டு இருக்குமே, அதை உவப்பாக டப்பென்று திருப்பினால் மூடி கழண்டுகொண்டு விடும். ஜாக்கிரதையாகத் திறக்க வேண்டும். கையெல்லாம் ஈஷிவிடும்.

    புதிதாய் வாங்கின ஷோக்கில் நானே அவசர அவசரமாகத் திறந்து துணியை வைத்து அதன் ராயச வழுவழுப்பில் தீய்த்து ஷூவில் காமாசோமாவெனப் போட்டுவிட்டேன்.

    "என்ன அவசரம் உனக்கு! நாந்தான் வரேன்னு சொன்னேனே! இதுக்குப்பேரு பாலிஷ் போடறதா? என்னடா இது.. மாடு கன்னுக்குட்டி பிரசவித்த எடம் மாதிரி பண்ணிவெச்சிருக்கே!"

    "எல்லாம் நல்லாத்தான் போட்டிருக்கேன்!"

    "ஆமா! போட்டே! சட்டையப்பாரு!"

    பார்த்தால் தொப்பைக்குக்கு மேலே சட்டையில் தார் கொட்டினா மாதிரி பாலிஷ் பரவி.....

    அய்யய்யோ!

    "செர்ரி பிளாசம்! எத்தனை அழகான பேரு பாரு!

    அந்த பூ கூட ரொம்ப அழகா இருக்குமாம். வாசனையாக்கூட இருக்கும்னு நெனக்கறேன். ஒரு தரமாவது இந்த செர்ரி பிளாசம் பூவை பார்த்துடணும்!

    சரி சரி, என்ன பண்ணியிருக்க நீ? அந்த ஷூ பாலிஷை இப்படி சட்டை மேல பரப்பிண்ட்டு..! படவா! இன்னும் ரெண்டுமாசம் வரைக்கும் இதத்தான் போட்டுண்டு போயாகணும்! இன்னமே தீபாவளி அப்பத்தான் வாங்கிக்கொடுப்பேன்!"

    அம்மாவை கவர்ந்திருந்த அந்த செர்ரி பிளாசம் பேர் கொண்ட பாலீஷை ஒன்றிரண்டு முறை போட்டதோடு சரி.

    என்.சி.சி.யையே நிறுத்திவிட்டேன். அந்த அகால நிறுத்தத்தின் சுவாரஸ்யமான காரணம் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.

    போன வருடம் ஜெர்மனி போயிருந்தபோது பவேரிய நகரமான மியூனிக்கில் இருந்து பார்ட்னா கிளம் என்று என்னால் சரியாக உச்சரிக்க முடியாத ஒரு இடத்திற்கு மகனுடன் பிக்னிக் போனோம்.

    சரியாக பன்னிரெண்டு பத்துக்கு, அப்புறம் மூணு இருவத்தைந்துக்கு என்றெல்லம் முன் நோட்டீஸ் கொடுத்து நேரம் தவறாமல் மழையும் இடியுடன் கூடிய சூறைக்காற்றும் அடிக்க, நாங்கள் பாட்டுக்கு அந்த பச்சை சோலை ரகசியத்தின் ஊடே வேடிக்கை பார்த்துக்கொண்டே போனோம்.

    "என்னடா மழை சூறைக்காத்துங்கறானே" என்றெல்லாம் விசனப்படவே கூடாது. திடீரென்று ஒரு திருப்பத்தில் சின்ன ஊர் தென்பட்டு அதன் ஆரம்பத்தில் ஒரு சில வீடுகளும் வாசலில் பி.எம்.டபிள்யூ. கார்களும், ராட்சச டிராக்டரும் எதிரேயே ஒரு பியர் கார்ட்டென் என்னும் பியர் கடையும் இருக்கும் அதை விடுங்கள், அந்த ஊரில் சுள்ளென்று ஜில்லாக வெயில் அடிக்கும். அந்த வெயிலுக்கு நடுவே நீங்கள் போட்டோவில் காணும் மரங்கள் பூத்துக்குலுங்கும்.

    "என்ன இப்படி பூவா மிளிருதே என்று ஒரு திருப்பத்தில் அந்த ஜெர்மன் பெண்மணி கூட குட்டை பிராக் போட்டுண்டு என் சைசில் இருக்கும் ஒரு நாயை வாக்கிங் அழைத்துக்கொண்டு போனாளே – அந்த திருப்பத்தில் அதே மாதிரி பூத்துக்குலுங்கின மரங்களைப்பார்த்துவிட்டு மகனிடம் கேட்டேன்..

    "என்ன மரம் இது? இப்படி பூத்துச்சொரியுது?"

    "அதுவா செர்ரி பிளாசம்ப்பா!"

    ஓ இதுதானா செர்ரி பிளாசம்!

    செர்ரி பிளாசம் , ஜப்பானிய செர்ரி அல்லது சகுரா என்றும் அழைக்கப்படுகிறது. இது புரூனஸ் அல்லது புரூனஸ் துணை இனத்தைச் சேர்ந்த பல மரங்களின் பூவாகும் . செராசஸ் , செர்ரி மரத்தின் காட்டு இனங்கள் சீனா, கொரியா மற்றும் குறிப்பாக ஜப்பான் உட்பட கிழக்கு ஆசியாவில் இவை பொதுவானவை. அவை பொதுவாக அலங்கார செர்ரி மரங்களைக் குறிக்கின்றன, சாப்பிடுவதற்கு பழங்களை உற்பத்தி செய்யும் செர்ரி மரங்களை அல்ல . செர்ரி மலர் ஜப்பானின் தேசிய மலராகக் கருதப்படுகிறது .

    ஐரோப்பாவில் , 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஆங்கிலேயரான காலிங்வுட் இங்க்ராம், ஜப்பானிய செர்ரி மலர்களைச் சேகரித்து ஆய்வு செய்தார், பல்வேறு அலங்கார சாகுபடிகளை உருவாக்கினார், அந்தக்காலங்களிலேயே செர்ரி மலரைப் பார்க்கும் கலாச்சாரம் பரவத் தொடங்கியது.

    1912-ம் ஆண்டு நட்பின் அடையாளமாக ஜப்பான் செர்ரி மலர்களை வழங்கிய பிறகு, அமெரிக்காவில் செர்ரி மலரைப் பார்ப்பது பரவத் தொடங்கியது.

    செர்ரி மலர்கள் அழகான வாசனையைக் கொண்டிருப்ப தாகவும், பல மெழுகுவர்த்திகள் மற்றும் தூபங்கள் வீட்டு உபயோகத்திற்கு உத்வேகமாக இருப்பதாகவும் இருக்கின்றன.

    வழி நெடுக அந்த செர்ரி மரங்களின் பூக்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். குப்பென்று வசந்த காலத்திற்காய் பூத்துக்குலுங்கும் இந்த செர்ரி மரங்களைப் பார்க்கும்போது கடைசி வரை செர்ரி பிளாசம் பூக்களை நேரில் பார்க்காமலேயே இறந்து போய் விட்ட என் அம்மாவை நினைத்துக்கொண்டேன்......

    அம்மாவும் செர்ரி பிளாசமும் எப்போதும் அழகுதானே!

    Next Story
    ×