search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: பாவாடை ... சட்டை ... போட்ட சின்ன பொண்ணு ... !
    X

    மீனா மலரும் நினைவுகள்: பாவாடை ... சட்டை ... போட்ட சின்ன பொண்ணு ... !

    • அப்படித்தான் நானும் முதல் முறையாக பாவாடை சட்டை அணிந்த அந்த நாள் ஞாபகம் இன்றும் பசுமையாக கண்முன் தெரிகிறது.
    • வெளியே செல்லும்போதெல்லாம் தலையில் ஒரு குரங்கு குல்லாவை மாட்டிக்கொண்டு, கம்பளி சட்டையும் அணிந்திருப்பேன்.

    பாவாடை, சட்டை...!

    எவ்வளவோ விதவிதமான கண்ணைக் கவரும் நாகரீக உடைகள் வந்துவிட்டாலும் எல்லா பெண்களுக்கும் குழந்தைப்பருவத்தில் பட்டு பாவாடை சட்டை அணிந்து பட்டாம்பூச்சிகளாக திரிந்த காலம் பசுமை நிறைந்த நினைவுகளாக மனதில் நிலைத்து நிற்கும்.

    அதுவும் முதல் முறையாக பாவாடை சட்டை அணியும் போது ஏற்படும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே கிடையாது.

    அப்படித்தான் நானும் முதல் முறையாக பாவாடை சட்டை அணிந்த அந்த நாள் ஞாபகம் இன்றும் பசுமையாக கண்முன் தெரிகிறது.

    'பாலநாகம்மா...' கே.ஷங்கர் சார் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம். கே.ஆர்.விஜயாம்மா, ஸ்ரீதேவி ஆன்டி, சரத்பாபு அங்கிள் எல்லோரும் நடித்த படம். பேபி அஞ்சு, நான் குழந்தை நட்சத்திரங்கள். இதில் அஞ்சு பையனாக நடித்தார்.

    இந்த படத்தின் ஷூட்டிங் சென்ற போதுதான் எனக்கு பாவாடை-சட்டை காஸ்ட்யூம். அதிலும் சட்டையில் நிறைய மணிகள் சேர்த்து தொங்கவிடப்பட்டிருந்தது. அது எனக்கு ரொம்ப பிடித்து போனது.

    பாவாடையை கையில் பிடித்தபடி உற்சாகமாக நான் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்ததும் 'என்ன பாப்பா... பாவாடை சட்டை ரொம்ப பிடிச்சிருக்கா...?, என்று படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்கள் என்னிடம் கேட்டதும் 'ம்ம்...' என்று பிடித்திருக்கிறது என்பது போல் தலையை ஆட்டி சிரித்தபடியே ஓடுவேன். அவர்களும் என்னை செல்லமாக தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவார்கள்.

    அந்த படத்தில் ஸ்ரீதேவி ஆன்டிக்கு நான் மகள். ஸ்ரீதேவி ஆன்டியின் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த படத்தில் அவருடைய மகளாக.... அதுவும் அவரே தூக்கி வைத்துக்கொண்டு நடந்ததால் நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.

    நான் அவரையே பார்த்து கொண்டிருந்ததை பார்த்து 'என்ன பாப்பா என்னை அப்படி பார்க்குறீங்க... இந்த ஆன்டியை உனக்கு ரொம்ப பிடிக்குமா?' என்று கேட்டார்.

    பதிலுக்கு நானும் சிரித்து கொண்டே ஆமாம் என்றேன். அவ்வளவு தான்... என்னை வாரி அணைத்து வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து முத்தம் கொடுத்தார். அப்போது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?

    அதன் பிறகு 'இல்லாடு பிரியுராலு' என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சோபன்பாபு-சுஹாசினி ஜோடி.

    படத்தில் அக்காள், தங்கை, தம்பி என்று 3 குழந்தைகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டயலாக்குகள் படிக்க சொல்லி தந்தார்கள். ரிகர்சல் நடக்கும் போது எல்லோரும் பார்த்து கொண்டிருப்போம். அப்போது ஒருத்தர் பேசுவதை மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்போம்.

    அவ்வாறு கேட்டுக் கொண்டிருந்ததில் நான் எல்லோருடைய வசனங்களையும் மனப்பாடம் செய்து கொண்டேன். ரிகர்சலின் போது நான் பேசத் தொடங்கினால் எல்லோரது டயலாக்கையும் சேர்த்து மொத்தமாக கட கட வென்று பேசி முடித்து விடுவேன். அதை கேட்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அதை தொடர்ந்து மற்றவர்களின் வசனத்தையும் என்னை வைத்தே பேச வைத்தார்கள்.

    மலையாளத்தில் 'ஒரு கொச்சு கதை. ஆனால் பிடிபடாத கதை' என்ற படத்தில் நடித்தேன். சத்யராஜ் சார் நடித்த கூனி என்ற படத்தில் நடித்தேன்.

    இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சிவாஜி சார், நடித்த நெஞ்சங்கள் படத்தில் தானே அறிமுகமானேன். கொஞ்ச நாளில் அப்பாவும், மகனும், (சிவாஜி, பிரபு) சேர்ந்து நடித்த படத்திலும் நடித்திருக்கிறேன்.

    அந்த படத்தின் பெயர் 'சுமங்கலி' திருமணமான பெண் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சிவாஜி-சுஜாதா, பிரபு-கீதா ஆகியோர் நடித்தார்கள். ஒரே படத்தில் தந்தை-மகன் என்ற இரு பெரும் கலைஞர்களின் அன்பை பெற்ற குழந்தை நான். அந்த படத்தில் ராமதுளசி என்ற குழந்தையாக நடித்தேன்.

    எனது 40 ஆண்டுகால நீண்ட திரைப்பயணத்தை நினைத்து பெருமைப்படுவதை விட உலகமே வியக்கும் மிகப்பெரிய நடிகர்-நடிகைகள் கையை பிடித்து நடந்தும், அவர்களின் அன்பு மழையில் நனைந்தும், அவர்களின் நிழலில் தவழ்ந்து வளர்ந்தவள் என்பது தான் எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. அன்று நினைக்க தெரியாத மனது. இன்று அதையெல்லாம் நினைத்தாலே இனிக்கிறது. அந்த நினைவுகளே என்னை பெருமைப்பட வைக்கிறது. அதே வரிசையில் திருப்பம் திரைப்படத்திலும் இருவருடனும் நடித்தேன்.

    அந்த கால கட்டத்தில் வெளிப்புற படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு அழைத்து சென்றார்கள். அப்போது தான் முதல் முதலில் ஊட்டியை பார்த்தேன்.

    அங்கு நிலவிய குளிர், இயற்கை காட்சிகள் எனக்கு அந்த வயதில் ரசிக்க தெரியாவிட்டாலும் ஜாலியாக இருந்தது.

    வெளியே செல்லும்போதெல்லாம் தலையில் ஒரு குரங்கு குல்லாவை மாட்டிக்கொண்டு, கம்பளி சட்டையும் அணிந்திருப்பேன். அதையும் ஊடுருவி ஊட்டி குளிர் என்னை வாட்டியது. குளிரில் பற்கள் டைப் அடிக்கும். காமிராவின் முன் நிற்கும் போது மட்டும் கம்பளியை கழட்டிவிட்டு நிற்பேன். காட்சி முடிந்ததும் ஓடிப்போய் கம்பளியை எடுத்து போட்டுக்கொள்வேன்.

    அந்த காலத்தில் நான் ஓடி விளையாடிய ஊட்டியில் உள்ள இடங்களை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

    அந்த வயதில் எல்லா குழந்தைகளையும் போல்தான் நானும். ஆனால் கொஞ்சம் குறும்புத்தனம் அதிகம். ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாடி உடைந்து விழும். அதற்கான கண்ணாடியை அடுக்கி வைத்திருந்தார்கள்.

    நாங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்த போது ஒரு பையன் கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி விழுந்து விட்டது. 'ஜஸ்ட் மிஸ்' என்பதை போல் அந்த இடத்தை நான் கடந்ததும் கண்ணாடி அந்த பையன் மீது விழுந்தது நல்ல வேளையாக நான் தப்பிச்சேன்.

    அதேபோல ஒரு படத்தில் உறுப்பு திருடும் ஒரு கும்பலிடம் நான் சிக்கி கொள்வது போலவும் அவர்கள் கத்தியை எடுத்து குத்த வருவது போலவும் ஒரு காட்சி.

    எல்லாம் ரெடி. கத்தியை எடுத்து கொண்டு அருகில் வந்ததும் கிளாப் என்றதும் பயந்து நடுங்கி கண்ணை இறுக மூடிக் கொண்டு கத்தினேன். அப்படியே சில நிமிடங்கள் கண்ணை திறக்காமலேயே படுத்திருந்தேன். என்ன நடக்கிறது என்றே பார்க்கவில்லை.

    சிறிது நேரத்தில் 'பாப்பா கண்ணை திற.... சீன் முடிந்து விட்டது" என்றதும் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தேன். அப்போதுதான் அருகில் நின்ற டைரக்டர் "பரவாயில்லையே சின்ன குழந்தையாக இருந்தாலும் நல்லா நடிக்கிறாளே" என்று பக்கத்தில் நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

    ஆனால் நிஜமாகவே நான் நடிக்கவில்லை. பயந்துதான் கண்ணை மூடிக் கொண்டேன். ஆனால் காட்சிக்கு இயல்பாகவே தத்ரூபமாக அமைந்து இருக்கிறது.

    அது அவர்களுக்கு எப்படி புரியும்? எனது பயம் எனக்குத் தானே தெரியும். இதை படிக்கும் உங்களுக்கே சிரிப்பு வருகிறதல்லவா? நினைத்து பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும்?

    மறக்க முடியாத மற்றொரு நினைவுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்)

    Next Story
    ×