search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தெய்வீகத் தாமரைகள்...!
    X

    தெய்வீகத் தாமரைகள்...!

    • நான்கு கரங்களில் `சங்கு சக்கரம் கதை தாமரை` என ஒவ்வொன்றைத் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் குருவாயூரப்பன்.
    • ராமன் காட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவனது முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதையும் எண்ணிப் பார்த்து வியக்கிறாள்.

    லட்சுமி தேவி செந்தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். அலர்மேல் மங்கை என அவளைப் போற்றுகிறோம்.

    பத்மம் என்றால் தாமரை. பதுமத்தில் வீற்றிருப்பதால் அவள் பத்மாவதி எனப் பெயர்பெறுகிறாள்.

    திருப்பதி வெங்கடாசலபதியின் கரம்பிடித்த பெருமை பதுமத்தில் வீற்றிருக்கும் பத்மாவதித் தாயாருக்குரியது. தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியைத் தன் இதயத் தாமரையில் ஏற்றுக்கொண்ட பெருமை வெங்கடாசலபதிக்கு உரியது.

    சரஸ்வதி தேவி வீற்றிருப்பது வெண்தாமரை மலரில்.

    `வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்' என அவளைப் போற்றுகிறார் மகாகவி பாரதியார். `வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்` என்றும் இன்னொரு பாடலில் கொண்டாடுகிறார்.

    `வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை

    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

    சரியாசனம் வைத்த தாய்.'

    என வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைவாணியைப் புகழ்ந்து வெண்பாப்பாடுகிறார் காளமேகம்.

    *திருமாலின் வயிற்று உந்தித் தாமரையில் தான் பிரம்மன் உதித்தார். மாபெரும் சமுத்திரத்தின் மேலே பூத்திருந்த தாமரை மலரில் தோன்றிய பிரமன், தான் யாரென்று தெரியாமல் மயங்கினார்.

    தான் வீற்றிருக்கும் இந்தத் தாமரை எங்கிருந்து தோன்றியது என்றறிய ஆவல் கொண்டு நான்கு திசைகளிலும் மாறி மாறிப் பார்க்கவே அவர் நான்கு முகங்களைப் பெற்று நான்முகன் ஆனார்.

    பெருங்கடலில் அந்த ஒரே ஒரு தாமரை மலரை மட்டும் கண்டு அதற்கு இருப்பிடமானதை எப்படிக் காண்பதெனச் சிந்திக்கத் தொடங்கினார்.

    இந்தத் தாமரைக்கு ஏதோ ஓர் உற்பத்தி ஸ்தானம் இருக்கத்தானே வேண்டும், அதை அறிவோம் என்றெண்ணித் தம் யோக பலத்தால் தாமரைத் தண்டின் வழியாகக் கீழே இறங்கினார்.

    எவ்வளவு தேடியும் தன்னைப் படைத்தது யாரென அறியாது திகைத்தார். பின்னர் தெளிவு பெறும் பொருட்டு, தான் உதித்த தாமரை மலரிலேயே அமர்ந்து பல யுக காலம் தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவத்தின் பயனாக உட்கண்ணால் திருமாலைக் கண்டுகொண்டார்.

    அதன்பின் நேரிலும் திருமாலின் காட்சியைப் பெற்று அவரே தன்னைப் படைத்தவர் என அறிந்து வணங்கினார். பின்னர் திருமாலின் உத்தரவின் பேரில் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் பிரம்மன் என்கிறது புராணம்.

    சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வெளியிட, அதை வாயு சுமந்துசென்று சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தார். அந்த நெருப்பிலிருந்து, ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றினான் முருகன்.

    அந்த ஆறு குழந்தைகளையும் அன்போடு ஆரத் தழுவினாள் அன்னை பார்வதி. குழந்தைகள் ஒன்றிணைந்து ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்ட ஒரே குழந்தையாக உருமாறின என்கிறது கந்த புராணம்.

    முருகன் தாமரைச் செல்வன். தாமரையில் தோன்றிய அவன் திருவடிகளும் திருமுகம் திருக்கரங்களும் தாமரை போன்றவை. சங்க நூலான குறுந்தொகையில், பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்து, தாமரை போன்ற பாதங்களை உடைய முருகனைத் துதிக்கிறது.

    `தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத் தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!`

    *நல்லியக்கோடன் என்ற மன்னனைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூல் பேசுகிறது. முருக பக்தனான அவன் பகைவர்கள் தன் நாட்டைத் தாக்கியபோது தன் குடிமக்களைக் காக்குமாறு முருகப் பெருமானை உளமுருகி வேண்டிக் கொண்டு உறங்கப் போனான்.

    உறக்கத்தில் கனவில் வந்தார் கந்தக் கடவுள். தன் கோயில் குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பறித்து எதிரிகள் மேல் எறியுமாறு அறிவுறுத்தி மறைந்தார்.

    முருகன், தான் தோன்றக் காரணமாக இருந்த தாமரை மலர்களால் தன்னைக் காக்க விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்டது நல்லியக்கோடனின் பக்தி மனம்.

    மறுநாள் கண்விழித்ததும், திருக்குளத்தில் பூத்திருந்த தாமரை மலர்களைப் பறித்து, தன் நாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த எதிரிகள் மேல் விட்டெறிந்தான். மன்னன் மலர்கொண்டு தாக்க முயல்வதைப் பார்த்து எதிரிகள் நகைத்தனர்.

    ஆனால் அடுத்த கணம் ஒவ்வொரு தாமரை மலரும் பல்லாயிரம் வேல்களாக மாறிப் பகைவர்களை அழிக்கத் தொடங்கின.

    பகைவர்கள் அஞ்சி ஓட, நல்லியக்கோடன் போரில் பெருவெற்றி பெற்றான் என்று எழுதுகிறார் சிறுபாணாற்றுப் படையை இயற்றிய புலவரான இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

    குருவாயூரப்பன் திருக்கரத்தில் அழகிய தாமரை மலர் உண்டு. நான்கு கரங்களில் `சங்கு சக்கரம் கதை தாமரை` என ஒவ்வொன்றைத் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் குருவாயூரப்பன்.

    ராமாயணத்தில் தசரதர் ராமனை அழைத்து `உனக்கு முடிசூட்டு விழா!` என்றார். அப்போது மலர்ந்திருந்தது ராமன் முகம். பிறகு கைகேயி ராமனை அழைத்து `நீ கானகம் போக வேண்டும்` என்றாள். அந்த நேரத்திலும், அப்போதுதான் மலர்ந்த தாமரைப் பூவில் காணப்படும் மலர்ச்சியும் விஞ்சிய மலர்ச்சி ராமன் முகத்தில் தென்பட்டது என்கிறார் கம்பர்.

    `இப்பொழுது எம்மனோரால்

    இயம்புதற்கு எளிதே யாரும்

    செப்பருங் குணத்து ராமன்

    திருமுகச் செவ்வி நோக்கின்

    ஒப்பதே முன்பு பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

    அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றதம்மா!'

    சுந்தர காண்டத்தில் தனிமையில் வாடும் சீதாதேவி, பழைய நினைவுகளில் ஆழ்கிறாள். அப்போது ராமன் காட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவனது முகத் தோற்றம் எப்படி இருந்தது என்பதையும் எண்ணிப் பார்த்து வியக்கிறாள். அதை ஒரு பாடலில் விவரிக்கிறார் கம்பர்.

    அந்தப் பாடலில் ராமன் முகத்தை ஓவியத் தாமரையோடு ஒப்பிடுகிறார் கவிச்சக்கரவர்த்தி. உண்மைத் தாமரை காலையில் மலரும். மாலையில் வாடும். ஆனால் ராமன் முகம் எப்போதும் மலர்ந்திருக்கிறதே?

    எனவே அது உண்மைத் தாமரை மலர்போல் அல்ல, ஓவியத் தாமரை மலர்போல் உள்ளது என்கிறார். அத்தகைய வாடாத ராமனின் முக மலரை சீதாதேவி சுந்தர காண்டத்தில் தனிமையில் வாடும்போது நினைத்துக் கொள்கிறாள் என்கிறார்.

    `மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும்

    இத்திருத் துறந்து ஏகென்ற போதினும்

    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை

    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்!'

    கம்ப ராமாயணத்தில் இன்னோர் இடத்தில், வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை வர்ணிக்கும்போது குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களை விளக்குகளோடு ஒப்பிடுகிறார் கம்பர்.

    மயில்கள் ஆடுகின்றன. தாமரைப் பூக்கள் விளக்குகளைப் போல் பூத்துள்ளன. மேகங்கள் இடிஇடிப்பது, முழவு ஒலியெழுப்புவது போல் உள்ளது. குவளை மலர்கள் இக்காட்சியைக் கண்விழித்துப் பார்க்கின்றன. குளத்தில் எழும் அலைகள் திரைச் சீலைகள் போல் தோற்றமளிக்கின்றன. தேனாய்த் தித்திக்கும் மகர யாழின் ஒலிபோல் வண்டுகள் இனிமையாய் ரீங்கரிக்கின்றன. இவ்வாறு கோலாகலமாக மருத அரசி வீற்றிருக்கிறாளாம்.

    `தண்டலை மயில்க ளாடத்

    தாமரை விளக்கம் தாங்கக்

    கொண்டல்கள் முழவின் ஏங்கக்

    குவளை கண்விழித்து நோக்கத்

    தெண்டிரை எழினி காட்டத்

    தேம்பிழி மகர யாழின்

    வண்டுகள் இனிது பாட

    மருதம் வீற்றிருக்கு மாதோ!

    புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவில் தமயந்தியின் சுயம்வரம் பற்றிப் பேசும் ஓர் அழகிய வெண்பா வருகிறது.

    ஏராளமான மன்னர்கள் விழிமலர்ந்து சுயம்வர மண்டபத்தில் காத்திருக்கிறார்கள். மன்னர்களின் விழித் தாமரைகள் பூத்த பொய்கைபோல் காட்சிதரும் அந்த மண்டபத்தில் அன்னம்போல் நடந்து வந்தாள் தமயந்தி என்கிறது வெண்பா.

    `மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே

    பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்

    பொய்கைவாய்ப் போவதே போன்று.'

    இந்தப் பாடலில் ஒரு நயம் உள்ளது. மன்னர்கள் விழிமலர்ந்து அமர்ந்திருக்கும் மண்டபத்தைக் கமலப் பொய்கை என்று சொன்னாலே போதும். ஆனால் செங்கமலப் பொய்கை என்கிறார் கவிஞர். ஏன்? மன்னர்களின் விழிகள் தமயந்தியின் பேரழகைக் கண்டு அவளை அடைய வேண்டும் என்ற வேட்கையால் சிவந்து காணப்பட்டதாம். எனவே அந்த விழிகள் சிவந்த தாமரை மலராகிய செங்கமலப் பூவோடு ஒப்பிடப்பட்டன.

    விவேக சிந்தாமணி என்ற கவிதைத் தொகுப்பில் தாமரை பற்றி ஒரு பாடல் பேசுகிறது.

    தாமரை மலருடன் அதே குளத்தில் பிறந்து வளர்ந்த தவளை, தாமரையின் இனிய தேனைப் பற்றி அறியாது. ஆனால் எங்கோ கானகத்திலிருந்து பறந்துவரும் வண்டு, தாமரையில் உள்ள தேனை விரும்பி உண்ணும்.

    அருகில் இருந்தாலும் கற்றவர்களின் பெருமையை மூடர்கள் அறிய மாட்டார்கள். எங்கிருந்தோ வரும் கற்றவர்கள் அந்த நல்லவரைக் கண்டு களித்து உறவாடுவார்கள் என்கிறது அந்தப் பாடல்.

    `தண்டாமரையின் அருகிருந்தும்

    தண்தேன் உணரா மண்டூகம்

    வண்டோ கானத்திடை யிருந்து

    வந்தே கமல மதுவுண்ணும்

    பண்டே பழகி யிருந்தாலும்

    அறியார் புல்லோர் நல்லோரை

    கண்டே களித்தங் குறவாடித்

    தம்மில் கலப்பர் கற்றோரே!'

    இந்தியாவின் தேசிய மலர் என்ற பெருமை தாமரைக்குத்தான் உரியது. ராமகிருஷ்ண மடத்துச் சின்னத்தில் தாமரையும் அன்னமும் பாம்பும் உள்ளன. தாமரை ஜீவான்மாவையும் அன்னம் பரமான்மாவையும் குறிக்கும். பாம்பு குண்டலினி சக்தியின் குறியீடு என்று சொல்லப்படுகிறது.

    நம் ஆன்மிகப் பெருவெளியில் தாமரை மலர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனின் தாமரைத் திருவடிகளை நம் இதயத் தாமரையில் இருத்திக் கொண்டால் எந்தத் துன்பமும் நம்மை வாட்டாது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×