search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி– அன்னா ராஜம்
    X

    இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி– அன்னா ராஜம்

    • அன்னா ராஜம் முதன்முதலாக சென்னை மாகாணத்தில் பணியேற்க வரும்போது முதல்-அமைச்சராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியார்.
    • “திருமணம் செய்துகொண்டால் நீங்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்” என்ற நிபந்தனையும் விதித்திருந்தனர்.

    "பெண்ணாக இருப்பதால் இந்திய ஆட்சிப் பணிக்கு நீங்கள் பொருத்தமாக இருக்க மாட்டீர்கள். இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை. நீங்கள் அயல்நாட்டு சேவைப் பணி, அல்லது மத்திய அரசுப் பணியை தேர்ந்தெடுக்கலாம்" –மத்திய தேர்வாணைய பணிக்குழு இயக்குநர்கள்.

    "தகுதி இருந்தும் எனக்கு ஏன் இந்திய ஆட்சிப்பணியை மறுக்கிறீர்கள்? நான் அதைத்தான் தேர்வுசெய்வேன்" – அன்னா ராஜம் ஜார்ஜ்"

    இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலும் கூட தனக்கென்று தனிப் பாதையை தேர்ந்தெடுக்கின்ற உரிமைகள் பெண்களுக்கு கிடைக்கவில்லை. படித்து முடித்து தான் விரும்புகின்ற பணியைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமையும் கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டது என்றால் அப்படியெல்லாமா இருந்தது என்று இப்போதைய தலைமுறையினர் கேட்கக்கூடும்.

    இந்திய ஆட்சிப்பணியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் முதலில் அப்பணிகளுக்கு நியமித்தது ஐரோப்பியர்களை மட்டுமே. அவர்களிடம் இந்திய ஆட்சிப்பணிக்கு சிவில் சர்வீஸ் படித்த இந்தியர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போராடி உரிமையைப் பெற்ற இந்தியர்கள், விடுதலை கிடைத்த பின்னராவது இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கக்கூடாதென்று நினைக்கக் கூட இல்லை. அதனாலேயே 1950 வரை சிவில் சர்வீசஸ் படிக்க எந்தப் பெண்ணையும் யாரும் அனுமதிக்கவில்லை.

    எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்கத்தானே வேண்டும். ஆம்! இன்றைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள், இந்திய தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுகளை எழுதுகிறார்கள். நிறையப் பெண்கள் முதலிடங்களைப் பிடிக்கிறார்கள். மிக இளம்வயதில் வெற்றிபெறுகிறார்கள். திறம்பட நிர்வாகம் நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் விதையிட்டவரும், பெண்களுக்கும் இந்திய ஆட்சிப்பணியைத் தரவேண்டும் என்று போராடிப் பெற்று திறம்பட நி்ர்வாகம் நடத்தி காட்டியவரும் ஒரு அற்புதமான பெண், அவர்தான் அன்னா ராஜம் மல்ஹோத்ரா.

    இளமைக்காலம் மற்றும் கல்வி: எப்போதுமே பெண்கல்வியில் முன்னணியில் நிற்கும் கேரளாவில் பத்தனம்திட்டாவில் உள்ள நிரணம் என்ற கிராமத்தில் ஜூலை 17, 1927 அன்று அன்னா ராஜம் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஓ.ஏ. ஜார்ஜ் மற்றும் அன்னா பால். இவரின் தாத்தா மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய பைலோ பால் ஆவார்.

    கோழிக்கோட்டில் வளர்ந்த அன்னா ராஜம், தன் பள்ளிக்கல்வியையும் அங்குதான் முடித்தார். புரவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியும், கோழிக்கோட்டின் மலபார் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

    கல்வியில் தீராத ஆர்வம் கொண்ட அன்னா ராஜம், தன் மனதில் பல்வேறு உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருந்தார். இந்திய ஆட்சிப்பணித் தேர்வை வென்று ஆட்சியராக அமரவேண்டும் என்பது அதில் ஒன்று. அதன் முதல்படியாக சென்னைக்குச் சென்று, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியத்தினை சிறப்பாகப் பயின்று 1949-ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல்பெண்: தன் லட்சிய வேள்வியான இந்திய ஆட்சிப்பணியை அடையும் முயற்சிகளின் முதல்கட்டமாக 1950-ல் இந்திய ஆட்சிப்பணித் தேர்வினை எழுதி வெற்றிபெறுகின்றார் அன்னா ராஜம். சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெறுகிறார். அடுத்ததாக நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார். தான்தான் அத்தேர்வை எழுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட முதல்பெண் என்பதைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை.

    ஆட்சிப்பணியைப் பெறுவதில் போராட்டம்: 1951-ல் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்று அதில் கலந்து கொண்டபோது, யு.பி.எஸ்.சியின் (UPSC) அப்போதைய தலைவர் ஆர்.என்.பானர்ஜி தலைமையிலான நான்கு ஐ.சி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட நேர்காணல் குழு, அன்னா ராஜத்திடம் "எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறீர்கள்?" என்று கேட்டனர். "Indian Administrative Service" என அதற்கு பதிலளித்தார் அன்னா ராஜம்.

    இந்திய ஆட்சிப் பணியை தேர்ந்தெடுப்பதை விட, வெளியுறவு சேவை அல்லது மத்திய சேவைகளில் சேருமாறு கேட்டுக் கொண்டது நேர்காணல் செய்த ஆண்கள் அடங்கிய அக்குழு. ஏனென்றால், ஐ.ஏ.எஸ் பதவியுடன் ஒப்பிடும்போது அந்தப் பதவிகள் "பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை" என்று அந்த கனவான்கள் நம்பியதோடு அன்னா ராஜத்திடம் வலியுறுத்தவும் செய்தனர்.

    தன்நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்றல்: தேவையான நேரத்தி்ல், தேவையான விஷயங்களை, தேர்ந்தெடுப்பதில் தவறு செய்துவிட்டால் வாழ்கின்ற காலம்வரை நாம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டி வரும் அல்லவா!

    ஆனால் அன்னா ராஜம் தன் தேவை எது என்பதில் மட்டுமல்ல, அதனைப் பெறுவதில் உறுதியாகவும் இருந்தார். தகுதியிருந்தும் தனக்கு ஏன் ஐ.ஏ.எஸ். பணி மறுக்கப்படுகிறது எனக் கேட்டு அதுதான் வேண்டுமென்று உறுதியாக இருந்து, மெட்ராஸ் கேடரில் பணியையும் பெற்று "முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி" என்ற பெருமையோடு வெளியில் வந்தார்.

    ஆண்கள் கோலோச்சும் துறையில் ஒரு பெண் சாதிக்கமுடியுமா என்ற சந்தேகத்தோடு அவர்கள் அன்னா ராஜத்தின் பணி நியமன ஆணையில், "திருமணம் செய்துகொண்டால் நீங்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்" என்ற நிபந்தனையும் விதித்திருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்விதி திருத்தம் செய்யப்பட்டு நீக்கப்பட்டது.

    மீண்டும் ஒரு போராட்டம்: அன்னா ராஜத்தின் மனதில் இருந்த இந்திய ஆட்சிப்பணி பெற்றுவிட்டோம்; சாதித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி எல்லாம் மெட்ராஸ் கேடருக்கு வந்தவுடன் மறைந்துபோயின. ஒரு சங்கிலியை விடுவித்து வெளியே வந்தால் மற்றொரு சங்கிலி காத்துக் கொண்டிருந்தது.

    அன்னா ராஜம் முதன்முதலாக சென்னை மாகாணத்தில் பணியேற்க வரும்போது முதல்-அமைச்சராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியார். பொதுவாகவே அப்போதைய ஆண்களின் மனதை பிரதிபலிப்பவராக இருந்தவர் ராஜாஜி. பெண்கள் பொதுச் சேவையில் நுழைவதில் விருப்பம் இல்லாதவர்.

    ஆட்சிப்பணித் துறைக்கென ஒரு பெண் பணிநியமனம் பெற்றுவந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் பெண்ணால் அதனை சமாளிக்க முடியாது, கையாளவும் முடியாது என்பதை காரணம் காட்டி அன்னா ராஜத்திற்கு மாவட்ட துணை ஆட்சியர் பதவியான சப்-கலெக்டர் பதவிக்குப் பதிலாக தலைமைச் செயலகத்தில் ஒரு பதவியை ஒதுக்கித் தந்தார்.

    முதல்-அமைச்சருடன் விவாதம்: சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒதுக்கிய துறையை ஏற்றுக்கொள்ள அன்னா ராஜம் தயாராக இல்லை. தான் பெற்றுள்ள பயிற்சிகளைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெண் என்ற காரணத்தால் தன்னை குறைத்து மதிப்பிட்டுப் பேசிய முதல்வரிடம் விவாதிக்கத் தயாரானார் அன்னா ராஜம்.

    "வாய்ப்பே தராமல் என்னால் முடியாது என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?" என்றும், தான் பெற்றுள்ள பயிற்சிகளான குதிரை சவாரி, துப்பாக்கி மற்றும் ரிவால்வர் சுடுதல் திறன், மாஜிஸ்திரேட் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பெற்றுள்ள பயிற்சிகள், சட்டம் ஒழுங்கு சூழ்நிலைகள் எழும்போது அவற்றைக் கையாள்வதில் எந்த ஆணுக்கும் தான் குறைவானவர் அல்ல என்றும் அழுத்தம் திருத்தமாக வாதிட்டார் அன்னா ராஜம். இறுதியில் ராஜாஜி அவர் எடுத்து வைத்த வாதங்களுக்கு அடிபணிந்தார். ஒசூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல்பெண் ஆனார் அன்னா ராஜம்.

    ராஜாஜியின் பாராட்டு: சட்டம் ஒழுங்கை கையாள முடியாது என்று அன்னா ராஜத்தைப் பார்த்து பேசிய முதல்வர் ராஜாஜியே, அவரின் திறமைகளைக் கண்டும், பணியாற்றும் விதத்தைப் பார்த்தும், திருச்சிராப்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் முற்போக்குப் பெண்களுக்கு உதாரணமாக திகழ்கிறார் அன்னா ராஜம் என்று பாராட்டினார்.

    பாலினப் பாகுபாட்டிற்கெதிரான போராட்டம்: ஓசூர் சப்-கலெக்டராக பணியாற்றியபோது, தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு குதிரையில் சென்றார் அன்னா ராஜம். அப்போது அந்த கிராமத்துப் பெண்கள் அவரை பார்க்க விரும்புவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

    எங்களை மாதிரிதான் இருக்கிறார் : அன்னா ராஜமும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர்கள் அவரைச் சுற்றி சுற்றி நடந்தார்கள். அருகில் வந்து உற்று உற்றுப் பார்த்தார்கள். அப்போது ஒரு மூதாட்டி, "இவர் எங்களில் ஒருத்தியைப் போலத்தான் இருக்கிறார்" என்று வேறு எதையோ எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் கூறினார். அதிகாரியாக வந்த ஒரு பெண்ணிடமிருந்து மக்கள் வித்தியாசமாக எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை அன்னா ராஜம் உணர்ந்தார். அந்த சூழல் என்பது பெண்கள் எந்தளவிற்கு பெண் முன்னேற்றம் என்பது வாய்ப்புகளும் திறன்களையும் பொறுத்தது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

    திருமணம்: அன்னா ராஜம் தன் சக ஆட்சிப்பணி அதிகாரியும், அன்புத் தோழருமான ஆர்.என். மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொண்டார். கணவரைப் பற்றி குறிப்பிடும்போது அன்னா ராஜம், "நான் காத்திருந்து திருமணம் செய்துகொண்டது மிகவும் மதிப்புமிக்கது. மிகச் சிறந்த மனிதாபிமான குணங்களைக் கொண்டவர் மல்ஹோத்ரா" என்று குறிப்பிடுவார். இவர்கள் திருமணம் செய்துகொண்டபோது வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார் மல்ஹோத்ரா. மேலும், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நிதிச் செயலாளராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுவரையும் பதவி வகித்தவர் அன்னா ராஜத்தின் கணவர் ஆர்.என். மல்ஹோத்ரா.

    பிரதமர் இந்திராகாந்தியுடன் பணியாற்றுதல்: அன்னா ராஜம் மல்ஹோத்ரா தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர். ஆனால் அப்பெயர் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. நிர்வாகப் பணிகளில் பல்வேறு துறைகளிலும் ஏழு முதல்-அமைச்சர்களின் கீழ் பணியாற்றியும், இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவருடன் உணவு உற்பத்தி பெருக்கத்தினை முன்வைத்து "எட்டு நாடுகள் சுற்றுப்பயணம்" மேற்கொண்ட பெருமைக்குரியவராகவும் திகழ்ந்தார் அன்னா ராஜம்.

    நவா ஷேவா துறைமுகத்தை கணிணி மயமாக்கும் பொறுப்பை திறம்பட செய்துமுடித்தல் இதற்கு முன் செய்திராத ஒரு புதிய பொறுப்பு அன்னாராஜம் வசம் ஒப்படைக்கப்பட்டது. மும்பையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுகத்தை முதன்முறையாக முழுவதும் கணிணிமயமாக்க வேண்டும் என்பதே அது. இத்தகைய திட்டத்தை இதுவரை கையாளாத அன்னாராஜத்திற்கு இப்பணி மிகச்சவாலாக விளங்கியது. தினமும், தெற்கு பம்பாயில் கார்மைக்கேல் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு, கேட்வேயில் இருந்து காலை 7 மணிக்கு படகைப் பிடித்து, நவா ஷேவாவுக்குப் புறப்பட்டு வந்து, வெறிச்சோடிக் கிடக்கும் சதுப்பு நிலமாகவும், உப்பு நிலமாகவும் இருந்த இடத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது.

    பிரதமர் ராஜிவ்காந்தியின் பாராட்டு: துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, துறைமுகத்திற்கு அவ்வப்போது வந்து பார்த்து அன்னா ராஜத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.

    இந்தியாவின் முதல் கணினிமயமாக்கப்பட்ட துறைமுகமான நவா ஷேவா (Nhava Sheva) (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) மும்பையில் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்தார் அன்னா ராஜம். பணியாற்றும் போதும், பணி ஓய்விற்குப் பின்னரும் தான் ஏற்றுக்கொண்ட அத்தனை பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்து பெயரும், புகழும் 'பத்மபூஷன்' விருதும் பெற்ற அன்னா ராஜம் மல்ஹோத்ரா, தன்னுடைய 91வது வயதில் செப்டம்பர் 17, 2018 அன்று மறைந்தார்.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    Next Story
    ×