search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: அன்புள்ள ரஜினிகாந்த்...!
    X

    மீனா மலரும் நினைவுகள்: அன்புள்ள ரஜினிகாந்த்...!

    • பல படங்களில் குழந்தை நட்சத்திரம். இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரம்தான். இருந்தாலும் படம் முழுவதும் என்னை சுற்றியே இருந்தது.
    • நான் பேச வேண்டும் என்பதற்காக அம்பிகா ஆன்டி என்னுடன் தவியாய் தவிப்பார்.

    ரஜினி அங்கிள்....

    என்று மழலை குரலில் அழைத்தபடியே வெள்ளை வெளேர் நிறத்தில் பிராக் அணிந்து, தலையிலும் வெள்ளை நிறத்தில் பூச்சூடி கொண்டு ஏஞ்சல் போல் முத்துப்பல் தெரிய சிரித்த படியே ஒரு குழந்தை ஓடி வருவதையும்...

    அந்த மயக்கும் குரலை கேட்டு எதிரில் இருந்து வெள்ளை நிற பேண்ட், சட்டையில் ரஜினி ஓடி வந்து அந்த குழந்தையை வாரி அனைத்து தூக்கி கொஞ்சி மகிழ்ந்து

    "முத்து மணிச்சுடரே வா...

    முல்லை மலர் சரமே வா... என்று பாடு வதும் நினைவிருக்கிறதா?

    ஆங்... ஆமா.. அது 'அன்புள்ள ரஜினி காந்த்' படமாச்சே என்கிறீர்களா?

    அதே படம்தான்! அந்த படத்தில் ரஜினி அங்கிள்... ரஜினி அங்கிள்... என்று அவரை சுற்றி சுற்றி வரும் குழந்தை நட்சத்திரம் உங்கள் மீனாதான்...

    பல படங்களில் குழந்தை நட்சத்திரம். இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரம்தான். இருந்தாலும் படம் முழுவதும் என்னை சுற்றியே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு குழந்தை கதாநாயகி அந்தஸ்து எனக்கு அந்தப் படத்தில் இருந்தது.

    முடங்கிப் போன இடது கையை மடித்து நெஞ்சோடு வைத்துக் கொண்டு... இரண்டு கால்களையும் இணைத்து சேர்த்து வைத்தபடி சக்கர நாற்காலியில்தான் நான் படம் முழுக்க வந்து கொண்டிருப்பேன்.

    ரோசி....!

    இதுதான் அந்த படத்தில் எனது பெயர்.

    மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் வளர்வேன். அதே இல்லத்தில் எனது அம்மாவான அம்பிகா ஆன்டி ஆயாவாக இருப்பார். அவர்தான் என் அம்மா என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியாது.

    நான் பேச வேண்டும் என்பதற்காக அம்பிகா ஆன்டி என்னுடன் தவியாய் தவிப்பார். அவர் என் அருகில் வந்து மண்டியிட்டு ஏதாவது பேசு ரோசி என்று என்னிடம் கெஞ்சுவார். அவரை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கும்.

    ஆனால் டைரக்டர் சொல்வார் 'பாப்பா... இப்போது நீ கோபமாக இருக்கணும்... உம்முன்னு இருக்கணும்.... ஏதாவது தந்தால் தூக்கி வீசணும் என்பார்.

    ஆனால் எனக்கு முகத்தை இப்படித்தான் வைக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாது. ஏதோ எனக்கு தெரிந்தது போல் இருப்பேன்.

    ஆனால் காட்சி முடிந்ததும் சூப்பர்டா கண்ணா... சூப்பர்டா செல்லம்... என்றெல்லாம் பாராட்டுவார்கள்.

    காட்சி முடிந்ததும் அம்பிகா ஆன்டி என்னிடம் வந்து 'நான் கெஞ்சினாலும் பேச மாட்டே.... அழுதாலும் பேச மாட்டே.... என்ன? அவ்வளவு பெரிய பிடிவாதக்காரியா நீ?' என்று செல்லமாக கொஞ்சுவார்.

    அப்படித்தானே இருக்க சொன்னாங்க ஆன்டி என்பேன் நான்.

    அதை கேட்டதும் 'சூப்பர்டா....' என்று பாராட்டுவார். சாக்லெட்டும் தருவார். எனக்கு தேவை அதுதானே...!

    ரஜினி சாரோடு நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் தினமும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பேன்.

    என்னை பார்த்ததும் 'என்ன... ரோசி பாப்பா... எப்படி இருக்கீங்க..." என்பார்.

    நான் உடனே "அங்கிள், என் பெயர் ரோசி இல்லை. மீனா" என்பேன்.

    அதை கேட்டதும் 'ஓ... நடிக்கும் போது மட்டும்தான் அப்படி கூப்பிடணுமா? ஓ.கே.... ஓ.கே... என்று சிரிப்பார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் மட்டும் எக்க சக்க நினைவுகள்.

    அதிலும் என்னோடு நடித்த 5 பேரும் என் வயதுடையவர்கள். படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்க மாட்டோம். அங்கும் இங்கும் ஓடி விளையாடுவோம். ரொம்ப ஜாலியாக இருந்தது.

    இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கேமிரா முன்பு எப்போதும் கையை மடித்தும், காலை சேர்த்தும் வைத்தபடி இருக்க சொல்வார்கள். இந்த பழக்க தோஷம் வீட்டிலும் தொடர்ந்தது. வீட்டில் இருக்கும் போதும் அப்படியே இருப்பேன். அம்மா தான் 'ஏய், நல்லா உட்கார்' என்று அடிக்கடி சத்தம் போடுவார்.

    அந்த படத்தின் கடைசி கிளை மேக்ஸ் காட்சி எனக்கே ஒரு மாதிரி இருந்தது. எனக்கு ஆறுதல் சொல்லும் ரஜினி அங்கிள், அம்பிகா ஆன்டி, மதர், எனது நண்பர்கள் எல்லோரும் சுற்றி நிற்பார்கள்.

    கட்டிலில் படுத்த படுக்கையாக இருக்கும் நான் ஆறுதல் சொல்லும் அவர்களிடம் 'நீங்க பொய் சொல்றீங்க. நான் செத்து போயிருவேன். முன்ன மாதிரி எனக்கு மூச்சு விட முடியவில்லை. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுக்கிறேன் என்பேன்.

    அதை கேட்டதும் கர்த்தர் உன்னை கைவிட மாட்டார் என்பார்கள். நான் 'கைவிட மாட்டார். என்னை கையோடு கூட்டி சென்று விடுவார் என்பேன்.

    இப்படி உருக்கமாக பேசும் அந்த வசனங்கள் நான் எனது குரலில் பேசியது.

    அந்த படத்தில் மேக்கப் எதுவும் கிடையாது. இயல்பாகவே நடித்தோம். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படம்.

    100-வது நாள் வெற்றி விழாவுக்கு என்னையும் அழைத்து சென்றி ருந்தார்கள். மேடையில் இருந்த நான் பழக்க தோசத்தில் கையை மடித்து வைத்து கொண்டு, கால்களையும் சேர்த்து வைத்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்தேன். பார்வையாளர்கள் வரிசையில் இருந்த அம்மாதான் கைைய கீழேேபாடு சகஜமாக இரு என்று சைகையால் சொன்னார்.

    படப்பிடிப்பின் போது பலமுறை ரஜினி என்னை தூக்கி வைத்து கொண்டு நடிப்பார். அப்போது நான் குண்டாக இருப்பேன். வெயிட்டை பார்த்து 'ஏய், எந்த கடையில் அரிசி வாங்கி சாப்பிடுகிறாய்' என்று கிண்டல் செய்வார்.

    'சிரி வெல்லா' என்ற தெலுங்கு படத்தில் பார்வையற்ற குழந்தையாக நடித்தேன். அதில் ஒரு பாட்டுக்கும் நடித்திருப்பேன்.

    அன்புள்ள ரஜினிகாந்த், படத்தில் வரும் காட்சிகளில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டியும் குறிப்பாக ரஜினி தரும் இனிப்பை கோபத்தில் துப்பி விட்டு அவர் தந்த பூங்கொத்தையும் தூக்கி வீசுவேன். அந்த காட்சிகளையெல்லாம் இப்போது பார்த்தாலும் "பரவாயில்லைடி... மீனா.. நீ சின்ன பிள்ளையிலும் நல்லாத்தான் நடிச்சிக்கே..." என்று என்னை நானே சொல்லி பெருமை பட்டுக் கொள்வேன்.

    Next Story
    ×