search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ்வில் வளம் சேர்க்கும் ஆடிப்பெருக்கு
    X

    வாழ்வில் வளம் சேர்க்கும் ஆடிப்பெருக்கு

    • நீரை தாயாக போற்றி வணங்கும் திருநாள் தான் ஆடிப்பெருக்கு.
    • காவிரி கரையில் அமைந்துள்ள படித்துறையில் பெண்களும், புதுமண தம்பதிகளும் கூடி மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    "நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு"-

    என்பது பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் வாக்கு.

    முக்கால் வாசி நீரும், கால் வாசி நிலமும் கொண்ட இந்த பூமியில் நீர் இல்லா விட்டால் நினைத்து பாருங்கள்..

    மதிய வெயிலில் வெளியே சென்று விட்டு அரை மணி நேரமாக தண்ணீர் கிடைக்காமல் நா வறண்டு வீடு வந்ததும் தண்ணீரை மடக், மடக் என வேகமாய் குடிக்கும் நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை புரியும்.

    தண்ணீரை தெய்வமாக வழிபடும் மரபு தமிழர்களாகிய நம்முடையது.

    ஏலேய்! மக்கா தாயை பழிச்சாலும் தண்ணியை பழிக்காதே லேய் மக்கா! என கிராமத்தில் பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்பீங்க..

    மண்ணையும், தண்ணீரையும் பெரும் சொத்தாக கருதுவது விவசாயிகளின் வழக்கம்.

    பத்து ஏக்கர் நிலத்தில் தண்ணீர் நிறைந்த கிணற்றை வைத்திருந்தால் மட்டுமே விவசாயி வெள்ளாமை செய்ய முடியும்.

    பத்து ஏக்கர் நிலத்தில் தண்ணீர் இல்லா பாங்கெணறு என பேச்சு வாக்கில் சொல்லும் பாழுங்கிணறு இருந்தால் விவசாய நிலம் வறண்ட பொட்டல் நிலமாகி விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

    தண்ணீரின் அருமை புரிந்ததால் தானோ என்னவோ நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே ஏன் கிராமங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சினை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

    ஏலேய்.. சில்வண்டு!! ஆடிப்பெருக்கை.. பற்றி சொல்ல போறேன்னு நெனைச்சா தண்ணியை பத்தி சொல்லிட்டு இருக்குறியேன்னு சலிக்காதீங்க.

    நீரை தாயாக போற்றி வணங்கும் திருநாள் தான் ஆடிப்பெருக்கு.

    சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை மாத வெயில் முடிந்து ஆனி, ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் சாரல் மழை கொட்ட துவங்கும்.

    ஆனியில் தூறலிடும் சாரல் ஆடி மாதத்தில் களை கட்டி சாரலும், தூறலுமாய் பெய்யும்.

    துடிப்பான சாரலால் சிற்றோடை, கால்வாய், வாய்க்கால், ஆறு, நதி போன்ற நீர் நிலைகளில் புதிய தண்ணீரானது நுங்கும் நுரையுமாய் பொங்கி பிராவகத்தோடு ஓடும்..

    ஆடிப்பெருக்கு அன்று மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் பாய்ந்து வரும் புதுப்புனலில் நீரில் நீராடி விவசாயம் செழிக்க நதியை, இறைவனை வணங்குவது வழக்கம்.

    குடகில் பிறந்து தஞ்சையை வளமாக்கி தரங்கம்பாடி வரை சென்ற இடங்களை எல்லாம் செழிக்க வைக்கும் காவேரி அன்னைக்கு கரையோர மக்கள் சீர் வரிசை செய்து நன்றி தெரிவிக்கும் நாளே ஆடிப்பெருக்கு என அழைக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாட பட்டாலும் ஆடிப்பெருக்கு பண்டிகையை காவிரி கரைபுரண்டு ஓடும் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி, குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய பகுதிகளில் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடுவார்கள்.

    ஆடி பதினெட்டு, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஆடி பதினெட்டாம் நாளின் சிறப்பை பற்றி பார்ப்போம்.

    கோடை காலம் முடிந்து சாரல் மழை பொழிந்து நுங்கும், நுரையுமாக பருவப்பெண் துள்ளி வருவது போல் புது வெள்ளமாக காவிரி பாய்ந்து வந்ததும் விவசாய வேலைகளை துவக்குவார்கள்.

    இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாக நீர் விளங்குகிறது. நீரால் விவசாயம் நடைபெற்று உணவு பொருட்களுக்கான விளைச்சல் உண்டாகிறது.

    உணவே உயிரை வளர்க்கிறது. உணவில்லையேல் ஊனுடம்பும் இல்லை.. உயிரும் இல்லை.

    அத்தகைய நீரைக் கொண்டாடும் ஒரு திருவிழா 'ஆடிப் பெருக்கு'. தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை இது.

    ஆடிப்பெருக்கை காவிரி கரையில் அமைந்துள்ள படித்துறையில் பெண்களும், புதுமண தம்பதிகளும் கூடி மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    தாலி பிரித்து கோர்ப்பது ஆடிப்பெருக்கின் முக்கிய நிகழ்வாகும்.

    நதிக்கரை படித்துறையில் கூடியிருக்கும் புதுமண தம்பதிகளில் கணவன் தனது மனைவியின் கழுத்தில் இருந்து பழைய தாலியை பிரித்து புதிய மஞ்சள் கயிற்றை கோர்த்து அணிவிப்பார்கள்.

    புதுமண பெண்கள் மட்டுமல்ல முன்பே திருமணம் ஆன சுமங்கலி பெண்களும் ஆடி பதினெட்டு அன்று தாலி பிரித்து கோர்த்து அணிவார்கள்.

    எதற்காக ஆடி பதினெட்டு அன்று காவிரி கரையில் தாலி பிரித்து அணிய வேண்டும்?

    ஆடிப்பட்டம் என அழைக்கப்படும் ஆடிப்பெருக்கு தினத்தில் விவசாய நிலத்தில் ஊன்றும் விதைகள் பல்கி பெருகும்.

    அது போல் தனது வாழ்வும் பல்கி பெருக வேண்டும் என காவிரி அன்னையின் ஆசிகளை வேண்டி அவளின் முன்னிலையில் தாலி மாற்றி அணிவார்கள்.

    ஒரு சுமங்கலி பெண்ணுக்கு வாழ்வில் ஐந்துவிதமான தாலியைச் சூடும் பாக்கியங்கள் வாய்க்கலாம்.

    திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட ஐந்து முறை மாங்கல்யத்தை பெண்கள் மாற்றி அணிந்து கொள்வது பூரண வாழ்வின் அடையாளம்.

    இந்த ஐந்து வித மாங்கல்யங்களும் தனக்குக் கிடைக்க வேண்டும் எனும் வேண்டுதலின் அடிப்படையிலேயே ஆடிப் பெருக்கு அன்று தாலி பிரித்து கோர்த்து மாற்றி அணியும் வழக்கம் உண்டானது.

    வற்றாது ஓடி விவசாயிகளை காப்பாய்! என அரங்கன் தானே நேரடியாக வந்து ஆசி வழங்கி தங்கையான காவிரி க்கு சீர் வழங்கும் போது அண்ணனின் சீர்வரிசையை ஆவலாய் காவிரி வாங்கி கொள்ளும் நிகழ்வும் ஆடி பதினெட்டு அன்று காவிரிக்கரை அம்மா மண்டப படித்துறையில் நிகழும்.

    பொதுவாக திருமணம், புதிய தொழில் துவங்குவது, வீடு கட்டுவது போன்றவைகளை ஆடி மாதத்தில் தவிர்த்து விடுவார்கள்.

    ஆனால் ஆடிப்பெருக்கு அன்று வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டுவது, கதவு நிலை விடுவது, புதிய தொழில் துவங்கும் நிகழ்வுகளை நடத்துவார்கள்.

    "பெருக்கு" என்றால் பெருகுதல் என்ற அர்த்தம் ஆகும். ஆடிப்பெருக்கில் துவங்கும் தொழில்கள் பலமடங்கு பெருகி நிறைந்த செல்வத்தை தரும் என்பது ஐதீகம்.

    அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம்.

    நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும்.

    இனி ஜோதிட ரீதியாக ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.

    கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என மூன்று நட்சத்திரங்கள் உள்ளன.

    இதில் பூசம் நட்சத்திரம் சனி பகவானுக்குரியது.

    சூரிய பகவான், சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்தி ரத்தில் இருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18) ஆகும்.

    புதனுக்கு உரிய ஆயில்ய நட்சத்திரத்திற்கு சூரியன் மாறும் போது சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.

    ஏனெனில் சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள். சூரியனின் இந்த சக்தி நிறைந்த கதிர்களால், ஆடி மாதத்தில் விதைக்கப்படும் விதைகளுக்கு ஒரு வித புத்துணர்ச்சியும், வலிமையும் கிடைக்கிறது.

    ஒளிச்சேர்க்கை என அறிவியலில் அழைக்கப்படும் சூரிய கதிர்களின் சக்தியை கொண்டு பயிர்கள் பச்சை பசேல் என சிறப்பாக வளர ஆடி மாத ஒளிக்கதிர்கள் மிகவும் உதவியாக இருக்கிறது.

    ஆடி 18 அன்று சப்தகன்னியரை வணங்கி நாம் எதை நினைத்து வேண்டினாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றுக்கு சென்று நீராடி மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள், சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் இன்றும் நிலவுகிறது.

    இவ்வாறு ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு பிரித்து கோர்த்து மாற்றி கட்டி கொள்வதால் பெண்களின் இல்வாழ்க்கை சிறப்பாக இருக்குமாம்.

    ஏலேய்! சில்வண்டு ஆடிப்பெருக்கு அன்று ஆறு, குளத்தில் நீராடுவது சிறப்பு ன்னு நீ சொல்வது சரிதான்.

    திருநெல்வேலி காரன் நீ!தாமிரபரணியில் குளிக்க வாய்ப்பு கிடைக்கும். மற்ற ஊர்காரங்க அந்த ஊர்களில் ஓடும் ஆறுகளில் குளிச்சிடுவாங்க..

    சென்னைக்காரங்க ஆறுன்னு நினைச்சு கூவத்துல போய் குளிக்க முடியுமா.. ன்னு கேட்கும் சென்னை வாசிகளுக்காக..

    ஆறுகள் இல்லாத ஊரில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்து ஆடி பதினெட்டு குளியலை குளிக்க முடியவில்லையே என யாரும் மனம் நோக வேண்டாம்.

    ஒரு செப்பு உலோகத்தில் செய்த செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்தில் இருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    செம்பில் இட்டிருந்த மஞ்சள் ஆனது நீரில் கரைந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி சாமி படத்தின் முன் மஞ்சள் தண்ணீர் செம்பில் பூக்களைப் தூவி கடவுளை வணங்க வேண்டும்.

    கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, 'எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம்.

    புண்ணிய நதிகளாகிய நீங்கள் எங்கள் முன்னோருக்கு அருள் செய்தது போல எங்களுக்கும் அருள் செய்யுங்கள் என மனதார நதிகளையும், கடவுளையும் வேண்டி கொள்ளுங்கள்.

    பின்னர் காவிரியையும், பொருநை எனும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபடுங்கள்.

    வேண்டுதலும், பூஜையும் முடிந்ததும் செம்பிலுள்ள நீரை தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு ஊற்றி விடுங்கள்.

    இவ்வாறு செய்வதால் ஆடி பதினெட்டில் ஆற்றில் வரும் புதுப்புனல் நீரில் குளித்த புண்ணியம் கிட்டும்.

    புதிய காரியங்களை ஆடிப்பெருக்கு ஆன இன்று துவங்குங்கள். செய்யும் காரியங்களில் சிவனருளால் ஜெயம் கிட்டட்டும்.

    அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்து கள்...

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    Next Story
    ×