search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருமணத் தடையும் கன்னி மூலையும்
    X

    திருமணத் தடையும் கன்னி மூலையும்

    • பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு.
    • குடியிருக்கும் வீட்டின் தென்மேற்கு கெட்டிருக்கும் பட்சத்தில் திருமணம் என்ற ஒரு அத்தியாயம் இல்லாமல் போகிறது.

    வாஸ்து சாஸ்திரம் என்றால் வசிப்பிடம் பற்றிய அறிவியல் என்று பொருள். இயற்கை எனும் சக்தியின் வரையறுக்கப்பட்ட நியதிகளை கடைபிடித்து கட்டிடங்களை உருவாக்குவது வாஸ்து சாஸ்திரமாகும். பலர் வாஸ்து சாஸ்திரம் வேறு ஜோதிட சாஸ்திரம் வேறு என்று நினைக்கிறார்கள். ஜோதிடத்தின் ஒரு பிரிவே வாஸ்து சாஸ்திரமாகும். ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் எப்படி அமைந்துள்ளதோ அந்த அமைப்புக்கு ஏற்றவாறு அவர் வசிக்கும் வீடு அமையும். எனவே ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவர்கள் வசிக்கும் வீட்டின் அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

    "வீட்டைக் கட்டிப்பார்" கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. மனிதர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்தில் வாழ்வதற்கான வீடு கிடைப்பது சவாலாகிவிட்டது. அதுவும் வாஸ்துப்படி அமைவது என்றால் மிகப் பெரிய சவாலாகிவிட்டது. ஒருவருக்கு சொந்த வீடு கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமாகும். பலருக்கு வீடு கட்டினாலும் அதில் குடியிருக்க முடிவதில்லை அல்லது வீடு கட்டி குடியேறிய பின் பிரச்சினைகள். துரத்துகின்றன. ஆடம்பரமான மாளிகையோ, ஓலைக் குடிசையோ எதுவாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டவை மட்டுமே நிலைத்து நிற்கிறது. வாஸ்து முறைப்படி அமையாத எத்தனையோ வீடுகள் வாழ்க்கை நடத்த முடியாமல் பயனற்று போய்விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம்.

    மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணம். பருவ வயதை அடைந்த ஆண் மற்றும் பெண்ணிற்கு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியும் ஆர்வமும் வருவது இயற்கை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தை தரும் திருப்பமா கவும் ஆரம்பமாகவும் அமைவது திருமணம்.வாழ்வியல் ரீதியான சில காரணங்களால் பலருக்கு திருமண வாழ்க்கை கானல் நீராக இருக்கிறது. வாழ்வியல் ரீதியாக திருமணத் தடைக்கு ஒருவர் குடியிருக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதியும் காரணமாக அமைகிறது.

    ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள யோகங்களின் அடிப்படையிலேயே குடியிருக்கும் வீடு அமையும். மனித வாழ்வின் அடிப்படை தேவையில் வசிக்கும் வீடு முக்கிய பங்கு வகிக்கிறது. வாழும் வீடு வளமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்கு நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.குடும்ப உறவுகள் மகிழ்சியாக வாழ முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

    பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில் ஒருவர் வசிக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதியைத் தான் கன்னி மூலை என்று சொல்லு வார்கள். தென்மேற்கு மூலை வீட்டில் வசிக்கும் கன்னி களுக்கும் கன்னி தெய்வத்திற்குரிய மூலையாகும்.

    ராசிச் சக்கரத்தில் காலபுருஷ ஆறாமிடமான கன்னி ராசியே கன்னிமூலை என்றழைக்கப்படும்.

    பொதுவாக கன்னி மூலை என்பது உயர்ந்தும் நீரோட்டம் இல்லாமல் இருப்பதுடன் எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும்.வாஸ்து சாஸ்திரப்படி கன்னிமூலை என்று அழைக்கப்படும் தென்மேற்குப் பகுதி தாழ்வாக இருந்தாலோ, நீரோட்டம் இருந்தாலோ, மூடப்படாமல் இருப்பின், அந்த வீட்டில் தீராத வியாதிகள், பொருள் பற்றாக்குறை மற்றும் சுப காரியத் தடை இருந்து கொண்டே இருக்கும்

    இந்தியாவில் கன்னிமூலை என்று அழைக்கப்படுவது கன்னியாகுமரி மற்றும் கேரள நாட்டின் தென்மேற்கு பகுதிகள். தென்மேற்கு பகுதிகளான கன்னியாகுமரி மற்றும் கேரளா நாட்டின் தென் மேற்கு பகுதிகள் நீரோட்டம் மிகுந்ததாகவும் மேலும் தாழ்ந்தும் காணப்படுகிறது.ஆக இந்தியாவின் கன்னி மூலை பகுதிகள் பாதிக்கப்படுகிறது.

    தென் மேற்கு பகுதி பாதிக்கப்பட்ட காரணத்தால் நமது முன்னோர்கள் அங்கே பிரம்மச்சாரி கடவுள்களை ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு கன்னி மூலை பாதிப்பை வெகுவாக குறையும்படி செய்தனர்.

    அதாவது ராசிச் சக்கரத்தில் கன்னி மூலையை குறிக்கும் தென்மேற்கு பகுதி கன்னி ராசியாகும். அந்த கன்னி ராசியின் ஆரம்ப நட்சத்திரம் உத்திரம் ஆகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சுவாமி ஐயப்பன். சபரிமலை ஐயப்பன் ரூபம் இந்திய மக்கள் அனைவருக்கும் கன்னிமூலை பாதிப்பிலிருந்து காப்பாற்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட சாஸ்தா ரூபமாகும்.

    இதையே ஒரு ஆய்விற்காக உற்று நோக்கினால் தென் எல்லையை ஆட்சி செய்யும் கன்னியாகுமரி அம்மனும் தென் மேற்கில் அருள் பாலித்து வரும் நமது அய்யன் ஐயப்ப சுவாமியும் கன்னி தெய்வம் தானே. தென்மேற்கு தாழ்ந்தும் நீர் மிகுந்தும் இருப்பதால் தான் குமரி அன்னையும் ஹரிஹர சுதனும் கன்னியாகவே இருக்கிறார்கள்.

    இதேபோல் குடியிருக்கும் வீட்டிற்கும் கன்னி மூலைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காமிடத்தில் ராகு,கேது,மாந்தி மற்றும் நீச அஸ்தமன கிரகங்கள் இருந்தாலோ கன்னி ராசியில் மேலே கூறிய கிரகங்கள் இருந்தாலோ கன்னி மூலை பாதிப்பு நிச்சயம் இருக்கும். போரிங், செப்டிக் டேங்க், பாத்ரூம், கிணறு, பம்ப் போன்ற ஏதோ ஒரு வாஸ்து குறைபாடு இருக்கும். சிலருக்கு பூமிக்கு மேலே பாதிப்பு தெரியாமல் கிணறு இருந்து மூடப்பட்ட இடமாகவோ அல்லது சல்லியப் பொருட்களோ தங்கி இருக்கும்.

    கண்ணுக்கு தெரிந்த, தெரியாத கன்னி மூலை பாதிப்பு வீட்டில் பிறந்த பெண்களின் திருமணதை தடை செய்கிறது அல்லது குலத்திற்கு மாறான திருமணத்தை நடத்தி விடுகிறது. முதிர் கன்னிகள் இருக்கும் வீட்டில் அல்லது ஜனன கால ஜாதகத்தில் விஷ கன்னிகா தோஷம் இருக்கும் பெண்கள் வாழும் வீட்டில் கன்னி மூலை பாதிப்பு இருக்கும். தென் மேற்கு பகுதியின் பாதிப்பால் பல பேர் பல விதங்களில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் கட்டாயம் அது பொய்யாகாது. இது போன்ற அமைப்பால் பாதிப்பு ஏற்படுவதாக சிறிய சந்தேகம் வந்தால் கூட, உடனடியாக அந்த பிரச்சினை என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்து தீர்வு கொள்வது மிகவும் நல்லது. பெண்கள் மட்டுமல்ல ஜாதக ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லாத ஆண்களும் கன்னி மூலை பாதிப்பால் திருமணத் தடையை சந்திக்கிறார்கள்.

    பெண்களின் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே நடக்க வேண்டிய சம்பவங்கள் பல உள்ளது. அதில் ஒன்று திருமணம். ஒரு பெண்ணின் கழுத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே திருமாங்கல்யம் ஏற வேண்டும் என்பது இந்துக்களின் சம்பிரதாயம். அந்த திருமாங்கல்யம் ஒரே ஒரு முறை கூட கழுத்தில் ஏறாத பெண்களும் இருக்கிறார்கள். பலமுறை தாலியையும், வாழ்க்கைத் துணையையும் மாற்ற வேண்டிய நிர்பந்தமும் சில பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்த இரண்டு நிலைகளுமே ஒரு பெண்ணிற்கு சகிக்க முடியாத கொடுமை தான்.

    குடியிருக்கும் வீட்டின் தென்மேற்கு கெட்டிருக்கும் பட்சத்தில் திருமணம் என்ற ஒரு அத்தியாயம் இல்லாமல் போகிறது. இந்த தோஷமுடைய ஜாதகத்திற்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது.

    இந்திய சமூதாய கட்டமைப்பில் ஆண் என்பவன், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டாலும் பெரியதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண்ணிற்கு முதல் திருமணம் விவாகரத்து ஆனாலோ அல்லது கணவனை இழந்தாலோ அவளை இச்சமூகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. பெண்ணும், ஆணைப்போல் மறுதிருமணம் செய்து கொண்டாலும் திருமணத்தில் நிம்மதியற்ற நிலையே தொடர்கிறது.

    பரிகாரம்

    வீட்டின் கன்னிமூலை எப்போதுமே அடைத்து தான் வைத்திருக்க வேண்டும். வீட்டில் கன்னி மூலையானது திறந்த நிலையில், இருக்கும்பட்சத்தில், துர்தேவதைகள் கட்டாயம் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். அப்போது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும், தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை.

    கன்னி மூலை பாதிப்பை சரி செய்யாமல் திருமணத் தடைக்கு எவ்வளவு பரிகாரம் செய்தாலும் பலிப்பதில்லை.காலபு ருஷ ஆறாமிடமான கன்னியில் புதன் உச்சம் பெறுகிறார். சுக்கிரன் நீசம் பெறுகிறார். புதன் என்ற புத்தியை பயன்படுத்தி தென் மேற்கு பகுதியை சரி செய்பவர்க ளுக்கு நீச சுக்கிரனால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வீட்டில் பிறந்த பெண்களுக்கு சுப வாழ்க்கை தேடி வரும்.

    கன்னி மூலை பாதிப்பை சரி செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தென்மேற்கு பகுதியில் சிறிய பீடம் அல்லது

    கபோர்டு அமைத்து அதில் ஆஞ்சநேயர், சுவாமி ஐயப்பன் மற்றும் பாலாதிரிபுர சுந்தரி போன்ற படங்களை வைத்து வழிபட வேண்டும்.

    குடும்பத்தில் பிறந்து கன்னியாக மறைந்த கன்னிகளை வெள்ளி கிழமைகளில் அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.

    ஜோதிடத்தில் எந்த ஒருஸ்தானம் மூலமாக தீய பலன் நடைபெறுகிறதோ அதன் எதிர் ஸ்தான அதிபதியின் அதி தேவதையை வழிபட அந்த ஸ்தானத்தால் வந்த தீய பலன் குறையும்.ஜனன கால ஜாதகத்தில் கன்னி ராசியில் உள்ள கிரகத்தால் கன்னி மூலை பாதிக்கப்பட்டவர்கள் அதன் எதிர் வீடான மீனத்தின் அதிபதி குருவை வழிபட பாதிப்பு குறையும். சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமானுஜர் போன்ற சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபடலாம்.

    ஜோதிடரீதியாக ஆண் ஜாதகத்தில் 2,7ம் அதிபதிகள், 2,7-ல் நிற்கும் கிரகங்கள், சுக்கிரன், தசாபுத்திகள் ஓரளவு சுபத்தன்மையுடன் இயங்கினாலே உரிய வயதில் திருமணம் நடந்துவிடும்.

    பெண் ஜாதகத்தில் 2,7-ம் அதிபதிகள், 2,7-ல் நிற்கும் கிரகங்கள், செவ்வாய், தசாபுத்திகள் ஓரளவு சுபத்தன்மையுடன் இயங்கினாலே உரிய வயதில் திருமணம் நடந்துவிடும்.

    ஆனால் வாழ்வியல் ரீதியாக ஜனன கால ஜாதகத்தில் திருமண பாவகங்களில் எந்த குறைபாடும் இல்லாத பலருக்கு ஏற்படும் இடர்களை ஆய்வு செய்தால் அவர்கள் வசிக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    மனிதர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வினைகளை அனுபவிப்பதற்கு விதிப் பயன் தான் என்றாலும் சுய உணர்வோடு செயல்பட்டு கர்மாவை மாற்றியமைக்க முயற்சி செய்வது சாலச் சிறந்தது.

    Next Story
    ×