search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திதிகளின் பயன்பாடுகள்
    X

    திதிகளின் பயன்பாடுகள்

    • திதி என்பது வானில் சூரியன் மற்றும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.
    • திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்பதால் சூன்யம் அடைந்த திதியின் அதி தேவதையை வழிபடலாம்.

    தினமும் பஞ்ச அங்கங்களான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் பற்றி தெரிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அளவிட முடியாது. பஞ்சாங்கத்தின் முதல் அங்கமான திதி சில குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்த உகந்ததாகும். மேலும் திதி செல்வ விருத்தியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஒருவரின் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ள திதித் தேவதைகளை பிறந்த திதி வரும் நாளில் வணங்குவதால் அளப்பரிய நல்ல பலன்கள் நடக்கும். இந்த கட்டுரையில் திதிகளைப் பற்றிய சில தகவல்களைக் காணலாம்.

    திதி என்பது வானில் சூரியன் மற்றும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேர் எதிரில் 180 டிகிரியில் இருப்பார்கள். சூரியன், சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகி செல்கிறார்கள் என்பதை குறிப்பதே திதியாகும். அமாவாசையன்று சேர்ந்து இருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமையன்று பிரிந்து மீண்டும் சேர்வதற்கு 30 நாட்களாகும். இந்த 30 நாட்களும் 30 திதியாகும். அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் (15 நாட்கள்) தொடங்கி பவுர்ணமி வரை சுக்லபட்ச திதிகள் (வளர்பிறை) பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசைக்கு முந்தைய நாள் வரை கிருஷ்ண பட்ச திதிகள் (15 நாட்கள் ) (தேய்பிறை) என்றும் அழைக்கப்படும். ஆக மொத்தம் 30 திதிகள்.

    பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை குறிப்பது திதி. ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உறவுமுறை பேணுவதில் அவருக்கு உண்டான தகுதியை சுட்டிக்காட்டும். திதி சந்திரனின் நாளாகும். பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்தத் திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதிகளுக்கு ஏற்ற காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு.

    பிரதமை:

    இந்த திதியின் அதிதேவதை அக்னி என்பதால் அக்னி சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகந்தது. திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யக் கூடாது. இந்த திதியில் பிறந்தவர்கள் சிவ பெருமானை வழிபட வேண்டும். துலாம், மகரம் ராசியினருக்கு இது சூன்ய திதி என்பதால் முக்கிய பணிகளை தவிர்க்கலாம்.

    துவிதியை:

    இந்த திதியின் அதிதேவதை பிரம்மன். அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம் ஆடை, அணிகலன்கள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டிட அடிக்கல் நாட்டலாம். நிரந்தரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அம்பிகை யை வழிபட முன்னேற்றமான பலன் உண்டு. தனுசு, மீனம் ராசியினருக்கு இது சூன்ய திதி என்பதால் நன்மை தராது.

    திருதியை:

    இதன் அதிதேவதை கவுரி (பராசக்தி). சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி. குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்க லாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அம்மனை வழிபடுவது சிறப்பு. சிம்மம், மகர ராசியினருக்கு சூன்ய திதி என்பதால் கவனமாக செயல் பட வேண்டும்.

    சதுர்த்தி :

    இதன் அதிதேவதை விநாயகர். முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். ரிஷப, கும்ப ராசியினர் இந்த திதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பஞ்சமி:

    இதன் அதிதேவதை நாகம் என்பதால் இது நாக வழிபாட்டுக்கு உகந்த திதியாகும். நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வழிபட்டால், நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி மிக விசேஷமானது. எல்லா சுப காரியங்களையும் செய்ய ஏற்ற திதியாகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதியில் புற்று வழிபாடு செய்வது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியினருக்கு பஞ்சமி திதி சிறப்பான பலன் தராது.

    சஷ்டி:

    இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன். முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட சகல நலன்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். மேஷம், சிம்ம ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய திதியாகும்.

    சப்தமி:

    இதன் அதிதேவதை சூரியன் என்பதால் இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும். பயணம் மேற்கொள்ள உகந்த திதி. இதில் வீடு, வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்யலாம். ஆடை, ஆபரணங்கள் இசைக்கருவிகள் வாங்கலாம். தனுசு, கடக ராசியினருக்கு சூன்ய பலன்களை வழங்கும் திதியாகும்.

    அஷ்டமி:

    ஐந்து முகம் கொண்ட ருத்ரன் இதற்கு அதிதேவதை என்பதால் தீராத பிரச்சினைக்கு இந்த நாளில் சிவ வழிபாடு செய்யலாம். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவர்கள் சிவ பெருமானை வணங்குவது நன்மை இரட்டிப்பாகும். மிதுனம்,கன்னி ராசிக்கு இந்த திதி நன்மை தராது.

    நவமி:

    இந்த திதியின் அதிதேவதை அம்பிகை என்பதால் சத்ரு ஜெயம் உண்டாகும். சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் ஸ்ரீ ராமரை வணங்கலாம். சிம்ம, விருச்சிக ராசிக்கு சூன்ய திதி என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    தசமி:

    இந்தத் திதிக்கு அதி தேவதை எமதர்மராஜன். அனைத்து விதமான சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப் பயணங்களுக்கு உகந்த நாளிது. கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் சக்தி வழிபாடு செய்யலாம். சிம்மம், விருச்சிக ராசிக்கு இந்த திதி சுப பலன் தராது.

    ஏகாதசி:

    இதன் அதிதேவதை மகா விஷ்ணு ஆவார். விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

    இதில் பிறந்தவர்கள் பெருமாளை வழிபடலாம். தனுசு, மீனம் ராசியினர் இந்த திதியை விலக்குவது நல்லது.

    துவாதசி:

    இதன் அதிதேவதை விஷ்ணு ஆவார்.மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணுவை வணங்க காரிய சித்தி உண்டாகும். துலாம்,மகரம் ராசியினருக்கு இந்த திதி சூன்ய பலன் வழங்கும்.

    திரயோதசி:

    இதன் அதிதேவதை நந்தி தேவர். இந்த திதியினர் சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.ரிஷபம், சிம்ம ராசிக்கு இந்த திதி சிறப்பான பலன் வழங்காது.

    சதுர்த்தசி:

    இந்த திதியின் அதிதேவதை காளி, ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுக்கலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் பைரவர், காளி போன்ற தெய்வங்களை வணங்கலாம். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்கு இந்த திதி சூன்ய பலன்களை வழங்கும்.

    பவுர்ணமி:

    இதன் அதிதேவதை பராசக்தி. மங்கள காரியங்களில் ஈடுபடலாம். காரியசித்தி தரும் விரதங்களை மேற்கொள்ளலாம். இந்த திதி அனைத்து ராசிக்கும் பயன்படும்.

    அமாவாசை : இதன் அதிதேவதை சிவன், சக்தி.பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான,தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். இந்த திதி அனைத்து ராசிக்கும் பயன்படும்.

    திதிகளை சுப , அசுப மற்றும் மத்திம திதிகள் என மூன்றாக வகைப்படுத்தலாம். துவிதியை திருதியை, பஞ்சமி, தசமி, திரயோதசி , சதுர்த்தசி ஆகிய திதிகள் சுப நிகழ்வுகளுக்கு மிக மிக உன்னதமானது.பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகளில் அசுபத்துவம் நிறைந்து இருப்பதால் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். சஷ்டி, சப்தமி , ஏகாதசி, துவாதசி, மற்றும் சதுர்த்தசி ஆகியவை மத்திமமான திதிகள் என்பதால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தலாம்.

    திதி சூன்யம்

    சூரிய சந்திரர்களின் கதிர்வீச்சுகள் 12 ராசிகளுக்கும் பரிபூரணமாக கிடைக்கும் போது மட்டுமே ஒவ்வொரு ராசியும் அதில் நின்ற கிரகங்களும் தத்தம் வேலையை பரிபூரணமாக நடத்தும். சூரிய சந்திரருடைய கதிர்வீச்சு கிடைக்காத ராசியே திதிகளின் விஷ சூன்ய ராசிகள் எனப்படும்.

    அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டுமே பன்னிரு ராசிகளுக்கும் பரிபூரண கதிர் வீச்சு கிடைக்கிறது. மற்ற திதிகளில் பிரதமை முதல் திரயோதசி வரையான நாட்களில் 2 ராசிகள் சூன்யம் அடைகின்றன சதுர்த்தசி திதியில் மட்டும் 4 ராசிகள் சூன்யம் அடைகின்றன. திதி சூன்ய ராசிகள் ஜாதக பலன்களை தீர்மானம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் அடைந்து வலிமை பெற்ற லக்ன சுப கிரகங்கள் கூட மிகுதியான அசுப பலனையும் அசுப கிரகங்கள் சுப பலனையும் தந்து விடும். சூன்யமடைந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகமும் வலிமை இழக்கும்.

    இரண்டு ஆதிபத்யம் கொண்ட கிரகத்தின் ஒரு வீடு சூன்யமடைந்தாலும் மற்ற வீட்டிற்கு சுப பலம் ஏற்படும். ஒரே கால கட்டத்தில் 2 பாவகம் பாதிக்கும் சூழலும் சில சமயம் உருவாகும்.

    திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்பதால் சூன்யம் அடைந்த திதியின் அதி தேவதையை வழிபடலாம் அல்லது சூன்யம் அடைந்த கிரகத்தை வலிமைப்படுத்த பாதிப்பு குறையும். பலர் தங்களின் ராசி, நட்சத்திரம், லக்னம் என்னவென்று கேட்டால் உடனே கூறி விடுவார்கள். ராசி, நட்சத்திரம் அல்லது லக்னம் இவற்றை வைத்து தான் பெரும்பாலும் பொதுப்பலன்கள் பார்க்கப்படுகின்றன என்பதால் பிறந்த திதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை.அவரவர் பிறந்த திதியை தெரிந்து கொண்டு அதற்குரிய வழிபாடுகள் மேற்கொண்டல் உங்கள் விதிப்படி அமைய வேண்டிய மகிழ்ச்சியான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

    Next Story
    ×