search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இது ஒரு சவால்தான்
    X

    இது ஒரு சவால்தான்

    • பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்த பிள்ளைகளும் மனதளவிலும், வெளியுலக அளவில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.
    • பெற்றோர்கள் அங்கு நீதிபதியாகவோ, நாட்டமை செய்யவோ வேண்டாம்.

    விடலை பருவம். இந்த பருவத்தில் இருக்கும் குழந்தைகள்- இவர்கள் இள வயது என்றாலும் குழந்தைகள் என்றே குறிப்பிடலாம். இந்த வயது 13-19 வரை என்று எடுத்துக் கொள்வோம். இவர்களை வளர்க்கும் பெற்றோர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இது பல வீடுகளில் நாம் காணும் ஒன்று. பாசம் ஒரு பக்கம், பெற்ற பிள்ளையை பற்றிய பயம் ஒரு பக்கம். அவர்கள் எதிர்காலத்தினைப் பற்றிய திகில். இவை பெற்றோர்களை மனதளவில் நரக வேதனையை அனுபவிக்க வைக்கின்றது. இது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்த பிள்ளைகளும் மனதளவிலும், வெளியுலக அளவில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

    அவர்களின் ஹார்மோன்கள் மாறுதல்கள், பருவ வயதினை அடைதல், பெற்றோர்களின் கட்டுப்பாடு திணிப்புகள், பள்ளியில் படிப்புச் சுமை என பல வகைகளில் அவர்களும் கஷ்டப்படுகின்றனர் என்பதே உண்மை. பலர் அவர்களின் பெற்றோர்களை விரோதியாய் பாவிக்கின்றனர். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி தவறாய் புரிந்து கொள்கின்றனர். இதனை முள் மேல் விழுந்த துணியாகத்தான் கையாள வேண்டி உள்ளது. பொதுவில் இந்த இளம் சிறார்களின் பிரச்சினையாக

    * தனது தோற்றம், அழகு, உருவ அமைப்பு, நிறம் என இதிலேயே கவனமும், கவலையும் உள்ளது.

    * அதிக 'ஸ்ட்ரெஸ்' உடனேயே இருப்பர்

    * மனக்கவலை, மன சோர்வு அதிகம் இருக்கும்.

    * சிலர் மது, புகை பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்

    * சிறு வயதில் கர்ப்பம்

    * சிறு வயதில் உடல் உறவு

    * எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுதல்

    இப்படி நிறைய வகையில் வெளிப்படுகின்றன.

    முறையான தூக்கமின்மை, ஒழுங்கான உணவு பழக்கமின்மை, முறையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் விரும்பமின்மை, தனியாக இருத்தல், அறையில் தனிமையில் கதவை தாளிட்டு இருத்தல் இவை அனைத்துமே பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள்தான்.

    கோபம், குழப்பம், பொறாமை, முறையில்லாத நடத்தை, பெற்றோர்கள் மீது வெறுப்பு, ரகசியம், இவை அனைத்துமே அவர்களது பருவ மாறுதலின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். இவர்களால் ஒழுக்கமான முறையில் நடக்க முடியவில்லை என்ற இயலாமையே இவர்களுக்கு கூடுதல் ஆத்திரத்தினை ஏற்படுத்துகின்றது.

    இந்த காலத்துக்கு ஏற்றார் போல் 10-11 வயதிலேயே இந்த ஹார்மோன் மாறுபாடுகள், உடலுறவு, விபரீத விளைவுகள் இவற்றினைப் பற்றி சொல்லிக் கொடுப்பதே இவர்களை பல பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் என்கின்றனர் மனநல ஆய்வாளர்கள்.

    எந்நேரமும் அவர்களை குற்றம், குறை கூறாமல் அவர்களின் சுய மதிப்பினை, கவுரவத்தினை அவர்கள் கூட்டிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் பேச வேண்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டும் மரியாதையே அவர்களுக்கு சுய மரியாதையினை உருவாக்கும். மாறாக அவர்களை குட்டிக் கொண்டே இருந்தால் சுயநம்பிக்கை இழந்து விடுவர். அக்கறை என்ற பெயரில் அவர் களை அழித்து விடக் கூடாது.

    இந்த பருவ காலத்தில் தான் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உறவில் இறுக்கம், புரிதல் இருக்க வேண்டும்.

    உங்கள் பிள்ளைகளை கொஞ்சமாவது நம்ப வேண்டும். அதிக குறுக்கு விசாரணை, வேவு பார்த்தல் போன்றவை அவர்களை மேலும் பிரச்சினைக்குள்ளாக்கும். திருட, பொய் சொல்ல, மரியாதை இன்றி பேச முற்படுவார்கள். அவர்களுக்கு மனநல பிரச்சினை இருக்கின்றது என்பதனை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    அவர்களுக்கு பள்ளியில், சமுதாயத்தில் யாரேனும் மனதளவில் உடல் அளவில் கொடுமைப்படுத்துகின்றனரா? என்று கண்டறிய வேண்டும். அவர்கள் தைரியமாய் பெற்றோரிடம் எதனையும் பகிர்ந்த கொள்ளக் கூடிய நல்ல உறவு முறையினை உருவாக்க வேண்டும்.

    தேவைப்படின் மன நல மருத்துவர் ஆலோசனையும் பெற வேண்டும்.

    இளம் பருவத்தினரின் சில பொதுவான பிரச்சினைகள்:-

    * நண்பர்களே வாழ்வின் முக்கியமான வர்களாக இருப்பார்கள். பெற்றோர்களை தூக்கி எறிவார்கள். இந்த நட்பு தவறான நடத்தை உடையவர்களுடன் இருந்துவிட்டால் இவர்களும் சமுதாய, தனிமனித ஒழுக்கத்தினை வரை கோடு எல்லைகளை மீறுகின்றனர். இந்த இடத்தில் பெற்றோர்களின் பொறுமையும், அன்பு, தவறுதலை சுட்டி காட்டுதல் மட்டுமே தீர்வாக அமையும். உங்கள் பிள்ளைகள் கத்தலாம், எரிந்து விழலாம். ஆனால் விடாது நீங்கள் காட்டும் அன்பும், பொறுமையும் கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதியவே செய்யும்.

    * சகோதர, சகோதரிகளுடன் பொறமை இருக்கலாம். தான் சரியாக பெற்றோர்களால் கவனிக்கப்படவில்லை என்று எண்ணுவாார்கள். அன்பு இல்லை என ஏங்குவார்கள்.

    அவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைகள், பிரச்சினைகள் இவற்றினை அவர்களே தீர்வு காணட்டும். பெற்றோர்கள் அங்கு நீதிபதியாகவோ, நாட்டமை செய்யவோ வேண்டாம். பொறாமை அதிகப்பட்டால் இருவருக்கும் சம கவனிப்பு, அக்கறை கொடுக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி பேசுவது, ஒருவரை தாழ்த்தி பேசுவது, மற்றவரோடு ஒப்பிட்டு குறை கூறுவது போன்றவற்றினை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    * பெற்றோர்களின் கருத்துக்களை இந்த காலப் போக்கின்படி பிள்ளைகள் ஏற்க மாட்டார்கள். மாறுபாடாகவே இருக்கும். வாக்குவாதங்கள் இருக்கும். சிலர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வர். பெற்றோர்களும் பொறுமை இழந்து அடிக்கவும் செய்வர்.

    நம் கருத்துகளை அவர்கள் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு பிறப்பும் தனித் தன்மை கொண்டதே. சற்று விட்டுக் கொடுக்க வேண்டும். அமைதியான மனநிலையில் மட்டுமே பேச வேண்டும். எதனையும் வாக்குவாதம், மிரட்டல் மூலம் செய்யவே முடியாது என்பதனை பெற்றோர்கள் கண்டிப்பாய் புரிந்து கொள்ள வேண்டும்.

    இம் மாதிரியான பாதிப்புடைய குழந்தை களுக்கு தன்னம்பிக்கை இருக்காது. இதனை மேலும் பாதிக்கும் வகையில் பெற்றோர்கள் நடவடிக்கை இருக்கக் கூடாது. அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

    தியானம், யோகா இவற்றினை பெற்றோர், பிள்ளைகள் இருவரும் கற்க வேண்டும். இது மிக அவசியம். இது மிகுந்த நன்மை பயக்கும் என ஆய்வுகள் அறி வுறுத்துகின்றன.

    இவைகளை நாம் உணர வேண்டும்

    * டீன் பருவம் அதிக சக்தி உள்ள பருவம். பொறுப்புகள் அநேகமாக இருக்காது. பயம் இருக்காது.

    * இன்றைய தலைமுறை காணும் சமுதாயம் முற்றிலும் மாறுபட்டது.

    * அவர்களுக்கு மீடி யாக்கள் மூலம் கிடைக்கும் நன்மை களும் அதிகம். தீமைகளும் அதிகம்.

    * கொடுமை களை அவர்கள் உறவுகள் மூலமோ, நண்பர்கள் மூலமோ, தெரியாதவர் மூலமோ எளிதில் அடைகின்றனர்.

    * ஹார்மோன் மாறுபாடுகள் அவர்களை அதிகம் பாதிக்கின்றன.

    * இளம் வயது காதல், காதல் முறிவு இவை மனதளவில் அதிகம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    * சமீபத்திய ஆய்வு அநேக இளம் பருவத்தினர் சுமார் 9 மணி நேரம் ஏதோ ஒரு வித மீடியா தொடர்பிலேயே இருக்கின்றனர் என்று கூறுகின்றது.

    * பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்பு கனவுகள் அவர்களை பயம் கொள்ளச் செய்கின்றன.

    * எதனையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம். வாய்ப்புகள், நல்லவைகள் இவற்றினை கை காட்டி கொடுங்கள். பாட்டோ, இசை கருவியோ கற்பது மனநிலை சீராய் இருக்க உதவும். அவர்களின் ஆர்வங்களுக்கு காது கொடுங்கள். ஓவியம் வரைவதில் திறமை இருந்தால் அதனை ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்களின் சுற்றுப்புற சூழ்நிலை நல்லவைகளாகவே இருக்கட்டும்.

    Next Story
    ×