search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    விந்தை வடிவினளாம் விநாயகி
    X

    விந்தை வடிவினளாம் விநாயகி

    • சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கும் விநாயகி, பார்ப்பதற்குக் கொள்ளை அழகு.
    • ஆற்றல் சக்தியின் அவதாரமான விநாயகி, அருள் வழங்கக் காத்திருக்கிறாள்.

    அம்பாளின் செல்லப் புதல்வர் விநாயகர் என்பது தெரியும். விநாயகரே பெண் வடிவம் பூண்டால்...?

    விநாயகி, விநாயகனி, வைநாயகனி போன்ற பெயர்கள் ஒரு சில கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் காணப்படுகின்றன.

    விநாயகி எப்படி இருப்பாள்?

    தமிழ்நாட்டிலேயே சிற்சில இடங்களில் விநாயகி எழுந்தருளியிருக்கிறாள். சுசீந்தரம் தாணுமாலயன் ஆலயத்தில், வடகிழக்குப் பகுதியில், அமர்ந்த திருக்கோலநாயகியாக இவளைக் காணலாம். கால்களை மடித்து அமர்ந்த சுகாசனம்; நான்குத் திருக்கரங்கள், கரங்களில் சங்கும், தண்டமும், கோடரியும், குவளையும் தாங்கப்பட்டிருக்க, ஒடிசலான, எனினும் ஒய்யாரமான திருமேனி, தலையும் முகமும் பெயருக்கேற்றாற்போல், யானையை ஒத்தவை. சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கும் விநாயகி, பார்ப்பதற்குக் கொள்ளை அழகு.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும், புடைப்புச் சிற்பமாக, விநாயகி எழுந்தருளியிருக்கிறாள். நின்ற திருக்கோலம். கால்கள், புலிக் கால்களாக இருப்பதால், வியாக்ரபாத கணேசனி (வியாக்ர=புலி, பாத=கால்) என்றழைக்கப்படுகிறாள். வாலை லேசாக மேல் தூக்கியபடி, ஒய்யாரமாகத் திரும்பியிருக்கிறாள். கரங்களில் பாசமும் அங்குசமும் காணப்படுகின்றன.

    விநாயகரின் திருவாட்டியாகவும், சக்தி அம்சமாகவும் கருதப்படுகிற இப்பெண் வடிவிற்கு, இன்னும் சில திருநாமங்களும் உண்டு. அநேகமாக, விநாயகர் அல்லது கணேசர் என்னும் ஆண்பால் பெயரைச் சற்றே மாற்றினவாகவே இப்பெயர்கள் உள்ளன. கணேசனி, கஜானனி, கஜரூபா, கஜரூபிணி, விக்னேசனி, விக்னேஸ்வரீ, கணேசீ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    மத்ஸ்ய புராணத்திலும், இன்னும் சில புராணங்களிலும், விநாயகருக்கு மனைவி உண்டென்றும், இவளே விநாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில், பேராகட் என்னும் இடத்தில், கவுரிசங்கர் கோவிலில், பெண் வடிவ விநாயகி தோற்றம் தருகிறாள். இடது காலை மடித்தும் வலது காலைத் தொங்கவிட்டும் அமர்ந்திருக்கும் இவள், கழுத்தில் ஆரமும் இடையில் மேகலாபரணமும் கால்களில் சிலம்பும் அணிந்திருக்கிறாள். மெலிந்த இடையும் திரட்சியான தனங்களும், நான்குத் திருக்கரங்களும் கொண்ட இவளை கணேசனி அல்லது கணேசாயனி என்றே வழங்குகிறார்கள். இவளின் தும்பிக்கை இடம்புரியாக மடிந்துள்ளது.

    ஒடிசாவில், ஹிராபூர் என்னும் ஊருக்கு அருகில், சவுசத் யோகினித் கோவிலில், நின்ற கோல கணேசனி எழுந்தருளியிருக்கிறாள். இரண்டுத் திருக்கரங்கள், நேராகப் பார்த்தபடி நிற்கிறாள்; ஒய்யாரமாகச் சாய்ந்த திரிபங்கி வடிவம். வராகம் ஒன்றின் மீது இவள் நின்றிருப்பதைக் கண்டால், பாதவிரல்கள் லேசாக வளைந்து இவள் நாட்டியமாடுவது தெரியும்.

    மத்தியபிரதேசத்தின் ஹிங்கலஜாத் பகுதியில், அமர்ந்த கோலத்தில் அபயம் காட்டியபடி இருக்கிறாள்.

    கணேசனி என்னும் பெண், எவ்வாறு அவதாரம் எடுத்தாள் என்பதைப் பற்றிய சுவாரசியமான கதைகள் உண்டு. அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காகப் பார்வதி தேவி சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, தன்னைப் பற்பல வடிவங்களாக அந்த அரக்கன் பல்கிப் பெருக்கிக் கொண்டான்.

    அவனை எவ்வாறு எதிர்ப்பது என்று தெரியாமல் தயங்கிய பார்வதி தேவியார், ஒரு கணம் யோசித்தபின், அனைத்து தெய்வங்களின் ஆற்றல் சக்திகளையும் பெண் வடிவில் வரச் சொல்லிக் கேட்டாள். விஷ்ணுவின் வைஷ்ணவியாக, பிரம்மாவின் சக்தி பிராக்மியாக, குமாரனின் சக்தி கவுமாரியாக, இந்திரனின் சக்தி ஐந்திரியாக, இவ்வாறு ஒவ்வொரு தெய்வத்தின் சக்தியும் ஒவ்வொரு பெண்ணாக உருமாறி வந்தன. அனைத்து பெண் சக்திகளும் ஒன்றுதிரண்டு எடுத்த வடிவமே விநாயகி அல்லது கணேசனி.

    வெளிநாடுகளில்கூட கணேசனி உண்டு. திபெத் நாட்டில் கணேசனியாகக் காட்சியளிக்கும் இவள், ஜப்பானில் அர்த்தநாரி வடிவம் கொள்கிறாள். ஷோடனீ என்றும் இவளுக்கொரு பெயருண்டு.

    விநாயக சதுர்த்தி போலவே, விநாயகி சதுர்த்தி உண்டா?

    உண்டு. திங்கள்தோறும், அதாவது மாதம் தோறும், அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தி நாள் (நான்காம் நாள்) விநாயகி சதுர்த்தியாகக் கருதப்படுகிறது. மாதந்தோறும் எப்படிப் பிறந்தநாள் வரும்? ஆற்றல் வடிவம்தான், விநாயகி. ஆற்றல் என்பது எல்லாவற்றுக்கும் தேவை. சராசரி மனிதர்களான நாம் மூச்சு விடுவதற்கும், பேசுவதற்கும், அசைவதற்கும் ஆற்றல் தேவை. இவ்வளவென்ன? கைகால்களை அசைக்காமல், மூச்சைக் கட்டுப்படுத்தி அமர்ந்தால், அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கும் அமர்வதற்கும்கூட ஆற்றல் அவசியம்.

    இதைவிட முக்கியம், புற அசைவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டாலும், அக அசைவான சிந்தனைகளுக்கும், சிந்திப்பதற்கும் ஆற்றல் தேவை. ஆக, ஆற்றல் என்பது எப்போதும் தேவை. ஆற்றல் சக்தியான விநாயகிக்குத் திங்கள்தோறும் சதுர்த்தித் திருநாள்.

    அநேகமாக நான்குத் திருக்கரங்கள் கொண்டிருக்கும் கணேசனி, நான்கிலும் பலவகை ஆயுதங்களைத் தாங்கியிருப்பாள். வேறெந்த ஆயுதமும் இல்லையென்றாலும், அங்குசமோ கோடரியோ தாங்கியிருப்பாள். தேவையற்ற கட்டுகளை வெட்டுவதற்கும், தீமைகளை வெட்டிப் புறந்தள்ளுவதற்கும் இவற்றைப் பயன்படுத்துகிறாள்.

    சிற்ப சாத்திர நூல்கள், யானைத் தலையும், அழகிய இடையும், பருத்த தனங்களும், சற்றே சாய்ந்து பெருத்த வயிறும், ஒய்யாரத் தோற்றமும், அனைவரையும் கவர்கிற வசீகரமும் கொண்டவள் விநாயகி என்று வரையறுக்கின்றன.

    ஆற்றல் சக்தியின் அவதாரமான விநாயகி, அருள் வழங்கக் காத்திருக்கிறாள். அன்னை இவளை வணங்குவோம், அனைத்து நலங்களும் பெறுவோம்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    Next Story
    ×