search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மங்கல வாழ்வளிக்கும் மீனாட்சி
    X

    மங்கல வாழ்வளிக்கும் மீனாட்சி

    • அன்னை மீன் போன்ற அழகிய கண்களால் பக்தர்களுக்குக் காலமெல்லாம் அருள்பாலிக்கிறாள்.
    • மன்னன் திருமலை நாயக்கனின் மடிமேல் உரிமையோடு வந்து அமர்ந்துகொண்ட அவள், மன்னனின் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றினாள்.

    பாரத தேசத்தின் மிகப் புராதனமான நகரங்களில் ஒன்று மதுரை. மதுரை நகரத்தின் அமைப்பு தாமரை மலரைப் போன்றது. நடுவே ஆலயம். சுற்றிலும் தாமரை இதழ்களைப் போல் வீதிகள்.

    அந்த வீதிகள் பல, தமிழ் மாதங்களின் பெயர்களில் அமைந்துள்ளன. சித்திரை வீதி, ஆடி வீதி, ஆவணி வீதி போன்றவற்றில் மன்னர்கள் காலத்தில் அந்தந்த மாதத்திற்குரிய திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.

    மதுரையில் கோவில் கொண்டிருக்கும் அன்னை மீனாட்சி, பார்வதி தேவியின் அவதாரமாவாள்.

    மன்னன் மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் மகப்பேறில்லாததால் வருந்தினார்கள். புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நிகழ்த்தினார்கள்.

    அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. ஆனால் புத்திரி பாக்கியம் கிட்டியது!

    ஆம். யாகத்தீயிலிருந்து ஒரு சிறுமியாய்த் தோன்றினாள் மீனாட்சி. அவள் திருமுகம் ஆயிரம் கோடி நிலவுகளைப் பிசைந்து செய்தாற்போல் ஒளிவீசியது.

    அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான் அரசன் மலயத்துவசன். ஆனால் என்ன ஆச்சரியம்! தீயிலிருந்து வெளிப்பட்ட சிறுமிக்கு வழக்கத்திற்கு மாறாக மூன்று மார்பகக் குறிகள் தென்பட்டன.

    இயற்கைக்கு மாறுபட்ட இந்தத் தன்மையைக் கண்டு மன்னன் திகைத்தபோது வானில் ஒலித்தது அசரீரி. வீராங்கனையான அவள், என்று ஓர் ஆண்மகனைக் கண்டு நாணத்தால் தலைகுனிகிறாளோ அன்று அவளின் ஒரு மார்பகம் தானே மறையுமென்றும் அந்த ஆண்மகனே அவள் கணவனாகும் தகுதி படைத்தவன் என்றும் சொல்லிற்று அது.

    மகிழ்ச்சி அடைந்த மன்னன் மலயத்துவசனும் அரசி காஞ்சனமாலையும் சிறுமியின் அழகிய விழிகளைக் கண்டு அவளுக்கு மீனாட்சி எனப் பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்கள். ஆண்வாரிசு இல்லாத அவர்கள் தங்கள் பெண்ணுக்கு வில், வாள், வேல் என அத்தனை போர்க்கலைகளையும் கற்பித்தார்கள்.

    வெளிதேசங்களைப் படையெடுத்து வெல்லத் தொடங்கினாள் வீரமங்கை மீனாட்சி. கயிலாயம் வரை உள்ள தேசங்களைத் தன் காலடியின் கீழ் கொண்டுவந்தாள். கயிலைக்கும் சென்று சிவபெருமானோடு போரிட வில்லை வளைத்தாள்.

    அப்போது பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்து அவள் முன் தோன்றினார் சிவபெருமான்.

    அந்தப் பேரழகனின் தெய்வீகப் பொலிவைக் கண்ட அவள் நாணித் தலைகுனிய அவள் மூன்றாம் மார்பகம் தானே மறைந்தது. சிவன் மீனாட்சியின் இதயத்தில் குடிபுகுந்தார். பிறகென்ன, திருமணம்தான்!

    திருமாலின் சகோதரி பார்வதி என்பதாலும் மீனாட்சி பார்வதியின் அவதாரமே என்பதாலும் அண்ணன் திருமால், மீனாட்சி கல்யாணத்தின் பொருட்டு மதுரைக்கு வருகை தந்தார்.

    திருமணத்தை தரிசிக்காமல் தேவர்கள் சிவனே என்றிருக்க முடியுமா! முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த அரிய திருமணக் காட்சியைக் காண மதுரையில் குவிந்தனர். மன்னன் மலயத்துவசன் உபசாரத்தால் அத்தனை பேருக்கும் உணவு, விருந்து அமர்க்களப்பட்டது.

    என்றாலும் எல்லோருக்கும் என்னால் உணவளிக்க முடியும் என்ற ஒரு துளி கர்வம் அவனுக்கு வராமல் இருக்க வேண்டுமே?

    அதன்பொருட்டு தன் பூதகணங்களில் ஒருவனான குண்டோதரனை அழைத்தான் சிவன். வந்த குண்டோதரன் ஒருவனே எஞ்சியிருந்த அத்தனை உணவையும் தின்று தீர்த்துவிட்டுத் தண்ணீர் கேட்டான்! குண்டோதரனின் செய்கையைப் பார்த்து மலைத்து நின்ற மலயத்துவசனின் கர்வம் அடங்கியது.

    அண்டா அண்டாவாகத் தண்ணீர் குடித்தான் குண்டோதரன். அப்படியும் நீர்வேட்கை தீரவில்லையே? தாகம் தாகம் என்று அவன் தவித்தபோது சிவன் தரையில் கை வைத்து அழுத்தினார்.

    தலையில் கங்கை வைத்திருந்த சிவன், தரையில் கை வைத்ததும் பூமியிலிருந்து புதிதாய்ப் புறப்பட்டது ஒரு நதி. அந்த நதிநீரைக் குடித்து தாகம் தணிந்தான் குண்டோதரன். கையை வைத்துத் தோன்றிய காரணத்தால் அது வைகை எனப் பெயர் பெற்றது.

    திருமணத்திற்குப் பின் சொக்கநாதராகிய சிவன் மனைவி மீனாட்சியோடு மதுரையிலேயே வசிக்கலானார் என்கிறது புராணம்.

    *அன்னை மீன் போன்ற அழகிய கண்களால் பக்தர்களுக்குக் காலமெல்லாம் அருள்பாலிக்கிறாள்.

    ஆண்டாள் கரத்தில் உள்ளதைப் போலவே, மீனாட்சி கரத்திலும் ஒரு பச்சைக் கிளி! மீனாட்சியின் கையில் உள்ள கிளியின் வரலாறு சுவாரஸ்யமானது.

    கிளியின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தார் அருணகிரிநாதர். அவர் மீண்டும் தன் உடலுக்குள் திரும்புவதற்குள் அவரது மனித உடல் அவரின் விரோதி சம்பந்தாண்டான் என்பவனால் எரிக்கப் பட்டுவிட்டது.

    கிளி உருவம் எடுத்த அருணகிரியார் கயிலாயத்திற்குப் பறந்து சென்றார். அன்னை மீனாட்சி அருணகிரிக் கிளியைத் தன் கையில் தாங்கிக் கொண்டாள்.

    அருணகிரி நாதர் தீவிர முருக பக்தர் அல்லவா? அருணகிரிக் கிளியின் மூலம் தன் இளைய மகன் முருகனின் திருப்புகழைக் கேட்டுக் கேட்டு ஈன்ற பொழுதில் பெரிதுவக்கிறாளாம் அன்னை மீனாட்சி.

    மீனாட்சியின் கையில் உள்ள கிளி பக்தர்களின் கோரிக்கையை அன்னைக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

    சொன்னதைச் சொல்லும் குணமுடையது அல்லவா கிளிப்பிள்ளை? பக்தர்கள் சொன்னதை அது மீனாட்சியின் காதில் சொல்லிக் கொண்டே இருப்பது இயல்புதானே?

    * மீனாட்சி கோவிலில் பொற்றாமரைக் குளம் உண்டு. இந்தக் குளத்தை அமைத்தவன் தேவர்களின் அரசனான இந்திரன்.

    விருத்தாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள விரும்பினான் இந்திரன். பல திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்டும் அவன் மனத்தில் நிம்மதி தோன்றவில்லை.

    மதுரைக்கு வந்தான். கடம்பவனமாக இருந்த மதுரையில் சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத்தை தரிசித்தான். அடுத்த கணம் அவன் மனம் சொல்லவொண்ணா அமைதி கண்டது.

    சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டுமே? அதற்கென்றே ஓர் அழகிய குளத்தை நிர்மாணித்தான்.

    அவன் பூஜைக்கு மலர்களைத் தேடியபோது, அவன் அமைத்த அந்தக் குளத்தில் தங்கத் தாமரைகள் தானே பூத்தன. அந்தப் பொற்றாமரைகளைக் கொண்டே இந்திரன் சிவபூஜை செய்ததாகவும் அன்றுதொட்டு அந்தக் குளம் பொற்றாமரைக் குளம் என அழைக்கப் படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    பொற்றாமரைக் குளத்து நீர் புனிதத் தன்மை நிறைந்தது. அதைத் தலையில் தெளித்துக் கொண்டால் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இந்திரனுக்குக் கிடைத்தது போன்ற மன நிம்மதியை நாமும் அடையலாம்.

    *மீனாட்சி அம்மையிடம் பக்தி பூண்ட தமிழ்ப் புலவர்களில் முக்கியமானவர் குமரகுருபரர். திருமலை நாயக்கன் காலத்தில் வாழ்ந்த அவர், மீனாட்சியம்மன் கோவிலில் அமர்ந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் என்ற செய்யுள் நூலை அருளினார்.

    திருமலை நாயக்கன் கனவில் வந்த மீனாட்சி, தன்மேல் இயற்றப்படும் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் நூலை ஆலயத்தில் வந்து கேட்குமாறு ஆணையிட்டாள். திருமலை நாயக்கன் அன்னையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆலயத்தில் வந்து அமர்ந்து மீனாட்சியம்மன் சன்னிதியில் குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழ் நூலைக் கேட்கலானான்.

    தமிழினிமை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட அந்த பக்தி நூலில், `தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே' என்ற செய்யுள் மிகவும் புகழ்பெற்றது. மீனாட்சியைச் சிறுமியாகக் கண்டு `வருக வருக!' என அழைக்கும் வருகைப் பருவத்துச் செய்யுள் அது.

    `ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!' என அதில் ஒரு வரி வரும். அந்த அழகிய வரியில் மீனாட்சி மனம் பறிகொடுத்தாள். வருக வருக எனத் தன்னை உருகி உருகி அழைத்த குமரகுருபரரின் உன்னதமான பக்தியை மெச்சி மீனாட்சி உண்மையிலேயே அவர் முன் ஒரு சிறுமியாய் வருகை தந்தாள்.

    மன்னன் திருமலை நாயக்கனின் மடிமேல் உரிமையோடு வந்து அமர்ந்துகொண்ட அவள், மன்னனின் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றினாள்.

    கொலுசு கொஞ்சக் கொஞ்ச நடந்து குமரகுருபரர் அருகே வந்து அந்த மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள். பின் சன்னிதிக்குள் நடந்துசென்று மீனாட்சியம்மன் சிலையில் கலந்து மறைந்தாள்.

    அவள் நடந்துசென்ற நடையே ஒரு நாட்டியம் போல் இருந்தது. அதுசரி, நடனமாடுவதில் தேர்ச்சி பெற்ற கணவனின் மனைவி அல்லவா அவள்?

    மீனாட்சி அன்னையை ஒரு சிறுமியாக நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாயக்க மன்னன் பெரும் வியப்படைந்து குமரகுருபரரைக் கொண்டாடினான் என்பது பக்தி இலக்கிய வரலாற்றில் உள்ள குறிப்பு.

    *சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரியது மதுரை. இறையனார் என்ற சங்கப் புலவர் சிவபெருமானே என்ற கருத்தும் உண்டு.

    சிவனுக்கும் புலவர் நக்கீரருக்கும் ஏற்பட்ட சச்சரவுகளும் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என நக்கீரர் முழங்கியதும் அனைவரும் அறிந்த செய்திகளே.

    நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டது, வளையல்காரராக வளையல்கள் விற்றது என மீனாட்சியம்மையின் கணவரான சொக்கநாதர் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு.

    இந்தத் திருவிளையாடல் கதைகளையெல்லாம் சொல்லும் பழந்தமிழ் நூல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் என்ற செய்யுள் நூல்.

    அருள்புரியவென்றே காத்திருக்கிறாள் சொக்கநாதரையும் சொக்கச் செய்த அன்னை மீனாட்சி.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அவளை தரிசித்து அவள் அருளை வேண்டினால் தடையின்றி எதையும் தரக் காத்திருக்கிறாள் அன்னை. அகிலமெங்கும் நடப்பது அவள் அருளாட்சி தானே?

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×