search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்
    X

    இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

    • உலகில் மிக அதிகமான பெண் பைலட்டுகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி அல்லவா!
    • அன்றைய சமூகத்தில் இவர்கள் மிகப்பெரிய புரட்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையே வியப்பாக பார்த்த காலம் ஒன்றுண்டு. பெண்கள் கார் ஓட்டுவது என்பதே பெரும் சாதனையாக கருதப்பட்ட நேரத்தில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆகாய விமானத்தை ஓட்டுவது என்பது எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    ஆகாய விமானம் செல்கின்ற சத்தம் கேட்டால் வெளியே ஓடிவந்து, அன்னாந்து பார்த்து கைதட்டி மகிழ்வது மட்டுமே பெண்களுக்கு உரியதாக இருந்த காலம் அது. எங்கோ ஒன்றிரண்டு சீமாட்டிகள் மட்டுமே விமானத்தில் பயணிகளாக பயணம் செய்வதுதான் அரிதாக நிகழும். அப்படிப்பட்ட காலத்தில் நாட்டிற்கே இறக்கை கிடைக்காத சுதந்திரமற்ற நாட்டில் தனக்கு இறக்கைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள் ஒரு பெண்.

    தன் கைகளின் விசையால், ஆகாய விமானத்தை இயக்கிப் பார்க்கின்ற வாய்ப்பை, தன் கட்டுப்பாட்டால் விமானம் ஆகாய வெளியை அளப்பதை, வெண்மேகங்களின் ஊடே பறந்து செல்வதை சாதித்தே தீரவேண்டும் என்று எத்தனையோ பெண்கள் கனவு கண்டிருக்கக் கூடும். ஆனால் எத்தனை பேருக்கு தன் கனவை நனவாக்கும் சூழ்நிலைகள் வாய்க்கின்றது?

    அக்கனவை நனவாக்க சூழ்நிலைகள் வாய்க்கப்பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் சரளா தாக்ரல் என்ற சேலைகட்டிய செம்பாவை.

    உலகில் மிக அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட நாடு எது தெரியுமா? உங்கள் பதில் அநேகமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என்று மேலை நாடுகளாக இருக்கக் கூடும். ஆனால் உலகில் மிக அதிகமான பெண் பைலட்டுகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி அல்லவா!

    இந்தப் பெருமைக்கு விதை போட்ட பெண்தான் இக்கட்டுரையின் கதாநாயகி. சரளா ஷர்மாவாக இருந்து பின்னர் சரளா தாக்ரல் ஆன சாதனை மங்கை.

    ஆகாயத்தில் பறக்கின்ற விமானங்களின் விமானக் கட்டுப்பாட்டு அறை உட்பட அனைத்தும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும்போது சரளாவிற்கு அக்கட்டுப்பாட்டு அறையில் முதல் மங்கையாக தான் மட்டுமே இருந்து விமானத்தை இயக்கவேண்டும் என்று ஆசை பிறந்தது. அந்த ஆசை பிறக்கும் போது அப்பெண்ணுக்குத் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண்குழந்தையும் இருந்தாள். ஆசையும், ஆர்வமும் வருவதற்கு வயதும், திருமணமும் தடையாகி விடுமா என்ன?

    எங்கும், எப்போதும் பெண்ணின் முன்னேற்றத்திற்கு குடும்பத்தில் இருக்கும் ஆண்களே பெரும்பாலும் தடையாக இருப்பார்கள். ஆனால் சற்றே நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் வண்ணம் சரளாவின் வாழ்வில் மட்டும் அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. திருமணத்திற்குப் பின்னர் சரளாவின் கணவரும், மாமனாரும்தான் சரளா ஒரு விமானியாக சாதனை படைப்பதற்கு காரணமாக, பின்புலமாக இருந்தார்கள் என்பது பெரிதும் மகிழ்ச்சிக்குரியதுதானே! அன்றைய சமூகத்தில் இவர்கள் மிகப்பெரிய புரட்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இளமையில் திருமணம்: சரளா, 1914 ஆகஸ்ட் 8-ந் தேதி ஆஜ்மீரில் பிறந்தார். 16 வயதிலேயே பி.டி. ஷர்மா என்பவருடன் திருமணம். அப்போதைய பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த இந்தியாவில் லாகூரில் வாழ்ந்தனர் ஷர்மா குடும்பத்தினர். திருமணத்திற்குப் பின் சரளாவும் கணவருடன் வாழ்ந்திட லாகூர் சென்றார். சரளாவின் கணவரான ஷர்மா 'ஏர்மெயில் பைலட் லைசன்ஸ்' பெற்று, கராச்சிக்கும், லாகூருக்கும் இடையில் பறந்த முதல் இந்தியர். அதுமட்டுமின்றி அவரின் குடும்பத்தில் ஒன்பது பேர் விமானிகளாக இருந்தனர். இந்தப் பின்னணிதான் சரளாவும் பைலட்டாக உதவியது எனலாம்.

    குடும்பத்தினரின் ஆதரவும் விமானப் பயிற்சியும்:

    சரளாவின் ஆசைக்கனவாக இருந்த, தான் பைலட்டாக முடியுமா என்ற வினாவிற்கு அழுத்தந்திருத்தமாக முடியும் என்று கூறி அதற்கான முயற்சியை எடுத்தவர்கள் சரளாவின் கணவரான பி.டி. ஷர்மாவும், ஷர்மாவின் தந்தையும்தான். ஷர்மா குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'இமாலயா பிளையிங் கம்பெனி' (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடையே அந்நிறுவனம் தன் பயண சேவையை நடத்தி வந்தது. சரளாவை 'பிளையிங் ஸ்கூலில்' சேர்த்துவிட்டவர் அவரின் மாமனார் என்பதை நன்றியோடு ஒரு பேட்டியில் நினைவு கூர்கிறார் சரளா.

    ஷர்மாவின் தந்தை தனது மகனிடம் சரளாவிற்கு விமானப் பயிற்சியைக் கற்றுத் தரும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிடைக்காததைக் கண்ட அவர், தானே தனது மருமகளை "லாகூர் பிளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' என்ற பயிற்சியாளரிடம் சரளாவிற்கு பயிற்சியளிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

    முதல் பெண் விமானியாக உரிமம் பெறுதல்

    பிளையிங் ஸ்கூலில் பயிற்சி பெற்ற பிறகு தனியே விமானத்தில் பறக்க மிக சீக்கிரமே தயாராகி விட்டார் சரளா. முதன் முதலாக சேலையுடன் ஒரு இந்தியப் பெண் விமானத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் தனியே அமர்ந்து 'ஜிப்சி மோத்' என்ற அந்தக் காலத்து சிறுவகை விமானத்தை இயக்கி சாதனை படைத்தார் என்றால் அது சரளா ஷர்மாதான்.

    தனியே விமானத்தை இயக்கி வெற்றி பெற்ற பின்னர் தொடர் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார் சரளா. முதலில், பைலட்டுக்கான 'A' Type லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் ஆயிரம் மணி நேரம் விண்ணில் விமானத்தை இயக்கியிருக்க வேண்டும்.

    விடா முயற்சியுடன் அந்தப் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் சரளா. ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கி முடித்தப் பின்னர் 1936 -ல் தன்னுடைய 21-வது வயதில் ஏவியேஷன் பைலட் எனப்படும் 'A' Type லைசன்ஸ் எடுத்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையைப் பெற்றார் சரளா ஷர்மா.

    தொடர்ந்து வணிக அளவில் பயணிகள் போக்குவரத்து விமானத்தில் விமானி ஆக வேண்டுமென்றால் 'B' Type லைசன்ஸ் எடுக்க வேண்டும். ஜோத்பூருக்குச் சென்று அதனைப் பெறுவதற்கான முயற்சிகளில் சரளா ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவரை திசை திருப்பும் அதிர்ச்சியைத் தந்தது வாழ்க்கை.

    சோதனைகள்: 1939-ல் நிகழ்ந்த விமான விபத்தில் சரளாவின் கணவர் பி.டி. ஷர்மா மரணமுற்றார். முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் திடீர் சறுக்கல்! 16 வயதில் திருமணம், 21 வயதில் பைலட், 24 வயதில் கணவனை இழந்த கைம்பெண். மகளோடு தனித்து நின்ற சரளா தனக்கு ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொண்டு பயணிகள் விமான பைலட் சான்றிதழ் பெற முயற்சி செய்யும் வேளையில் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. சரளாவின் முயற்சிகளும் தடைபட்டு சான்றிதழுக்கு காத்திருக்க வேண்டி வந்தது.

    ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற வேண்டும் என்பதில்தான் மனிதவாழ்வின் முன்னேற்றம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் வெறுமனே வீட்டில் இருக்காமல் லாகூரில் உள்ள மாயோ கலைக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்த சரளா, வங்காள முறை ஓவியத்தில் நுண்கலையில் பட்டயப் படிப்பை (Diploma in fine arts) முடித்தார்.

    இந்திய சுதந்திரம் நெருங்க நெருங்க வடமேற்கு இந்தியா முழுவதும் கலவரம் வெடித்தது. லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கணவனோ, வீட்டின் மற்ற ஆண்களோ இறந்துவிடும் சூழலில் வீட்டில் இருக்கும் பெண்கள் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டால் நஞ்சை அருந்தி தன்னை மாய்த்துகொள்வதற்கு பெண்களுக்கு நஞ்சுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக் கொணடு இளம்வயதில் கைம்பெண்ணாக நிற்கும் சரளாவை, இங்கே தங்கியிருக்க வேண்டாம் என்றும் டெல்லிக்கு சென்று விடுமாறும் அறிவுறுத்தினர். வேறுவழியின்றி தன் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்துக்கொண்டு ெரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார் சரளா.

    டெல்லியில் ஓவியராகவும், ஆடை ஆபரண வடிவமைப்பாளராகவும், உற்பத்தியாளராகவும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார் சரளா. மிக விரைவிலேயே ஒரு தொழில் அதிபராக மாறினார். சரளாவின் பெற்றோர் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட ஆரிய சமாஜத்தின் கொள்கைகளை பின்பற்றியதால், தன் மகளுக்கு பி.பி. தாக்ரால் என்பவருக்கு 1948-ல் மறுமணம் செய்து வைத்தனர்.

    விமானியாகுதல்: விடுதலை பெற்று நாடு அமைதி கண்டவுடன், தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளாவுக்கு 1948-ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ராஜஸ்தான் ஆல்வார் அரசியின் விமானத்தை இயக்க ஒரு பெண் விமானி தேவை என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அப்பணிக்கு விண்ணப்பித்த சரளா தாக்ரால் அரசியின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

    தொடர்ந்து தான் தொடங்கிய தொழில் மீது கவனம் செலுத்தி புதிய புதிய வடிவங்களில், வண்ணங்களில் ஆடை, ஆபரணம் உற்பத்தி செய்து வந்தார். இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களில் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டும் ஒருவர்.

    முதல் வணிகமுறை பெண்விமானி துர்கா பானர்ஜி

    1966-ம் ஆண்டில், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்தியன் ஏர்லைன்சின் முதல் பெண் விமானியாக பணியேற்ற துர்கா பானர்ஜி பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு சரளா தாக்ரல் முன்னோடியாக இருந்தார் என்றால் அது மிகையில்லை.

    பெண்களும் விமானியாக முடியும் என்பதற்கு பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த பன்முகத் திறன்வாய்ந்த சரளா தாக்ரல் தன்னுடைய 93-ம் வயதில் மார்ச் 15, 2008-ல் தான் பறக்க ஆசைப்பட்ட விண்ணிற்கு போய்ச் சேர்ந்தார்.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    Next Story
    ×