search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: பாவாடை தாவணியில் கலக்கல்
    X

    மீனா மலரும் நினைவுகள்: பாவாடை தாவணியில் கலக்கல்

    • அழுவேன், சிரிப்பேன், அதெல்லாம் ஓ.கே. ஆனால் ரொமான்ஸ்தான் வரவேயில்லை.
    • வெட்கப்படுவது எப்படி? ரொமான்ஸ் பண்ணுவது எப்படி? என்பதையே கற்க ஆசைப்பட்டேன்.

    பருவம் மாறும் போது உருவம் மாறுகிறது. உருவத்துக்கு ஏற்ற வகையில் நடை, உடை, பாவனைகள் எல்லாமே மாறுகிறது. இந்த மாற்றங்கள் நம்மை அறியாமலேயே நிகழுகிறது.

    அதை பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்த பிரமிப்பால் தானே 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா... இது பூவாடை வீசிவர பூத்த பருவமா... பாவாடை போன்ற முகம் மாறியதேனோ... பனிபோல நாணம் அதை மூடியதேனோ...' என்று கவி யரசரும் பாடியிருக்கிறார்.

    அந்த பாடல் வரிகள் தான் எவ்வளவு உயிரோட்டமானவை? நானே என்னை நினைத்து பார்க்கிறேன்! எல்.கே.ஜி.யில் தொடங்கிய நடிப்பு பயணம். எட்டாம் வகுப்புக்குள் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை தொட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஆம் 40 படங்கள் என்றால் நம்ப முடி கிறதா? அந்த வயதில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி களில் அத்தனை படங்களை நடித்து முடித்து விட்டேன்.

    ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடிக்க வைத்த டைரக்டர்கள் 'இப்போ... மீனா பொண்ணு வளர்ந்திருப்பாளே....' என்று நினைத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் 'நவயுகம்' என்ற தெலுங்கு படத்துக்கு கதாநாயகியை தேடியிருக்கிறார்கள்.

    அப்போது தான் எதற்கும் மீனாவையும் பார்த்து வருவோமே என்று டைரக்டர் சென்னைக்கே வந்துவிட்டார். நான் அப்போது 8-ம் வகுப்பு மாணவி.

    புத்தக பையுடன் வீடு திரும்பியபோது முன்னறையில் அப்பா, அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

    நான் உள்ளே நுழைந்ததும் என்னை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். 'அடடே... மீனா பாப்பா வா...' என்றவர்கள் அவர்கள் எதிர்பார்த்தது போலவே நான் வளர்ந்து இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த வயதில் பருவத்தை விட கொஞ்சம் ஜாஸ்தியாகவே என் உருவம் இருக்கும்.

    என்னை பார்த்ததும் இவர் தான் கதாநாயகி என்று முடிவே செய்துவிட்டார்கள். கதா நாயகியாக நடிக்கட்டுமே என்று தங்கள் விருப்பத்தை அம்மாவிடம் கூறினார்கள்.

    அம்மா படிப்பு என்ன ஆகுமோ என்று தயங்கினார்கள். அம்மா மட்டுமல்ல எனக்கும், பள்ளிக்கூடம் போக முடியுமா? முடியாதா? என்ற தயக்கம்.

    ஆனாலும் நாயகி பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொண்டோம். அவர்களும் போட்டோ செக்சனுக்கு வரச்சொல்லிவிட்டு விடை பெற்று கிளம்பினார்கள்.

    பாவாடை-சட்டையில் ஓடிக்கொண்டிருந்த நான் தாவணி கட்டினேன். தாவணி போட்டுக் கொண்டு நிலைக்கண்ணாடி முன்பு போய் நின்று என்னை நானே பார்த்து பிரேமித்தேன்.

    ஏய்... மீனா நீயா இது? என்று மனதுக்குள் கேட்டதும் என்னை அறியாமலே மனதுக்குள் ஒரு விதமான குறு குறுப்பு முகமும் சிவந்தது.

    ஓ. இது தான் நாணமோ... என்று சிரிப்பு வந்தது! அந்த சிரிப்பிலும் அழகாக இருப்பதாவது நானே கர்வப்பட்டு கொண்டேன். நம்மை பார்த்து நாமே கர்வப்படுவதில் தப்பில்லை தானே?

    அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கியது. நவயுகம் படத்தில் ஹீரோ ராஜேந்திர பிரசாத். ஓங்கோல் பகுதியில் படப்பிடிப்பு.

    தாவணி கட்டிக் கொண்டை போட்டு கேமரா முன்பு போய் நின்றதை நினைத்ததும் ஆச்சரியமாக இருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்த வரை பெரிய அளவில் டயலாக் எதுவும் கிடையாது. ஒன்றிரண்டு வார்த்தைகள் அல்லது ஒன்றிரண்டு வரிகள்தான் இருக்கும். ஆனால் கதாநாயகி ஆனதும் டயலாக் பெரியதாக இருந்தது.

    அதை கூட பள்ளிக்கூடத்தில் பாடத்தை படித்து மனப்பாடம் செய்தது போல் திரும்ப திரும்ப படித்து மனப்பாடம் செய்து கொண்டேன்.

    ஒரே ஒரு விஷயம்தான் என்னால் முடியவில்லை. அதுதான் 'ரொமான்ஸ்' பண்ணுவது! 13 வயது என்பது 'ரொமான்ஸ்' பண்ண தெரிந்த வயதா?

    அழுவேன், சிரிப்பேன், அதெல்லாம் ஓ.கே. ஆனால் ரொமான்ஸ்தான் வரவேயில்லை. ஒரு மாதிரியாக இருக்கும். காதலிக்கும் போது முக பாவனை இப்படி இருக்க வேண்டும். டயலாக் பேசும் போது காதலை உடல் அசைவே வெளிப்படுத்துவது போல் இருக்க வேண்டும் என்பார்கள். எனக்கு அது மட்டும் வரவே இல்லை.

    ராஜேந்திர பிரசாத் திட்டுவார். ஏம்மா... காதலனை கட்டிப்பிடிக்கும் போது ஒரு 'கிக்...' தெரியவேணாம்? என்று கடுகடுப்பாார். அப்புறம் அவரே என்னருகில் வந்து சொல்லித் தருவார்.

    இப்போது செல்போன், இணைய தளம் எல்லாம் வந்துவிட்டது. பள்ளி பருவத்திலேயே காதலையும் சேர்த்தே படிக்கிறார்கள்.

    அந்த காலகட்டத்தில் வெட்கப்படுவது எப்படி? ரொமான்ஸ் பண்ணுவது எப்படி? என்பதையே கற்க ஆசைப்பட்டேன்.

    சொன்னால் ஆச்சரியமாகத்தான் தெரியும். உண்மையாகவே அதற்காகவே சில படங்களை பார்க்க சென்றேன்.

    அந்த படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் காதல் காட்சிகளில் எப்படி நடிக்கிறார்கள். எப்படி ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து கற்றுக் கொண்டேன்.

    காதல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் எப்படி நடிக்கிறார்கள்? டூயட் காட்சிகளில் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை உன்னிப்பாக பார்த்து பார்த்துதான் கற்றேன்.

    அதிலும் முதல் படத்திலேயே எனக்கு கனமான பாத்திரம். நடுரோட்டில் வில்லன் அடியாட்களுடன் துரத்தி வந்து தாலி கட்டுவார். அப்படி அவர்களிடம் சிக்கி தவிக்கும் போது நான் எப்படியெல்லாம் நடிக்கணும்...? சிரமப்பட்டு தான் நடித்தேன். அதே நேரம் டைரக்டர் சொல்லித் தந்ததை அப்படியே நடித்து விடுவேன்.

    அப்படித்தான் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்தேன். அந்த மறக்க முடியாத அனு பவங்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்)

    Next Story
    ×