search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: சிவாஜி-பத்மினி பாராட்டு!
    X

    மீனா மலரும் நினைவுகள்: சிவாஜி-பத்மினி பாராட்டு!

    • அந்த வயதில் அவர்களிடம் வாங்கிய வாழ்த்தும், பாராட்டும் எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை.
    • லட்சுமி அம்மா என்னிடம் வந்து மீனாக்குட்டிக்கு மருதாணி பிடிக்குமா என்றார்கள். நானும் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

    நலந்தானா...

    நலந்தானா...

    உடலும் உள்ளமும் நலம்தானா...

    இப்படி பாடி அபிநயத்தோடு பத்மினி அம்மா ஆட... சிவாஜி சார் அதற்கு பதிலை நாதஸ்வரம் வழியாக இசைக்க... பாட்டும்... பரதமும்... நடிப்பும்... அடேங்கப்பா... இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படி யாராலும் நடிக்க முடியாது! இதை நான்தான் சொல்ல வேண்டும் என்பது அல்ல. நடிப்பு உலகமே சொல்லும். அப்படிப்பட்ட ஒரு பாடலுக்கு என்னாலும் ஆட முடியும் என்று யாராவது போட்டி போட்டால்... எப்படி இருக்கும்?

    ஆனால் நான் சவால் விட்டு ஆடி இருக்கிறேனே. உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் சிவாஜி சார், பத்மினி அம்மா முன்பு ஆடி அசத்தி இருக்கிறேன். அட என்னம்மா நீ... அதெப்படி உன்னால் முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் அந்த வயதில் எனக்கு சிவாஜி சார் நடிப்புலக சக்கரவர்த்தி என்றோ, பத்மினி அம்மா நாட்டிய பேரொளி என்றோ தெரியாது.

    நானும் முறைப்படி பரதநாட்டியம் கற்றிருந்தேன். எனக்கு கற்றுத்தந்தவர் பொன்னி பாலசுப்பிரமணியம். சரி ஏதோ பரதநாட்டியம் தெரியும் என்பதால் தில்லானா மோகனம்பாள் பாட்டுக்கு அவர்போல் ஆடி விட முடியுமா? அதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல் ஆடினேன்.

    அதாவது "லட்சுமி வந்தாச்சு" என்ற படம். அந்த படத்தில் சிவாஜி சாரும், பத்மினி அம்மாவும்தான் ஜோடி. நான் குழந்தை நட்சத்திரம். கதைப்படி பத்மினி அம்மா கடுமையான சட்டத்திட்டங்களோடு குடும்பத்தில் எல்லோரையும் கட்டுப் பாட்டுடன் வளர்ப்பவர். ஜாலியாக இருப்பது கூட அவருக்கு பிடிக்காது. ஆனால் சிவாஜி சார் நேர் எதிரானவர். எல்லோருடனும் ஜாலியாக இருப்பவர். எல்லாரோடும் ஆடிப்பாடவும் செய்வார்.

    சிவாஜி சாருக்கும், பத்மினி அம்மாவுக்கும் திருமண நாள் வரும். அந்த நாளை கொண்டாட வேண்டும் என்று எல்லோரும் வீட்டின் மொட்டை மாடியில் சென்று ஆள் ஆளுக்கு டான்ஸ் ஆடுவோம். ரேவதியும் உண்டு. அப்போதுதான் நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா... என்ற பாடலுக்கு பரத நாட்டிய உடை அணிந்து நான் ஆடுவேன். நாதசுவரமும் இசைக்கப்படும். சிவாஜி சார் பார்வையாளர் வரிசையில் இருப்பது போல் அங்கு அமர்ந்து பார்த்து ரசித்து கொண்டிருப்பார்.

    நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பத்மினி அம்மா கோபத்தோடு அங்கே வருவார். உடனே எல்லோரும் நிசப்தமாகி விடுவோம். இதுதான் காட்சி. சூட்டிங் முடிந்ததும் பத்மினி அம்மா சிரித்து விடுவார். சூப்பர்டா செல்லம் நாங்கள் எங்கள் திறமையெல்லாம் ஒன்று திரட்டி நடித்த பாடல் காட்சி. ஆனால் இந்த வயதில் நீ இவ்வளவு அழகாக ஆடி அசத்தி விட்டாய் என்று என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள்.

    சிவாஜி சாரும் மீனாக்குட்டி... சூப்பர் பின்னிட்டேபோ... என்று பாராட்டினார். அந்த வயதில் அவர்களிடம் வாங்கிய வாழ்த்தும், பாராட்டும் எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் அதை இப்போது நினைக்கும் போதும் சந்தோஷத்தில் உடலெல்லாம் புல்லரிக்கிறது. இந்த நிகழ்வுகள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.

    எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் இருக்கும் சிலரை பார்த்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நமக்கு உத்வேகம் பிறக்கும். அப்படி எனக்கு உத்வேகம் ஊட்டியது ஸ்ரீதேவி அம்மா. ஏற்கனவே ஸ்ரீதேவி அம்மாவின் அழகை பார்த்து பிரம்மித்து இருப்பதாக தெரிவித்திருந்தேன். சிறு வயதில் எனது எண்ணம் அது.

    அதே மீனா ஹீரோயின் ஆன பிறகு ஸ்ரீதேவியின் நட்பு வட்டாரத்தில் இருந்ததும் மறக்க முடியாத அனுபவம். வயது இடைவெளி அதிகமாக இருந்தாலும் காலப்போக்கில் அவரது நெருங்கிய தோழியாக மாறி விட்டேன். ஸ்ரீதேவி வித்தியாசமானவர். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் யாரோடும் அதிகமாக பேச மாட்டார். அமைதியாகவே இருப்பார். ஆனால் வந்தவுடன் தனக்கு என்ன காட்சி என்பதை கேட்டு அதில் நடிப்பதற்கு மட்டும் முயற்சிக்க மாட்டார். அதற்கு முந்தைய காட்சிகள், பின்னர் வரப்போகும் காட்சிகள் எல்லாவற்றையும் கவனமுடன் கேட்டு அறிவார். அதை உள்வாங்கி கொண்டு அதன்பிறகுதான் நடிப்பார். அதனால்தான் எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் அதில் முத்திரை பதிப்பார். அதற்கு உதாரணம் 'மூன்றாம் பிறை' ஒன்று போதாதா?

    அவரைப்பார்த்துதான் ஹீரோயின் ஆன பிறகு திரைத்துறையில் சில விசயங்களை கற்றுக்கொண்டேன். திரைத்துறையை பொறுத்தவரை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.

    கேமிரா முன்பு எப்படி நின்றால் எப்படி தெரியும்? டயலாக்குகளை பேசிக்கொண்டே 'மார்க்' பண்ணியிருக்கும் இடத்தில் போய் நிற்க வேண்டும்.

    நான் மானசீகமாக நேசித்து மகிழ்ந்த அந்த அழகு தேவதை திடீரென்று இறந்து விட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    சிவக்குமார், லட்சுமி அம்மா ஜோடியாக நடித்த படம் "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்". அந்த படத்திலும் நான் குழந்தை நட்சத்திரம். அவர்களுக்கு குழந்தையாக நடித்த என்னை தூக்கி கொஞ்சுவதில் கூட இருவருக்கும் இடையே போட்டி நிலவும். உனக்கு இந்த அங்கிளை பிடிக்குமா? அந்த ஆண்டியை பிடிக்குமா? என்றெல்லாம் கேள்விக்கேட்டு இருவருமே என் மீது அளவுக்கடந்த பாசத்தை காட்டியவர்கள். இருவரும் என்னை தூக்கி வைத்து கொஞ்சிய புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டு சுவரை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.

    அந்த படத்தில் நடித்த போது ஒரு நாள் லட்சுமி அம்மா கையில் மருதாணி வைத்திருந்தது நன்றாக சிவந்து மிகவும் அழகாக இருந்தது. நான் அதையே பார்த்து கொண்டிருந்தேன். அதை கவனித்த லட்சுமி அம்மா என்னிடம் வந்து மீனாக்குட்டிக்கு மருதாணி பிடிக்குமா என்றார்கள். நானும் ஆமாம் என்று தலையை ஆட்டினேன். சூட்டிங் முடிந்து விட்டது. எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். ஆனால் லட்சுமி அம்மா என்னை அழைத்து வா கைக்கு மருதாணி போட்டு விடுகிறேன் என்று கூட்டி சென்று என் கைகளுக்கு மருதாணி போட்டுவிட்டுதான் புறப்பட்டு சென்றார்.

    எனது ஆசையை நிறைவேற்றி வைப்பதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தது மட்டுமல்ல முன்னணி கலைஞர்களுக்கு செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்து கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.

    Next Story
    ×