search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஜெர்மனியில் சில சுவாரஸ்யங்கள்
    X

    ஜெர்மனியில் சில சுவாரஸ்யங்கள்

    • இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்சீ, ஜெர்மானிய சத்தம் கிம்சே, என்னும் மகா பெரிய ஏரிக்குப்போயிருந்தோம்.
    • நான் அங்கே இருந்தபோது பல நாட்கள் நடந்த இன்பமான வழக்கம் இது!

    போன வருடம் நான் ஜெர்மனிக்குப்போயிருந்தபோது ஒருவர் மூன்று தினங்களாக மாலை எட்டிலேர்ந்து எட்டரைக்குள் வருவேன் என்று சொல்லிவிட்டு சரியான நேரத்துக்கு வந்து, சரியான நேரத்துக்குப்போனார்.

    யார்?

    சொல்கிறேன்…

    மேற்குப்பக்கம் மெதுவாக நமக்கு பிரக்ஞையே ஏற்படாமல் ஒருவித அமானுஷ்ய திதியில் கரு மேகங்கள் கூட ஆரம்பிக்கின்றன. ஏதோ ஒரு உந்துதலில் நாம் மேலே பார்க்கும்போது ஒரு சில மேகங்கள் சாதுவாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு குழு அமைக்கின்றன. சட்டென்ற ஒரு நிமிஷத்தில் காற்று தன் ஈரப்பதத்தை அதிகரித்துக்கொண்டு ஒரு வீசு வீசுகிறது. மரங்கள் "அட ச்சே மறுபடியுமா" என்னும் அலுப்பில் சில இலைகளை உதிர்த்துவிட்டு அமைதியாகப்பார்க்கின்றன.

    முதல் மழைத்துளி நம் மூக்கின் மேல் விழுகிறது.

    "ஓ மழை வருதா?"

    இந்த "தா" வை முடிப்பதற்குள் ஏழெட்டு துளிகள். "உள்ளேன் அய்யா" என்று கொஞ்சம் வயது முதிர்ந்த கனமான காற்று ஒரு பெரிய வாரலுடன் நம்மைக்கடக்கின்றது. சடசடவென மழை. "இப்ப நான்" என்று காற்று. நேர் கோட்டு மழை கொஞ்சம் காற்றில் வளைந்து எல்லிப்டிகலாகி, மறுபடியும் நேர்கோடு. இப்போது காற்றும் மழையும் ஒரு சேர வீச்சு. எங்கிருந்தோ இந்தக் குதூகலத்தில் சேர்ந்துகொள்ளும் இன்னும் கொஞ்சம் கரு மேகம்.

    "சரி, இனி என் முறை!" என்றபடி கீழ் வானத்தில் ஒரு சின்ன மின்னல் கோடு. அந்தக்கோட்டின் கடைசி பாயிண்ட்டைப்பிடித்தபடி ஒரு சைக்கடெலிக் வண்ணக்கோடுகள். கண்ணில் தெறிக்கிற கூர்மையான வெளிச்சம். ஓரிரு நொடி அமைதி. எங்கோ ஆரம்பித்து நம்மை நோக்கி ஆக்ரோசமாக உருண்டு வரும் இடியோசை. நம் தலைக்கு மேல் படாரென வெடித்து, மீண்டும் எங்கோ உருண்டோடி அமைதி. மழை வலுக்கிறது. காற்றும் கூடத்தான்.

    கையில் டீயுடனும் சீஸ் க்ரேக்கர் பிஸ்கெட்டுடனும் நாம் இந்த ஜாலத்தை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோமானால், நாம் அறியாத ஒரு நிமிஷத்தில் சட்டென்று மழை நிற்க, காற்றும் "அடப்போடா" என்று போய் விட, அப்பப்போ மின்னல் மட்டும் சில கீற்றுக்களைத்தவழ விட்டு பெட்ரோல் தீர்ந்த எஞ்சின் போல சில சில்லரை இடிகள், அப்புறம்..மறுபடி வெளிச்சம், மறுபடி இதமான சில் காற்று. வானம்..துல்லிய நீலம்.

    "டைம் எட்டரையாச்சாப்பா?"

    மகன் கேட்கிறான்.

    வாட்ச் பார்த்து நான், "சரியா எட்டரை!"

    அதான் ஸ்டார்ம் போயிடுத்து! இன்னிக்கு வெதர்ல போட்டிருந்தான், எட்டிலேர்ந்து எட்டரை வரைக்கும்னு!"

    அடப்பாவிகளா!

    மழையும் புயலும்கூட அப்பாயிண்ட்மெண்ட்டில் வருகிற ஊரா இது!

    நான் அங்கே இருந்தபோது பல நாட்கள் நடந்த இன்பமான வழக்கம் இது!

    இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்சீ, ஜெர்மானிய சத்தம் கிம்சே, என்னும் மகா பெரிய ஏரிக்குப்போயிருந்தோம். 10,000 வருஷங்களுக்கு முன்னால் ஐஸ் ஏஜ் (பனிக்காலம்) இன் இறுதியில் பனிக்கட்டியினால் உருவான இந்த ஏரி பிரிஅல்பின் என்று சொல்லப்படுகிறது. அந்த யுகத்தில் 240 சதுர கிலோமீட்டர் இருந்த ஏரி இப்போது 80 சதுர கிலோமீட்டராகச்சுருங்கி விட்டதன் காரணம் நிலத்தை எடுத்துக்கொண்டதால் என்கிறார்கள்.

    இந்த மகா பெரிய ஏரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல முயற்சிகள் செய்திருக்கிறார்கள். சூழலைப்பாதுகாக்க இங்கே ஓடும் படகுகள் பாட்டரியில் செலுத்துபவை. இவைகூட மிதமான வேகத்தில், அதிக சப்தம் இன்றி ஒரு காஸ்மோலாசிக்கல் ஸ்டில்நெஸ்க்கு நடுவில்தான் ஓடுகின்றன.இதை விட்டால் தனியார்களின் துடுப்பு படகுதான்.

    சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைகள் பிரம்மாண்டமாக எழும்பியிருக்க இடையிடையே தெரியும் நீலவானம், சம்மரிலும் கரையாத பனி படர்ந்த மலைச்சிகரங்கள், ஓங்கி உயர்ந்த கானிபெரஸ் காடுகள், மேப்பிள், பைன் மரங்களின் பச்சை. ஏரியில் நடுவில் ஒரு இடத்தில் படகின் எஞ்சினை நிறுத்திவிட, எங்கும் துல்லியமான அமைதி. சாவைப்போல அமைதி. படகு ஓட்டும் அந்த வெயிஸ்ட் கோட் ஆசாமி சட்டென்று அலங்காரப்பெட்டியிலிருந்து ஒரு டிரம்பெட்டை எடுத்து படகின் மேல் பகுதிக்குப்போய் என்னமோ சோகமான பாடல் வரிகளை வாசிக்க, எங்கும் அமைதி. ஓரிரு வினாடிகள் நிறுத்துகிறார். மறுபடி அமைதி. அதோ அந்த மலையிடையெ பனிகளுக்கு நடுவே புகுந்து.. அதே இசை மீண்டும் எதிரொலியாகக்கேட்க ஆரம்பிக்கும் கணம் ..எந்த ஒரு நாத்திகனும் கடவுள் நம்பிக்கை பெறும் கணம் என்பது என் கணிப்பு.

    கோனிக்ஸே என்னும் இன்னொரு பெரிய ஏரி. கோனிக் என்றால் ஜெர்மனில் ராஜாவாம், மன்னராம்! ஏரி என்றால் நீலத்தண்ணி மட்டுமில்லை. சுற்றிலும் பவேரியன் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், ஆங்காங்கே பனி படர்ந்து ராட்சச குணம் காட்டும் மேகத்திரைக்கு நடுவே பச்சை ரகசியம், காதுக்குள் ஜிவ்வென்னும் சில் காற்று தலையைக்கலைக்கும் விஷமம், துளிக்கூட குப்பை ஏதும் இல்லாத ஸ்வச் பவேரியா, அமைதியாக நம்மைக்கடத்தும் எலெக்ட்ரிக் படகுகள், தூரத்தே ஊடாடும் வெள்ளை பாய்மரத் துணிகள் வைத்த உல்லாச ஆசாமிப்படகுகள், கூடவே கச்சிதமாக சினேகிதிகள், நம்மைப்போல கூட்டங்கூட்டமாய் டூரிஸ்டுகள். பாதிப்பேர் கிழங்கட்டைகள், பலர் துணைவியுடன் கூடவே ஒரு ஸ்ட்ராலரில் கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப்பர்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள். வெறும் ஜட்டியுடன் மேலே ஒன்றுமில்லாமல், இருங்கள், இருங்கள், சின்னச்சின்னக்குழந்தைகள், ஸ், அப்பாடா, ஏரிக்கரையில் கால்களையும் பிருஷ்டத்தையும் நனைத்து விளையாடுகிறார்கள்.

    இந்த கோனிக்சீ ஏரியுமே ஆல்ப்சின் பனியிலிருந்து உருகி வந்ததாம். இந்தப்பக்கம் ஜெர்மனியின் பிரீஸ்டெஸ்காடன் என்னும் பெரிய பார்க்கும், அந்தப்பக்கம் ஆஸ்திரியாவின் ஸால்ஸ்பர்க்குக்கும், ஆம், பிரபல இசை மேதையான மோஸார்ட்டின் ஊரேதான், இடையே இருக்கின்றது. இங்கே வருவதற்கு 1965 வரை ரெயில்வே சர்வீஸ் இருந்திருக்கிறது. இப்போது பிரீஸ்டெஸ்காடன் ஸ்டேஷனில் பர்கர், பீட்சா, கோதுமை பியர் என்று சாப்பாட்டுக்கடையாக்கி விட்டார்கள். ஹிட்லர் காலத்திய கொடூர டக்காவ் (Dachau) கான்சன்ட்ரேஷன் கேம்ப்பின் (அகதிகள் முகாம்) துணை முகாம் இங்கே இருந்திருக்கிறது. அருகாமையிலேயே ஹிட்லரின் இடதோ வலதோ கையான ஹிட்லர் தன்னுடைய சின்ன வீடு ஒன்றை இங்கே வைத்திருந்தார் என்று பராபரியாக காதில் விழுகிறது!

    "இந்த ஏரி என்ன ஆழம் இருக்கும்?"

    "தெரியாது!"

    "பனிக்காலத்தில் உறைந்து விடுமோ?"

    "நிச்சயமா"

    "அப்ப அது மேல நடக்கலாமா?"

    "தெரியாது! ஆனா 1997-ல் இந்த ஏரியில நூறு அடி ஆழத்துல போல்க்ஸ்வேகன் காருடன் ஒரு ஆசாமி கண்டெடுக்கப்பட்டார்!"

    "அடேடே, கொஞ்சம் முன்னே தெரிஞ்சிருந்தா அவரைக்காப்பாத்தியிருக்கலாமோ!"

    "இல்ல, கஷ்டம்தான்!:

    "அப்படியா ஏன்?"

    "அவர் 1964-ல் இதுக்குள விழுந்தாருன்னு சொல்றாய்ங்க!"

    இத்துடன் நான் மவுனமாகி, படகில் வந்த இங்கிலிஷ் தெரிந்த குறுந்தாடியுடனான என் உரையாடல் முற்றுப்பெற்றது!

    Next Story
    ×