search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: சூடு போட்டு விடுவார்கள் என்று பயம்!
    X

    மீனா மலரும் நினைவுகள்: சூடு போட்டு விடுவார்கள் என்று பயம்!

    • இதுதான் நடிப்பா? இப்படித்தான் நடிக்கணுமா? என்றெல்லாம் எனக்கு தெரியாது.
    • விளையாட்டுத் தனமாக நடந்துகொண்டதெல்லாம் காட்சிக்கு ஏற்றபடி யதார்த்தமாக அமைந்துவிட்டது என்பது தான் உண்மை.

    ஆன்டி...

    பிளீஸ் ஆன்டி...

    வேண்டாம் ஆன்டி...

    பயப்படாதே... நில்லு...

    வேண்டாம் ஆன்டி சூடு வைக்காதீங்க ஆன்டி...

    கண்ணில் பெருகிவந்த கண்ணீரோடு கதறி அழுதும் விடவில்லை. ராதா ஆன்டி கையில் வைத்திருந்த நெருப்பு குச்சியால் என் கையில் சூடு வைக்க வந்தார். அவ்வளவுதான் என்னை விட்டுடுங்க... விட்டுடுங்க என்று சத்தம் போட்டபடியே `மம்மி...' என்று உரக்க கத்தி விட்டேன்.

    என் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த என் அம்மாவும் பயந்து உள்ளே ஓடி வந்தார்.

    காட்சி எதுவும் எடுக்கப்படவில்லை. மொத்த படக்குழுவும் அப்படியே நின்று கொண்டிருந்தது. ராதா ஆன்டி சிரித்துக் கொண்டே `ஒண்ணுமில்லை பாப்பா... அழக்கூடாது. ஆன்டி சூடு வைப்பேனா உனக்கு?' இது சும்மா நடிப்பு தான் என்று என்னவெல்லாமோ சொல்லி சாமாதானப்படுத்தி பார்த்தார்கள். நான் சமாதானம் ஆகவே இல்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு மம்மி சூடு வைக்க வேண்டாம்னு சொல்லு மம்மி என்று அழுதேன். அம்மாவும் என்னை என்னவெல்லாமோ சொல்லி சமாதானப்படுத்தி பார்த்தார்கள்.

    ஆனால் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனது பயத்தை போக்குவதற்காக ஒரு அங்கிள் தனது கையில் நெருப்பு குச்சியை வைத்து இதோ பார்... சுடவில்லை... என்றார். இருந்தாலும் எனக்கு பயம்.

    ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் என் கையில் சூடு போட வந்தார்கள். அப்போதும் நிஜமாகவே அழுது கத்திவிட்டேன். ஆனால் அப்போது காட்சி யதார்த்தமாக அமைந்துவிட்டது.

    `எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் ரஜினி சாருடன் நடித்த படத்தில் இந்த சம்பவத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. அது மட்டுமல்ல ராதா ஆன்டியின் வளர்ப்பு குழந்தை நான். அவர் என்னை தூக்கி வைத்துக்கொண்டு ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும்.

    நான் அந்த பருவத்தில் கொளு கொளு என்று குண்டாக இருப்பேன். அதனால் அவரால் என்னை தூக்க முடியவில்லை. சிறிது நேரம் தூக்கி வைத்தாலும் எனது வெயிட்டையும் தாங்கிக்கொண்டு உணர்ச்சிகளை காட்டி அவரால் நடிக்க முடியவில்லை.

    அவரது சிரமத்தை பார்த்து வேறு வழி ஒன்றை கண்டு பிடித்தார்கள். அதாவது நான் ஒரு ஸ்டூலில் ஏறி நிற்பேன். என் அருகில் நின்று என்னை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போல ராதா ஆன்டி நிற்பார். ஆனால் படத்தில் நான் ஸ்டூலில் நிற்கிறேன் என்பது தெரியாது. இப்படி தான் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.

    படத்தின் கதைப்படியும், அம்பிகா, ராதா இருவரும் அக்காள்-தங்கை தான்.

    பெண்ணின் சிறு சபலம் கூட பெரிய பிரச்சினையை உருவாக்கி விடும் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

    கதையில் நான் அம்பிகாவுக்கு பிறக்கும் குழந்தை. ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான அம்பிகா தனது கணவர் (ரஜினியை) உதறிவிட்டு மனைவியை பிரிந்து வாழும் வேறொருவருடன் ஏற்பட்ட சபலத்தால் அவருடன் சென்னைக்கு சென்றுவிடுவார். ஆனால் அங்கு போனதும் மனம் மாறி விடுவார்.

    ரஜினிக்கு அவரது தங்கையான ராதாவை திருமணம் செய்து வைப்பார்கள். அவரிடம் தான் நான் வளர்வேன். இப்படியே செல்லும் வலுவான கதைக்களம் அந்த படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

    அம்மாடி... அப்போது நீ சின்ன குழந்தை தானே! உனக்கு கதையெல்லாம் தெரிந்ததா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். பெரியவளாக ஆன பிறகு நான் நடித்த படங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

    எங்கேயோ கேட்ட குரல் தெலுங்கில் 'வா வா மரதள்ளு' என்ற பெயரில் வெளியானது. அதில் சோபன்பாபு, ராதிகாம்மா, சுஹாசினி நடித்தார்கள். அந்த படத்திலும் நான்தான் குழந்தை நட்சத்திரம்.

    தமிழில் ராதாம்மா என்னை தூக்கி கஷ்டப்பட்டதுபோல் தெலுங்கில் ராதிகாம்மா கஷ்டப்பட்டார்கள். அவர்கள் சிரமத்தை குறைத்ததும் ஸ்டூல் தந்திரம்தான்.

    மீனா-40 நிகழ்ச்சியில் ராதிகாம்மா அந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

    நடிப்பதற்கு பயந்து இவ்வளவு அழுது இருக்கிறேனே என்பதை நினைக்கும்போது இப்போதும் எனக்கு சிரிப்பு வரும்.

    அப்புறம் முக்கியமான ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டேன். சூடு வைக்கும் காட்சியை எடுக்க எனக்கு `சாக்லேட்' வாங்கி தருவதாக கூறி தான் சமாதானப்படுத்தினார்கள்.

    சாக்லேட் என்றதும் அழுகையை நிறுத்திவிட்டேன். உடனே நான்கைந்து சாக்லேட்டும் வாங்கி தந்தார்கள்.

    அப்புறம் சாக்லேட்டை சாப்பிடுவதிலேயே குறியாக இருந்து டயலாக்கை மறந்துவிட்டேன்.

    இதை பார்த்து கவலைப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அங்கில் என்னிடம் `பாப்பா, சாக்லேட் சாப்பிடணும், அப்படியே பேசுவதற்கு சொல்லித்தந்தையும் மறக்காம பேசணும் சரியா? என்று சொல்லி காட்சிகளை படமாக்கினார்.

    இதுதான் நடிப்பா? இப்படித்தான் நடிக்கணுமா? என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டதே அற்புதமான நடிப்பாக இருந்திருக்கிறது.

    `பாபுலு தபா' என்ற தெலுங்கு படத்திலும் குழந்தை நட்சத்திர மாக நடித்தேன். அப்போது ஒரு காட்சியில் சாப்பிடும் உணவு தட்டை தூக்கி வீச வேண்டும். அதற்காக ஒத்திகை நடத்தப் பட்டது. என்னிடம் ஒரு காலி தட்டை தந்திருந்தார்கள்.

    அந்த தட்டை நாங்கள் கீழே போடு என்றதும் போட வேண்டும். சரியா என்றார்கள்.

    நானும் சரி என்பது போல் தலையை ஆட்டினேன். அவர்கள் சொன்னது போலவே தூக்கி போட்டேன். ரிகர்சல் கச்சிதமாக அமைந்ததாக கூறினார்கள்.

    ஓ.கே. இனி ஷாட் போயிடலாம் என்றார்கள். ரிகர்சலில் தந்தது போலவே என்னிடம் ஒரு தட்டை தந்தார்கள். இப்போது அந்த தட்டில் சோறு வைக்கப்பட்டிருந்தது.

    கேமரா வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்த என்னிடம் ரெடி... தட்டை தூக்கி போடு என்றதும் போட்டேன். ஆனால் அதில் இருந்த சோறு கொட்டியதால் அய்யய்யோ... சோறு கொட்டிடுச்சு... சோறு கொட்டிடுச்சு என்று பதறிவிட்டேன்.

    காட்சிப்படி உண்மையிலேயே சோறுடன் இருக்கும் தட்டை நான் கோபத்தில் தூக்கி வீச வேண்டும். அதெல்லாம் சொன்னால் புரியும் வயசா அது?

    இதனால் மீண்டும் படமாக்கினார்கள். இப்படித்தான் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருந்தேன். எதுவும் நான் காட்சியை பற்றி புரிந்து நடித்தது கிடையாது. விளையாட்டுத் தனமாக நடந்துகொண்டதெல்லாம் காட்சிக்கு ஏற்றபடி யதார்த்தமாக அமைந்துவிட்டது என்பது தான் உண்மை.

    குழந்தை பருவத்தில் உங்கள் மீனா இன்னும் என்னவெல்லாம் சேட்டை செய்தாள்? என்ற தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்....

    (தொடரும்)

    Next Story
    ×