search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நலம் தரும் பரிகாரங்கள்
    X

    நலம் தரும் பரிகாரங்கள்

    • ஒருவரின் லக்னத்திலிருந்து இரண்டாமிடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.
    • அஷ்டமி திதியில் 27 மிளகை சிவப்பு துணியில் கட்டி நல்லெண்ணையில் இட்டு தீபமேற்றி பைரவரை வழிபட அஷ்டம தோஷம் விலகும்.

    மனித வாழ்வில் மீளமுடியாத பல சந்தர்ப்பங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள பிரபஞ்சம் வழங்கிய உபயமே பரிகாரம். பரிகாரத்தில் பல வகைகள் உண்டு என்றாலும் எளிமையான சில கோவில் பரிகாரங்கள் பலருக்கு சிறப்பான நற்பலன்களை வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் லக்னம் முதல் 12 பாவகங்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் எளிய வழிபாட்டு முறைகளைக் காணலாம்.

    லக்னம்

    லக்ன வலிமை மிக முக்கியம். லக்னம், லக்னாதிபதி நல்ல நிலையில் இயங்கினால் மட்டுமே ஒருவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதாவது கப்பலின் கேப்டன் திறமையானவராக இருந்தால் மட்டுமே பயணித்து இலக்கை அடையமுடியும். ஒருவரின் வாழ்க்கை பயணம் இனிமையாக அமைய அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு எழப் பழக வேண்டும். கழிவுகளை நீக்கி உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டின் வாசலை சுத்தம் செய்து அரிசிமாவினால் கோலமிட்டு பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சூரிய நமஸ்காரம் செய்து அன்றைய நாளைத் துவ்ஙகினால் தொட்டது துலங்கும். கண்திருஷ்டி பாதிப்பு விலகும்.

    தன ஸ்தானம்

    ஒருவரின் லக்னத்திலிருந்து இரண்டாமிடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.

    குடும்பத்தை செம்மையாக நடத்த பணம் மிக அவசியம். தேவையான பொருளாதாரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.

    முக்கிய தேவைகள் நிறைவேறாத வீட்டில் சலசலப்பு கூச்சல், குழப்பம் நிலவும். வாய் வார்த்தை முத்தி குடும்பத்தில் பிரிவினை உண்டாகும். குளத்து மீன்களுக்கு பொரியிட்டாலும் எறும்பு புற்றில் நொய் அரிசி அல்லது சர்க்கரையிட்டாலும் தாராள தன வரவு உண்டாகும்.

    சகாய ஸ்தானம்.

    லக்ன பாவகத்திலிருந்து மூன்றாம் பாவகம் உப ஜெய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், தைரிய, வீரிய, ஜெய ஸ்தானம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ஆகிய பழமொழிகள் சகாய ஸ்தானத்திற்கு மிக பொருத்தம். முயற்சியில் வெற்றி பெற, தைரியம் அதிகரிக்க, தொட்டது துலங்க, வீரிய குறைபாடு அகல உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்க, எல்லைத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட, அண்டை அயலாருடன் நல்லிணக்கம் ஏற்பட, எல்லைத் தகராறு நீங்க புதன் கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

    சுக ஸ்தானம்

    லக்னத்திலிருந்து நான்காம் பாவகம் சுக ஸ்தானமாகும். ஒருவரின் சொத்து சுகம், தாய் மற்றும், தாய் வழி உறவுகளின் ஆதரவு, பள்ளிப் படிப்பு ஆகியவை பற்றிக் கூறுமிடம். சுக ஸ்தானம் என்றால் சொத்து சுகம் மட்டுமல்ல சொத்து சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஆரோக்கியத்தைப் பற்றியும் கூறுமிடம். நல்ல ஆரோக்கியமான தேகம், முறையான சொத்துக்கள் அமைய, சொத்துக்கள் மீதான மன உளைச்சல் அகல, தாய், தாய் வழி உறவுகளின் ஆதரவு கிட்ட, படிப்பில் சுட்டியாக திகழ சங்கடஹர சதுர்த்தியன்று தேங்காய் எண்ணையில் வெள்ளெருக்கம் திரியிட்ட தீபம் ஏற்றி விநாயகரை வழிபடவும்.

    பூர்வ புண்ணிய ஸ்தானம்

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஐந்தாமிடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். நல்ல பிள்ளைகள் பிறக்க, பிறந்த பிள்ளைகளால் நிம்மதியடைய, குல தெய்வ அனுகிரகம் கிடைக்க இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைய பவுர்ணமி நாட்களில் சர்க்கரை பொங்கல் படைத்து குல தெய்வத்தை வழிபட வேண்டும். குல தெய்வம் தெரியாதவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி தீபத்தை குல தெய்வமாக பாவித்து சர்க்கரை பொங்கல் படைத்து ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும்.

    ருண, ரோக, சத்ரு ஸ்தானம்

    லக்னத்திலிருந்து ஆறாமிடம் ஒருவரின் நோய், எதிரி, கடன் தொல்லை பற்றிக் கூறும் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும்.

    ஒருவரிடம் எந்த முகாந்திரமும் இல்லாமல் பெற்ற உதவி, பொருள் அல்லது பணம் திரும்பச் செலுத்தாத போது மன அழுத்தத்தால் அது ரோகம் எனும் நோயாக மாறுகிறது அல்லது சத்ரு எனும் எதிரியாக உருவெடுக்கிறது.

    அதே போல் பணம் வைத்திருப்பவன் மட்டும் பணக்காரன் கிடையாது. போதிய பணம் இருந்தாலும் கிடைத்த வசதியை அனுபவிக்க முடியாமல் நிம்மதியாக சாப்பிட முடியாமல் உடல் முழுவதும் நோயை வைத்துக் கொண்டு வாழ்நாளில் பெரும் பகுதியை மருந்துவ மனையில் செலவிடுவது வறுமை, கடனை விட பெரும் தண்டனை. மேலும் சகிப்புத் தன்மை இல்லாமல் அனைவரையும் பகைத்துக் கொண்டு உறவுகளுடன் ஒட்டி உறவாட முடியாமல் வாழ்வதும் நரகம் தான். ருண, ரோக, சத்ரு தொல்லையிலிருந்து விடுபட ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.

    சப்தம ஸ்தானம்

    லக்னத்திற்கு ஏழாமிடம் என்பது நண்பர்கள், வாழ்க்கைத் துணை, சம்பந்தி, தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிக் கூறுமிடமாகும். அதன்படி இளம் வயதில் நண்பர்களைத் தரும் ஏழாமிடம் வாலிப பருவத்தில் வாழ்க்கைத் துணையையும், மத்திம வயதில் சம்பந்தம் செய்வதை பற்றியும் கூறும். அதாவது சமுதாய அங்கீகாரம்,

    சமுதாயத் தொடர்பை உருவாக்கிக் கொடுக்குமிடம் ஏழாமிடம். உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவது ஏழாம் பாவகம். .உறவுகளால் மன உளைச்சலை தருவதிலும் சப்தம ஸ்தானமே முன்னணி வகிக்கிறது.

    உரிய வயதில் திருமணம் நடைபெற, திருமண பந்தத்தில் நிம்மதி நிலைக்க, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், சம்பந்திகளால் அனுகூலம் பெற வெள்ளிக்கிழமை அவல் பாயாசம் படைத்து நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் படிக்க வேண்டும்.

    அஷ்டம ஸ்தானம்

    ஒருவர் ஜாதகத்தில்ல் லக்னத்திற்கு எட்டுக்குரியவரே அஷ்டமாதிபதியாவார்.ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தை குறிக்குமிடம் 8ம் பாவகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனை வாழ விடாமல் விரட்டும் கருணையற்ற தோஷம் அஷ்டமாதிபத்திய தோஷம். எவ்வளவு சாதனை செய்த மனிதர்களையும் இருந்த இடம் தெரியாமல் நிர்கதியாக நிற்க வைப்பது அஷ்டம ஸ்தானமாகும். அந்த அஷ்டமாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக, அவயோகத்தை தருகிறது. அஷ்டம ஸ்தானம் சுப வலுப்பெற்றால் விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் ஏற்படும்.

    அஷ்டம ஸ்தானம் அசுப வலுப்பெற்றால் ஆயுள் பயம், தீராத நோய், விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மிதியின்மை, தற்கொலை எண்ணம், கோர்ட், கேஸ் பிரச்சினை, சர்ஜரி போன்ற பிரச்சினை இருக்கும்.

    ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வம்பு பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து தேடி வருவதற்கு அஷ்டமாதிபதியே காரணம். இதில் இருந்து விடுபட அஷ்டமி திதியில் 27 மிளகை சிவப்பு துணியில் கட்டி நல்லெண்ணையில் இட்டு தீபமேற்றி பைரவரை வழிபட அஷ்டம தோஷம் விலகும்.

    பாக்கிய ஸ்தானம்

    ஒருவரின் ஜென்ம லக்னத்தில் இருந்து ஒன்பதாமிடம் பாக்கிய ஸ்தானமாகும். ஒருவர் பிறந்த மதம், பரம்பரை வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றை தெரிவிப்பது ஒன்பதாமிடம். ஒன்பதாமிடம் எனும் பாக்கியஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு பிறவியிலே அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள்,புண்ணிய காரியங்கள் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, நல்லதாய், தந்தை அமைவது, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்கா ரர்கள், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், முன்னோர்களின் நல்லாசி,நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கவுரவத் தொழில்,கூட்டுத் தொழில்,வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி போன்ற புண்ணிய பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.

    பாக்கிய ஸ்தானம் வலிமை குறைவதால் ஏற்படும், கவுரவக்குறைவு, பித்ருக்கள் சாபம், வறுமை, கடன், நிலையற்ற தொழில், உத்தியோகம் போன்ற பாதிப்பிவிருந்து விடுபட அமாவாசைத் திதியில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

    தொழில் ஸ்தானம்

    ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து பத்தாமிடம் தொழில் ஸ்தானமாகும். இதன் மூலம் ஒருவருக்கு அமையக்கூடிய தொழில், அதன் மூலம் உண்டாக கூடிய கவுரவம் , அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்மந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறிய முடியும். சிலருக்கு பெரிய வளர்ச்சியை கொடுக்கும். சொந்த தொழில் பலருக்கு தளர்ச்சியை கொடுத்து விடுகிறது.தொழில் ஸ்தானம் பலம் பெற்றால் தொழில் வாய்ப்புகள் தேடி வரும். நிர்வாகத் திறன் அதிகமாகும். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு, தொழிலில் பெருத்த ஆதாயம் உண்டு. தொழில் ஸ்தானம் பலம் இழந்தால் இவர்களுடைய தொழில் அறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனை திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது. தொழில் ஸ்தானத்தை பலப்படுத்த பவுர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

    லாப ஸ்தானம்

    ஒருவரின் லக்னத்திலிருந்து பதினொன்றாமிடம் லாப ஸ்தானமாகும். பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவற்றை குறிப்பது 11ம் இடம். அதே போல் உப ஜெய ஸ்தானமான இந்த பாவகத்தின் மூலம் சித்தப்பா, மூத்த சகோதரம், இளைய மனைவி,எண்ணங்கள் நிறைவேறுதல் வழக்கு வெற்றி ஆகியவற்றை அறிய முடியும். தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும்.மனித வாழ்வின் அன்றாட தேவைகளான உணவு ,உடை இருப்பிடம் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வாழ்வாதார சக்தியாக பணம் விளங்குகிறது. ஒருவருக்கு தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, வட்டி, ஷேர் மார்க்கெட், கட்டிட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என நூற்றுக் கணக்கான வகையில் தன வரவு உண்டாக வாசி தீரவே காசு நல்குவீர் என்ற தேவாரப் பாடலை கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

    விரய ஸ்தானம்

    லக்ன பாவத்தின் பனிரெண்டாம் இடமான அயன, சயன விரய மோட்ச ஸ்தானத்தின் மூலம் ஒருவர் இந்த பிறவியில் அனுபவிக்கும் துயரங்களுக்கு தீர்வு வழங்க முடியும்.இதன் மூலம் முக்தி அல்லது மோட்சம் பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா? போன்றவற்றை அறிய முடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், பிரிவினை, தலைமறைவாகுதல், போன்றவற்றையும் அறிய முடியும்.

    12-ம்மிடம் அசுப பலம் பெற்றால் ஜாதகர் மன விரக்தி, தாழ்வு மனப்பான்மை அதிகமாகும். என்ன வாழ்க்கை என்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற்றத்திற்கு கடுமையாக போராட நேரும்.

    வரவுக்கு மீறி செலவு செய்வார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். அடிக்கடி மருத்துவ செலவு உண்டாகும். குறிப்பாக மூட்டு, கை, கால் வலி, கண் சிகிச்சை இருக்கும். இவர்கள் சனிக்கிழமை கால பைரவருக்கு சகஸ்ஹர நாம அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.அன்றாடம் சமைத்த உணவில் ஒரு கைப்பிடி உணவை பட்சிகளுக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும்.

    ஒருவர் செய்யும் பரிகாரம் தசா புக்தி சாதகமாக இருந்தால் உடனே பலன் தரும். பிரச்சினையில் இருந்து விடுபடும் வரை தொடர்ந்து வழிபாடு செய்வது நல்லது. தசா புக்தி, கோட்சாரம் பலம் குறைந்தால் கால தாமதமாக பலன் கிடைக்கும். எனவே மனம் தளராமல் நம்பிக்கையுடன் பயன்படுத்தி நலம் பெற நல் வாழ்த்துக்கள்.

    Next Story
    ×