search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி-இப்படிக்கு ஓ.பி.எஸ்.
    X

    சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி-இப்படிக்கு ஓ.பி.எஸ்.

    • குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு சென்னை வந்தபோது கூ இரண்டு அணியினரும் தனித்தனியே சந்தித்தனர்.
    • இரு தலைவர்களுக்கு இடையேயான சண்டையை ஒரு கட்சியின் உள்விவகாரம் என்று நீதிமன்றம் கடந்து போகமுடியாது.

    தான் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ள காரணத்தால் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவது "வினையூக்கி". இந்த வேதியியல் தத்துவம் வாக்கு அரசியலுக்குக் கனகச்சிதம்! அ.தி.மு.க. பாலி டிக்சில் பாரதியஜனதா தான் வினையூக்கி. அது ஏற்படுத்திய ரசாயன மாற்றங்களால் புரட்டிப் போடப்பட்டது - ஓ.பி.எஸ்.சின் அரசியல் வாழ்வு.

    கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் (2021) அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை எழுந்தது. "இலக்கை நிர்ணயித்து விட்டுக் களத்தில் இறங்குவோம். எடப்பாடியாரை முன்நிறுத்திக் களம் அமைப்போம்!" என்று அமைச்சர்களே குரல் கொடுத்ததும், அன்றைய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தன்மானம் "தர்மயுத்தபாணியில்" விழித்துக் கொண்டது. தேனி மாவட்டத்தில் "ஓ.பி.எஸ்" ஆர்மி ஒன்று புதிதாக முளைத்தது. "மக்கள் முதல்வர்" "நிரந்தர முதல்வர்" என்று போஸ்டர்கள் ஒட்டிப் பரபரப்பைக் கிளப்பியது.

    2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னை ராயப்பேட்டை அ. தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொடி ஏற்றுவதைக் கூட மறந்து விட்டு கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வீட்டுக்கும் ஈ.பி.எஸ். இல்லத்துக்குமாக அமைச்சர் பட்டாளம் அலைந்து திரிந்தது. எல்லாவற்றையும் நேரலையில் ஒளிபரப்பி ஊடகங்கள் பரபரப்பைக் கூட்டின. இறுதியில் சமாதானம் ஏற்பாடாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியானது.

    அதாகப்பட்டது, மகாஜனங்களே, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். யுத்தம் நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. சிலநேரங்களில் அமைதி யானது போலத் தோன்றினாலும் திரை யரங்குகளில் விடப்படும் "இடைவேளை" போலத்தான்! கடலை, முறுக்கு, கலர் சாப்பிட்டுக் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்றிக்கொண்டு மீண்டும் இரு தரப்பினரும் முஷ்டி முறுக்கலுக்குத் தயாராகி விடுவார்கள்.

    அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து இருந்த காலம். அன்றைய நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் ஓ.பி.எஸ். அணி இணைப்பு பற்றியும், முதல்-அமைச்சர் யார் என்றும் செய்தியாளர்கள் கேட்டனர். முதல்வர் பதவி காலி இல்லை என்று கிண்டலடித்தார் ஜெயக்குமார், வேண்டுமென்றால் தனது நிதியமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகக் கூறினார். ஓ.பி.எஸ். கடுப்பானார். ஜெயலலிதாவே இரண்டு முறை தன்னை முதல்வர் ஆக்கியதாகவும், ஜெயக்குமார் ஒன்றும் நிதியமைச்சர் பதவியை விட்டுத்தர வேண்டியது இல்லை என்றும் பதிலடி தந்தார். இறுதியில் நிதித்துறை பொறுப்புடன் கூடிய துணை முதல்வரானார்.

    இணைப்புக்கு முன் நடந்த இரு கட்டப் பேச்சு வார்த்தைகளில், "கட்சிக்கு ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு எடப்பாடி!" என்று தான் ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. நாளடைவில் ஈ.பி.எஸ்.சின் ஆட்சி அதிகாரத்திற்கு அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அடி பணிந்தார்கள். அவர்கள் விரும்பியதைச் செய்து கொடுத்தார் சி.எம். எடப்பாடி. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி கை நழுவியது. நாளாவட்டத்தில் ஓ.பி.எஸ். தனிமரமானார்.

    ஓ.பி.எஸ்.,-ஈ.பி.எஸ். காம்போ என்.டி.ஏ. கூட்டணிக்குப் பலம் சேர்க்கும் என்பதே 2017-18 காலகட்டத்தில் பா.ஜனதா தலைமையின் "வினையூக்கி கணிப்பு". அதற்காகவே அது இறங்கி வந்தது. எதிரும் புதிருமாகச் செயல்பட்டதால் 2019 ரிசல்ட் "டபக்"! 39-க்கு 1. அதுவும் ஓ.பி.எஸ். மகன் நின்ற தேனி மட்டும்!

    அதன் பின்னரும் "கட்சியில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமை உணர்வோடு இணைந்து செயல்படுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. கட்சி மற்றும் அரசு என்ற தேரை இழுத்துச் செல்கிறோம்!" என்று ஜெயக்குமார் அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் தெருவில் வசிப்பவர்களே அதை நம்பவில்லை.

    மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் பலன் இல்லை. தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் ஒற்றுமைக் குரல் ஒலித்திருக்க வேண்டிய அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கியது. 2022 ஜூன் 23-ல் கூடிய முதல் பானிபட் யுத்தமான அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி இரண்டாம் பானிபட் யுத்தம் நடந்தது. அந்தப் பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆனார். "துரோகி ஓ.பி.எஸ்." மற்றும் அவரைச் சேர்ந்த அனைவருக்கும் கல்தா தரப்பட்டது.

    இந்த முறை பாரதிய ஜனதா அடக்கியே வாசித்தது. வெளிப்படையான சமாதான முயற்சிகளில் அது ஈடுபடவில்லை. பிரதமர் வருகையின்போது கூட ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டது. குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு சென்னை வந்தபோது கூட இரண்டு அணியினரும் தனித்தனியே சந்தித்தனர். ஒற்றுமை மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ஆனால் பலன் கொடுக்கவில்லை.

    கட்சி அரசியலில் நீதிமன்றம் நிரந்தரத் தீர்வு தராது. தலைவர்கள் முறையிட வேண்டிய இடம் மக்கள் மன்றம். உட்கட்சிப் பிரச்சினைகளைக் கோர்ட்டு தீர்த்து வைத்ததாகச் சரித்திரம் இல்லை. ஓட்டு சதவீதம் தான் ஒரே தீர்வு.

    கட்சியின் விதிகளைச் சுட்டிக் காட்டி சிவில் உரிமையியல் வழக்குகளைத் தொடர்வது தவறு இல்லை. ஆனால் அசல் வழக்கு முடிய கால தாமதம் ஆகும். அப்புறமும் மேல்முறையீடுகள் இழுத்தடிக்கும். எனவே இடைக்கால நிவாரணம் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

    சாதாரண சிவில் வழக்குகளில் இது சரிதான். ஆனால் கட்சியின் நிர்வாகம் சம்பந்தமான உரிமையியல் வழக்குகளில் ஈடு செய்ய முடியாத இழப்பு மற்றும் இடைக்கால நிவாரணத்திற்குப் பின்பும் வாதி, பிரதிவாதி ஆகிய இருவருக்கும் இடையே சமநிலை நிலவுதல் ஆகிய இரண்டையும் நீதிமன்றம் முக்கியமாகப் பார்க்கும்.

    ஓ.பி.எஸ். கேட்கிற இடைக்கால நிவாரணம் தரப்பட்டால் அசல் வழக்கே முடிந்த மாதிரி. மேலும் வாதிக்கு ஏற்படும் இழப்பை விடக் கட்சிக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகமாக இருக்கும். இருதரப்புக்கும் இடையிலான சமநிலையும் பாதிக்கப்படும்.

    சிவில் தாவாக்களில் "ஆவணப் பிழை வாதம்" மற்றும் "இல்லை என்ற கோட்பாட்டு வாதம்" போன்ற பாதுகாப்பு வளையங்களை வழக்கறிஞர்கள் உருவாக்குவார்கள். நடந்து முடிந்த ஒன்றை "இல்லை" என்று மெய்ப்பிக்கும் முயற்சி அது. சாதாரண சிவில் வழக்குகளில் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு கட்சியின் பொதுக்குழு சம்பந்தப்பட்ட தாவாவில் இது சாத்தியமா?

    பொதுக்குழு என்பது மூன்று வகையான சட்டக் கூறுகளால் ஆனது. எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைத்தல், கட்சியின் கொள்கை மற்றும் செயல் திட்டங்களை வரையறை செய்தல் மற்றும் முன் கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணக்கம் தெரிவித்தல் ஆகியவையே அவை.

    நடந்து முடிந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை இல்லாததாக்க முடியாது. கட்சியின் நிர்வாகம் அதனால் ஸ்தம்பித்து விடும். எனவே ஓ.பி.எஸ். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால நிவாரண மனுக்கள் "அணுகுமுறைப் பிழை" என்ற கோட்பாட்டில் அடிபட்டுப் போய்விடு கின்றன.

    மக்களாட்சியில் கட்சி அமைப்பு என்பது தேர்தல் செயல்முறையின் நீட்சி. எனவே இரு தலைவர்களுக்கு இடையேயான சண்டையை ஒரு கட்சியின் உள்விவகாரம் என்று நீதிமன்றம் கடந்து போகமுடியாது.

    எனவே தான் ஓ.பி.எஸ். தொடரும் இடைக்கால நிவாரண மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டும் தன் ஆணையில் இதை உறுதி செய்திருக்கிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.எஸ். போட்ட இடைக்கால மனுக்களைத் தொடர் தள்ளுபடி செய்கிறது. உச்சநீதிமன்றம் போனாலும் இதே கதி தான்.

    துவக்கத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் தனக்குரிய அதிகாரம் அனைத்தையும் இழந்தார். ஈ.பி.எஸ். எடுத்த எல்லா முடிவுகளுக்கும் தலையாட்டி பொம்மையாக இருந்தார். நீட்டிய இடங்களில் எல்லாம் கையொப்பம் போட்டார். அ.தி.மு.க.வை விட்டு அவர் நீக்கிய லிஸ்ட் படா பஹூத். இறுதியில் ஓ.பி.எஸ்.சையே நீக்கி மரண பங்கம் செய்தார்கள். இனி "அம்மாவால் அடை யாளம் காட்டப்பட்ட" முன்னாள் முதல்வருக்கு என்ன தான் வழி?

    1. தனிக்கட்சி தொடங்குதல்.

    2. ஈ.பி.எஸ். தலைமையை ஏற்று மீண்டும் தாய்க்கட்சிக்கே திரும்புதல்.

    3. டி.டி.வி. தினகரனோடு இணைந்து மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி ஈ.பி.எஸ். வேட்பாளர்களைத் தோற்கடித்தல்.

    எதைத் தேர்ந்தெடுப்பார் ஓ.பி.எஸ்? தனிக்கட்சி தொடங்கினால் அ.தி.மு.க. மீதான உரிமையை இழப்பார். செப்டம்பர் 3 காஞ்சிபுரத்தில் தொடங்கிப் புரட்சிப் பயணம் மேற்கொள்ளப்போ வதாக ஓ.பி.எஸ். அறி வித்துவிட்டார். டி.டி.வி. தினகர னோடு இணைந்து மக்கள வைத் தேர்தலில் வேட்பாளர் களை நிறுத்தி அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்க ளைத் தோற்கடித்தல் சாத்தியமா? "வினையூக்கி" பா.ஜனதா மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு அதற்கு "ஸ்பீட் பிரேக்கர்" போடுமே!

    அரசியலும் அன்றாட வாழ்க்கையும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. முடிவு களில் ஏற்படும் காலதாமதம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தும். சசிகலா ஆதரவைப் பெற அவர் எடுத்த முயற்சி வெற்றியில் முடிந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஈ.பி.எஸ். தன் பேச்சில் "திருமதி சசிகலா அம்மா" என்று மென்மை காட்டுகிறார். அண்டர்கிரவுண்ட் அரசியலும் முக்கியம் அமைச்சரே!

    ஜெயலலிதா "உதிர்ந்த ரோமங்கள்" என்று நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூத்த தலைவர்களை 1990-ல் வர்ணித்தார். நாவலர் அரசியல் "ஆங்ரி பேர்ட்" ஆனார். பின்னர் ஏற்பட்ட தேர்தல் தோல்வி காரணமாக ஜெயலலிதா தலைமையை ஏற்று அவர் அவைத்தலைவராக அ.தி.மு.க.வில் தொடர்ந்தார். கோபித்துக் கொண்டு போன மூத்த தலைவர் எஸ்.டி.எஸ். மீண்டும் எம்.ஜி.ஆரிடம் திரும்பியது வரலாறு.

    தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தால் அதைக்காரணமாகச் சொல்லி ஓ.பி.எஸ். பக்கம் இருக்கும் முக்கியஸ்தர்கள் தாய்க்கட்சிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகிய இருவரையும் வினையூக்கியான பா.ஜனதா தான் சேர்த்து வைத்தது. எனவே பழைய சரித்திரம் மீண்டும் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அதற்கு முன்னதாக ஈ.பி.எஸ்.சுக்குக் கொடநாடு உட்படப் பல பூச்சாண்டிகள்! 2012ல் முடித்துவைக்கப்பட்ட ஓ.பி.எஸ். சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இப்போது மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி - இப்படிக்கு ஓ.பி.எஸ்.!" என்று கதறாத குறை!

    தலைவர்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் காலச் சூழல் ஒத்துழைக்கவேண்டும். அரசியல் வெற்றிக்கு இதுவே அடிப்படை! களப்பணி, மக்கள் தொடர்பு மற்றும் தொடர் உரையாடல் மூலமே அது சாத்தியம். ஆனால் இப்போது பணத்தை வாரி இறைத்து அழைத்து வரப்படும் கூட்டம் ஏற்படுத்துகிற பிம்பச் சிறைக்குள் சிக்கி இருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரமண்டலத்தில் லேண்டரை இறக்கிச் சரித்திர சாதனை படைத்து விட்டார்கள். அதில் இருந்து ரோவரும் இறங்கி ஆய்வு நடத்தி வருகிறது. ஆனால் ராமச்சந்திர மண்டலமான அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சால் லேண்டரை இறக்க முடியவில்லை. நீதிமன்றத்தின் நெடிய தாழ்வாரங்களில் எத்தனை முறை முயன்றும் கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன. லேண்டரே "கிராஷ்" ஆன பின்னர் ரோவரைப் பற்றிக் கனவு கூடக் காண முடியாது அல்லவா?.

    Next Story
    ×