search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஜெர்மனியை வசீகரிக்கும் கோனிக்சீ ஏரி
    X

    ஜெர்மனியை வசீகரிக்கும் கோனிக்சீ ஏரி

    • கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப் பார்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள்.
    • ஜெர்மானியப்பெற்றோர்கள் பொறுப்பின்றி பியர் குடித்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

    ஜெர்மனி முழுக்க நிறைய ஏரிகள் இருக்கின்றன. அதி வசீகரமான ஒன்று கோனிக்சீ என்னும் பெரிய ஏரி. கோனிக் என்றால் ஜெர்மனில் ராஜாவாம்.

    ஏரி என்றால் நீலத்தண்ணி மட்டுமில்லை.. சுற்றிலும் பவேரியன் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், ஆங்காங்கே பனி படர்ந்து பரவசம் காட்டும் மேகத்திரைக்கு நடுவே பச்சை ரகசியம், காதுக்குள் ஜிவ்வென்னும் சில் காற்று தலையைக்கலைக்கும் விஷமம், துளிக்கூட குப்பை ஏதும் இல்லாத ஸ்வச் பவேரியா, அமைதியாக நம்மைக்கடத்தும் எலக்ட்ரிக் படகுகள், தூரத்தே ஊடாடும் வெள்ளை பாய்மரத்துணி வைத்த உல்லாச ஆசாமிப்படகுகள்.

    கூடவே கச்சிதமாக சினேகிதிகள், நம்மைப்போல கூட்டங்கூட்டமாய் டூரிஸ்டுகள். பாதிப்பேர் கிழங்கட்டைகள், பலர் துணைவியுடன் கூடவே கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப் பார்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள். வெறும் ஜட்டியுடன் மேலே ஒன்றுமில்லாமல், இருங்கள், இருங்கள், சின்னச்சின்னக்குழந்தைகள், ஸ், அப்பாடா, ஏரிக்கரையில் கால்களையும் பிருஷ்டத்தையும் நனைத்து விளையாடுகிறார்கள்.

    "பாத்து பாத்து, குழந்தை தண்ணில எறங்கறான் பார்!"

    "டேய்! கடங்காரா! உள்ள போகாதடா!

    இந்த மாதிரியான மரியாதைக்குரிய சப்தங்கள் ஏதுமின்றி ஜெர்மானியப்பெற்றோர்கள் பொறுப்பின்றி பியர் குடித்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

    நான் பார்த்து வியந்தது அந்த மாபெரும் ஏரிக்கு நடுவே முகத்தில் ஒரு சின்னக்கவலையோடு தன்னந்தனியே துடுப்பை வலித்து ஒரு டப்பா படகின் அல்லாட்டத்தில் இடுப்புக்கு மேலே முதுகுப்பக்கத்தில் பிளவைக்காட்டும் லோ லெவலில் பட்டாபட்டி டிராயர் அணிந்த ஒரு முப்பது வயதை தாண்டிய ஆள்… பரந்த அமைதியான மாபெரும் ஏரியில் வேகு வேகுவென தன்னந்தனியாக சின்னப்படகை சிரிக்காத முகத்துடன் வலித்துக்கொண்டு வரும் இந்த நபரின் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவாகத்தான் இருக்க முடியும்?

    இப்போது மீண்டும் போட்டொவைப்பாருங்கள்!

    துல்லியமான நீல ஏரி. துளிக்கூடச்சலனமில்லாத பாரபட்சமில்லாத ஞானியின் மனதைப்போல தண்ணீர்ப்பரப்பு. வீசும் சில் காற்றுக்குக்கூட சீரான அலைவரிசையைத் தோற்று வித்து ஒரு மெல்லிய நடுக்கத்தைக்காட்டி மறுபடியும் உறைந்துவிடுகிற நீர்ப்பரப்பு. பழுப்பு நிற வாத்துக்களின் கொர கொர சத்தமும், சில் வண்டின் ரீங்காரமும், லீவு போட்ட காலையில் சென்னையில் நாம் கேட்கும் ஒற்றைக்காகத்தின் குரலைப்போன்ற தனிமைக்காகக்கரையலும், நாளுக்கு ஒன்றிரண்டு முறை மட்டுமே தூரத்தே ஓடும் குட்ஸ் வண்டியும், இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மேப்பிள் மரங்களும், விரவி நிற்கும் அமைதியும் சில நேரங்களின் தனிமையின் கிலியை ஏற்படுத்துகின்றன.

    "தனிமையில் இருப்பது எளிதன்று" என்று சித்த புருஷர்கள் சொல்லுவது புரிகிறார்போல் இருக்கும் இடம்.

    சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக பெரிய பேக்கரி ஒன்றில் நுழைந்தோம். சந்தானத்துக்கு ஜோடியாய் "கஷ்க் முஷ்க்" என்று ஒரு பெண் வருமே, அதான் நம்ம மோகன் ராமின் டாட்டர், அவள் ஜாடையில் ஒரே ஒரு சின்னப்பெண் மட்டும் அந்தப்பெரிய பேக்கரியைப்பார்த்துக்கொள்கிறது. எங்களைப்பார்த்ததும் உடைசல் இங்கிலீஷில் இது வேணுமா அது வேணுமா, இதில் எள் போட்டு உடம்புக்கு நல்லது, அதில் சீஸ் கொலஸ்ட்ராலே கிடையாது என்றெல்லாம் பேசி ஒரு மெகா சைஸ் பன்னையும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி கேக்கையும் தள்ளி விட்டுவிட்டது. ஆனால் மகா உபசாரம் பண்ணியது. தானே பிளேட் கொண்டு வந்து கொடுத்து, ஸ்பூன் பொர்க்கெல்லம் தந்து, அடிக்கொருதடவை ஆர் யூ ஓக்கே என்றெல்லம் பந்தி விசாரனை பண்ணி………

    ஒரு ஸ்பூன் கேக்கை வாயில் போட்டால் கொழகொழவென்று சீசும், கிரீமும், ஐஸிங்கும் ஓரத்தில் துண்டு ஸ்ட்ராபெர்ரியுமாய் உள்ளே போகின்றது. அடுத்த ஸ்பூனை கேக்கின் ஓரத்தில் கொண்டுபோய் சாய்வெட்டாக ஒரு செதில் எடுத்தால்..அட..பெரிசாக பாதாம்! சந்தேகமே இல்லாமல் 500 கலோரிகள் கலந்து ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக இன்னிக்கு ஏற்பாடாகிவிட்டது!

    அந்த நீள வேன் கிட்டத்தட்ட ரெயில்வே காரேஜ் மாதிரி இருந்தது. ஒரு வித அழுக்குப்பச்சையும் மஞ்சளும் கலந்த இயந்திர ராட்சசன். கொஞ்சம் முன்னே போய்ப்பார்த்தேன். மெர்ஸிடீஸ் பென்ஸ் அக்சார் 240 ஹெச் பி குதிரைச்சக்தி என்று போட்டு "வ்ர்ரூம்" என்று உறுமிக்கொண்டிருந்தது.

    நல்ல மதிய வேளையில் நம்ம கண்ணகி சிலைக்கு எதிர்த்தாப்பில் நின்றிருக்கிறீர்களா? பீச் மணலில் ஒரு குடைக்குக்கீழ் ஒட்டி உட்கார்ந்துகொண்டிருக்கும் மனுஷ ஜென்மங்களைத்தவிர ஒரு பைத்தியக்கரனும் வெளியில இறங்க முடியாத சூடாக இருக்கும். அது மாதிரி சீதோஷ்ணம் அன்று மியூனிக்கில்! பளீரென்ற சூரியன் தான் தூக்கத்தைக் கலைத்தது. மணி பார்த்தேன்.

    அதிகாலை நாலரை!

    அடப்பாவிகளா!

    ஒரு வழியாக ஆறு மணிக்கு எழுந்து எப்போதும் போல வெட்டி முறிக்கறா மாதிரி பால்கனியில் நின்றவாறே காபி குடிக்கும்போது பேச்சு.

    "இன்னிக்கு ரியம் மால் வாசலில் காய்கறிச்சந்தை! போகலாமா!"

    மருமகள் கேட்டவுடன் சரி என்று கிளம்பிவிட்டோம். அங்குதான் இந்த டிரக்கைப்பார்த்தேன். அதன் பின்னங்கதவு, அந்த ரஜினி படத்தில் முழங்காலுக்கு மேலே ஸ்கர்ட் போட்டுக்கொண்டு வருவாளே, அவள் கார் கதவு மாதிரி மேல் நோக்கி திறக்க, அதிலிருந்து நாலடி, உயரமில்லை, அகலவாட்டில் இருந்த ஒரு தங்கக்கலர் தொங்கு மீசை இறங்கினான். அவனை ஒட்டி ஓடக்கோல் போல ஒரு ஒல்லிப்பிச்சானாய் இன்னொ ருத்தன். இருவரும் டிராகினுள்ளிருந்து நீளமான பச்சைக்கலர் கான்வாஸ் சுற்றிய சில பல கோணல் மாணலான கம்பிகள் அடங்கிய ஒரு வஸ்துவை எடுத்து கீழே வைத்தான். இதற்குள் முன் வழியாக இரண்டு பெண்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகி வென்றபோது அவளுடன் மேடையில் இருந்த மாதிரி இரண்டு பெண்கள். வாட்ட சாட்டமாக ஒருவர் முழங்கால் அளவுக்கு அரை டிராயர் போட்டி ருந்தான் இந்தப்பெண்கள் போட்டிருந்த அரை டிராயர்… சரி வேண்டாம், மேலே எழுதினால், மாதர் சங்கங்கள் கோபித்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்புவார்கள், அதையெல்லாம் சமாளிக்கும் திராணி இல்லை.

    இருவரும் அந்த கம்பி சமாச்சாரங்களை பரபரவென்று பிரித்து அங்கே நட்டு, இங்கே பிரித்து என்று என்னென்னவோ குழப்படி செய்தார்கள். பார்த்தால் நீளமாக ஒரு டெண்ட் உருவாகிவிட்டது! அதற்குள் வாட்டசாட்டனும் ஓடக்கோலும் மளமளவென்று டிரக்கிலிருந்து டிரேக்கலை எடுத்து அடுக்கி பத்தே நிமிஷங்களில்........

    காய்கறிக்கடை!

    அடையாறு சர்தார் பட்டேல் ரோடில் என்னுடைய ஸ்கூல் தினங்களில் அடையார் பேக்கரிக்கு எதிரில் பிளாட்பாரத்தில் இருந்த நியாயவிலைக்கடை போல ஆகிவிட்டது. என்ன அங்கே சண்முககனி நாடார் ஏழெட்டு பேனாக்கள் அடங்கிய தொள தொள பை வைத்த காமராஜ் சட்டையுடன் கல்லாவில். இங்கே, அதான் சொன்னெனே, ஐஸ்வர்யா ராய் மேடைப்பெண்கள்.

    இன்னும் கூட்டம் வரவில்லை. நானும் மனைவியும் அங்கு போய் பேச்சுக்கொடுத்தோம். எனக்குத்தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அவர்கள் இருவரும் பரிட்சய ஜெர்மனில்.

    மியூனிக்குக்கு வெளியே நூறு மைல் தொலைவில் பெரிய பண்ணையாம். நூற்றுக்கு மேல் ஏக்கரோ ஹெக்டேரோ பாழாய்போன மொழி வளத்தினால் கணக்கு சரியாக விளங்கவில்லை. அவர்களே வேலை செய்து விளைவிக்கும் காய்கறி, பழங்களாம். நேரடி வியாபாரம். விலை நல்ல மலிவு என்று மருமகள் சொன்னார். மிடில் மென் என்னும் நடுத்தரகு வியாபாரிகள் யாரும் இல்லாத நன்மையைப்பார்க்க முடிந்தது.

    கொட்ட கொட்ட முழிக்கும் ஸ்ட்ராபெர்ரி, அரிசி மூட்டை சைஸில் தர்பூசனி, முட்டைக்கோஸ் ஒன்று வாங்கினால் கூட்டு பொரியல் என்று வாரம் பூரா கடத்திவிடலாம்.

    தக்காளி பச்சைக்காம்பு இலைகளுடன் ரம்மியமாக இருக்க, நம்மூர் பழமுதிர் நிலையத்தில் எழுவது ரூபாய்க்கு ஒன்று விற்கும் பிளம், யூரோ ஒன்றுக்கு ஆறு தந்தார்கள். டெண்ட் கடையின் ஓரத்தில் அந்த இன்னொரு உலக அழகி ஒரு பெரிய கண்னாடி பாத்திரத்தில் நெறயத்தண்ணீர் விட்டு அதில் சடசடவென ஸிட்ராபெர்ரீக்களைக்கொட்டி வைத்தாள். கூடவெ இன்னொரு கண்ணாடியிலும் அதேமாதிரி.

    என்னது இது என்று விசாரித்தேன்.

    "இது சர்க்கரையில் போட்ட ஸ்டிராபெர்ரி! அது ஒயினில் ஊற வைத்தது! பிரீ! எடுத்துக்கொள்ளுங்கள்!"

    காலங்காலையிலேயே சாராயம் கூடாது என்பதால் அந்த சர்க்கரை ஸ்டிராபெர்ரியை இரண்டை மட்டுமே எடுத்துக்கொண்டு பேச்சுக்கொடுக்கலாம் என்று பார்த்தேன்.

    அந்த வாட்ட சாட்டன் தாய் மாமனாம்!

    இன்னிக்குப்போதும் என்று நகர்ந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    Next Story
    ×